Search This Blog

18.9.11

தினமலரே ஒன்றைக் கொடுத்து ஒன்பது வாங்காதே!

தினமலரே ஒரு டவுட்தான்!

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: கிரிக்கெட் மற்றும் பன்னாட்டு கம்பெனிகளின் சலுகைகளை வெட்டுதல் மூலமும், கோவில்களில் உள்ள தங்கங்களை எடுத்துக் கொண்டு, தங்கப் பத்திரங்களை கடன் பத்திரமாக, கடவுளுக்கே தந்தும் கூட நிதி ஆதாரத்தைப் பெருக்கலாமே.

டவுட் தனபாலு: அது மட்டுமில்லை... கோடிக்கணக்கான சொத்துக்களை வச்சுக்கிட்டு, அதுக்கு வரி விலக்கு அனுபவிக்கிற சில அறக்கட்டளைகளுக்கும்; கொடியில் இருந்து, புத்தகம் வரை அத்தனையிலயும் காசு பார்க்கிறவங்களுக்கும் வரி விதிக்கிறது மூலமாகவும், நிதியாதாரத்தைப் பெருக்கலாமே...!

- தினமலர் 17.9.2011

அட, தினமலரே, தினமலரே, நேரிடையாகக் குற்றஞ் சாட்ட முடியாமல் தலையைச் சுற்றி தொட முயலும் - மூக்கில்லாத தினமலரே!

பெரியார் விட்டுச் சென்ற சொத்துக்கள் - அறக் கட்டளைச் சொத்துக்கள், கல்விக் கூடங்களாகவும், கொள்கைப் பிரச்சார வெளியீடுகளாகவும், மருத்துவமனைகளாகவும் ஒளி வீசிக் கொண்டுதான் இருக்கின்றன.

சங்கர மடச் சொத்துக்கள் யாருக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன? நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே! என்ற பரந்த குண்டுச் சட்டி மனப்பான்மை உங்கள் ஜெகத்குரு சங்கராச்சாரியாருக்குத்தான் உண்டு.

அப்பாவித் தமிழர்கள் உங்கள் சங்கர மடத்துக்குக் கொட்டிக் கொடுக்கும் பெருந்தொகையெல்லாம் கூட உங்களவாளுக்கு மட்டும்தானே பயன்படுகிறது.

கோயில்களில் கொட்டிக் கிடக்கும் நகைகள் யாருக்குப் பயன்படுகின்றன? எலிகள் புழுக்கைப் போடவும், பூனைகள் குட்டி போடவும்தானே அவை பயன்படுகின்றன.

போதும் போதாதற்கு அர்ச்சகப் பார்ப்பனர்கள் அனுபவித்தது போகத்தான் மீதி இருப்பு.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் நகைகளின் கதை ஊளை நாற்றம் எடுத்து ஊர் சிரிக்கிறதே!

அவை மக்கள் நலனுக்குப் பயன்படட்டுமே என்று சொன்னால், டவுட் தினமலருக்கு ரத்தக் கொதிப்பு எடுத்து ரத்த வாந்தி வருகிறது.
கோயில் கட்டிய ராஜாக்கள் மாஜிகளாகி விட்டனர்; சமஸ்தானாதிபதிகள் அரசு பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கோவில்களுக்கு குழவிக் கற்களுக்கு மட்டும் நகை கேட்கிறதா?

தங்கம் அரசாங்க கஜானாவில், ரிசர்வ் வங்கியில் இருக்க வேண்டுமே தவிர, குழவிக் கற்களுக்கு வருஷத்துக்கு ஒரு முறை பூட்டி, அதற்குப் பின் கிடங்குகளில் பூட்டி வைப்பதற்கல்ல!

திரி நூல் தினமலரே, ஒன்றைக் கொடுத்து ஒன்பது வாங்காதே!

----------------------- "விடுதலை” 17-9-2011

0 comments: