Search This Blog

25.1.10

பெரியார் இல்லை என்றால்...

பெரியார் இல்லை என்றால் படித்திருக்க முடியாது பணிக்குச் சென்றிருக்க முடியாது சிவகாசி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்


பெரியார் இல்லை என்றால் நாமெல்லாம் படித்திருக்க முடியாது. பட்டதாரியாக ஆகியிருக்க முடியாது என்று சிவகாசி பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சிவகாசியில் 17.1.2010 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

பெரியாரின் உவமானம்

தந்தை பெரியார் அவர்கள் எப்பொழுதுமே மகிழ்ச்சியாக ஒன்றைச் சொல்லுவார்கள். பெரியார் அவர்களுடைய உவமான உவமேயங்கள் சிறப்பானதாக இருக்கும். அவருடைய சிந்தனையிலே இருந்து குற்றால அருவி போல வந்து விழும். அப்படி ஒரு முறை சொன்னார்.

பல பேர் இருக்கிறார்கள். செய்தியாளர்களெல்லாம் இருக்கிறார்கள். அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அறிந்திருப்பீர்கள். வங்கிகள் எல்லாம் முடக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். இது இன்றைய கால செய்தி.

அந்தக் காலத்தில் பல முக்கிய நபர்கள், செய்தியாளர்கள் எல்லாம் இருக்கிற இடத்தில் இரண்டு பேர் பேசிக்கொண்டார்களாம். அதை உதாரணமாகக்காட்டி அன்றைக்கே தந்தை பெரியார் சொன்னார்.

ஒருவர்சொன்னாராம்

அத்தனை பேர் நடுவிலே நின்று கொண்டிருந்த ஒரு சாதாரணமான தோழர் சொன்னாராம் உலகத்தில் எந்த வங்கி வீழ்ந்தாலும் எனக்குக் கவலை இல்லை என்று சொன்னாராம். இது அய்யா அவர்கள் சொன்ன செய்தி. உடனே எல்லா செய்தியாளர்களும் இப்படி சொன்னவரை மொய்த்துக்கொண்டார்களாம்.

என்ன இவ்வளவு பெரிய குபேரரை இதுவரை நாம் பார்த்ததில்லையே என்று நினைத்தார்கள். எந்த வங்கி காலாவதியானாலும் எனக்கு அதில் கவலையே இல்லையே என்று இவ்வளவு துணிச்சலோடு மகிழ்ச்சியாக சொல்லுகிறாரே நீங்கள் யார்? என்ன காரணம் இப்படிச் சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்களாம். இவ்வளவு பெரிய கோடீசுவரரை நாங்கள் இதுவரை அடையாளம் காணாமல் இருந்தோமே என்று சொல்லி கேட்டார்களாம்.

எந்த வங்கியிலும் ஒரு காசு போடவில்லையே

அந்த நபர் இவைகளை எல்லாம் கேட்டுவிட்டு மிக அமைதியாக ஒரு பதிலைச் சொன்னாராம். எந்த வங்கியிலும் நான் ஒரு காசு கூட போடவில்லை. எனவே எந்த வங்கி வீழ்ந்தால் எனக்கென்ன கவலை? என்று சொன்னாராம். அதைப் போல தந்தை பெரியார் அவர்கள் வாழ்க்கையில் எனக்கு துணிச்சல்தான் முக்கியமே தவிர வேறு ஒன்றும் அல்ல என்று சொன்னார்.

அதனால்தான் தெளிவாக உங்களுக்கு ஒன்றைச் சொல்லுகின்றோம். திராவிடர் கழகத்தின் தோழர்கள் மிக எளிமையானவர்கள். ஆனால் அதே நேரத்திலே அவர்கள் எடுத்த காரியத்தை முடிக்காமல் விட்டதே இல்லை. அய்யா போஸ் போன்றவருடைய அறக்கொடை, காஞ்சனா அம்மா அவர்களின் மனிதநேயம், அது போல நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். இவை எல்லாம் எங்களாலே திரட்டப்படுகிறது என்று யாரும் தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்.

பெரியார் தொண்டினாலே பயன் பெற்றவர்கள்

அத்தனையும் பெரியார் தொண்டினாலே பலன் பெற்றவர்கள் காட்டுகின்ற நன்றியாகும். (கைதட்டல்), சிறுதுளி பெருவெள்ளமாகும். எனவே இந்த நன்றித் துளிகள் உலகமெல்லாம் இப்பொழுது பரவிக் கொண்டிருக்கிறது.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் அதன் விளைவுதான் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகமாக மலர்ந்திருக்கிறது. தந்தை பெரியார் அவர்களுடைய சிறப்பான சேமிப்பு சிக்கனத்தால் இன்றைக்கு அது பல்கலைக் கழகமாக உருவாகியிருக்கிறது.

பெரியாரின் பகுத்தறிவு கேந்திரங்களாக பல அமைப்புகள் உருவாகியிருக்கின்றன. 75ஆம் ஆண்டிலே பவள விழா காணுகிற நாளேடு விடுதலை உலகத்திலேயே ஒரே ஒரு பகுத்தறிவு நாளேடு; தொடர்ந்து கடவுள்மறுப்பு, ஜாதி மறுப்பு; மூடநம்பிக்கை மறுப்பு மூடநம்பிக்கைகள் ஒழிப்பு ஆகிய இத்தனை கருத்துகளை எல்லாம் சொல்லிக்கொண்டு, எவ்வளவு ரூபாய் நட்டமானாலும் எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை, விடுதலை ஏட்டை நடத்துங்கள் என்று சொல்லி தந்தை பெரியார் செய்த ஏற்பாட்டால் அந்தக் கொடி தலை தாழாமல் பறந்து கொண்டிருக்கிறது. ஆகவே இதையெல்லாம் நாங்கள்
சய்கிற பொழுது மக்களாகிய உங்களிடத்திலே வருவோம். நீங்கள் எங்களை கைவிட மாட்டீர்கள்.

சுமை தூக்கும் தொழிலாளி கூட

சாதாரண பாட்டாளி எளிய மக்கள், சுமை தூக்குகிறார்களே அந்தத் தோழர்கள் கூட நிச்சயமாக அமையவிருக்கின்ற பெரியார்மய்யத்திலே என்னுடைய பங்களிப்பு உண்டு என்று பணம் கொடுத்தார்கள்.

ஆனால் எங்களைப் பொறுத்த வரையிலே பணத்தை வைத்து இதுவரை எந்த நிறுவனமும் வரவில்லை. நம்மிடம் ஒரே ஒரு துணிச்சல் உண்டு. நம்மிடம் கையிலே பணம் இல்லை.

கையில் பணமில்லை; தோளில் துண்டு உண்டு

ஆனால் தோளிலே துண்டு உண்டு. ஆகவே நானே தோளில் துண்டு போட்டிருக்கிறேன். மக்களிடம் பிச்சை எடுக்க வேண்டும் தனிப்பட்ட வாழ்வுக்காக பிச்சை எடுத்தால் அது அவமானம். ஆனால் பெரியார் மய்யத்திற்காக, இனிவரக் கூடிய சமுதாயத்திற்காக, அவர்கள் அறிவு ஏற்றம்பெற பொது நலனுக்காக பிச்சை எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை.

சிவகாசியில் இருட்டு அதிகமாக இருக்கிறது. மற்ற இடங்களில் எல்லாம் உங்களால் வெளிச்சம் ஏற்படுகிறது. அது மகிழ்ச்சியைத் தரும்.

மூடநம்பிக்கைகள் அதிகம்

இந்த இடங்களிலே மூடநம்பிக்கை அதிகமிருக்கிறதே என்று சொன்னார்கள். அங்கே தான் பெரியார் மய்யத்திற்குத் தேவையும் இருக்கிறது.

எங்கே நோய் அதிகமாக இருக்கிறதோ அங்கே தான் டாக்டர்கள் தேவைப்படுவார்கள். எல்லோரும் நன்றாக இருந்தால் டாக்டர்கள் தேவையில்லை. மருத்துவமனை தேவையில்லை. மருத்துவக் கல்லூரி தேவையில்லை.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். எங்களுக்கு அய்யா சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், அவருடைய வாழ்விணையர், மற்றும் அவருடைய குடும்பத்தினர், அதே போல அவர்களுக்குத் துணை நிற்கிறவர்கள் இவ்வளவு பெரிய நிலையிலே மதிப்புமிக்க இடத்தைக் கொடுத்தார்கள் என்று சொன்னால், சிவகாசி தான் வரலாறு படைத்திருக்கிறது. எனவே சிவகாசியிலே எங்களுக்கு ஆதரவு இல்லை என்று நாங்கள் ஒரு போதும் அதைரியப்படமாட்டோம். ஏனென்றால் பெரியாருக்கு கடன்பட்டவர்கள் நாம்.

பெரியார் பல்பொருள் அங்காடி

என்னதான் ஒருவர் கடவுள் நம்பிக்கையாளராக இருந்தாலும் பெரியார் மீது பற்றுக்கொண்டவராக இருக்கலாம். பெரியார் ஒரு பல்பொருள் அங்காடி. இங்கே எல்லாபொருள்களும் கிடைக்கிறது. ஆனால் வாங்குகிறவர்களுக்கு எது தேவையோ அதை மட்டும் வாங்கிக் கொண்டு போவார்கள்.

சில பேரை நீங்கள் பார்க்கலாம் நாமம் போட்டிருப்பார்கள். விபூதி பூசியிருப்பார்கள். ஆழ்ந்த கடவுள் பக்தராக இருப்பார். கும்பாபிஷேகம் நடத்தக் கூடியவராகக் கூட இருப்பார்.

பெரியாருடைய பெருமையின் ஒரு பகுதி எதிலே அமைந்திருக்கிறது என்று சொன்னால், அந்த ஆத்திகர் சொல்லுவார் பெரியார் எனக்கொரு கடவுளுங்க என்று சொல்லுவார் (சிரிப்பு) என்னய்யா பெரியாரே கடவுள் இல்லை என்று சொன்னவர் ஆயிற்றே என்று கேட்டால், ஆமாங்க! பெரியார் இல்லை என்றால் என் பிள்ளை படித்திருக்க முடியாது என்று சொல்லுவார். அவர் இல்லை என்றால் என் பையனுக்கு வேலை கிடைத்திருக்காது. அவர் இல்லை என்றால் எங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைத் திருக்காது. எங்கள் பிள்ளைகள் டாக்டராயிகிருக்க மாட்டார்கள். எங்கள் பிள்ளைகள் எஞ்சினிய ராகியிருக்க மாட்டார் கள். எங்கள் பிள்ளைகள் வழக்குரைஞராகியிருக்க மாட்டார்கள். பிள்ளைகள் நீதிபதிகளாகியிருக்க மாட்டார்கள் என்று சொல்லுவார்கள். ஒரு காலத்திலே நீங்கள் நினைத்துப் பார்த்தால் நமக்குத் தோளிலே துண்டு போட உரிமை உண்டா?

சிவகாசி வரலாற்றில்

இதே சிவகாசியினுடைய வரலாற்றை ஒரு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னாலே நீங்கள் தள்ளிப் பார்த்தால் ஜாதிக் கலவரத்தில் சிவகாசி கலவரம்தான் மிக முக்கியமானது. இன்றைக்கு பல இடங்களில் ஜாதிக் கலவரம் நடக்கிறது. ஆனால் தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதென்றால் அதற்குக் கலைஞர் அவர்களுடைய ஆட்சி ஒரு பக்கத்திலே காரணமாக இருந்தால் கூட, இதற்கு அடித்தளம் பெரியார். உங்களுக்குத் தெரியும். 1929லே பாபர் மசூதியை இடித்தார்கள். இன்றைக்கு தீவிரவாதம் உலகம் பூராவும் பரவியிருக்கிறது. பல காரணங்களில் மத தீவிரவாதம் ஒரு காரணம். அன்றைக்கு இந்தியா பூராவும் இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். கிறிஸ்துவ நண்பர்கள் இருக்கிறார்கள்.

இங்கே மாதிரி ஒரு சகிப்புத்தன்மை வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. கடவுள் இல்லை என்று சொல்லுகிறவர்கள் நாங்கள். மதம் இல்லை என்று சொல்லுகிறவர்கள் நாங்கள். ஜாதி ஒழிய வேண்-டும் என்று சொல்லுகிறவர்கள் நாங்கள். அதை எல்லாம்தாண்டி என்னதான் மாற்றுக் கருத்துகளை அவர்கள் சொல்லுகிறார்கள் என்ற பக்குவம் தமிழ்நாட்டில்தான் உண்டு.

இன்றைக்கு என்னுடைய உரையைத் தொடங்குவதற்கு முன்னாலேயே மறைந்த ஜோதிபாசு அவர்களுக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஜோதிபாசு அவர்கள் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, நல்ல பொதுத் தொண்டாற்றிய, இலட்சியத்திற்காக பெரிய அளவுக்கு கஷ்ட நஷ்டங்களை ஏற்ற, இழப்புகளை ஏற்ற, மக்கள் மத்தியிலே எல்லோராலும் விரும்பப்பட்டவராக இருந்த ஒரு மாபெரும்தலைவர் மறைந்து விட்டார். அவருடைய மறைவு என்பது இந்தியாவின் பொது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என்பதை சொல்லி அனைவரின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை இந்த கூட்டத்திலே தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.

பல கருத்துள்ளவர்கள் இருக்கலாம். ஆனால் மனிதத் தன்மை என்று வரும்பொழுது சமுதாயத்திற்கு பணியாற்ற வேண்டும் என்று வரும்பொழுது எல்லோரையும் சகிப்புத் தன்மையுடன் பார்ப்பதற்குப் பெயர் தான் பகுத்தறிவு.

மனிதனுக்கு ஆறாவது அறிவாக இருக்கிற பகுத்தறிவு இருக்கிற காரணத்தால்தான் மனிதன் வளர்ந்திருக்கிறான்.

(தொடரும்)

21-1-2010

1 comments:

கோவி.கண்ணன் said...

//"பெரியார் இல்லை என்றால்..."//

உண்மைதான். பெரியார் இல்லை என்றால் இன்று 'பலர்' பிழைக்க வழி இல்லாமல் போய் இருக்கும்.