Search This Blog

11.1.10

பார்ப்பனர்களின் பத்திரிகா தர்மம்!பாரதிய ஜனதாவில் உமா சேர வழியில்லை என்று தலைப்பிட்டு தினமலர் ஒருசெய்தியை வெளியிட்டுள்ளது.

பா.ஜ. கட்சியில் இருந்த உமாபாரதி, கடந்த 2003 இல் நடந்த ம.பி. சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, அம்மாநில முதல் அமைச்சராகப் பதவியேற்றார். பின் போராட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக உமாபாரதி தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

இது உண்மைதானா? போராட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காகத் தான் பதவியை ராஜினாமா செய்தாரா உமாபாரதி?

ஒரு ஆறாண்டுக்குள்ளேயே முரண்பாடான செய்திகளை இவர்களால் அவிழ்த்து விட முடிகிறது என்றால் மூவாயிரம் ஆண்டு செய்திகள்எல்லாம் எப்படியெல்லாம் மூக்கும், விழியும் வைத்து முக்காடு போட்டு செய்திகளை வீதி உலா வரச்செய்திருப்பார்கள்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உமாபாரதி என்னும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் உழைப்பால், மதவாதச் கர்ச்சனையால், அம்மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து; வேறு வழியின்றி உமாபாரதியே அம்மாநில முதல் அமைச்சரும் ஆனார்.

இந்த நேரத்தில் 1994இல் கருநாடக மாநிலம் ஹுப்ளியில் நடைபெற்ற மதக் கலவரம் தொடர்பாக உமாபாரதிமீது கைது வாரண்டு ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்தது. அதாவது 10 ஆண்டுகள்கழித்து. இந்த நேரத்தில் பி.ஜே.பி.யில் இருந்த உயர்ஜாதி ஆதிக்க சக்திகளும், ம.பி. மாநில சொந்த கட்சி எதிராளிகளும் கூடி உமாபாரதி பதவி விலக வேண்டும் என்று நான்கு கால் பாய்ச்சல் பாய்ந்தனர்.

உமாபாரதி பதவி விலகினார். வழக்கு நடந்தது. அந்த வழக்கில் உமாபாரதி குற்றவாளியல்ல என்று தீர்ப்பும் அளிக்கப்பட்டது.

அந்த நிலையில் பா.ஜ.க., உயர் மட்டம் என்ன செய்திருக்க வேண்டும்? மரியாதையாக மீண்டும் மத்தியப் பிரதேசத்தின் முதல் அமைச்சர் நாற்காலியில் அமர வைத்திருக்க வேண்டுமல்லவா? அதுதானே அறிவு நாணயம்?

என்ன நடந்தது? தற்காலிக முதல் அமைச்சராக உட்கார்ந்த பாபுலால் கவுர் அந்த நாற்காலியை விட்டு விலக மறுத்தார். பிஜேபியின் உயர் மட்ட உயர் ஜாதி ஆதிக்கவாதிகளின் அந்தரங்க உதவியோடு. (பிற்படுத்தப்பட்டோரையும், பிற்படுத்தப்பட்டோரையும் மோதவிடும் தந்திரம்)

இவ்வளவுத் தகவல்களும் உள்ளுக்குள் உதிரப் பெருக்கெடுத்துக் கிடக்க தினமலர் கொஞ்சம்கூட கூச்சமில்லாமல், போராட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் என்று எழுதுகிறது என்றால், இவாளின் பத்திரிகா தர்மத்தின் யோக்கியதை எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதை அறியலாம்.

உமாபாரதி என்றால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்; எப்படியும் எழுதலாம் என்ற எண்ணம் அவர்களிடத்தில் எப்பொழுதுமே இருந்திருக்கிறது. உமாபாரதிமீது வழக்கு என்பதற்காக பதவி விலகச் சொன்ன இந்த உத்தமப்புத்திரர்கள் இதே அளவுகோலை கட்சியின் மற்றவர்கள் விஷயத்தில் கடைபிடித்தார்களா?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான அத்வானியும், முக்கிய குற்றவாளியான முரளி மனோகர் ஜோஷியும் முறையே மத்திய அரசில் உள்துறை அமைச்சராகவும் (அதன்பின் துணைப் பிரதமராகவும்), மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்களே, அது எப்படி?

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையான முறையில் நெருக்கடி கொடுத்த நேரத்தில், அத்வானியும் ஜோஷியும் பதவி விலகல் கடிதத்தைக் கொடுக்க முன்வந்த போது, அதனை ஜென்டில்மேன் வாஜ்பேயி ஏற்க மறுத்தது எந்த அடிப்படையில்? அதே நேரத்தில் அ.இ.அ..தி.மு.க. சார்பில் அமைச்சர் பொறுப்பேற்கச் சென்ற சேடப்பட்டி முத்தையா, அதன்பின் மதிமுகவைச் சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரன் (இவர்மீது நேரிடையாகக் கூட குற்றச்சாற்று இல்லை; உதவியாளர்மீது வழக்கு) ஆகியோர் பதவி விலகினார்களே!

பா.ஜ.க. என்றால் பன்னீரில் பூத்தது மற்ற கட்சிகள் என்றால் சாக்கடையில் ஜனித்தது என்ற நினைப்போ!

இந்த நேரத்தில் இன்னொன்றும் உண்டு. அயோத்தியில் இடிக்கப்பட்டது வெறும் கட்டடம்தான்; அதற்காக அத்வானியும், ஜோஷியும் பதவி விலகத் தேவையில்லை என்று சொன்ன சொக்கத் தங்கம் யார் தெரியுமா? காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி. ஜார்க்கண்டில் இப்பொழுது என்ன நடந்திருக்கிறது? இதே சிபுசோரன் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கூறி அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தபோது பாரதிய ஜனதா நாடாளுமன்றத்தில் அடேயப்பா, எப்படியெல்லாம் கூச்சல் போட்டார்கள்? ஜனநாயக விரோதம் என்று ஜனநாயகத்தின் நவீன காவல்காரர்கள் போல எவ்வாறெல்லாம் கத்தித் தீர்த்தார்கள்? அதே சிபுசோரன் ஜார்க்கண்ட் மாநில முதல் அமைச்சர்ஆவதற்குக் அழுத்தங் கொடுக்கிறார்கள் என்றால் பி.ஜே.பி.யின்தார்மீக ஒழுக்கம் என்று தம்பட்டம் அடிப்பதெல்லாம் யாரை ஏமாற்ற?

பார்ப்பனர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு நேரிடையாக வருவதற்கான வாய்ப்பு இல்லை என்ற நிலையில், பாரதிய ஜனதா என்ற அரசியல் முகமூடி அணிந்து அதிகாரத்தைக் கைபிடிக்க வியூகம் வகுத்துள்ளனர் என்பதைப் பார்ப்பனர் அல்லாதார் உணர வேண்டும். அவர்களை உணர்ந்திட வைப்பதே நமது முக்கிய பணியாகும்.

-------------------------- மின்சாரம் அவர்கள் 9-1-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

2 comments:

beer mohamed said...

பார்ப்பனர்களின் புத்தியே இப்படி தான் போகும்
http://athiradenews.blogspot.com

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி