மதப் பிரசாரகர் போல் நாங்கள் நிர்ப்பந்திப்பதில்லை; அச்சுறுத்துவதில்லை!
இந்தக் கூட்டத்தை என்னுடைய 82 ஆம் பிறந்த தினத்திற்காகக் கூட்டியுள்ளீர்கள். இதுபோல் பல ஊர்களிலும் கொண்டாடுகின்றார்கள். என் 82 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதனால் எனக்கு ஒரு காசு பிரயோசனம் (பயன்) உண்டா? அல்லது உங்களுக்காவது ஒரு பயன் உண்டா? ஏதோ கூட்டம் சேர்க்க ஒரு சாக்காகவே ஆகும். இப்படிக் கூட்டுவது மூலம் கழகப்பிரசாரத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவே ஆகும். பிறந்தநாள் கொண்டாட்டம் என்பதன் பேரால் யார் நடத்தினாலும், எங்கு நடத்தினாலும் அது ஒரு பிரச்சாரத்திற்காகவே ஆகும். நாட்டில் மகான்களுக்கும், மகாத்மாக்களுக்கும், ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியவர்களுக்கும் பிறந்த தினம் கொண்டாடுகிறார்கள். இப்படிக் கொண்டாடுவதால் கடவுளுக்கோ, ஆழ்வார், நாயன்மார்களுக்கோ என்ன இலாபம்? இதன் மூலம் கடவுள் பிரச்சாரம், ஆழ்வார் நாயன்மார்கள் பிரச்சாரத்தை மக்களிடையே புகுத்தவே இப்படிப் பிறந்த நாள் கொண்டாடுகின்றார்கள். மனிதன் பேரால் பிறந்த நாள் கொண்டாடுவதிலாவது அர்த்தம் உண்டு. அவன் அது செய்தான், இது செய்தான் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கடவுள் - நாயன்மார்கள் - ஆழ்வார்கள் பிறந்தநாளில் எதைச் செய்ததாகச் சொல்ல முடியும்? முட்டாள்தனமான காரியங்களை மக்களிடையே புகுத்தி நம்மை மடையனாக்க வேண்டுமானால் பயன்படும். எனது பிறந்தநாள் என்பதில் என்னுடைய பேச்சு - கருத்துகளை - கழகக் கொள்கையினை எடுத்துச் சொல்லப் பயன்படும் என்பதுதான் முக்கிய பலனாகும். இதில் நான் ஏன் கலந்து கொள்ளுகின்றேன்? நீங்கள் பாராட்டுவதைக் கேட்டுப் பெருமை அடையவா? இல்லை. என்னுடைய கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லலாம் என்றே வந்திருக்கின்றேன்.
இன்று பொதுத்தொண்டின் பேரால் வேஷம் போட்டுக் கொண்டு மக்கள் மத்தியில் வருகின்றார்களே இவர்களில் 100க்கு 99, 50 பேர்கள் எல்லாரும் சுயநலத்திற்காகவேயாகும்.
தோழர்களே! இன்று எவனிடம் பொதுத் தொண்டு இருக்கின்றது? குறிப்பிட்டு ஒருவனையும் நான் கூறவில்லை - எல்லோரையும்தான் கூறுகிறேன். பொதுத்தொண்டு செய்கின்றவன் குறிப்பிட்டு ஒரு சாதனம் வைத்துக் கொண்டு பொதுநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளுகின்றார்களே தவிர மற்றப்படி எவன் பொதுநலத்துக்காகப் பாடுபடுகின்றான்?
பேர்தான் அரசியலே தவிர காரியம் வயிற்றுப் பிழைப்புக்குத்தானே! இந்த நாட்டில் பொதுத் தொண்டின் பேரால் ஸ்தாபனம் (அமைப்பு) வைத்து இருப்பவன் எல்லாம் அத்துடன் அரசியலை ஒட்டவைத்துக் கொண்டு அதன் பேரால் பிழைக்கின்றார்கள்.
என்னய்யா பொதுத் தொண்டு? இந்த நாட்டில் 100 க்கு 97 பேராக இருந்து கொண்டு கடுமையான உழைப்பாளியாகப் பாடுபடுகிறவர்களாக இருந்து கொண்டு "என்னடா நாம் ஏன் தேவடியாள் மகன்? இழிமகன் என்பதைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்கிறான் என்றால் அவனை (திராவிடனை) என்ன வென்று கூறுவது? எந்த நாட்டில் ஒருவன் பொதுத் தொண்டு செய்தாலும் நாம் இழி மகன் - நாலாம் சாதி - 5-ஆம் சாதி - நம் பெண்கள் ஏன் சூத்திரச்சிகள் - பார்ப்பானுக்கு வைப்பாட்டிகள். உழைக்காதவன் பார்ப்பான். 100-க்கு 3- பேராக இருந்து கொண்டு அவன் ஏன் உயர்சாதி? மேலானவன் என்று சிந்தித்துப் பாடுபடுவதுதானே முக்கியமாக உள்ள தொண்டு. இதை விட்டு விட்டு அரசியல் என்ன வாழ்கிறது?
நேரு பிரதம மந்திரியாகவோ, பிரசாத் ஜனதிபதியாகவோ (குடியரசுத் தலைவராகவோ) இந்தியாவுக்கு இருப்பதால் நமக்கு வந்தது என்ன? அதைவிட்டு ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிக்கின்ற மற்றவன் அங்கு போனாலும் நமக்கு என்ன செய்ய முடியும்! செய்ய என்ன இருக்கிறது? நல்லது செய்ய அங்கு நல்ல சாமான் இருக்க வேண்டும். அங்கு முட்டாள்தனமான சாமான்கள் தானே உள்ளன? எனவே பொதுத்தொண்டு என்று ஒன்று இல்லை - எல்லாம் வயிற்றுப் பிழைப்புத் தொண்டே யாகும்.
இந்த நாட்டில் இந்தச் சுயநலக்காரர்களையும், திருட்டுப் பசங்களையும் பற்றிச் சிந்திக்கவல்ல புத்தி நம்மக்களிடம் இன்னும் ஏற்படவே இல்லை.
எங்கள் தொண்டு ஜனங்களைத் திருத்த வேண்டும். மனிதத்தன்மை உடையவர்களாக, மானம் உள்ளவர்களாக, பக்குவம் பண்ணும் தொண்டாகும்.
மக்களை மடையராக்கும் நடப்புகளிலும் நடந்து கொண்டு போவதில் என்ன இருக்கின்றது?
ஒருவன் கடைவைத்து இருக்கின்றான்; ஒருவன் திருட்டுச் சாராயம் விற்கின்றான். அதுபோலத்தான் இந்தப் பொதுத் தொண்டுக்காரன்கள் சங்கதியும் ஆகும். கட்சி வைத்திருக்கின்றான் இதற்காக.
பொதுத் தொண்டு உண்மையாகவே இருக்க வேண்டும். இருக்கின்றது என்றாலும் எந்த அடிப்படையில் பழகுகின்றான்? கடவுள், மதம், சாஸ்திரங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டுதானே ஏற்பாடு செய்து கொண்டு இருக்கின்றது - அரசாங்கமே! இவற்றால்தானே மனிதன் மடையனாக அயோக்கியனாக - இருக்கின்றான்? எப்படித் திருத்த முடியும்?
எல்லா நாட்டிலும் இப்படித்தானே நடக்கிறது என்று கேட்கலாம்?
மற்ற நாட்டில் மனிதனின் மடமைகளை - முட்டாள்தனத்தை நீக்க ஒவ்வொருவன் தோன்றி அவற்றை ஒழித்து - மனிதனைத் திருத்தி இருக்கின்றான்.
நாம் ஏன் காட்டுமிராண்டியாக இருக்கின்றோம் என்றால் காட்டுமிராண்டிக் கடவுளையும், மதத்தையும், சாஸ்திரத்தையும் குறிப்பிட்டுக் கொண்டாடிக் கொண்டும் இருக்கின்றோம். இந்த மூன்றுக்கும் கட்டுப்பட்ட மனிதன் மனிதனாக ஆக முடியுமா?
நம் கண் எதிரில் காந்தி இருந்தார். பத்திரிகைக்காரர்களும், பார்ப்பனர்களும் அவரை மகாத்மா ஆக்கினார்கள். அரசியல் கட்சிக்காரன்கள் எல்லாம் மரியாதை பண்ணுகின்றார்கள். மகாத்மா என்று கொண்டாடுகின்றார்கள். அந்த ஆளினால் என்ன செய்ய முடிந்தது? அவரால் பகுத்தறிவுக்கு உகந்த - மக்களுக்கு ஏற்ற எந்தக் காரியத்தைச் சொல்ல முடிந்தது? அவர் இந்தக் கடவுள் மதள்களில் மாட்டிக் கொண்டதால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
"நான் கடவுளையும் மதத்தையும் நம்புபவன். முன்ஜென்மம், பின்ஜென்மம் ஆகியவற்றிலும், மோட்சம் நரகம் ஆகியவற்றிலும் வருணாசிரமத்திலும் நம்பிக்கை உடையவன்" என்று கூறித் திரிந்தவர். இதன் காரணமாக அவரைப் பார்ப்பான் மகானாக ஆக்கிவிட்டான்.
நான் ஜாதி இழிவு ஒழிக்க வேண்டும் என்று முன்வந்து பாடுபடுகின்றேன். இது நிறைவேற நான் என்ன செய்தாவது அதனை - ஜாதியை ஒழிப்பது என்று உறுதியாகப் பாடுபடுகின்றேன். உறுதி இல்லாமல் வழவழா என்று இருந்தால் முடியுமா?
துருக்கியில் கமால்பாட்சா என்ற பெருவீரன் துருக்கி மொழியைச் சீர்திருத்த எண்ணினார். துருக்கி மொழி எழுத்துகளை எல்லாம் எடுத்துவிட்டு ஆங்கில எழுத்துகளை அதற்குப்பதில் உபயோகப்படுத்த வேண்டும் என்றார். பண்டிதர்கள், மதவாதிகள் எதிர்த்தார்கள். அவர்களை அவன் "துருக்கி மொழியைச் சீர்திருத்த என்ன சொல்லுகின்றீர்கள் வாருங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தான். வந்த பண்டிதர்களையும் மவுல்விகளையும் பிடித்துச் சிறையில் தள்ளச் செய்து மொழியைச் சீர்திருத்தினான்.
எதற்காகச் சொல்கின்றேன் என்றால், கொண்ட இலட்சியத்தில் - கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். இருந்தால்தானே காரியம் நடக்கும். நம் இலட்சியம் ஈடேற அடிப்படையில் என்ன கோளாறு என்று கண்டு அந்தத் தடைகளை எல்லாம் நீக்க வேண்டும்.
இந்தச் சமுதாய மாற்றத்திற்கு, மனிதத்தன்மை அடைவதற்கு - காட்டுமிராண்டித் தன்மை ஒழிவதற்கு - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகியவை தடையாக இருப்பது கண்டுதான் அவற்றை ஒழிக்கப் பாடுபடுகின்றோம். இவற்றை வைத்துக் கொண்டு ஜாதியை ஒழிக்க முடியாது - நமது இழிநிலையினையும் ஒழிக்க முடியாது.
மகான்கள் அற்புதம், அதிசயம் அன்று செய்தார்கள் என்று கூறுவது எல்லாம், அவனுக்குக் கண் கொடுத்தான் - கால் இல்லாதவனுக்குக் கால் கொடுத்தான் என்று கூறுவது எல்லாம் புரட்டாகும். அற்புதம் என்றாலே புரட்டு என்று கூறலாம்!
இன்று அற்புதம், அதிசயம் என்றால் - இந்த எலக்ட்ரிக் லைட், மைக் (ஒலிபெருக்கி), மோட்டார், இரயில் இவைகள் அல்லவா? இவைகள் எப்படி என்றால் - செய்து காட்டுவான், அதை விளக்கிக் கூறுவான் இன்று!
முன்பு மகான்கள் என்ன செய்தார்கள் என்பதை விளக்கிக் காட்டுவார்களா?
காட்டுமிராண்டிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கடவுளையும் மதத்தையும் இந்த 1960 ஆம் ஆண்டில் நாம் பயன்டுத்தினால் காட்டு மிராண்டிகளாகத்தானே இருக்க முடியும்? உலகத்தில் காட்டுமிராண்டி நிலையில் இருந்த வெள்ளைக்காரனும் முஸ்லிமும் அந்தக் காட்டு மிராண்டித்தனமான கடவுளையும் - நம்பிக்கைகளையும் விட்டுவிட்டு இன்று மனிதத்தன்மை பெற்று இருக்கின்றார்கள். நாம் தான் இவற்றைக் கட்டிக் கொண்டு அழுகிறோம். நம்மைப்போல் இந்த முஸ்லிம்களும் வெள்ளைக்காரர்களும் காட்டுமிராண்டிகளாகக் கல்லையும், பாம்பையும், கழுகையும், நாயையும் கும்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள்தான்! அவர்கள் ஏசுவுக்குப்பின் கிறிஸ்தவர்களும் - முகம்மது நபிக்குப் பிறகு முஸ்லிம்களும் இவற்றை ஒழித்துக்கட்டி விட்டார்கள். அவர்கள் எவற்றை எல்லாம் கட்டிக் கொண்டு அழுதார்களோ அவற்றை எல்லாம் இங்குக் கொண்டு வந்து பார்ப்பனர்கள் நம் தலையில் கட்டி விட்டார்கள். இவை மாறவேண்டுமானால் அரசாங்கத்தையும், கடவுளையும், மதத்தையும், சாஸ்திரத்தையும் திட்டினால் மட்டும் போதாது. மக்கள் மனம் மாற வேண்டும். புத்திவர வேண்டும்.
100 க்கு 99 பேருக்கு மதம் என்றால் என்ன என்று பலருக்குத் தெரியாதே! மதம் என்றால் கல்லில் முட்டிக்கொள்வது - இழி ஜாதியாக இருப்பது சூத்திரனாக இருப்பது இவ்வளவுதானே!
நமக்கு என்று ஒரு மதம் இருக்கின்றது. இன்ன பெயர் அதற்கு. இன்னான் ஏற்படுத்தியது; இந்தக் காலத்தில் ஏற்பட்டது என்று எவனாவது கூறமுடியுமா?
-------------------- 09.10.1960 - அன்று தூத்துக்குடியில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. ”விடுதலை” 13.10.1960
0 comments:
Post a Comment