Search This Blog

1.9.11

விநாயகர் சதுர்த்தியில் பிறந்தார் என்கிறார்களே! எந்த ஆண்டு பிறந்தார் ?

கேள்வி: சேமிப்பு உணவு தானியங்களை எலிகள் பாழடித்து விடுகின்றன. சிலர் பட்டினியால் சாகக் கூடிய நிலை இருந்தும், பம்பாய் தானாபந்தர் பகுதியில் பெரும் வியாபாரிகள், அந்த நகர சபையின் எலி ஒழிப்புத் திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

பிரதமர்: பம்பாயிலா அப்படி நடக்கிறது?

கேள்வியாளர்: ஆம். பம்பாயில்தான்.

பிரதமர்: எனக்குத் தெரியாது அதுபற்றி நான் கவனிக்கிறேன். அவர்கள் ஏன் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?

கேள்வியாளர்: மத உணர்ச்சி அடிப்படையில் எதிர்க்கிறார்கள்.

பிரதமர்: எலி ஒழிப்பிலுமா மத உணர்ச்சி?

கேள்வியாளர்: ஆமாம், எலி ஒழிப்பில்தான் மத உணர்ச்சி இது அங்கு நிறைய இருக்கிறது. இதை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும்.

பிரதமர்: இது மிகவும் வருத்தத்திற்குரியது. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன இவர்கள் இப்படி எல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பதினால் தான் அந்தப் பிரச்சனைகளை வெல்ல முடியவில்லை.
- பிளிட்ஸ் ஏட்டுக்கு பிரதமர் இந்திரா காந்தி அளித்த பேட்டி

(26.2.1977ஆம் தேதி இதழிலிருந்து)

மும்பையில் பாலகங்காதா திலகர் ஊட்டிவிட்ட தப்பான மத உணர்ச்சி - வெறி (எலி விநாயகர் வாகனமாம்! நூற்றாண்டு கடந்தும் அம்மக்களைத் துரத்தி யடித்து நாள்தோறும் வீழ்த்திக் கொண்டு இருக்கிறது!

இன்றும்கூட விநாயகர் ஊர்வலம் என்று கூறி சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறி முழக்கங்கள் வேட்டுச் சத்தமாக இருப்பதை அறிய முடியும்.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்கள் உள்ள பாதையில் ஊர்வலத்தை நடத்திட அனுமதி கேட்பது - காவல்துறை அனுமதி மறுப்பது - ஒப்புக் கொள்வது - அதே நேரத்தில் அனுமதிக்கப்பட்ட பிள்ளையார் ஊர்வலப் பாதையை மீறி, சிறு பான்மையினர் பகுதிக்குள் நுழைவது - காவல் துறை தடுப்பது - மறியல் செய்வது - கைதாவது (திருவாளர் ராமகோ பாலன் என்ற விளம்பரப் பிரியரின் ஸ்டன்டுதான் இது! என்ற நாட கங்கள் ஆண்டுதோறும் தமிழ் நாட்டின் தலைநகரிலே நடந்து கொண்டு தானே இருக்கிறது. சமீப காலமாக இதனை மாற்றி 50 அடி, 60 அடி, 100 அடி உயரத்தில் விநாயகர் கட் அவுட்டு களைச் செய்து ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பது என்றாகி விட்டதே.

பிள்ளையாரிலும் எத்தனை எத்தனை வகை. இவர்கள் சூட்டும் பிள்ளையார் பெயர்கள் எந்தப் புராணத்திலும் கிடையவே கிடையாது.

இவர்களே கார்கில் பிள்ளையார் என்பார்கள், (கையில் துப்பாக்கியுடன்) ஹசாரே பிள்ளையார் என்கிறார்கள் இப்பொழுது. மனதுக்கு என்ன வெல்லாம் தோன்றுகிறதோ அந்தப் பெயர்களையெல்லாம் சூட்டுவார்கள். இதுபற்றி எந்த ஆன்மிக வியாதிகளும் வாய் திறப்பதில்லை. அந்த ஊர்வலத்தில் பார்த்தால் பெரும்பாலும் பெருங்குடி மக்கள்தான்! ஆட்டபாட்டம் அப்பொழுதுதானே கன ஜோராக இருக்கும்!

கடவுள் உருவமற்றவர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு இத்தனை இத்தனை உருவங்களில் கடவுள்கள் - அவற்றிற்குத் தலப் புராணங்கள்!

அது சரி விநாயகர் சதுர்த்தியில் பிறந்தார் என்கிறார்களே! எந்த ஆண்டு பிறந்தார் என்ற பிறந்த தேதியை ஏன் இதுவரை சொல்லவில்லை?

அவர் பிறப்பதற்குமுன் நாட்டில் கடவுளே கிடையாதா?

இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் விதாண்டாவாதமாம்.

ஒரு சேதி தெரியுமா? விநாயகர் ஒரு நாள் சமுத்திரஸ் நாணம் செய்யப் போன போது கடல் நீரை அப்படியே துதிக்கையால் உறிஞ்சி பின் சிறுநீராகக் கழித்து விட்டாராம். அன்று முதல்தான் கடல் நீர் உப்புக் கரிக்க ஆரம் பித்து விட்ட தாம். சிரியுங்கள்! நன்றாகச் சிரியுங்கள்!!

---- -------------- மயிலாடன் அவர்கள் 1-9-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: