வாழ்க்கையில் சிக்கனம் என்று சொன்னால்
சிந்திப்பதில் சிக்கனம் கடைப்பிடிக்கிறார்களே!
பெரியார் கருத்தை சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் விளக்கம்
வாழ்க்கையில் சிக்கனம் தேவை. ஆனால் சிந்திப்பதில் சிக்கனம் கூடாது என்று சொல்கிறேன் என்று தந்தை பெரியார் சொன்ன கருத்தை எடுத்துக்காட்டி விளக்கவுரையாற்றினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
சிங்கப்பூர் நாட்டில் 8.11.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
உழைத்தவர்களுக்கும் பலன்
யார் உழைத்தார்களோ அவர்களுக்கு அந்தப் பலன் கிடைக்க வேண்டும். பல நேரங்களில் உழைத்த மக்களுக்கு அந்தப் பலன் கிடைப்பதில்லை. உழைப்பை உறிஞ்சக் கூடியவர்கள் இருக்கிறார்கள். இதை வைத்து பிழைப்பு நடத்துகிறவர்கள்தான் இருக்கிறார்கள்.
எனவே உழைப்பை உறிஞ்சக் கூடியவர்களுக்கு ஊடகங்கள் இருந்தன. அந்த மக்களிடம் தான் பிரச்சாரக் கருவிகள் இருந்தன. அந்த மக்கள் தான் ஆட்சிப் பொறுப்பாளர்களை ஆட்டிப்படைப் பவர்களாக இருந்தார்கள். அரசர்கள் காலத்திலேயிருந்து நம்மவர்கள் காலம் வரை.
எனவே தான் பெரியாரவர்கள் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் நீ என்ன வேண்டுமானாலும் சொல், எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை என்று சொன்னார்.
என்னை திட்டியவர்கள்தான் அதிகம்
துணிச்சலாக என்னைப் பாராட்ட வேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் சொன்னார்கள். தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்வியல் சிந்தனையிலேயே எதிர்நீச்சல் தத்துவம் என்பது தான் முக்கியமானது. அற்புதமான ஒரு தத்துவம்.
பெரியாரை வாழ்த்தி சொன்னபொழுது உங்களுடைய வாழ்த்துக்காக நான் மகிழ்ச்சி அடையவில்லை என்று சொன்னார். உடனே எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். அடுத்து உடனே பெரியார் சொன்னார்.
என்னை வாழ்த்தியவர்கள் குறைவு. என்னைத் திட்டுகிறவர்கள்தான், என்னை வசைபாடுகிறவர்கள்தான் அதிகம். உங்களுடைய வாழ்த்துக்காக நான் மகிழ்ந்தால் வசைபாடுகிறார்கள் பாருங்கள், அதற்காக நான் மிகவும் துன்பப்பட வேண்டிருக்கும்.
என்னைப் பொறுத்தவரையிலே வாழ்த்தும் ஒன்றுதான், வசவும் ஒன்றுதான் என்று கருதக் கூடியவன் என்று தந்தை பெரியார் சொன்னார். அது இலக்கு நோக்கிய வாழ்க்கை.
ஜாதி தத்துவம் வருகின்ற நேரத்திலே அதற்கு கர்ம வினைப்பயன் என்று ஒரு தத்துவம் சொன்னார்கள். கர்மா, கர்ம வினைப்பயன் என்பதற்கு என்ன தத்துவம் என்றால் அதற்கு ஆத்மாதான் அடிப்படை என்று சொன்னார்கள்.
இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டிருந்த மக்களிடம் ஆத்மா என்பது கற்பனை என்று மிகத் தெளிவாக தந்தை பெரியார் சொன்னார்.
லீக்குவான்யூ சொன்னார்
இங்கே நம்முடைய இலக்குவன்தமிழ் சொன்னார். சிங்கப்பூரை உருவாக்கிய நவீன தந்தையாக கருதக்கூடிய மிகப்பெரிய ஆற்றலாளர், மூத்த மதிவுரை அறிஞராக இருக்கக் கூடிய லீக்குவான்யூ அவர்கள் பல துறைகளிலே சிறந்தவர்.
இவர் தந்தை பெரியாரைப் படித்துவிட்டு சொன்னார் என்று நான் சொல்லமாட்டேன். இரண்டும், இரண்டும் கூட்டினால் நான்கு என்றால் சிங்கப்பூரில் கூட்டினாலும் நான்குதான், இந்தியாவில் கூட்டினாலும் நான்குதான், அமெரிக்காவில் கூட்டினாலும் நான்குதான். லீக்குவான் அவர்களுடைய பேட்டி பத்திரிகையிலே வந்தது. நான் எழுதிய கீதையின் மறுபக்கம் என்ற நூலில் கூட இதுபற்றி செய்தி வந்திருக்கிறது. பல பதிப்புகள் கீதையின் மறுபக்கம் வெளிவந்துவிட்டது.
லீக்குவான்யூ சொல்லுகிறார். நான் ஆழ்ந்த மதப்பற்று உடையவன் அல்லன். ஆத்மா பற்றி நீங்கள் பேசினால் ஆத்மா என்றால் என்ன என்று கேட்க விரும்புகிறேன். மனிதனின் உணர்வே ஆத்மா என்றால், உணர்வு என்பது நரம்பு மண்டலத்தைச் சார்ந்ததாயிற்றே. குறையலாம். கூடலாம். நல்லுணர்வு, தீய உணர்வுகளுக்கு மனிதன் ஆட்படுகின்றான்.
ஆத்மா நிலையான ஒன்று என்றால் ஏன் இந்த மாறுபாடுகள்? ஆத்மா என்ன என்பதை என்னால் விளக்கிக் கூற முடியாது.
ஒரு மனிதனுக்குள்ளே இருந்து இயங்குகின்ற காற்றுப் போன்றது என்று சொல்ல விரும்புகிறீர்களா?அவனது உடல் அழிந்த பிறகு சுழன்று கொண்டேயிருக்கும் என்று கூறுகிறீர்களா?
ஆத்மா வில் எனக்கு நம்பிக்கையே இல்லை என்று லீக்குவான்யூ சொன்னார். எனவே பெரியாருடைய கருத்துகள் உலகளாவிய சிந்தனை உள்ள கருத்துகளாக வந்திருக்கின்றன.
திறந்த மனதோடு சிந்தித்தார்
பெரியாரைப் புரிந்து கொண்டுதான் சொல்ல வேண்டும் என்பதல்ல. கால ஓட்டத்தில் இப்படிப் பட்ட துணிச்சல் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் திறந்த மனதோடு சிந்திக்கிறார்கள். அப்படி திறந்தமனதோடு சிந்திக்கின்ற பொழுது அறிவு நாணயத்தோடு சில செய்திகள் சொல்லுகிறார்கள்.
எனவே தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்வியல் என்பதிருக்கிறதே, அது சிறந்தது; மிக முக்கியமானது. அதனால் என்ன லாபம்?
நாம் மருந்தை எடுத்துக்கொள்கிறோம். மருந்துகளை டாக்டர் எழுதி கொடுக்கிறார். மருந்து கடைகளில் உள்ள மருந்துகள் எல்லாம் வியாபாரம் ஆக வேண்டாமா? டாக்டரிடம் காருண்யம் காட்டுவதற்காகத்தான் நான் மருந்து சாப்பிடுகிறேன், அதனால்தான் உணவைவிட நான் மருந்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று ஒருவர் சொன்னால் அதை நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? அல்ல. மருந்தை நாம் எதற்காக சாப்பிடுகிறோம், எதற்காக எடுத்துக்கொள்கிறோம், நம்முடைய நோய் தீர நாம் மருந்து சாப்பிடுகிறோம்.
பெரியார் கண்ட வாழ்வியல் என்பது பெரியாருக்காக அல்ல. நாம் பின்பற்றினால் அதனால் வெற்றி அடைவோம்.
சிறிய செய்திகளில் கூட கவனம்
தந்தை பெரியார் சிக்கனக்காரர். அய்யா அவர்கள் சின்னச் சின்ன செய்திகளில் கூட கவனமாக இருப்பார்கள். பெரியார் திரைப்படத்திலே வந்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அய்யாவும், அண்ணாவும் ரயிலுக்குப் புறப்படுகிறார்கள். நேரடியாக ரயிலில் திருச்சிக்குப் போக கரூரில் இறங்கி மீண்டும் டிக்கெட் எடுத்துக்கொண்டு புறப்படுகிறார்கள். அய்யா அவர்கள் எதைச் சொல்கிறாரோ அதை அப்படியே பின்பற்றிப் பணியாற்றக் கூடியவர் அண்ணா அவர்கள். அய்யா அவர்களிடத்திலே அடக்கமாக இருந்து பழக்கப்பட்டவர்கள்.
சிக்கனக்காரர் ஈரோட்டிலிருந்து கரூர் வழியாக திருச்சி செல்ல வேண்டும். அரைமணி நேரம் கரூரில் இறங்கி நிற்க வேண்டும். அண்ணாதுரை! இரண்டு டிக்கெட்டுகள் கரூருக்கு வாங்கி வாருங்கள் என்று அய்யா சொல்லுகிறார். அண்ணா சொல்லுகிறார். அந்த ரயில் திருச்சிக்கு நேராகத்தான் போகிறது. திருச்சிக்கே வாங்கிவிடுவோமே என்று சொல்லுகிறார். அதற்கு பெரியார் சொல்லுகிறார். இதை எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், நாம் நேரடியாகப் போனால் ஒரு ரூபாய். கரூருக்கு இறங்கி டிக்கெட் வாங்கினால் 75காசுதான். ஒரு டிக்கெட்டிற்கு நான்கணா குறைவு. நமக்கு இருவருக்கும் சேர்த்து இப்பொழுது எட்டணா மிச்சமாகிறது என்று அய்யா அவர்கள் சொன்னார். ஆகவே, அய்யா அவர்கள் சிக்கனக்காரர். சிக்கனம் என்று சொல்லும் பொழுது அவர்கள் கருமி அல்லர். கஞ்சர் அல்லர். பெரியார் கஞ்சர் என்ற தவறான கருத்தை பரப்பினர். மக்கள் ஆடம்பரமாக வாழாமல் எளிமையாக வாழுங்கள் என்று சொன்னார். அந்த எளிமையை தந்தை பெரியார் அவர்களே பின்பற்றிக் காட்டினார்.
எதிலே சிக்கனம் காட்டக் கூடாதோ
ஆடம்பரம் என்பது என்ன? பெரியார் விளக்கம் சொன்னார். தேவைக்கு மேல் வாழ்வது ஆடம்பரம்; தேவைக்கு ஏற்ப செலவழிப்பது சிக்கனம்; தேவைக்கே செலவழிக்காததற்கு பெயர் கருமித்தனம்.
ஆகவே நீங்கள் சிக்கனக்காரராக இருங்கள். கருமித்தனக்காரர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லிவிட்டுச் சொன்னார். மற்றவர்கள் சிந்தனையிலே சிக்கனவாதிகளாக இருக்கிறார்கள். எதிலே சிக்கனம் காட்டக் கூடாதோ அதிலே சிக்கனம் காட்டுகிறார்கள். எதிலே தாராளமாக இருக்க வேண்டுமோ அதிலே தாராளமாக இருப்பதில்லை. மிக அழகாக அறிவுறுத்தினார்கள். அதனால்தான் அண்ணா அவர்கள் சொன்னார்கள். தமிழ்நாட்டினுடைய முதல் பேராசிரியர் என்று சொன்னார். எல்லோருக்கும் ஆச்சரியம். என்ன மூன்றாவது வரை கூட படிக்காதவரை முதல் பேராசிரியர் என்று சொல்லுகிறார்களே என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள்.
கையெழுத்திற்கு நான்கணா
அந்தப் பேராசிரியருக்கு மாலை நேர வகுப்புகள் இருக்கும். ஆயிரக்கணக்கான மக்கள் அவரை சந்திப்பார்கள். மணிக்கணக்கிலே அவர்கள். பேசுவார்கள். இதுதான் மக்களை சீர்திருத்துவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு என்று மிகத் தெளிவாக அண்ணா அவர்கள் சொன்னார்கள். ஒரு நல்ல வாழ்க்கையை மக்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். என்று சொன்னார். எளிமையை வற்புறுத்தி சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொன்னார்.
கையெழுத்து போடுவதற்குக் கூட தந்தை பெரியார் அவர்கள் நான்கணா கேட்டு வாங்கினார். அய்யா அவர்களுடைய நாணயத்தைப் பாருங்கள். நீங்கள் என்னுடைய புத்தகம் ஒன்றை வாங்கி வந்திருக்கிறீர்கள். ஆகவே கையெழுத்துப் போடுவதற்கு எனக்கு நான்கணா தேவையில்லை என்று சொன்னார்.
அதைவிட ஃபோட்டோ எடுத்துக்கொண்டால் கூட அய்ந்து ரூபாய் என்று வைத்திருந்தார். அப்பொழுது அய்யா அவர்களுடைய செயலாளர் இமயவரம்பன் இருப்பார். நாங்கள் எல்லாம் கூட இருப்போம். கட கட வென்று நண்பர்கள் ஒளிப்படம் எடுப்பார்கள். நாங்கள் பணத்தைக் கொடுத்து விடுகிறோம் என்று சொல்லுவார்கள். பக்கத்திலிருந்து பணத்தை வாங்கிக்கொண்டிருப்போம் நாங்கள். பத்து பேர் ஃபோட்டோ எடுத்துக்கொண்டு போயிருப்பார்கள். அவர்கள் சென்ற பிறகு பணத்தை அய்யா அவர்களிடம் கடைசியாகக் கொடுப்போம். பணத்தை கொடுத்தவுடன் அய்யா அவர்கள் எண்ணிப்பார்ப்பார்.
எண்ணிப்பார்க்க வேண்டும்
யார் பணம் கொடுத்தாலும் எண்ணிப்பார்க்க வேண்டும். வாழ்வியல் சிந்தனையில் கூட நான் எழுதியிருக்கின்றேன். கருத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும், காசையும் எண்ணிப் பார்க்க வேண்டும். எண்ணிப் பார்க்காமல், அப்படியே வைக்காமல் அய்யா அவர்கள் கொஞ்சம் கூட கூச்சமோ சங்கடமோ படாமல் எண்ணிப் பார்ப்பார்.
ஒருவரிடம் பணம் வாங்குவதை விட்டுவிட்டீர்களே, சரியாக நீங்கள் வாங்கவில்லையா என்று கேட்டார். எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி. கூட்டம் அதிகம்.
அடுத்து அய்யா அவர்கள் சொன்னார். பல்பு பத்து தடவை எரிந்ததே! (அய்யா அவர்கள் எப்படிக் கணக்கிட்டிருக்கிறார்கள் பாருங்கள். இப்பொழுது வேறுவிதமான கேமரா வந்தாகிவிட்டது). பத்து தடவை பல்பு எரிந்திருக்கிறது. ஒன்பதற்குத் தானே நீங்கள் பணம் கொடுத்திருக்கிறீர்கள் என்று சொல்லுவார்.
தந்தை பெரியார் அவர்கள் இவ்வளவு சிக்கனமாக சேர்த்த பொருள் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் சொன்னதைப் போல, அருட்கொடையாக மக்களுக்கே கொடுத்து விட்டுச் சென்றார். தனது குடும்பத்திற்கு என்று அவர்கள் எதையும் வைக்கவில்லை.
பெரியாரின் அறக்கட்டளை
அனைத்து சொத்துகளையும் அறக்கட்டளையாக்கினார். அதன் விளைவுதான் இன்றைக்கு பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமாக உருவாகியிருக்கிறது. தந்தை பெரியாருடைய சிக்கனம் மருத்துவமனைகளாக உருவெடுத்தி ருக்கின்றன. 75 ஆண்டுகளை கொண்டாடக் கூடிய விடுதலை நாளேடு உலகில் ஒரே பகுத்தறிவு தினசரி நாளேடாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
எனவே பெரியார் கண்ட வாழ்வியல் என்பதிருக்கிறதே, ஆடம்பரமற்று நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் வாழுங்கள்; சேமியுங்கள் என்று சொல்லுவார்கள்.
-------------------தொடரும்.... “விடுதலை” 1-1-2010
0 comments:
Post a Comment