Search This Blog

24.1.10

நடிகர் சிவக்குமாரை அவமானப்படுத்திய அர்ச்சகப் பார்ப்பனர்கள்

நடிகர் சிவக்குமார் பேசுகிறார்...

அர்ச்சகப் பார்ப்பனர்கள் இவரை எப்படி அவமதித்தனர் அவரே எழுதியிருக்கிறார், படியுங்கள்.


சென்னை அண்ணாசாலையில் விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட் என்கிற கலைப்பொருள் விற்பனை நிலையம் இருக்கிறது. இந்தியா முழுவதும் இருந்து தயாராகும் அற்புதமான கலைப்பொருட்களை விற்பனை செய்வதற்காக அரசு நடத்துகிற நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள பூம்புகார் கலைக்கூடம் போன்ற அரிய இந்திய கலை அம்சங்களைத் தெரிந்துகொள்ள வெளிநாட்டவர்கள் அங்கு விரும்பி வருவார்கள். தமது கலைஞர்களின் படைப்புகளையும் அங்கே விற்பனை செய்வார்கள்.

அழகான ஓவியங்களை வரைந்து பிரேம் போட்டு கொண்டுபோய் அங்கு வைத்து விட்டு வந்தால் யாராவது வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படி விற்பனையானால் அந்த நிறுவனத்துக்கு 15 சதவிகிதம் கமிஷன் எடுத்துக்கொள்வார்கள். மீதித் தொகை முழுவதும் உரிய கலைஞர்களுக்கு கிடைத்துவிடும். நமது கோவில் ஓவியங்கள் வெளிநாட்டினரின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் எனக்கு இயல்பாகவே அதில் ஆர்வம் மிகுதியாக இருந்ததால், என் படைப்புகளை அங்கு விற்பனைக்கு வைப்பேன் .அப்படி வைப்பதற்காக உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை வரைய தஞ்சாவூருக்கே புறப்பட்டேன். ரெயிலில் இருந்து இறங்கி ரொம்ப தூரம் ஊருக்குள்ளே நடந்தேன். ரெயிலடிக்குப் பக்கத்தில் இருக்கும் லாட்ஜுகளில் கட்டணம் அதிகமாக இருக்கும் என்பதால் கொஞ்சம் உள்ளே போனதும் மங்களாம்பிகா லாட்ஜ் என மங்கிய பெயர் பலகை ஒன்று இருந்தது. அந்த விடுதி உள்ளே சென்று மானேஜரிடம் அறை வாடகையை விசாரித்தேன் ஒரு நாளைக்கு எட்டு ரூபாய் என்றார் அவர்,

நான், அதைவிட குறைவான தொகைக்கு அறை எதுவும் இல்லையா? என்று கேட்டேன். என்னை மேலும் கீழுமாக நோட்டமிட்ட அவர், நாலு ரூபாய்க்கு ஒரு ரூம் இருக்கு. ஆனா, அது கொஞ்சம் மோசமா இருக்கும் என்று சொன்னார்.

அதைவிட குறைவான வாடகைக்கு அறை இருக்கிறதா? என்று நான் மீண்டும் கேட்க அவருக்கு சுள்ளென்று கோபம் வந்துவிட்டது ஏதோ விளையாடுகிறேன் என்று நினைத்து ஒரு மாதிரியாக பார்த்தார்.

அதை விட குறைச்சல்னா பாத்ரூம் தான் இருக்கு பரவாயில்லையா-? என்று அவர் கேட்டதும் அதை ரெண்டு ரூபாய்க்கு தருவீங்களா? எனக்கு பாத்ரூம் போதும். குளிக்க, டாய்லட் போக ஒரு இடம். ராத்திரி ஏதாவது திண்ணையில் கூட படுத்துக்குவேன் என்று சொன்ன பிறகே என் உண்மையான நிலைமை அவருக்குப் புரிந்தது. நாலு ரூபாய் அறையை எடுத்துக்கோ உன்னால என்ன முடியுதோ அதைக் கொடுப்பா என்று சொல்லி விட்டார். அப்போதைக்கு அவர் ஆபத்பாந்தவனாகவே என் கண்களுக்னுகுத் தெரிந்தார். ஓவியம் வரைய காலை ஏழு மணிக்கெல்லாம் கோவிலில் இருந்தால்தான் கோபுரத்தின் லைட்டிங் நன்றாக இருக்கும். மாலை வரை ஒரே அமர்வில் வரைந்து முடிக்கவேண்டும். காலையில் ஆறரை மணிக்கு இரண்டு இட்லி, ஒரு வடையை அவசரமாக சாப்பிட்டுவிட்டு வரைய கிளம்பினால் மாலை ஆறு மணிக்குத்தான் கோவிலைவிட்டு வருவேன். மதிய உணவிற்கு நேரமும் இல்லை.... கையில் காசும் இல்லை!

இரண்டாவது நாள் மாலை ஆறு மணிக்கு ஓட்டலுக்கு சென்று உருளைக்கிழங்கு போண்டா கேட்டேன். ஆனால், மசால்தோசையை கொண்டுவந்து வைத்தார் சர்வர். நான் சாப்பிடவில்லை. வேறு யாருக்கோ சொன்னது இங்கே வந்திருக்கு. நான் போண்டாதான் கேட்டேன் என்று சொன்னேன். அவரோ, பரவாயில்லை சாப்பிடுங்க என்றார்.

எனக்கு தோசை வேண்டாம் போண்டாவே போதும் என்றேன் மீண்டும். ஏன் ஒரு மசால் தோசை சாப்பிடவா வயித்துல இடமில்லை-? சும்மா சாப்பிடுங்க என்றார் சர்வர், பிடிவாதமாக ! எனக்கு கோபம் வந்து-விட்டது. அஞ்சு மசால் தோசைகூட சாப்பிடுவேன். என்கிட்ட இப்ப இருக்கிற காசுக்கு என்ன சாப்பிடணும்னு எனக்குத் தெரியும். போண்டா தர-முடியுமா .... இல்லைன்னா நான் கிளம்பட்டுமா? என்று ஆத்திரத்தோடே எழுந்தேன். அவரோ, சின்ன முதலாளி என்று அவசரமாக பதறி என்னை தடுத்தார். நான் திகைப்பாக பார்த்தேன். என்னை அடையாளம் தெரியலையா சின்ன முதலாளி? பொள்ளாச்சியில உங்க மாமா ஓட்டல்ல வேலை பார்த்திட்டிருந்தேன். நீங்க கல்லாவுல வந்து உட்காருவீங்க. அப்புறம் படிக்க பட்டணத்துக்கு போயிட்டதா சொன்னாங்க.

நான் இப்ப தஞ்சாவூர்ல இந்த ஓட்டல்லதான் வேலை பார்க்கறேன். பிரியத்துலதான் உங்கள சாப்பிடசொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க என்று நெகிழ்ச்சியோடு சொல்லி, என்னை பிடிவாதமாக உட்கார வைத்தார். எனக்கு சிலிர்த்துப் போய்விட்டது. தர்மம் தலைகாக்கும் என்பார்களே, அது மெத்தவும் சரிதான்! என்று தோன்றியது. நான் மறுக்க முடியாமல், அவர் வைத்த மசால்தோசையை சாப்பிட்டு முடித்தேன்.

திருச்சி மலைக்கோட்டை

நான் எப்பவும் ஒரு ரெயில் என்ஜின் மாதிரி தனித்து இயங்குவேன். என்னோடு எத்தனை ரெயில் பெட்டிகள் வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். பெட்டிகள் இல்லையென்றாலும் என்ஜின் தனியாக பயணம் செய்வதுபோல் நானும் என் பயணங்களில் யாருக்காகவும் காத்திருக்கமாட்டேன்.

திருச்சி மலைக்கோட்டையை ஓவியமாக வரைய சில நண்பர்கள் வருவதாக இருந்தார்கள். கடைசி நேரத்தில் அவர்கள் வரமுடியாமல் போனது. என் பயணத்தைத் தள்ளிவைக்க சொன்னார்கள். ஆனால் அதற்கு நியாயமான காரணம் எதுவும் இல்லாததால், நான் மறுத்துவிட்டேன். தனியாகவே திருச்சிக்கு கிளம்பினேன்.

அங்கே அலைந்து திரிந்து கிருஷ்ண பவன் லாட்ஜ் என்கிற தங்கும் விடுதியைக் கண்டுபிடித்தேன். அங்கு தான் திருச்சியிலேயே இரண்டரை ரூபாய்க்கு அறை வாடகைக்குக் கிடைத்தது.

பல இடங்களில் உட்கார்ந்து மலைக்கோட்டையை வரைந்து பார்த்தேன். எங்கும் சரியான கோணம் (ஆங்கிள்) கிடைக்கவில்லை. மெயின் கார்டு கேட் அருகில் இருந்த கல்வி அதிகாரி (டி.இ.ஓ) அலுவலகத்தில் இருந்து சரியான ஆங்கிள் கிடைக்கும் என்று எனக்கு மனதில் தோன்றியது. அங்கே போனேன். மே மாத உச்சி வெயில் கொளுத்தி எடுத்தது. அந்த அதிகாரியிடம் அனுமதி வாங்கிக்கொண்டு மொட்டை மாடிக்கு போனால். தீக்குழியில் மிதித்தது போல தரை கொதித்தது. ஒதுங்குவதற்கு மருந்துக்கும் கூட நிழலே இல்லை. காலை பத்துமணிக்கு போனவன் தொடர்ந்து மூன்று மணி நேரமாக தகிக்கும் வெயிலில் நின்றபடியே மலைக்கோட்டையை ஓவியமாக வரைந்துகொண்டு திரும்பிய போது அந்த அதிகாரிக்கு நன்றி சொல்லப் போனேன். தம்பி... நீ யாருப்பா? என்று கேட்டார். காலையில உங்ககிட்ட அனுமதிகேட்டுவிட்டு ஓவியம் வரைய மாடிக்குப் போனேனே, அந்தப் பையன்தான் சார் என்றேன், அவர் பதறிவிட்டார்.

வெள்ளை வெளேர்னு பிரிட்ஜில வெச்சிருந்த ஆப்பிள் பழம் மாதிரி மாடிக்கு போன பையனா நீ? இப்படி முகமெல்லாம் வாடி வதங்கி வந்திருக்கியேப்பா... ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டு வெயில்ல நிக்கணும்? எங்கிட்ட கெட்டிருந்தா மலைக்கோட்டை போட்டோ வையே தந்திருப்பேனே? என்று ஆதங்கப்பட்டார். சாமியை நேர்ல பார்க்கிறது நல்லதா? போட்டோவுல பார்க்கிறது நல்லதா?ன்னு நான் சிரித்துக் கொண்டே கேட்டேன். அவர் நீ நல்லா பேச வேற கத்திருக்கே. யார் பெத்த புள்ளையோ.. உடம்பைப் பார்த்துக்கப்பா என்று அன்பாக அறிவுரையும் வழங்கினார். எனக்கு அதிக வியப்பாக இருந்தது.

ஸ்ரீரங்கத்தில் அவமதிப்பு

அடுத்தோ எனக்கு அவமதிப்பு காத்திருந்தது. ஸ்ரீரங்கம் கோபுரத்தையும் ஓவியமாக வரைய நினைத்து, புஷ்கரணி தெப்பக்குளம் பக்கம் போனேன். கோபுரத்தில் சூரிய வெளிச்சம் நேரடியாக படுகிற கோணம் அங்கிருந்துதான் கிடைத்தது. ஆனால் கோவில் வளாகத்தில் பிரகாரத்திற்கு அருகிலேயே நின்று வரைய வேண்டியது இருந்தது. அப்போது கோவில் அர்ச்கர் ஒருவர் வந்தார். என்னிடம் குலம் கோத்திரங்களை விசாரித்தார். என் பேச்சு, உடை, முக பாவனைகளை வைத்து நான் பிராமணப் பையனில்லை என்று தெளிவாகத் தெரிந்ததும் அவரின் முகம் போன போக்கே சரியில்லை. முறையா அனுமதி எதுவும் வாங்காம கோவிலுக்குள்ள படமெல்லாம் வரையக்கூடாது என்று கடிந்தபடி சொன்னார்.

நான் ஓவியக் கல்லூரி மாணவன். படம் வரைவதைத்தவிர வேறொன்றும் செய்யப்போவதில்லை என்று பவ்வியமாக சொன்னேன், கெஞ்சிப் பார்த்தேன். அவர் சம்மதிக்கவில்லை.

இத்தனை சொன்ன பிறகும் நீங்கள் கோபப்படுவது நியாயமில்லை என்று பணிவாக பேசிப் பார்த்தேன். அவர் காதிலேயே வாங்கவில்லை; மாறாக அவரது கோபம் கூடியது. ஓ... நீ நியாய தர்மம் வேற பேசுறீயா? இரு வர்றேன் என்று ஆவேசமாக உள்ளே போனவர் வேறு சில அர்ச்சகர்களுடன் வந்தார்.

என்னை அடித்து விரட்டாத குறைதான்! அத்தனை அவமதிப்பு அவர்களிடம் முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டு ஏமாற்றத்தோடு அங்கிருந்து கிளம்பினேன். கோவிலைவிட்டு வெளியேறி தெருவில் அமர்ந்து கோபுரத்தை படமாக வரைந்து முடிந்தேன்.

பெரியார்மீது மதிப்பு

தந்தை பெரியார் மீது எனக்கு அப்போதுதான் பெரிய மரியாதை வந்தது. அவர் ஏன் இவர் மாதிரியான பிராமணர்களை வெறுத்தார் என்பதன் அர்த்தமும் எனக்கு அனுபவப்பூர்வமாக விளங்கியது.

அந்தக் கோவிலையும், ஆண்டவனையும் அவர்கள் அனுமதியின்றி யாரும் நினைக்கக்கூடாது என்று கருதிய அந்த அர்ச்சகரின் போக்கு என்னைக் கடுமையாகப் பாதித்தது. படிப்பறிவு இல்லாத சாதாரண கிராமத்து பாமர மக்கள் கூட எனக்கு படங்கள் வரைய இடம் தந்து, உணவளித்து, உபசரித்து அனுப்பிய எத்தனையோ சம்பவங்கள் உண்டு. ஆனால், மெத்தப் படித்து தமிழ் மண்ணின் முக்கிய கோவிலில் அர்ச்சகராக இருந்த அவர் தீண்டாமை நோக்கத்தோடு என்னிடம் அப்படி நடந்து கொண்டது புதிய புதிரான அனுபவமாகவே எனக்கு இருந்தது. அதை நினைத்தால் இப்போதும் நெஞ்சம் கனக்கத்தான் செய்கிறது.

-----------------------நன்றி: "ராணி " 24.1.2010

10 comments:

Ganesan said...

இந்த மாதிரி விசயங்கள் படிக்க படிக்க பெரியாரின் வ்சம் போய்கொண்டு இருக்கிறேன்.

passerby said...

எனக்கு இது தீண்டாமை பிரச்னையாகத் தெரியவில்லை.

கோயிலை உள்ளிருந்து புகைப்படமெடுத்தல், அல்லது, மூலவரை படமெடுத்தல், இதுபோன்று, படம் வரைதல், போன்றவை தடைசெய்யப்பட்டவை.

என்வே, இங்கு போட்டோ எடுக்கக்கூடாது என போர்டு போட்டிருப்பார்கள்.

இது கோயில் வழிமுறைகளில் ஒன்று.
இதை நிலைனிறுத்த்வது கோயில் பணியாளரின் க்டமை. இதைத்தான் அக்கோயில் ஊழியர் பண்ணியதாக நினைக்கிறேன். மேலும், அந்த ‘சிவக்குமார்’ ஒரு வாலிபன். அவனை ஏதாவது நாம் திட்டினால், அவன் நம்மை அடித்துவிடுவான் என்ற பயத்தினாலே அக்கோயில் அர்ச்சகர் ஒரு தற்பாதுகாப்பிற்காக சக தொழிலாளிகளை அழைத்து வந்தார் என நினைக்கிறேன்.

மற்றும், என் குல கோத்திரங்களைக்கேட்டார்; என்று சொல்வதெல்லாம் ஜோடித்த கற்பனை. அல்லது, over reaction.

திருவரங்கம் ஆயிரங்கால பாரம்பரியம் மிக்கது. அது மெல்லமெல்ல தகர்ந்துவருவதை நாம் கண்டு வருகிறோம். வருந்துகிறோம்.

சிவக்குமார் ஒரேயடியாக தகர்ந்து விட வேண்டும் என நினைக்கிறார். அவர் உண்மையிலேயே அக்கோயில் வாழ்வில் அக்கறை கொள்பவராக இருந்திருப்பின், அவ்வச்சகரின் வேண்டுகோளுக்கிணங்க ‘sorry' எனச்சொல்லி நகர்ந்திருக்க வேண்டும்.
செய்யவில்லை. மாறாக, சாதி தீண்டாமை போன்ற முடிச்சு போட்டு பார்க்கிறார்.

(இருப்பினும், பார்ப்பன்ர்களில் சாதிவெறி கொண்டோர் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. அதைக்குறிப்பட்டு ஜீயர்களே வருந்துவதுண்டு. அது சிலர் செய்யும் தனிப்பட்ட விடயம். கோயில் வழிமுறைகளில் வராது!)

Anonymous said...

நல்ல பதிவு

நல்லதந்தி said...

தமிழ் ஓவியாவில்,ஒர் நல்ல கட்டுரை!. இராணியின் உபயத்தில்! :).
சிவகுமார் ஸ்ரீரங்கம் கோவிலில் பெற்ற அனுவத்தை எல்லோரும் வெவ்வேறு வகையாக பல்வேறு கோவில்களிலும் பெற்றிருப்பார்கள். அரசாங்க அலுவலகங்களில் நானோ, நீங்களோ பெற்றிருப்பதைப் போல!. இதைக் குறிப்பிட்ட ஜாதியின் மேல் ஏற்றிச் சொல்லும் போதுதான் நானும், நீங்களும் வேறுபடுகிறோம்.

-/சுடலை மாடன்/- said...

//தந்தை பெரியார் மீது எனக்கு அப்போதுதான் பெரிய மரியாதை வந்தது.//
நடிகர் சிவக்குமாரைப் போன்ற போலிகள் இதை உண்மையிலேயே வெளிப்படையாகச் சொல்லியிருப்பார்களா என்பது சந்தேகமே. ஏதாவது பெரியார் விரும்பிகள் மத்தியில் தனிப்பட்ட அளவில் பேசியதா இது? இதை வெளிப்படையாகச் சொன்னால் மறுக்கக் கூடச் செய்வார். அண்மையில் சுபவீ சிவக்குமாருக்கு ஆனந்த விகடனில் எழுதிய திறந்த கடிதத்தைப் படியுங்கள்:

//அன்பிற் சிறந்த திரு சிவகுமார் அவர்களுக்கு,

வணக்கம். நேற்று விஜய் தொலைக்காட்சியில் இரண்டு மணி நேரம் எங்கும் அசையாமல், வெடிச்சத்தத்திற்கும், விளம்பரங்களுக்குமிடையில், உங்கள் பேச்சைக்( ‘என் கண்ணின் மணிகளுக்கு’) கூர்ந்து கேட்டு, அதை நெஞ்சத்தில் அசை போட்டு, இன்று காலை இந்தத் திறந்த மடலை உங்களுக்கு எழுதுகின்றேன்.

65 வயதிலும் அசர வைக்கும் நினைவாற்றல், சந்தப் பாடல்களைச் சரளமாய்ச் சொல்லும் அழகு, ஆழ்ந்த உணர்ச்சிகள், அறுபடாத தமிழ் எல்லாம் இணைந்து, உங்கள் பேச்சுக்கு ஒளியூட்டுகின்றன. நல்ல நடிகரென நீங்கள் பாராட்டப்பட்டது போலவே, நல்ல பேச்சாளராகவும் நாடு இன்று உங்களை ஏற்றுக் கொண்டுள்ளது.

எனினும், இன்னொரு கோணத்தில்தான் உங்கள் பேச்சு என்னைக் கூடுதலாய்க் கவர்ந்தது. உங்கள் முன்னே விரிந்து கிடந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் மீது உண்மையான அக்கறையோடு நீங்கள் பேசினீர்கள். தன் பிள்ளைகளுக்கு ஒரு தந்தை சொல்வதைப் போலப் பாசத்தோடு சொன்னீர்கள். உங்கள் சொற்களில் ஒரு சத்தியம் இருந்தது. பணம், புகழ், எல்லாவற்றையும் பார்த்துவிட்ட பிறகு, பதவிகளை நோக்கிப் படையயடுக்காமல் அல்லது முதுமைக் காலத்தை இனிமையாய்க் கழித்துவிடலாம் என்று முடிவெடுக்காமல், நாட்டுக்கு நல்லது சொல்ல, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட அரங்குகளுக்கு வந்திருக்கின்றீர்கள். அந்த நேர்மை பிடிக்கிறது.

வழிகாட்டும் தகுதி தனக்கு உண்டென்பதற்கும் சில சான்றுகள் தந்தீர்கள். “பல ஆண்டுகளாய்க் காபி, தேநீர் என் நாவில் பட்டதில்லை. புகை, மதுப் பழக்கம் இல்லை. வேறு மாது எவரையும் இதுவரை தொட்டதில்லை” என்று குறிப்பிட்டீர்கள். திரையுலகமே ஒப்புக் கொண்ட உண்மைகள் இவை.

(அடுத்த பின்னூட்டத்தில் தொடர்கிறது)

-/சுடலை மாடன்/- said...

(தொடர்ச்சி...)

அதே நேரம், இப்படிச் சில பழக்கங்கள் இருந்திருந்தாலும் கூட, நீங்கள் நல்ல மனிதர்தான் என்பது என் பார்வை. பழக்கங்களையும், குணங்களையும் போட்டு நான் குழப்பிக் கொள்வதில்லை. நல்ல பழக்கங்களே இல்லாத நல்ல மனிதர்கள் சிலரையும், கெட்ட பழக்கங்களே இல்லாத கெட்ட மனிதர்கள் சிலரையும் நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

வஞ்சகம், சூது, தன்னலம் கொண்ட மனிதர்கள் கெட்ட மனிதர்கள். ஏமாற்றும் எண்ணம் இல்லாமை, அடுத்தவர்க்கு உதவுதல், பொதுநல விருப்பம் கொண்ட மனிதர்கள் நல்ல மனிதர்கள். இது மேலோட்டமாக இருந்தாலும், என் கணக்கு இவ்வளவுதான். பெற்றோர் பற்றியும், கல்வி பற்றியும், மொழி பற்றியும் நீங்கள் சொன்ன கருத்துகள், பிள்ளைகள் நெஞ்சில் பதிய வேண்டியவை.

புறத்தேவைக்கு ஆங்கிலம் பயன்படலாம். ஆனாலும் அகத் தேவைகளை அன்னைத் தமிழே நிறைவு செய்யும் என்னும் உங்களின் சொற்கள் பொருள் பொதிந்தவை. எந்த நாட்டிற்குப் பிழைக்கப் போனாலும், தாய் மண்ணையும், தாய் மொழியையும் மறந்துவிடாதீர்கள் என்பது இன்றைக்குத் தேவையான அறிவுரை.

ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும் போது அப்பா இறந்து போக, விதவைத் தாயால் வளர்க்கப்பட்ட மகன் என்று உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டபோது, அம்மாவின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பின் விரிவுக்கானஅடிப்படைக் காரணம் புரிந்தது. எல்லாப் பிள்ளைகளும் பெற்றோரையும், ஆசிரியர்களையும் இறுதிவரை நேசிக்க வேண்டும் என்பது உங்கள் உள்ளத்தின் வெளிப்பாடு.

ஆனாலும், பெற்றோர்களிடம் சொல்லிவிட்டுத்தான் பிள்ளைகள் காதலிக்க வேண்டும் என்பதெல்லாம் நடைமுறைக்கு உதவாதவை. மேலும், காதல் என்பது வெறும் வயது சார்ந்த பிரச்சினை அன்று. காதலுக்குக் குறுக்கே நிற்கும் சாதி போன்ற சமூகக் காரணங்களையயல்லாம் விட்டுவிட்டுக் காதலைப் பற்றி நாம் பேச முடியாது.

இருக்கட்டும்...

(அடுத்த பின்னூட்டத்தில் தொடர்கிறது)

-/சுடலை மாடன்/- said...

(தொடர்ச்சி...)

இவைகளையயல்லாம் தாண்டி இரண்டு முக்கியமான செய்திகளுக்காகவே நான் இம்மடலை எழுதத் தொடங்கினேன். ஒன்று, நீங்கள் பேசிய பெண் விடுதலை பற்றியது.

தாய் வழிச் சமூகம் எப்படி ஆணாதிக்கச் சமூகமாக மாறியது என்னும் வரலாற்றைத் தொட்டுக் காட்டிய நீங்கள், சாக்ரடீஸ், அரிஸ்டாடில் ஏசுநாதரில் தொடங்கி, காந்தியார் வரை பெண் விடுதலைக்கு எதிராகச் சொல்லியுள்ள சில வரிகளை எடுத்துக் காட்டினீர்கள்.

இன்றைக்குப் பெண்கள் வேலைக்குப் போகின்றனர். TIDEL PARK முழுவதும் பெண்கள்தான் காணப்படுகின்றனர் என்று குறிப்பிட்டீர்கள். பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்த பாரதியாரின் பாடல் வரிகளைப் பிள்ளைகளுக்குச் சொன்னீர்கள். அத்தோடு அடுத்த செய்திக்குப் போய்விட்டீர்கள்.

அவ்வளவுதானா? பெரியாரை விட்டுவிட்டுப் பெண்விடுதலை பற்றிப் பேசுவது நியாயந்தானா? பாரதியின் பங்களிப்பை நான் மறுக்கவில்லை. ஆனால் பாரதியார் பாடல்தான் எழுதினார். பெரியார்தானே, அதற்காக இயக்கம் கட்டினார்? மூவலூர் ராமாமிர்தத்தம்மையாரும், முத்துலட்சுமி ரெட்டியும் பெரியாரின் உருவாக்கங்கள் இல்லையா? அவர் இல்லையானால், அவருடைய கருத்துகள் வேரூன்றவில்லையானால், தேவதாசி ஒழிப்புச் சட்டமும், சாரதாச் சட்டமும் வந்திருக்குமா? 1929 ஆம் ஆண்டே, பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று குரல் கொடுத்தவர் யார்? அந்த நாள்களிலேயே ‘விதவா விவாகம்’ என்னும் பெயரில், கைம்பெண் மறுமணங்களை நடத்தியவர் யார்? பெண்களுக்கான மாநாடுகளை ஏற்பாடு செய்தவர் யார்? ‘விபச்சாரிகள்’ என்று அழைக்கப்படுவோரையும், மனித நேயத்துடன் அணுகியவர் யார்? அய்யா பெரியார் இல்லையா. . . அவரை நீங்கள் மறக்கலாமா?

பெரியார், பாரதியார், வ. உ. சி. , திரு. வி. க. ஆகியோருக்கும் முன்பாக, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே, பெண் விடுதலைச் சிந்தனைகளைத் தன் நாவலில் எழுதிய மாமனிதர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையையும் இனி நீங்கள் குறிப்பிடவேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.

அவ்வாறே, தமிழ்க் கவிஞர்களைப் பற்றிப் பேசும் போது கம்பன், பாரதி, கண்ணதாசன் என்றே உங்கள் வரிசை அமைகிறது. பாரதிதாசன் என்னும் பெயரைக் கூடச் சொல்வதில்லை. திருவள்ளுவர், சித்தர்கள், பாரதிதாசன், பட்டுக்கோட்டை என்று இன்னொரு வரிசையும் இருக்கிறது. எண்ணிப் பாருங்கள்.

(அடுத்த பின்னூட்டத்தில் தொடர்கிறது)

-/சுடலை மாடன்/- said...

(தொடர்ச்சி...)

இரண்டாவதாக, உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பிய செய்தி ‘சாதி’ பற்றியது. “கல்வியும், பொருளாதாரமும் மேம்பட்டுவிட்டால், சாதி, மத பேதங்கள் மறைந்துவிடும்” என்று அழுத்தமாய்க் குறிப்பிட்டீர்கள்.

சாதீய நஞ்சை அகற்றும் வழி அவ்வளவு எளியதா? படித்தவனிடம் சாதி உணர்வு போய்விட்டதா? கல்வியும், பணமும் வந்துவிட்டால் சாதிகளுக்கிடையே கொள்வினை, கொடுப்பினை என்னும் மண உறவுகள் சாத்தியப்படுமா?

இன்றைக்கும் நிலைமை என்னவாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். தலித் சமூகத்தில் பிறந்த ஒருவன், கல்வியிலும், பொருளாதாரத்திலும் மேம்பாடு அடைந்துவிட்டால், பெரிய வீடுகளைக் கட்டிக் கொள்ளலாம். ஆனால் அந்த வீட்டை அவன் சேரியில்தான் கட்டிக் கொள்ள முடியுமே தவிர, ஊருக்குள் கட்டிக் கொள்ள முடியாது. அவன் ஊருக்குள் வாழவும் முடியாது. அவனை வேறு சாதியினரின் சுடுகாட்டில் எரிக்கவும் முடியாது.

‘இரட்டைக் குவளை’யை ஒழிக்க வேண்டுமென்று இங்கு வந்து யாராவது பேசினால், அவர்களைத் துண்டு துண்டாக வெட்டிப் போட்டுவிடுவோம் என்று சொல்கிற சாதியினரைக் கொண்ட ‘ஃபண்டு கிராமங்கள்’, நீங்கள் பேசிய அதே சேலம், ஈரோடு மாவட்டங்களில் இன்றும் ஏராளமாக உள்ளன.

இவைகளையயல்லாம் உங்களுக்கு நான் எழுதுவதற்குக் காரணம், வெறும் விவாதத்திற்காகவோ, உங்களைக் குறை சொல்வதற்காகவோ அல்ல. இன்று உங்கள் பேச்சை மாணவர்கள், பெண்கள், பொதுவானவர்கள் அனைவரும் விரும்பிக் கேட்கின்றனர். அமெரிக்காவின் ‘ஃபெட்னா’ விழாவில், நீங்கள் பேசிய குறுந்தகடுகள் ஆயிரக்கணக்கில் விற்பனையாகி உள்ளன. தொலைக்காட்சிகள் உங்கள் பேச்சை ஒலிபரப்புகின்றன. எனவே இவ்வளவு விரைவாய்ப் பரவும் உங்கள் பேச்சில், வெறும் இலக்கிய அழகு மட்டுமல்லாமல், சமூக வலிகளும் சம இடம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாகவே இம்மடலை எழுதுகின்றேன்.

நான் நம்புகின்ற நல்ல மனிதர்களில் நீங்களும் ஒருவர் என்பதால், நியாயங்களை எடுத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையிலும் எழுதுகின்றேன்.

நிறைந்த அன்புடன்,
சுப. வீரபாண்டியன்.
//

(அடுத்த பின்னூட்டத்தில் தொடர்கிறது)

-/சுடலை மாடன்/- said...

(தொடர்ச்சி...)

சிவக்குமார் பதிலளிக்க மாட்டார். பெரியார் பெயரையும், பாரதிதாசன் பெயரையும் அவர் மறந்து போய் விடவில்லை. வேண்டுமென்றே ஒளித்து வைத்தார் என்பதுதான் உண்மை.

சிவக்குமார் என்னும் புனித பிம்பம் பார்ப்பனியவாதிகளுக்கு என்ன பிடிக்குமோ அதை மட்டும் பேசித் தம்மை அவர்கள் மத்தியில் ஒரு புனிதராகக் காட்டிக் கொள்வது.

இந்தப் புனித பிம்பங்களுக்கு, பெரியார் பெயரையும், பாரதிதாசனையும் பொதுமேடையில் சொல்வது அபச்சாரம். ஈழத்து மக்களின் உரிமைகளை அங்கிகரித்துப் பேசுவது அபச்சாரம். அதைச் செய்தால் பார்ப்பனர்கள் எப்படிப் பாராட்டுவார்கள். நாம் இதைப் பற்றி வெளிப்படையாகக் கேட்டால் தாம் எப்படி பெரியாரை உயர்வாக மதிக்கிறேன் என்று இரகசியமாக நம்மிடம் பேசுவார்கள். வேண்டுமானால் பாருங்கள், சுபவீக்குத் தனியே ஒரு கடிதம் போடுவார் சிவக்குமார். அல்லது எங்காவது சந்தித்துப் பேசுகையில் சொல்லுவார்.

அண்மையில் சிவக்குமாரும் ஈழம் பற்றி இரண்டு வரிகளில் மௌனத்தின் வலிக் கவிதை ஒன்றைச் சொன்னார். தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஊனமுற்றோர்களெல்லாம் கூட ஒன்று கூடி போரை நிறுத்தச் சொல்லி அவலக்குரல் எழுப்பினார்களே. அப்பொழுது எங்கே போயிருந்தார்?

போர் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த நான்கு மாதங்களில் இவர் தமிழகமெங்கும் போய் கம்பராமாயாணத்தைப் பற்றி மணிக்கணக்காக கதாகாலாட்சேபம் பண்ணிக் கொண்டிருந்ததை தொலைக் காட்சிகள் முழு ஒலிபரப்புச் செய்தன. அதைத் தொலைக்காட்சியில் கண்டபொழுதெல்லாம் நெஞ்சம் கொதித்தது, இப்படிப்பட்ட *நடிகன்களை* எண்ணி. அப்பொழுதெல்லாம் இவருக்கு எங்கே போனது மானுடவேதனை? திரைத்துறையினர் ஏற்பாடு செய்த கூட்டங்களில் கூட இவரைக் காணோம்.

இப்பொழுதும் கூட இரண்டு கல்விமான்கள் வந்து கண்ணீர் விடவில்லை. பெரியார் இயக்கத்தால் உயர்வு பெற்ற முன்னாள் துணைவேந்தர்கள் குழந்தைசாமியும், அனந்தகிருஷ்ணனும். உலகத்தமிழ் மாநாட்டில் அவர்களுக்கு நிறைய வேலையிருக்குமே!

தமிழ் ஓவியா, நீங்கள் இதுபோன்ற பச்சோந்திகளைப் பற்றியெல்லாம் துளியும் விமர்சனம் செய்யாமல் கண்மூடித்தனமாக பார்ப்பனர்களைப் பற்றி மட்டும் பழைய பல்லவிகளையே பாடிக்கொண்டிருங்கள். பெரியாரின் நேர்மையான சிந்தனைகளை நீர்த்துப் போகச் செய்ய உங்களைப் போன்ற கீறல் விழுந்த தட்டுகள் போதும்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

நம்பி said...

Blogger கள்ளபிரான் said...//மற்றும், என் குல கோத்திரங்களைக்கேட்டார்; என்று சொல்வதெல்லாம் ஜோடித்த கற்பனை. அல்லது, over reaction. //

அதெல்லாம் அப்போது உண்டு...அவர் வரைந்த காலம்...1960 ஆண்டுகளின் காலமாக இருக்கும் ...அப்போது எல்லாம் மிக அதிகமாக அத்துமீறல்கள் இருந்தது. இது மாதிரி கேட்பதும் உண்டு.