Search This Blog

14.9.11

அய்ந்து பிரச்சினைகள் - அய்ந்து தீர்வுகள்! -- கி.வீரமணி

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் அய்ந்து பிரச்சினைகள் - அய்ந்து தீர்வுகள்!

(திருச்சிராப்பள்ளியில் - திராவிடர் கழக பொதுக் குழுக் கூட்டத்தின் தீர்மானங்களை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அளித்த விளக்கங்கள் - 11-9-2011).

1) தூக்குத் தண்டனை:


பேரறிவாளன், சின்ன சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் - இவர்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக தூக்குத் தண்டனை என்பதே மனித நேயத்துக்கும், மனித உரிமைக்கும் எதிரானது. தூக்குத் தண்டனையை - ஆயுள் தண் டனையாகக் குறைக்கவேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானம் வரவேற்கப்பட வேண் டியதே. அமைச்சரவையையும் கூட்டி தீர்மானம் செய்தால் இன்னும் கூடுதலான விளைவுகள் ஏற்பட வாய்ப் புண்டு.

இதில் கட்சிப் பிரச்சினை தேவை யில்லை. யார் குரல் அதிகமாகக் கேட்கிறது என்பதும் முக்கியமல்ல. நமக்குக் காரியம் நடக்க வேண்டும். எல்லாவற்றிலும் அரசியல் என்பது ஆபத்தும் அநாகரிகமும் கூட. நம்மைப் பிரிப்பவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நடக்க வேண்டியவைகளை கோட்டை விட்டுவிடக் கூடாதே!

2) ஈழத் தமிழர் பிரச்சினை


அ) ஈழத் தமிழர் பிரச்னைபற்றி இப்பொழுது ஆராய்ச்சிக் கட்டுரையா முக்கியம்? அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கும் இழிவுகளுக்கும் என்ன பரிகாரம்? இவற்றிற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப் படவேண்டும்.

ஆ) சண்டைகள் நடந்து முடிந்து பல்லாயிரம் தமிழர்கள் படு கொலை செய்யப்பட்ட பிறகு, எஞ்சியுள்ள மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்? அவர்கள் நாகரிகமான வாழ்வுரி மைக்கு உத்தரவாதம் தேவை.

இதில் கூட தமிழ்நாட்டில் அரசியல் கண்ணோட்டம்! ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் காரியங்களைச் சாதிக்க முடியும்.

மற்ற மற்ற மாநிலங்களைப் பாருங்கள். கட்சிகளையா கவனிக்கிறார்கள்? பொதுப் பிரச்னைகளில் ஒன்று சேர்ந்துகொள்ளவில்லையா? நம் நாட்டில்தான் தொட்டதற் கெல்லாம் அரசியல் பார்வை. பொது எதிரியைப் பார்ப்பதைவிட நமக்குள் எதிரிகளை உண்டாக்கிக் கொண்டு, ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதில் தான் காலத்தைக் கழிக்கிறோம். இந்த நிலை மாறினால் தமிழர்களின் உரிமைகளும், தமிழ்நாட்டின் வளர்ச்சியும் காப்பாற்றப்படும்.

3) தை முதல் நாள்


1921 ஆம் ஆண்டில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் அறிஞர்கள் கூடி எடுத்த முடிவுதான் தை முதல் நாள் தமிழர் புத்தாண்டு என்பது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற திராவிட இயக்கத் தலைவர்களால், சிந்தனையாளர் களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவு.

அதன் அடிப்படையில்தான் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2008 இல் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கான சட்டம் இயற்றப்பட்டது.

அதனை மாற்றுவது என்பது தமிழ் உணர்வுக்கு, திராவிட இயக்கச் சிந்தனைக்கு விரோதமானது.

அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக குறுகிய காலமே இருந்தார். அந்தக் குறுகிய காலத்திலும் அவர் இயற்றிய சட்டங்கள் மூன்றும் முக்கிய மானவை.

தாய் நாட்டிற்குத் தமிழ் நாடு என்று பெயர் சூட்டினார். சுயமரியாதைத் திரும ணத்திற்குச் சட்ட வடிவம் கொடுத்தார். இந்திக்கு இங்கு வேலையில்லை; தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் இரண்டே மொழிகள்தான்.
இந்த மூன்றும் எந்த அடிப்படையிலானது? தமிழ் உணர்வை அடிப்படையாகக் கொண்டது. ஆரியக் கலாச்சாரத்திற்கு எதிரானவை.

குறுகிய காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் அண்ணாவின் சாதனையில் அடங்கியுள்ள உள்ளடக் கத்தைப் புரிந்து கொள்ள வேண்டாமா? அந்த அண்ணா வின் உணர்வுகளைச் சட்டம் போட்டுத் தடுப்பதுதான் அண்ணாவின் பெயரில் உள்ள திராவிட இயக்க ஆட்சியா?

சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்றால் தமிழ் ஆண்டுகள் 60 என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஆண்டின் பெயர் கூட தமிழில் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

பிரபவ தொடங்கி அட்சய என்பதில் முடியும் அந்த 60 ஆண்டுகளும் நாரதன் என்கிற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்தவை என்ற ஆரிய ஆபாசத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தி.மு.க. ஆட்சி செய்தது என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்கவேண்டும். மாற்றி அமைக்க வேண்டும் என்பது சரியல்ல. சமச்சீர் கல்வியில் உச்ச நீதிமன்றம் என்ன கூறியது? ஒரு ஆட்சி என்பது முந்தைய ஆட்சியின் தொடர்ச்சி என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

முதல் அமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதை மீண்டும் கொண்டு வரவேண்டும்.

எம்.ஜி.ஆர். அவர்கள் தான் பிறப்பித்த வருமான வரம்பு ஆணையை - மறுபரி சீலனை செய்து திருத்திக் கொள்ளவில்லையா?

4) அரசியல் அணுகுமுறை


திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவும் எதிர்ப்பும் இருக்கும். நாங்கள் அரசியல் கட்சியல்லவே.

ஈழத்தமிழர்களுக்காக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதை வரவேற்றோம். தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற சட்டப் பேரவைத் தீர்மானத்தை வரவேற்கிறோம். திருமழிசையில் புறநகர் - நல்ல திட்டம்.

ஒன்றரை ஆண்டுக்குள் அளிக்கப் பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று முதல் அமைச்சர் கூறி இருக்கிறார் - காத்திருப்போம்.

5) பழிவாங்கும் அரசியல் கூடாது!


பழிவாங்கும் அரசியல் என்பது கூடாத ஒன்று. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதற்குரிய தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும். அதே நேரத்தில் அதுபழி வாங்கும் போக்காக இருக்கக் கூடாதே. பொதுவாக மக்கள் மத்தியில் அப்படி ஒரு எண்ணம் நிலவுகிறது.

தவறு செய்தவர்கள் ஒரு கட்சியில் தான் இருக்கின்றார்களா? மற்ற கட்சிக்காரர்கள் பற்றி குற்றச் சாற்றுகள் எழுகிறபோது அவை கண்டு கொள்ளப் படுவதில்லை என்ற நிலைப்பாடும் இருக்கிறது.

மக்கள் மத்தியில் இப்படி ஒரு கருத்துதான் நிலவுகிறது. நாங்கள் மக்களை அன்றாடம் சந்தித்துக் கொண்டு இருப்பவர்கள்.

சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சி களுக்கு உரிய வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். சட்டமன்றத்தில் இல்லாதவர்களைப் பற்றி விமர்சிக் கக்கூடாது என்ற மரபுகள் காப்பாற்றப்பட வேண்டும். சட்டசபையில் இல்லாதவர்களைப் பற்றி குற்றப்பத்திரிகை படித்தால் அதற்கு மறுப்பு கூற அவர் களுக்கு வாய்ப்பு இல்லையே.

மக்கள் பெரும்பான்மை பலத்தைக் கொடுத்துள்ளார்கள் என்றால் அதனை நல்ல விதமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வளர்ச்சித் திட்டங்களுக்கும், சட்ட ஒழுங்கைக் காப்பாற்றவும் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, பழிவாங்கும் உணர் வுக்கு ஆளாகிவிடக்கூடாது.

ஜனநாயக உரிமை என்பதை யதேச்சதிகார உரிமை என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.

எங்களுக்கு உள்ளது அரசியல் உணர்ச்சி அல்ல. சமுதாய உணர்வு. அந்தக் கண்ணோட்டத்தில்தான் எதையும் அணுகுவோம்.

- இவ்வாறு செய்தியாளர்களிடம் பேசினார் திராவிடர் கழகத் தலைவர்.

-----------------------" விடுதலை” 13-9-2011

0 comments: