Search This Blog

21.1.10

தலித் விடுதலை முன்னோடி பெரியார் - 9




இதுதான் யானை என்று உருவகப்படுத்திக் கொண்ட விழி இழந்த அய்வர் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது.பகுத்தறிவு ஒளி மூலம் நமது விழிகளைத் திறந்த சமுதாய மருத்துவராம் தந்தைபெரியாரைப் பற்றி அந்த விழி இழந்தோர் உருவகப்படுத்தியதை விடவும் அதிகமான அளவில் பொய்யும், புனைவுமாக பல உருவகங்களை உலவவிட்டுள்ளனர் பார்ப்பனர்களும் ,பார்ப்பன அடிவருடிகளும்.

எடுத்துக்காட்டாக பெரியார் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு வீட்டில் பிள்ளையாரை வணங்கினார், வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தார்,பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபடவில்லை,அவர்களை இழிவாகப் பேசினார் என்பது போன்ற பல அவதூறுகளை அள்ளிவீசி வருகின்றார்கள். இந்த அவதூறுகள் பெரியார் உயிரோடு இருந்த போதிலிருந்தே சொல்லப்பட்டு வருகிறது. இந்த அவதூறுகளுக்கெல்லாம் பெரியாராலும், பெரியார் தொண்டர்களாலும் மற்றும் நேர்மையான வரலாற்று ஆய்வாளர்களாலும் தகுந்த ஆதாரங்களுடன் பதில் அளிக்கப்பட்டே வந்துள்ளது.

இருந்தாலும் திரும்பத் திரும்ப அதே அவதூறுகளை ஒரு சில அரைவேக்காடுகள் இப்போதும் சொல்லிவருகிறார்கள். இவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கெல்லாம் நாம் http://thamizhoviya.blogspot.com “தமிழ் ஓவியா” வலைப்பூவில் பதில் அளித்துள்ளோம். குறிப்பாக பெரியார், பெரியார்-தலித், அய்யத்தெளிவு என்ற சுட்டியை சுட்டிப் படித்தால் உண்மையை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

பணிப்பளு மற்றும் குடும்பச் சுமை காரணமாக இந்தப் பார்ப்பனக்கும்பலுக்கு உடனுக்குடன் பதில் அளிக்க கால தாமதமாகிறது. அதோடு ஏற்கனவே இது குறித்து பதில் அளித்து விரிவான நூல்கள் வந்து விட்ட நிலையில் திரும்பத் திரும்ப எழுத வேண்டுமா? என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

அந்த வகையில் 2004 அம் ஆண்டு “உலகத் தமிழர் சக்தி” ஜூன் 2004 இதழில் “தலித் தலைமை –பெரியாரின் நிலை என்னவாக இருந்தது?” என்ற தலைப்பில் டாக்டர் வேலு அண்ணாமலை அவர்கள்,எழுதிய கட்டுரைக்கு மறுப்பாக நான் எழுதிய கட்டுரையை இங்கு தொடர்ச்சியாகப் பதிவு செய்கிறேன்.
சமூகப் பொறுப்பில் என்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று கூறியதோடு இந்த கட்டுரையை தட்டச்சு செய்து கொடுத்த எனது இனிய தோழர் “ஆதிஆனந்த்அப்பா” அவர்களின் உதவிக்கு மிக்க நன்றி
****************************************************************************



”என்னை ரொம்பவும் வருத்துவது 1960களில் பெரியார் விடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு அறிக்கைதான் “பறையர் பெண்கள் ஜாக்கெட் அணிவதை எப்படிப் பொறுத்துக் கொள்வது? என்று கேட்கிறார் அவர். இந்த அறிக்கை என்ன சொல்கிறது? பெரியாரின் வார்த்தைகளுக்கு நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை” என்று அடுத்த ஆதாரமேயில்லாத அவதூரை வீசுகிறார் டாக்டர் வேலு அண்ணாமலை.

எதையும் ‘எடுத்தேன்-கவிழ்த்தேன்’ என்கிற தொனியில்தான் இக்கட்டுரையை வேலு அண்ணாமலை எழுதியுள்ளார். பெண்களின் உரிமைக்காக அனைவருக்கும் முன்னோடியாக சிந்தித்து செயல்பட்டவர் பெரியார். பார்ப்பனப் பெண்கள் பாதிக்கப்படுவதையே கண்டித்த பெரியார், நமது பெண்கள் ஜாக்கெட் போடுவதைப் பற்றி எழுதியுள்ளதாக சொல்வதற்கு எந்த ஆதாரமில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டே பெரியாரின் கருத்தை திரிக்கும் செயல் இது என்பதை கீழ் வரும் விளக்கம் உறுதிப் படுத்தும் என்பதால் அதை அப்படியே இங்கு தருகிறேன்.

இது குறித்து பெரியார் தந்துள்ள விளக்கம் இதோ:

“ஜாதி சம்பந்தமான காரியங்களில் நான் ரொம்ப முயற்சி எடுப்பவன். அதற்காகவே வாழ்வதாகக் கருதுபவன். பறையன் - சக்கிலி - வண்ணான் - பரியாரி என்பது அவமானமல்ல. தொழிலின் காரணமாக வந்தது. பார்ப்பான் தன்னை மேன்மைப்படுத்தி கொள்ளவும் நம்மை இழிசொல்லாக்கி விட்டான். ஆனால் நம் எல்லோரையும் சேர்த்து பார்ப்பான் தேவடியாள் மகன் என்று சொல்கின்றான். சொல்வது மட்டுமல்ல சாஸ்திரத்திலும் அப்படியே எழுதி இருக்கின்றான். சட்டத்திலே (இந்தியாவிலே) தாசிபுத்திரன் என்றே இருக்கிறது. அனுபவத்திலுமிருக்கிறது என்று சொன்னால் கோயிலுக்குப் போகிறவன் அத்தனை பேரும் தேவடியாள் மகன் தானே! இது அண்ணாதுரைக்கும் தான் ராஜா சர்ருக்கும் தான். வேறு பார்ப்பானல்லாத எல்லோருக்கும்தான். பறையன் என்று சொல்லக்கூடாது என்று தான் சொன்னார்களே தவிர தண்ணீருக்கு எப்படி ஜலம் என்று சொல்கின்றானோ அதுபோல பார்ப்பான் காந்தியாரைப் பிடித்து பறையன் என்கிறதை நிலை நிறுத்துவதற்காக அரிஜன் என்று சொல்லி இன்னும் அதையே சொல்லிக் கொண்டிருக்கின்றான். பறையன் என்று சொல்லக்கூடாது என்று ஆரம்பித்தவன் நான். காந்தியார் தீண்டாதவர்களுக்குத் கிணறு வெட்டுவதற்காகக் காந்தி திலக் நிதியிலிருந்து ரு. 55.000 அனுப்பினார். அப்போது நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவன். நான் அதை இதற்காக செலவிடாமல் அப்படியே வைத்துவிட்டேன். மற்ற மாகாணக்காரர்கள் எல்லாhம் செலவழித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியாகக கேணி கோயில் பள்ளிக்கூடம் கட்டினார்கள். நான் காந்தியாருக்கு எழுதினேன் நாம் அவர்களுக்கு இவை எல்லாம் தனியாகச் செய்து கொடுப்பதால் ஒருக்காலும் தீண்டாமை ஒழியாது. அதற்குப் பதில் பறையன் கோயில் பறையன் பள்ளிக்கூடம் என்று சொல்லி மக்கள் அதையும் ஒதுக்கிவைத்து விடுவார்கள். இதை நான் விரும்பவில்லை. நம் மக்கள் தண்ணீர் எடுக்க வேண்டும். நம் மக்கள் படிக்கிற பள்ளிகளில் அவர்களையும் படிக்க அனுமதிக்க வேண்டும். நம் மக்கள் போகிற கோயில்களுக்கு அவர்களும் போக உரிமை வழங்க வேண்டும் என்று எழுதினேன். அதற்கு அவர் அதுபோல செய்ய முடியாது என்று சொல்லி விட்டார். நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாகத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கின்றார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லைச் சொன்னாலும் அதை ஒழிப்பதற்காக சொன்னதுதான். எலக்சன் போது ராமசாமி நாயக்கர் பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களே அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர் என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கின்றார்கள். அதைக் கண்டு சிலர் என்னிடம் வந்து நீ எப்படிச் சொல்லலாம் எனறு கேட்டார்கள். நான் சொன்னது உண்மைத்தான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்குமுன் ரவிக்கைப் போடக்கூடாது போட்டால் துணியே போடக்கூடாது அப்படி இருந்த சமுதாயம் கால மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கின்றது. இன்றைக்கு ரவிக்கையில்லாமல் பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். இதைக் கொண்டு அந்த இனமக்களை எனக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே ஆகும் என்பதை விளக்கியதும் அவர்கள் புரிந்து கொண்டனர்.

------------------11-12-1968 அன்று சென்னை - அயன்புரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை" 15-12-1968 "பெரியார் களஞ்சியம்" தொகுதி 18- "ஜாதி-தீண்டாமை" பாகம்- 12 பக்கம் 73

இறுதியாக பெரியாரும்- அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவர்கள் இருவரையும் பேதப்படுத்துவது அல்லது வேறுபடுத்திப் பார்ப்பது என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு ஊறுவிளைவிக்கும் செயலாகும். இவர்களிடையே பிளவு எப்போது வரும்? என்று பார்ப்பனர்கள் ஏங்கிக் கொண்டுள்ளார்கள். அதற்கு டாக்டர் வேலு அண்ணாமலை போன்றவர்கள் வழிவிடலாமா?

நீங்கள் கட்டுரையின் முன்பகுதியில் குறிப்பிட்டது போல பெரியாரின் எழுத்துக்களையும், உரைகளையும் தெளிவாகப் படியுங்கள். அப்போதுதான் தலித்துகளுக்காக பெரியார் செய்த செயல்பாடுகள் பற்றி நன்கு அறிய முடியும். சிந்தியுங்கள் தெளிவடையுங்கள். ஒன்றிணைவோம்! விடுதலையை வென்றெடுப்போம்!!

கீழ்கண்ட நூல்களை படிக்க பரிந்துரைக்கிறோம்

1.தந்தைபெரியாரும் தாழ்த்தப்பட்டோரும்
2.பெரியார் சுயமரியாதை சமதர்மம்
3.பெரியார் ஆகஸ்ட் 15
4.பெரியாரைத் திரிக்கும் புரட்டுகளுக்கு மறுப்பு
5.திராவிட இயக்கம் தலித்துகளுக்கு எதிரானதா?
6.இந்துத்துவ வேரறுக்கும் உயிராயுதமும் முதற்குடிகளும்
7.பெரியார்களஞ்சியம் ஜாதி-தீண்டாமை 1-17 பாகங்கள்
8.பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகள்


------------------------(நிறைவு)

1 comments:

பனித்துளி சங்கர் said...

பகிர்வுக்கு நன்றி .வாழ்த்துக்கள்