Search This Blog

22.9.11

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரவேண்டும்-ஏன்?


கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருக!

25-9-2011 ஞாயிறு மாலை சென்னை பெரியார் திடலில், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில், கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரக் கோரும் - வற்புறுத்தும் மாநாடு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.

நீதியரசர் ஏ.கே. ராஜன் மற்றும் கல்வியாளர்கள் இம் மாநாட்டில் பங்கு ஏற்க உள்ளனர்.

இந்தக் கால கட்டத்தில் மிகவும் முக்கியமானதும், அவசியமானதும் ஆன மாநாடு இது.

மாநிலப் பட்டியலில் இருந்து வந்த கல்வி, நெருக்கடிநிலை காலத்தில் (1976 இல்) காதும் காதும் வைத்தாற்போல மாநில அரசுகளின் கருத்துகளைப் பெறாமலேயே ஒரு சார்பாக பொதுப்பட்டியலுக்கு வலுக் கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டது.

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அமைந்த அரசியல் சாசனக் குழு - எல்லா வகைகளிலும் விவாதித்தே கல்வி மாநிலப் பட்டியலில்தான் இருந்து தீர வேண்டும் என்று முடிவெடுத்துதான் மாநிலப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அதிகாரத்துக்கு உள்பட்ட துறைகள் 97 உள்ளன. மாநிலப் பட்டியலில் உள்ளவை 66 துறைகள். இரண்டும் இணைந்து (Concurrent List) அதிகாரம் செலுத்தும் துறைகள் 47 என்று இருக்கின்றன.

பொதுப் பட்டியலில் இருக்கக் கூடிய துறைகளில் கூட மத்திய அரசின் சட்டாம்பிள்ளைத்தனம்தான் அதிகம்.

இந்தியா என்பது ஒரு நாடல்ல; பல மாநிலங்களைக் கொண்ட ஒரு துணைக் கண்டம். பல இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட ஒரு துணைக் கண்டத்தில் ஒரே மாதிரியான கல்வி என்பது பொருந்தாத ஒன்றாகும். அதனால்தான் அது மாநிலப் பட்டியலில் வைக்கப்பட்டது.

இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங் சில நாட்களுக்கு முன் ஓர் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டார்.

கல்வித் துறையில் இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்த வழி வகுக்கும் இந்தியக் கல்வி ஆணையம் ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளிவந்த அன்றைக்கே (18-8-2011) திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அதனைக் கண்டித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

கல்வி என்பது பல்வேறு மொழிகள், பலவகைக் கலாச்சாரங்கள், நாகரிகங்களைப் பாதுகாக்கும், இளைய தலைமுறையினருக் குச் சொல்லிக் கொடுத்து, பண்பாட்டையும், நாகரிகத்தையும், அவர்களது தனித் தன்மைகளையும் காக்கும் கருவி என்பதை மறந்து விட்டு, இப்படி ஒரு விசித்திர, விபரீத முயற்சியில் ஈடுபடுவது கருவிலேயே சிதைக்கப்பட வேண்டிய கருத்தாகும் என்று அந்த அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார். கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதால்தான் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த போது பாடத்திட்டத்தில் சோதிடத்தைத் திணித்தார்கள், வேத கணிதம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். கடவுள் வாழ்த்தாக சரஸ்வதி வந்தனா என்ற இந்து மதக் கடவுளச்சியைப் பற்றிய பாடலைப் பாட வைப்பதற்குத் திட்டமிட்டார்கள். இப்பொழுது கூட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய கபில்சிபல் என்ன சொல்லுகிறார்? இளங்கலைப் படிப்பு முதல் அனைத்துப் படிப்புக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவதுதான் தனது கனவு என்றும் தெரிவித்துள்ளார். மத்தியில் இந்தப் பொறுப்புக்கு வரும் அமைச்சர்களின் கனவுகளை எல்லாம் நிறைவேற்று வதற்கு நாட்டு மக்கள்தான் கிடைத்தார்களா? இது எவ்வளவு பெரிய விபரீத யோசனை? பொதுப் பட்டியலில் கல்வி இருப்பதால், அதற்குரிய இழப்பை ஏற்கெனவே அனுபவித்து வருகிறோம். மருத்துவக் கல்விக்கு (M.B,B.S.,) சேர்ப்பதற்காக அகில இந்திய தொகுப்புக்கு ஒவ்வொரு மாநிலமும் 15 விழுக்காடு இடங்களைக் கொடுத்து வருகிறது. முதுநிலைப் படிப்புக்கு 50 சதவிகித இடங்களைத் தாரை வார்க்கும் நிலை இருந்து வருகிறதே. மாநில அரசு கடைப்பிடிக்கும் இட ஒதுக்கீடும் பின்பற்றப்படுவதில்லை. தமிழ் நாட்டில் நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு நுழைவுத் தேர்வைத் திணிக்கிறது. இந்தத் தொல்லைகளில் இருந்து விடுபட வேண்டு மானால், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதுதான் சிறந்த வழியாகும்.

அதற்கான மாநாடுதான் வரும் ஞாயிறு அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற உள்ளது.

மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறோம்.
---------------------"விடுதலை” தலையங்கம் 22-9-2011

0 comments: