Search This Blog

1.1.10

பெரியாருக்கும், மற்றத் தலைவர்களுக்கும், இருக்கிற வேறுபாடு என்ன?

பாராட்டுக்கு கூச்சப்பட்டார் கடமையை செய்ய வெட்கப்படக் கூடாது என்று சொன்னார்
தந்தை பெரியார் கருத்தை மேற்கோள் காட்டி தமிழர் தலைவர் உரை

பாராட்டுக்கு கூச்சப்பட்டார். கடமையை செய்யும் பொழுது வெட்கப்படக் கூடாது என்று சொன்னார் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சிங்கப்பூர் நாட்டில் 8.11.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பெரியார் என்ன சொன்னாரோ....

தந்தை பெரியார் அவர்களைப் பாராட்டும் பொழுது என்ன சொன்னாரோ அதையே நான் சொல்ல விரும்புகிறேன். நம்முடைய அறிவு ஆசானின் பாடம்தான் எனக்கு எப்பொழுதும். அய்யா சொன்னார். இங்கே என்னைப் பாராட்டிப் பேசினார்கள்.

வேறொன்றும் தண்டனை வேண்டாம். மேடையில் ஒருவனை உட்கார வைத்துப் புகழ்வது இருக்கிறதே அதுதான் மிகப்பெரிய தண்டனை என்னைப் பொறுத்த வரையிலே. என்னைத் தாக்கினால் எனக்கு உற்சாகம் வரும். என்னைப் புகழ்ந்தால் எனக்கு வெட்கம் வருமே தவிர அதற்கு மேலே போக முடியாது என்று சொன்னார்கள்.

அப்படிப்பட்ட நிலையிலேதான் நீங்கள் பாராட்டிச் சொல்லும்பொழுது தந்தை பெரியார் அவர்கள் சொன்ன கருத்தைத்தான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

இங்கே பேசியவர்கள் ஒரே சிந்தனையோடுதான் பேசினார்கள். கவிஞர் நம்முடைய அன்பழகனும் ஒரே சிந்தனையோடுதான் கருத்துகளை எடுத்துச் சொன்னார்.

வெட்கத்தினால் கஷ்டப்பட்டதில்லை

தந்தை பெரியார் சொன்னார். பாரம் சுமக்கும் பொழுது மூட்டை தூக்கும் பொழுது பாரத்தினாலே நான் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர (மக்களுக்கு எளிமையான முறையிலே புரியும்படி சொன்னார்) வெட்கத்தினால் ஒரு போதும் கஷ்டப்பட்டதில்லை என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். இது வாழ்வியல் சிந்தனையிலே மிக முக்கியமானவை.

நண்பர்கள் வருகிறார்கள். அவர்களுடைய குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வருகிறார்கள். ஒரு சில குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வருகிறார். எதிரே தன்னுடைய நண்பர் வந்துவிட்டார். உடனே என்ன செய்வார்? தான் தூக்கி வந்த குழந்தையை தன் மனைவியிடம் கொடுத்து இதை பிடியம்மா என்று சொல்லி கொடுத்துவிடுவார். பல ஆண்கள் அவசரமாக இப்படிக் கொடுத்து விடுவார்கள்.

கடமையை செய்யும்பொழுது

அய்யா அவர்களைப் பொறுத்தவரையிலே கடமையை செய்யும் பொழுது வாழ்க்கையிலே வெட்கப்படக் கூடாது என்று சொல்லுவார்.

கடமையை செய்யும்பொழுது வெட்கப்படத் தேவையில்லை என்று கருதி ஒரு புது உலகை அவர்கள் உருவாக்கிக்காட்டினார்கள். அந்த புது உலகு சாதாரணமான உலகு அல்ல. அதிலே சடங்கு சம்பிரதாயம் மூடநம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும் அறிவு பூர்வமான சிந்தனையை உருவாக்க வேண்டும்.

நம்முடைய நாட்டிலே சடங்குகளுக்கும், அறிவுக்கும் சம்பந்தம் உண்டா? இல்லை.

வேடிக்கையாக ஒரு செய்தியைச் சொல்லுகின்றேன். ஒரு சாமியார் ஒரு மடத்தில் இருந்தார். உங்களுக்கெல்லாம் தெரியும் சாமியார்களைப் பற்றி. சாதாரண ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு இருப்பார். இரண்டை வைத்திருப்பார்கள். ஒன்றை கட்டிக்கொண்டிருப்பார்கள். இன்னொரு துண்டை காய வைத்திருப்பார். மாற்றி மாற்றி கட்டிக்கொள்வார். சாமியாருக்கு எலித்தொல்லை

சாமியாருக்கு எலித்தொல்லை. அதற்காக ஒரு பூனையை கொண்டு வந்தால் பரவாயில்லை என்று நினைத்தார். சாமியாருடைய துண்டை, எலி அடிக்கடி இழுத்துக்கொணடு போய் விடுகிறது என்பதைக் கண்டார். தன்னுடைய சீடர் ஒருவரைப் பிடித்து அப்பா எப்படியாவது ஒரு பூனையைக் கொண்டு வா என்று கேட்டார். பூனை துணியைக் கொண்டு போவது தடுத்து விடலாம். ஆகவே பூனையை வளர்க்கலாம் என்று சொன்னார். பூனை பகலில் வந்தது. பகலில் பூனையைக் கட்டி வைத்தார். மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் என்பதற்காக. இரவில் எலியைப் பிடிக்க பூனையை அவிழ்த்து விட்டார்.

அதே மாதிரி அந்தப் பூனை இரவிலே எலியைப் பிடித்து விட்டது. சாமியாருக்குத் தொல்லைகள் குறைந்தது. தினம் அந்தப் பூனைக்கு உணவு கொடுத்துவிட்டு மாலை நேரம் ஆனால் அவிழ்த்து விடுவார். இந்த மாதிரி நிலை இருந்தது. குருவும் செத்துப் போனார். பூனையும் செத்துப் போய்விட்டது. அடுத்தபடியாக இன்னொரு சீடரும் வந்து விட்டார்.

பூனையால்தான் எல்லாமே

எல்லோரும் சேர்ந்தார்கள். நம்முடைய குருநாதர் பூனையை வைத்துக்கொண்டுதான் மந்திரம் சொல்ல ஆரம்பித்தார்.

எனவே பூனையைத் தேடிப்பிடித்து கட்டினால் தான், மந்திரம் சொல்ல முடியும் என்று முடிவெடுத்தார்கள். செத்துப் போன பூனைக்குப் பதிலாக இன்னொரு பூனையைப் பிடித்துக்கொண்டு வந்தால்தான், மந்திரம் சொல்ல முடியும் என்று வந்த சாமியாரும் மற்றவர்களும் சொன்னார்கள்.

எப்பொழுது பார்த்தாலும் நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பதற்கு முன்புதான் அந்தப் பூனை இருக்கும். எனவே இன்னொரு பூனையை கொண்டுவந்தார்கள். இதுதான் சடங்கினுடைய வரலாறு.

முதலில் தொடங்கிய பொழுது ஒரு காரணம் உண்டு. ஆனால் அதற்குப் பிறகு அது தொடர்ந்தது என்றால் அதுதான் மூடநம்பிக்கை. நமது வீடுகளில் தமிழ்நாட்டில் உள்ள வீடுகளின் உயரங்களைப் பார்த்தீர்களேயானால் குறைவு. பழைய வீடுகளைப் பார்த்தாலே தெரியும். வாசல்படியே குறுகலாக இருக்கும். நாம் யாரையாவது விருந்தினரை அழைத்தால் அவர்களிடம் சொல்லுவோம்.

அய்யா பார்த்து வாருங்கள். தலையில் இடித்துக்கொள்ளாதீர்கள் என்று சொல்லுவோம். பிள்ளை பரிட்சைக்கு அவசரமாகப் புறப்படுகிறது. அப்படி புறப்படுகிற நேரத்தில் திடீரென்று முட்டிக்கொள்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

வீட்டிலே இருக்கிறவர்கள், மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து தம்பி என்னவோ தெரிவில்லை. தேர்வுக்குப் போகும்பொழுதே தடுக்கிறது. ஆகவே உட்கார் ஒரு குவளை தண்ணீர்குடி என்று அச்சத்தை உருவாக்கினவுடனே அவர்களுக்கே புரியவில்லை. என்னமோ தெரியவில்லை என்று சொல்லுகிறார்கள்.

மாணவன் தேர்வுக்குப் போகிறான். தேர்வுத் தாள் வருகிறது. தேர்வுத் தாளும் என்னவோ தெரியவில்லை, விடையும் என்னமோ தெரியவில்லை. ஆனால் தந்தை பெரியார் அவர்கள்தான் பளிச்சென்று சொன்னார். என்னமோ தெரியவில்லை என்று சொல்லுவதற்கு என்ன இருக்கிறது?

இவனோ 6அடி உயரம், வாசல் காலோ 5 அடி உயரம். இவன் குனிந்து போனால் தான் வாசல்கால் இடிக்காமல் செல்ல முடியும்.

வாசல்காலை 7 அடி வை எப்படி முட்டுகிறது என்று பார்ப்போம். என்னவோ தெரியவில்லை என்று ஆராய்ச்சி பண்ணலாம்.

சிறு செய்திகளில் கூட ஆகவே சிறு செய்திகளில் கூட மனிதன் மூடநம்பிக்கை அற்ற வாழ்க்கையை வாழ வேண்டும். அறிவுப் பூர்வமாக மக்கள் சிந்திக்க வேண்டும் என்பது பெரியார் கண்ட வாழ்வியலிலே முக்கியமானது.

நம்பிக்கைதான் மனிதனை உயர்த்தும் என்ற எண்ணத்தை தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கி மேலே கொண்டு போனார்கள். பெரியாருக்கும், மற்றத் தலைவர்களுக்கும், இருக்கிற வேறுபாடு என்ன? காலம் காலமாக ஜாதித் தத்துவம் மனிதர்களைப் பிரித்து வைத்தது. ஜாதிக்கு என்ன ஆதாரம் சொன்னான். இது கடவுளால் உண்டாக்கப்பட்டது. மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

மூடநம்பிக்கைகள் எப்படி ஊடுருவின?

ஆத்மா கூடுவிட்டு கூடு போகிறது என்று சொல்லுகிறார்கள். கர்ம வினைப்பயன் நீ ஏன் கீழ் ஜாதியாக இருக்கிறாய்? உழைப்பதற்கு ஒரு பிரிவினர். அதனுடைய பலனை அனுபவிப்பவர்கள் இன்னொரு பிரிவினர்.

அய்யா அவர்கள் வாழ்வியலை எப்படிப் பார்த்தார்கள் என்று சொன்னால் ஒருவன் எஜமானன், இன்னொருவன் அடிமை என்று இருக்கக் கூடாது. மிகப்பெரும்பாலோர் சுரண்டப்படக் கூடியவர்கள்.

மூடநம்பிக்கை கருத்துகள் சமுதாயத்தில் வளர்ந்ததினாலே எப்படிப்பட்ட சிந்தனைகள் ஊடுருவின, பண்பாட்டுப் படைஎடுப்பு காரணமாக நம்முடைய தலைவிதி அவ்வளவுதான் அன்றைக்கு அழுத்தி எழுதியவன் தலை எழுத்தை அழித்தா எழுத முடியும். எவன் உன் தலையில் எழுதியவன்? அவனை நான் தேடுகிறேன் என்று ரொம்பத் துணிச்சலாக கருத்துகளை சொல்லி பேசக்கூடியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

கடுமையாக உழைக்க வேண்டும்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி தாழாது உஞற்று பவர். (குறள்_620)

திருக்குறளில் தலைவிதி தத்துவம் மட்டுமல்ல. உழைப்பு வேண்டும். வாழ்க்கை என்று சொன்னால சோம்பல் இருக்கக் கூடாது. கடுமையாக உழைக்க வேண்டும்

--------------------தொடரும் ......”விடுதலை” 31-12-2009

0 comments: