Search This Blog

28.9.11

அமாவாசை இந்துக்களுக்குத்தான் நல்ல நாளா?இஸ்லாமியர் களுக்கு?கிறித்தவர்களுக்கு?....


நேற்று அமாவாசையாம் - நல்ல நாளாம் - அதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலில் போட் டியிட பல்லாயிரக்கணக்கா னோர் மனு தாக்கல் செய் தார்களாம் - தொலைக்காட்சிகள் இவ்வாறு அறிவிக்கின்றன.

அப்படியென்றால் நல்ல நாள் என்று நம்பி மனு தாக்கல் செய்துள்ள அத்தனைப் பேரும் வெற்றி பெற்றுவிடுவார்களா? ஒரு தொகுதியில் ஒருவர்தானே வெற்றி பெற முடியும்?

அரசியல்வாதிகளின் முட்டாள்தனத்துக்கு அளவே கிடையாதா?

அமாவாசை நாளல்லாமல் வேறு நாள்களில் போட்டியிட்டவர்கள் தோல்வி அடைந்து அமாவாசை நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்று எந்த சோதிடராவது சவால் விடத் தயாரா?

சரி, இந்த அமாவாசை இந்துக்களுக்குத்தான் நல்ல நாளா? இஸ்லாமியர் களுக்கும், கிறித்தவர்களுக்கும் அமாவாசை எந்த நாள்? இவர்களுக்கு நல்ல நாள் ஒன்றும் கிடைக்கவே கிடைக்காதா? அப்படி கிடைக்காத காரணத்தால், இவர்கள் போட்டியிடும் இடங்களில் எல்லாம் தோல்வி அடைந்து மண்ணைக் கவ்வுவார்களா?

அமாவாசை அமாவாசை என்று சொல்லுகிறார்களே - அது என்ன, அதன் தாத்பரியம்தான் என்ன?

இதற்கெல்லாம் அகராதியாக இருக்கக் கூடிய அபிதான சிந்தாமணியை ஒரு புரட்டுப் புரட்டலாமா?

அச்சோதை - இவள் ஒரு புண்ணிய நதி வடிவமான பெண். இவள் மரீசி மக்களாகிய பிதுர்க்களுக்குக் குமரி. இவள் தன் பிதுர்க்களால் நிரூபிக்கப் பட்ட அச்சோதம் என்னும் நதிக்கரையில் ஆயிரம் வருஷம் தவம் செய்ய, பிதுர்க்கள் பிரத்தியக்ஷமாயினர். அவர்களுள் ஒருவனாகிய மாவசு என்பவனை நாயகனாக எண்ண, அதனால் அவள் விபச்சாரியாய், பூமியில் விழாது அந்தரத்தில் நின்று தவஞ் செய்தனள். அவள் வசமாகாத மாவசு இச்செய்தி நடந்த தினத்தை அமாவாசை ஆக்கினான்.

அவள் மீண்டும் அவர்களை வேண்ட, நீ தேவர் கர்மத்தைப் புசித்து, துவா பரயுகத்தில் ஒரு மீன் வயிற்றில் சத்தியவதியெனப் பிறந்து, பராசரனைக் கூடி, வியாசனைப் பெற்றுப் பிறகு சந்தனின் தேவியாய் இரண்டு புத்திரர்களைப் பெற்று அப்பால் அச்சோதையெனும் புண்ணிய நதியாகவென அருளிப் போயினர். இத்தினத்தில் அப்பிதுர்க்களை நினைத்துக் கர்மாதிகள் செய்யின், அவை பிதுர்ப் பிரீதியைத் தரும் (மச்ச புராணம்) என்று கூறுகிறது அபிதான சிந்தாமணி.

இந்து மதம் என்று எடுத்துக்கொண்டால் அதில் விபச்சார சமாச்சாரம் இல்லையென்றால் சுவை படாது போலும்.

ஒருவனை அடைய நினைத்ததே விபச்சாரமாம்... அது எப்படியோ இருக்கட்டும். இந்த விபச்சாரத்துக்கான நாளான அமாவாசை எப்படி நல்ல நாள் ஆகும்?
தர்க்கமுறை (லாஜிக்) இடிக்கிறதே!

--------------- மயிலாடன் அவர்கள் 28-9-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

தமிழ் ஓவியா said...

தடை செய்க சோதிடத்தை!


அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள கார்ல்சேகன் வானியல் ஆய்வு மய்யத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பிரபஞ்ச வெளியில் புதிதாக இரு சூரியன்களைக் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்கா விண்ணில் செலுத்திய கெப்லர் விண்கலம் அனுப்பிய தகவல்களிலிருந்து இது தெரிய வந்துள்ளது. இந்த இரு சூரியன்களையும் 229 நாள்கள் சுற்றிவரும் கிரகம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கிரகம் பூமியிலிருந்து 200 ஒளி ஆண்டுத் தொலைவில் உள்ளது. (ஒரு ஒளி ஆண்டு என்பது ஏறக்குறைய ஒன்பதரை லட்சம் கோடி கிலோ மீட்டர்).

இரண்டு சூரியன்கள் இருந்தாலும் ஒரே திசையில் இருப்பதால் பூமியைப் போலவே இங்கும் பகல் இரவு ஏற்படுகிறது. என்ன விந்தையென்றால் இவ்விரு சூரியன்களும் ஒன்றையொன்று சுற்றி வருகின்றன. இதனால் 20 நாள்களுக்கு ஒருமுறை கோள் மறைப்பு (கிரகணம்) வருகிறதாம்.

இரு சூரியன்களைச் சுற்றி வருவதால் அந்தக் கிரகத்துக்கு இரண்டு சூரிய உதயங்களும், இரண்டு அஸ்தமனங்களும் ஏற்படுகின்றனவாம்.

ஒரு சூரியன் ஆரஞ்சு நிறத்திலும், மற்றொன்று சிவப்பு நிறத்திலும் உள்ளதாம். ஒன்றையொன்று சுற்றிக் கொள்ளும் இவ்விரு சூரியன்களுக்கிடையே 65 மில்லியன் மைல்கள் இடைவெளி உள்ளதாம்.

இந்தப் புதிய கிரகத்துக்கு கெல்லர் 16பி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அறிவியல் நாளும் இவ்வாறு புதியனவற்றைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்க, இங்கே ஜோதிடர்கள் இன்னும் நவக்கிரகத்தையே (ஒன்பது) கட்டிக் கொண்டு அழுது கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் கூறும் நவக்கிரகத்தில் கிரகமே இல்லாத நட்சத்திரமான சூரியனைச் சேர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். முக்கிய கிரகமான பூமிக்கு அந்தப் பட்டியலில் இடம் இல்லை; ஆனால், பூமியின் துணைக் கிரகமான சந்திரனைச் சேர்த்துக் கொண்டு, ஜாதகம், ஜோதிடம் என்று பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், விண்ணியல் அறிஞருமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் என்ன சொல்லுகிறார்?

சூரியக் குடும்பத்தில் வெகு தொலைவிலுள்ள கிரகங்கள்மீது மக்களுக்கு இவ்வளவு ஆர்வமும், அக்கறையும் வந்திருக்கிறது. அவற்றுடன் தங்கள் வாழ்க்கையை எதற்காக இப்படிப் பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்பதையெல்லாம் என்னால் நிஜமாகவே புரிந்துகொள்ள முடியவில்லை.

அறிவியலை ஒதுக்கி வைத்து அதை (சோதிடத்தை) ஏற்றுக்கொள்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

விண்கோள்களின் (கிரகங்களின்) இயக்கங்கள் பற்றிய சிக்கலான கணிப்புகளைக் கூட்டிக் கழித்துப் பகுத்துப் பார்த்து தங்கள் வாழ்க்கையை அவை (கிரகங்கள்) ஆட்டிப் படைக்கின்றன என்று எப்படி நம்புகிறார்கள்? என்பதுபற்றி எனக்கு எதுவுமே புரியவில்லை என்று (அக்கினிச் சிறகுகள் நூலில்) விஞ்ஞானி அப்துல்கலாம் சொல்லியிருக்கிறார்.

மக்களை அறியாமையில் அழுத்திச் சுரண்டும் இந்தச் சோதிடம் தடை செய்யப்படவேண்டாமா?
---"விடுதலை” 28-9-2011