Search This Blog

3.1.10

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

முன்பெல்லாம் நம் நாட்டில் கைவிடப்பட்ட குழந்தைகளைக் காப்பாற்ற அனாதை இல்லங்கள் (Orphanage) எனப் பெயரிடப்பட்ட விடுதிகள் அரசின் சார்பிலும், தனியார் அறக்கட்டளைகளாலும் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன.

ஆனால் அண்மைக் காலத்தில் தற்குறித்தனம் வெகுவாகக் குறைந்து, படிப்பும் பட்டமும், கை நிறைய சம்பாதிப்பும் ஏற்பட்ட காலத்தில் - இப்போது, நாட்டில் ஒரு விசித்திர முரண்பாடான சமூக நிலையை நாம் சந்திக்கிறோம்.

கைவிடப்பட்ட முதியோர்கள் அவமானப்படுத்தப்படும் பெற்றோர்கள், கடைசி காலத்தில் நமக்கு யாருமே இல்லையே என்ற ஆதங்கத்தில் மிதப்பவர்கள்ஆகிய பலதரப்பட்ட பெரியவர்களுக்கான (இருபால் முதியவர்களுக்கான) பராமரிப்பு, பாதுகாப்பு இல்லங்கள் ஏராளம் நாடு முழுவதும் தொடங்க வேண்டிய சூழ்நிலை மலிவாகிவிட்டது!

கூட்டுக் குடும்பங்களில், பெற்றோர்களின் தியாகத்தால், உதவியால், படித்து முன்னேறி, பல பெரிய வேலைகளைப் பெற்றுவிட்ட பிறகு, அப்பெற்றோர்களிடம் கைநிறையச் சம்பளம் வாங்கு-வதற்குக் காரணமான, அப்பெற்றோர்களிடம் வாய் நிறையப் பேச முடியாத கொழுப்பு தொண்டையில் அடைக்கும் சுயநல சோற்றுப் பிண்டங்கள்பற்றி சதா கேள்விப்பட்டு, நம் கண்களில் -கண்ணீர் அல்ல, ரத்தம் கொட்டும் நிலை வெகுசர்வ சாதாரணமாகி வருகிறது!

அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்ற வரிகளுடன் சில சொற்கள் அல்லது வாக்கியங்கள் சேர்க்கவேண்டியது இக்காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது என்பதுடன் நன்றி உள்ள மானிடராய் பெற்றோரிடம் மரியாதை காட்டும் மானிடராய்ப் பிறப்பது அரிது என்றல்லவா புதுவரிகளைச் சேர்க்க வேண்டியுள்ளது!

பெற்றோர்களை உறிஞ்சிடும் அட்டைகளாக மகன்களும், மகள்களும் ஆகிவிட்டு, சக்கையைத் துப்பிவிடுவது போன்று அவர்களை ஒதுக்கி ஒரு மூலையில் தள்ளுவது. தாமே அனுப்பிவிட்டு பழி போடவேண்டுமென்று ஒரு நல்ல நவீன தந்திரமுறை போல, அவர்களை (அப்பா, அம்மா... முதலியவர்களை) எப்படியெல்லாம் அன்றாட வாழ்க்கையில் அவமானப்படுத்திட முடியுமோ அதனைச் செய்து அவர்களை இந்த மூட்டைப் பூச்சி, கொசுக்கடியிலிருந்து வெளியேறினால் போதும் என்று வெளியே விரட்டிவிடுவது மிகவும் திட்டமிட்டு, விஞ்ஞான பூர்வமாக நடைபெறுகிறது, நாமறிந்த பல குடும்பங்களிலும்!

நாம் யாரைக் குறை கூறுவது? இந்த ஒரு வழிப்பாதை சுரண்டல் சுயநலப் பிள்ளைகள் போலி நடிப்பைக் கண்டு ஏமாந்து கையில் உள்ளதை ஏன் பல குடும்பங்களில் பென்ஷன் தொகையிலும் பெரும் கணிசமான தொகை உள்பட, இழந்துவிட்டு பிச்சைக்காரர்களாக - ஒரே நாளில் ஆகிவிடும் பெரு நிலையில் வாழ்ந்த பெட்பு நிறை பெரியவர்கள் பற்றி எப்படி இரக்கம் காட்டுவது (Sympathy) மட்டும் போதாது? அவர்களாக நாம் மாறிவிட்டு ஆதரவும் அன்பும் காட்டும் (Empathy) உணர்வாளர்களாக நாம் மாறிடுவதைத் தவிர, நண்பர்களுக்குத் தலையாய கடமை வேறு ஏது?

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினார் வள்ளலார்.

நம்முடன் ஓடிய நண்பர்கள் உடல் ஊனத்தால் அல்ல, மன ஊனத்தால் தீக்காயம் ஏற்பட்டு வாழ்க்கையில் வெறுப்பின் விளிம்பிற்கே செல்வதைக் கண்டு வேதனை அடைந்தால் போதுமா? ஆக்க ரீதியான அணுகுமுறைகள்மூலம் அவர்களுக்கு அரவணைப்பு, ஆறுதல், ஆதரவு, அன்பு பொழிதல் இவைகளை, அழுதிடும் சிறுகுழந்தைகளுக்கு அணைத்துப் பாசத்தைக் கொட்டுவதுபோல், விளையாட்டுப் பொம்மைகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தந்து, மனக்கவலை மாற்றிட முயலவேண்டும்.

வெறும் உணர்ச்சி மட்டும் இதற்குத் தக்க மருந்தாகாது!

பகுத்தறிவினால் சாதிக்க முடிந்ததைவிட உலகில் எதுவுமே இல்லை; எல்லாம் முடியும்!

அந்த விளையாட்டு பொம்மைக்கடை எங்கே எங்கே? என்ன விலை கொடுத்தாவது அத்தகைய நம் மனதின் நேசிப்பாளர்களின் வலி புரிய, வருத்தம் தீர, அழுகை நிற்க உடனே வாங்கவேண்டும். உடனே முகவரி (விலாசம் என்றால்தான் சிலருக்குப் புரியுமோ) தாருங்கள் என்று அவசரப்படும் நண்பர்களே,

மற்றவர்களுக்குத் தொண்டறம் செய்யும் தொண்டு நிறைந்த பொது வாழ்க்கை தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்பதைத் தாண்டி, உலகம் ஓர் குலம்; அனைவரும் உறவினர் என்று முன்னிலும் வேகமாக சிந்தித்து, தொண்டாற்றப் புறப்பட வைக்க வேண்டும்.

வாழும் மனிதர்களுக்கு வயிற்றுப் பசிக்குச் சோறிட முடியாதா என்ன?

வெகுமக்களின் ஊக்க மாத்திரைகளும், உற்சாகங்களும், அவர்கள் முதுகைத் தட்டிக் கொடுத்து மேலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திடச் செய்யும்.

உறவுகள் என்பதை ரத்தத்தோடு என்று கருதாதீர்கள்!

உறவுகள் உள்ளத்தால் என்று நினைப்போம்!

உலகில் எங்கும் கிடைக்கும் பஞ்சமில்லாமல்!

------------------ கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகளிலிருந்து..... “விடுதலை” 2-1-2010

0 comments: