Search This Blog

30.9.11

காந்தி ஜயந்தி புரட்டு


இவ்வாரம் 2-10-29 தேதி புதன்கிழமை தமிழ்நாட்டில் பல இடங்களில் திரு.காந்தியின் சஷ்ட்டி பூர்த்தி தின திருவிழா என்னும் காந்தி ஜயந்தி புரட்டு ஒன்று பார்ப்பனர்களால் வெகு அக்கரை உள்ளவர்கள் போல் கொண்டாடப் பட்டது. அவைகளை ஒன்றுக்கு இரண்டு பத்து வீதம் பத்திரிகைகளில் விளம்பரமும் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் இரகசியம் என்ன வென்று பார்த்தால் கடுகளவு அறிவுள்ளவர்களுக்கும் உண்மை விளங்காமல் போகாது. அதாவது இந்தப் பார்ப்பனர்கள் காந்தி ஜயந்தியை திரு.காந்தி மீதுள்ள அன்புக்கும் பக்திக்கும் மரியாதைக்கும் அறிகுறியாக கொண்டாடினார்களா அல்லது திரு.காந்தியின் பெயரைச் சொல்லிக் கொண்டு தங்கள் ஆதிக்கத்திற்கு ஆதாரமாக பார்ப்பன விஷயத்தை பாராட்டக் கொண்டாடினார்களா? என்பது விளங்காமல் போகாது. தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கு எப்போதாவது திரு.காந்தியிடம் மரியாதையோ பக்தியோ இருந்ததாக யாராவது சொல்ல முடியுமா? எந்தப் பார்ப்பனர் திரு. காந்தியைப் பிடித்து சிறையில் அடைக்கும் படிக்கும் அந்தப்படி அடைக்காவிட்டால் அராஜகம் பெருகி நாடும் சர்க்காரும் அழிந்துபோகும் என்று சர்க்காருக்குச் சொல்லி சர்க்காரிடம் மகாப்பட்டம் வாங்கினாரோ, அந்தப் பார்ப்பனராகிய திரு.சீனிவாச சாஸ்திரியாரும், எந்தப் பார்ப்பனர் காந்தி அரசியலுக்கு லாயக்கில்லை என்று சொன்னாரோ அந்தப் பார்ப்பனராகிய திரு.சத்தியமூர்த்தியும், எந்தப் பார்ப்பனர் திரு.காந்தியை பயித்தியக்காரர் என்று சொன்னதோடு அவரது இயக்கம் சட்டவிரோதமானது என்று சர்க்காருக்கு யோசனை சொன்னாரோ அந்தப் பார்ப்பனராகிய திரு.சீனி வாசய்யங்காரின் உண்மை சிஷ்யராகிய திரு. முத்துரங்கமும், திரு.காந்தியின் கொள்கையை ஒழிக்கப் புறப்பட்ட எதிரிகளுக்கு அடிமையாயிருந்தவரும் திரு.காந்திக்கு மண்டையில் மூளையில்லை என்று சொன்னவருமான திரு.வரத ராஜுலுவும் மற்றும் இவர்களது சிஷ்யகோஷ்டிகளும் முக்கியமாயிருந்து காந்தி ஜயந்தியை சென்னையில் கொண்டாடி இருப்பதுடன் வெளியிடங்களிலும் மேல்கண்ட கூட்டத்தைச் சேர்ந்த வக்கீல் பார்ப்பனர்களும் அவர்களது குமாஸ்தாக்கள் கட்சிக்காரர்களுமே முக்கியமாயிருந்திருக்கின்றார்கள். இந்த கூட்டத்திற்கு இப்போது திரு.காந்தியிடம் ஏற்பட்ட அபிமானத்திற்கும் பக்திக்கும் காரணம் என்ன என்பது வேடிக்கை விஷயமாகும்.

இவர்கள் ஒன்றாய் திரு.காந்தி செல்வாக்கில் இருந்த காலத்தில் அவர்களை உண்மையில் பின்பற்றினவர்களாகவாவது இருந்திருந்தாலும் அல்லது அவர் இப்போது மூலையில் அடங்கிவிட்டாலும் அவருடைய அப்போதைய கொள்கையையாவது அல்லது இப்போதைய கொள்கையை யாவது பின்பற்றுகின்றவர்களாகவாவது இருந்தாலும் ஒரு விதத்தில் காந்தி ஜயந்தி கொண்டாட யோக்கியதை உடையவர்கள் என்று சொல்லலாம்.

அப்போதும் கீழ்ப்படியாமல், இப்போதும் ஏற்றுக் கொள்ளாமல் மூலையில் உட்கார வைத்து ஜயந்தி கொண்டாடுவது எதற்கு சமானம் என்று பார்க்கப் போனால் புத்தரை நாஸ்திகர் என்று பழி சுமத்தி அவர் கொள்கையை அடியோடு அழித்து நாட்டில் செல்வாக்கில்லாமல் செய்துவிட்டு புத்தர் ‘மகா விஷ்ணு’வின் பத்தாவது அவதாரம் என்று புராணங்கள் எழுதிவைத்து வணங்கி வந்ததைத்தான் சமானமாகச் சொல்லலாம். இந்தத் தமிழ் நாட்டில் ஒரு பார்ப்பனராவது திரு.காந்தி அபிப்பிராயத்தை ஒப்புக்கொள்ளுகின்றார் என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம். உதாரணமாக சாரதா மசோதாவுக்கு ஆதரவளித்ததில் பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 24 வயதும் கல்யாண வயதாயிருக்க வேண்டும் என்று சொன்னதை எந்தப் பார்ப்பனர் ஒப்புக் கொண்டார் என்று கேட்கின்றோம். தீண்டாமை ஒழிந்தா லல்லாது நமக்கு சுயராச்சியம் கிடைக்காதென்றும், தீண்டாமையை அடியோடு ஒழிக்காவிட்டால் நாம் சுயராச்சியத்திற்கு அருகரல்லவென்றும் சொன்னதை எந்தப் பார்ப்பனராவது ஒப்புக்கொண்டு தீண்டாமையை ஒழிக்க முயற்சித்தாரா? முயற்சிக்கிறாரா? முயற்சிக்கப்போகிறாரா? என்று கேட்கின்றோம். கோவில் களில் தீண்டப்படாதாரை விடாவிட்டால் அது மிகவும் அக்கிரமம் என்று சொன்னாரே, அதை எந்தப் பார்ப்பனராவது ஒப்புக் கொண்டு கோயிலுக்குள் விட்டார்களா என்று கேட்கின்றோம். விதவைகளுக்கு மறுமணம் செய்யுங்கள் என்றும் மறுமணம் செய்யப்படாத விதவைகள் வீட்டைவிட்டு ஓடிப்போய் யாரையாவது கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றும் சொன்னதை எந்தப் பார்ப்பனராவது கேட்டார்களா என்று கேட்கின்றோம்.

மற்றும் காங்கிரஸ் விளையாட்டுப் பிள்ளைகள் கூட்டம் என்றும், பூரண சுயேச்சை என்பது பயித்தியக்காரத்தனமென்றும் சொன்னதை யாராவது எந்தப் பார்ப்பனராவது மதித்தார்களா? அன்றியும் கோயில்களில் கடவுள்கள் இல்லை என்றும், கோயில்கள் விபசார விடுதிகள் என்றும் சொன்னதை யாராவது மதித்து எந்தக் கோயில்களை யாராவது இடித்தார்களா அல்லது அடைத்தார்களா என்று கேட்கின்றோம். அன்றியும் லாகூர் காங்கிரசில் ஒரு காரியமும் ஆகப் போவதில்லை; காங்கிரசியக்கமும் ஒழுங்காயில்லை; ஆதலால் நான் காங்கிரஸ் தலைமை ஒப்புக் கொள்ளமாட்டேன் என்று சொன்னதற்கு யாராவது பதில் சொல்லவோ அல்லது காங்கிரசை விட்டு வெளிவரவோ அல்லது காங்கிரசின் கொள்கைகளைத் திருத்தவோ ஒப்புக் கொண்டார்களா என்று கேட்கின்றோம். கடைசியாக திரு.காந்தி இன்னமும் தனக்கு ஒத்துழையாமையில்தான் நம்பிக்கை இருக்கின்றது என்று அடிக்கடி சொல்லி வருகின்றாரே! இதையாவது எந்தப் பார்ப்பனராவது கேட்டு உத்தியோகத்தை விடவோ சட்டசபையை விடவோ, பட்டத்தை விடவோ, பள்ளியை விடவோ, வக்கீல் வேலையை விடவோ, சம்மதித்தார்களா என்றும் கேட்கின்றோம். திரு.காந்தி சொல்வதில் ஒன்றைக்கூட கேட்காமல் அவரை பயித்தியக்காரரென்றும், முட்டாள் என்றும், மூளை இல்லை என்றும், அரசியலுக்கு லாயக்கில்லை என்றும், அராஜகன் என்றும், சட்ட விரோதி என்றும் மற்றும் அயோக்கியன், மடையன், போக்கிரி (கும்பகோணம் பம்பாய் முதலிய இடங்களில்) என்றும் சொல்லிவிட்டு அதுவும் சென்ற வாரத்தில் சொல்லிவிட்டு இந்த வாரத்தில் அதே பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளும் கூலிகளும் சேர்ந்து காந்தி ஜயந்தி கொண்டாடுவதென்றால், இதைப் போன்ற வஞ்சகமும் சூட்சியும் வேறு உண்டா என்றுதான் கேட் கின்றோம்.

ஒரு காரியத்திற்காக காந்தி ஜயந்தி கொண்டாடப்பட்டது என்றால், அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியது தான். அதாவது தென்னிந்தியாவில் வருணாச்சிரமப் பிரசாரம் செய்ததற்கும் இந்த ஜென்மத்தில் “சூத்திரன்” தனது வருண தர்மத்தைச் செய்தால் அடுத்த ஜன்மத்தில் “வைசியனாக”, அடுத்த ஜன்மத்தில் “க்ஷத்திரியனாக”, அடுத்த ஜன்மத்தில் “பிராமண”னாகலாம் என்று சொன்னதற்கும், மற்றும் ராமாயண, பாரத பிரசாரம் செய்ததற்கும் கதரின் பேரால் லட்சக்கணக்காக பணம் பிடுங்கி பார்ப்பனாதிக்கத்திற்கு செலவு செய்ய பார்ப்பனர்கட்கு இடம் கொடுத்துவிட்டுப் போனதற்கும் வேண்டுமானால் பார்ப்பனர்கள் காந்தி ஜயந்தி கொண்டாடலாம் என்பதை நாம் ஒப்புக் கொள்ளு கின்றோம். ஆனால் சுயமரியாதை உள்ள பார்ப்பனரல்லாதார்கள் அதில் கலந்து கொண்டதற்கு நாம் வெட்கப்படாமலிருக்க முடியவில்லை. இன்றைய தினமும் நமது நாட்டில் நடக்கும் அனேக ஜயந்திகளும் பண்டிகைகளும் திருநக்ஷத் திரங்களும் உற்சவங்களும் பார்ப்பனாதிக்கத்திற்கும் பார்ப்பனரல்லாதார் இழிவுக்கும் அறிகுறியாக நடத்தப்படுகின்றது என்பதை பலர் அறிந்தும் அவ்வித பண்டிகைகளையும் உற்சவங்களையும் இன்னமும் அறிவும் உணர்ச்சி யுமற்ற பார்ப்பனரல்லாதார்கள் செய்து கொண்டுதான் வருகின்றார்கள். அது போலவே காந்தி ஜயந்தியும் கொண்டாடப்பட்டது என்றுதான் நாம் வருத்தத் துடன் சொல்ல வேண்டியிருக்கின்றது. எனவே இனியாவது பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் உள்ள பார்ப்பனரல்லாதார்கள் இம்மாதிரியான பார்ப்பன சூட்சியிலும் வஞ்சகத்திலும் விழாமலிருக்க எச்சரிக்கை செய்கின்றோம்.

-------------- தந்தைபெரியார் - "குடி அரசு" - துணைத் தலையங்கம் - 06.10.1929

0 comments: