தமிழிசை?
இது ஓர் இசை விழா பருவம்; சென்னையில் எங்கு பார்த்தாலும் இசை நிகழ்ச்சிகள் அடைமழையாகக் கொட்டுகின்றன.
இதுகுறித்து தினமணி (31.12.2009, பக்கம் 2) என்ன எழுதுகிறது?
தமிழ் இசை விழா என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஏன் இத்தனை தீட்சிதர்களும், வாசுதேவாச்சாரிகளும், புரந்தரதாஸர்களும்? நடத்துகிறவர்கள் நடத்துகிறார்கள். பாடுகிறவர்கள் பாடினால்தானே? இப்படி விமர்சனம் செய்வது தினமணி- கவனம் இருக்கட்டும்; சென்னை ராணி சீதை மன்றத்தில் திங்களன்று நடந்த, இசை நிகழ்ச்சி பற்றிதான் தினமணி இப்படி விமர்சித்திருக்கிறது பானை சோற்றுக்கான ஒரு பருக்கையின் பதம் இது. நடப்பது தமிழிசைதானா என்று நாம் வினா எழுப்பினால், இவாளுக்கு வேறு வேலையே இல்லை. கட்டிய வீட்டுக்கு நொட்டாரம் சொல்லுவதுதான் இவாளின் பிழைப்பு என்று எரிச்சலைக் கக்குவார்கள்.
சொல்லுவது தினமணி ஆயிற்றே! இதற்கு உள்நோக்கம் கற்பிக்க முடியுமா? தினமணிக்கே பொறுக்க முடியவில்லையென்றால், தலைநகரில் நடப்பவை தமிழிசை விழா என்ற முகமூடியில் சமஸ்கிருத மயமாக்கப்பட்ட தெலுங்குக் கீர்த்தனைகள் தாம் என்பதில் அய்யம் என்ன?
இவ்வளவுக்கும் பார்ப்பனர்கள் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடும் மும்மூர்த்திகள் தியாகையர் (1767_1847), சியாமா சாஸ்திரி (1762_1827), முத்துசாமி தீட்சிதர் (1776_1835) இவர்களுக்கு முன் கீர்த்தனைகளைச் சமைத்துத் தந்தவர்கள். தமிழ் மும்மூர்த்திகள்தாம். அருணாசலக்கவிராயர் (1712_1779) சீர்காழி முத்துத்தாண்டவர் (1525_1600) தில்லை விடங்கன் மாரிமுத்தாபிள்ளை (1712_1787) இவர்களும் பக்திப் பாடல்களைப் பாடியவர்கள்தாம்!
என்ன வேறுபாடு? பார்ப்பனர்கள் பாடியது எல்லாம் தெலுங்கில்; தமிழர்கள் பாடியதெல்லாம் தமிழில்!
தமிழ், தமிழர் என்றாலே பார்ப்பனர்களுக்கு வேப்பங்காய்தானே! அதனால்தான் தமிழிசை விழா என்றாலும், ஆங்கே தமிழைத் தவிர்த்து மற்ற மொழிப் பாடல்களின் தூக்கல்!
ஒரு நாள் குமாரசாமி கடவுளே வந்து முத்துசாமி தீட்சிதர்வாள் வாயில் கற்கண்டு போட்டுவிட்டு, மயில் ஏறி மறைந்தார் என்பது போன்ற கட்டுக்கதைகள் தமிழ் மும்மூர்த்திகளுக்குக் கிடையாதே! இவ்வளவுக்கும் தமிழ் மும்மூர்த்திகள் ராமா, கந்தா என்று கீர்த்தனைகள் பாடியவர்கள்தாம் என்றாலும், அவாளுக்கு உள்ள மரியாதை இவாளுக்கு இல்லை இசை உலகில். (ஆரியர் _ திராவிடர் எங்கே இருக்கிறது என்பவர்களுக்கு இது அர்ப்பணம்).
நடத்துகிறவர்கள் பொறுப்பாக மாட்டார்கள் என்று தினமணி கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அழைக்கும் போதே கறாராகக் கூறக் கூடாதா?
திருவையாறு தியாகையர் விழாவில் தண்டபாணி தேசிகர் சித்தி விநாயகரே என்ற தமிழ்ப் பாடலைப் பாடினார் என்பதற்காக சந்நிதானம் தீட்டாகிவிட்டது என்று கூறி, தீட்டுக் கழித்ததற்குப் பிறகுதான் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் பாடினார் என்பதை மய்யப்படுத்தி கலைஞர் அவர்கள் தீட்டாயிடுத்து (மு.க. என்ற பெயரில்) குடிஅரசு இதழில் (9.2.1946, பக்கம் 7) எழுதினாரே அந்த நிலை அவ்வளவு பச்சையாக இன்று இல்லாதிருக்கலாம். நடப்பவற்றைப் பார்க்கும்பொழுது பாம்புகள் அந்த நஞ்சைக் கன்னத்தில் அடக்கித்தான் வைத்திருக்கின்றன என்பதில் மட்டும் மாற்றமில்லையே! -
--------------------மயிலாடன் அவர்கள் 1-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
2 comments:
இசைக்கு மொழி பேதமில்லை. தமிழில் பாடுகிறேன் பேர்வழி என்று தமிழைச் சிதைப்பதைக் காட்டிலும் தெரிந்த மொழியில் பாடுவது நன்று தானே?
இசை விழா என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன், தமிழ் இசை விழா என்று தனியாக இருக்கிறதா என்ன?
//அப்பாதுரை said...
இசைக்கு மொழி பேதமில்லை. தமிழில் பாடுகிறேன் பேர்வழி என்று தமிழைச் சிதைப்பதைக் காட்டிலும் தெரிந்த மொழியில் பாடுவது நன்று தானே? //
அப்படியா?
யாருக்குத் தெரிந்த மொழியில்...?
Post a Comment