Search This Blog

26.1.10

கடவுள், மதம், பக்தி விடயங்களில் கதையளப்பு


அளப்பு

கதையளப்பு என்ற ஒரு சொற்றொடர் உண்டு. அது மற்றவற்றில் உள்ளதை விட கடவுள், மதம், பக்தி விடயங்களில் மிக அதிகமாகவே உண்டு.

கேக்கிறவன் கேணப்பயலா இருந்தா எருமைமாடுகூட ஏரோப்பிளான் ஓட்டுவேன் என்று சொல்லுமாம்.

சேலம் ஏற்காடு முக்கிய சாலையில், கலைக்கல்லூரியருகே அடர்ந்த மரங்கள் உள்ள பகுதியில் முனியப்பன் என்ற கோயில் ஒன்று இருக்கிறதாம். 16 வயதுள்ள ஒரு சிறுவன் சாமி கும்பிடச் சென்றானாம். அப்பொழுது அவன் முதுகில் ஏதோ ஒன்று விழுந்ததாம் அதனைத் தட்டி விட்டானாம். அது பாம்பு போன்ற உருவத்தில் மரக்கட்டையாம்.

அவ்வளவுதான் சேதி நாலாத் திசைகளிலும் பரவியது. நம் பெண்களைக் கேட்கவேண்டுமா? சாமி ஆட ஆரம்பித்துவிட்டனராம். கிடாவெட்டிப் பூஜையாம். மரக்கட்டைக்கு மஞ்சள் தடவி, குங்குமப் பொட்டு வைத்து, பூஜைகள் நடக்க ஆரம்பமாகி விட்டனவாம்.

நம் பத்திரிகையாளர்களுக்கு ஒரு தீனி கிடைத்துவிட்டதே சும்மா விடுவார்களா? அந்தச் செய்திக்கு கை வைத்து, கால் வைத்து, மூக்கு வைத்து இறக்கைகளையும் கட்டிவிட்டனர்.

ஒரு பக்தர் சொல்லுகிறார், நம்பவும் முடியவில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை; என்றாலும் கும்பிட்டு வைப்போமே என்று ஒரு கும்பிடு போட்டு வந்தாராம்.

அடேயப்பா, கடவுளைப்பற்றி ஆன்மிகவாதிகள் எப்படியெல்லாம் உருகுவார்கள் தெரியுமா? அவர் அரூபி கண்ணுக்குத் தெரியாதவர்; வேண்டுதல் வேண்டாமை என்பதெல்லாம் கிடையவே கிடையாது என்று அப்படியே எண்சாண் உடம்பை ஒரு சாணாகச் சுருக்கி நெக்குருக மெல்லிய சன்னமான குரலில் உபந்நியாசம் செய்வார்கள். அதற்கு முரணாக இது போன்ற சேதிகள் வரும்போதோ கப்சிப்பென்று அய்ம்பொறிகளையும் மூடிக்கொள்வார்கள்.

திருப்பதி கோயில் கர்ப்பக் கிரகத்திலே ஒரு பாம்பு நுழைந்தது உடனே அது பிராமணன் வடிவில் தோன்றியது (பாம்புக்கும், பிராமண விஷத்துக்கும் உள்ள ஒற்றுமையை இந்த இடத்தில் கவனித்துக் கொள்ளவும்).

நான் கலியுகத்தில் அவதாரம் எடுத்து அதர்மத்தை அழிப்பேன் என்று சொல்லி மறைந்ததாம். இதனைத் துண்டு அறிக்கையாகத் தயாரித்து நூறு பேருக்குக் கொடுத்தால் அய்ஸ்வர்யம் பொங்கி வழியுமாம். திருப்பதி தேவஸ்தானத்துக்கே எழுதிக் கேட்டபோது, அதெல்லாம் வெறும்புரளி என்று அதிகாரப்பூர்வமாக சொல்லிவிட்டார்கள். இதே கதையை மேல்மருவத்தூர் கோயிலிலும் நடந்ததாக அடுத்து அவிழ்த்துவிட்டார்கள். அவர்களும் பிறகு மறுத்துவிட்டனர். அதன்பின் மேல்மலையனூர் கோயிலிலும் இதே வேலையைச் செய்தனர்.

ஒரு கூட்டத்துக்கு இதே வேலைதான்.

இந்த புரூடாக்கள் எல்லாம் இரண்டொரு நாள்களில் தடபுடலாக விளம்பரத்திற்கு வந்து, அதன்பின் சத்தம் போடாமல் அமுங்கிப்போகிறதே ஏன்? சிந்திக்கக் கூடாதா?

------------------- மயிலாடன் அவர்கள் 26-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: