இரு வகையான அணுகுமுறைகள்
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் உள்ள குறிப்பிட்ட (பி-அறை) அறையைத் திறப்பது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.
கடவுள் சம்பந்தப்பட்ட பிரச்சினையில்கூட மனிதர்களான நீதிபதிகள்தான் தலையிட்டு நீதி வழங்க வேண்டிய அவலம்!
குதிரைகள் வாங்க அரசன் கொடுத்த பணத்தை கொண்டு அமைச்சரான மாணிக்கவாசகர் குதிரைகள் வாங்காமல், கோயில் கட்டினான்; அமைச்சனைக் காப்பாற்ற கடவுள் நரிகளைப் பரியாக்கினான் என்றெல்லாம் புராணம் எழுதி வைத்துள்ளார்களே - இப்பொழுது அந்தக் கடவுளைப்பற்றி மனிதன் தானே தீர்ப்பு எழுத வேண்டியுள்ளது - இதுபற்றிப் பக்த சிரோன்மணிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
மன்னர் குடும்பத்தினர் பத்மநாபசாமி கோயில் அறைகளில் இருந்து நகைகளைக் களவாடிச் சென்றுள்ளனர் என்று கேளர மாநில முதல் அமைச்சர் அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தேவப்ரஸ்னம் பார்க்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட அறையைத் திறக்கக் கூடாது என்று மன்னர் சார்பில் உச்சநீதிமன்றத் தில் தெரிவிக்கப்பட்டபோது உச்சநீதிமன்றம் சரியான சாட்டையடி கொடுத்துள்ளது. குறிப்பாக நீதிபதி ஆர்.வி. இரவீந்திரன் ஒரு வினாவை எழுப்பினார்.
இவ்வழக்கு நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட வேண்டுமா? அல்லது சோதிடர்களால் முடிவு செய்யப்பட வேண்டுமா? என்ற வினாவை எழுப்பினார்.
மூடநம்பிக்கையும் கோயில் பாதுகாப்பும் ஒன்று சேர்த்து போக முடியுமா என்றும் கூறியிருக்கிறார்.
இது ஓர் அருமையான அறிவார்ந்த வினாவாகும். இந்திய அரசமைப்புச் சாசனத்தில் கூறியுள்ள அறிவியல் மற்றும் சீர்திருத்த மனப்பான்மையை மக்களிடம் வளர்க்க வேண்டும் என்ற கோட்பாட்டின்படி நீதிமன்றம் கேட்ட கேள்வியாகக்கூட எடுத்துக் கொள்ளலாம்.
இதே கண்ணோட்டம் நீதிமன்றத்திற்கு மற்ற மற்ற பிரச்சினைகளிலும் இருந்தால் இன்னும் சிறப்பாகவே இருக்கும்.
குறிப்பாக சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். 150 ஆண்டு கால தமிழ்நாட்டின் பிரச்சினை இது.
கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அதற்கான திட்டம் வகுக்கப்பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு. 60 சதவிகித பணிகள் முடிவுற்றதற்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும், சு.சாமி என்கிற பேர் வழியும் - ராமர் பாலம் - ராமர் கட்டிய பாலம் - அது 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குரங்குகள் துணை கொண்டு ராமனால் கட்டப்பட்ட பாலம்.
அதற்கு ராமர் பாலம் - என்று பெயர் - ராமன் இந்துக்களின் கடவுள் - இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பொழுது ராமர் பாலம் இடிக்கப்பட நேரிடும்; எனவே இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதும், அதனை ஏற்றுக் கொண்டு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிப்பதும் எந்த வகையில் அறிவியல் மனப்பான்மை?
திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயில் கருவூல அறையைத் திறக்கும் பிரச்சினையில் - தேவப்ரஸ்னம் என்று வரும்போது - சோதிட மூடநம்பிக்கைகளை எல்லாம் நீதிமன்றம் ஏற்க முடியாது என்று சொன்ன அதே உச்சநீதிமன்றம், ராமன் என்ற புராண கற்பனைக் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி, ஒரு மக்கள் நலத் திட்டத்தை முடக்குவதற்கு எப்படி ஒத்துழைப்புக் கொடுக்கிறது என்கிற கேள்வி எழாதா?
சட்டமாவது - நீதியாவது அது வியாக்யானம் செய்யும் வழக்குரைஞர்களையும், நீதிபதிகளையும் பொறுத்ததே என்று தந்தை பெரியார் சொன்னாரே - அதுதானா இது?
சேது சமுத்திரத் திட்டம் பற்றிய வழக்கு ஒருக்கால் நீதிபதி வீ.ஆர். இரவீந்திரனிடம் வந்திருந்தால் வேறு வகையான தீர்ப்பு கிடைத்திருக்கும் என்று எண்ணலாமா?
குறிப்பிட்ட நாளில் எந்த நீதிபதி அமர்கிறார் - என்று தெரிந்து அதற்கேற்றாற்போல வழக்குகளைத் தாக்கல் செய்யும் மனப்பான்மை நிலவுவது எந்த வகையில் சரியானது?
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மீதான கொலை வழக்கினை விசாரிக்க மாட்டேன்; நான் அவரது பக்தன் என்று மிக வெளிப்படையாக உச்சநீதி மன்றத்திலேயே ஒரு நீதிபதி கூறினார் என்றால், இந்நாட்டு நீதிமன்றத்தின் மீதான உயர்தர மதிப்பீடு என்னாகும்?
நீதி தேவதையின் கண்கள்தான் கட்டப்பட்டுள்ளதே - பிறகு என்ன? எந்த வழக்கு வந்தால் என்ன? நேர்மையான முறையில் தீர்ப்பு வழங்க வேண்டியதுதானே?
இந்து மனப்பான்மை என்ற ஒரு கிருமி எப்படியோ ஒரு வகையில் மக்களின் மனப்பான்மையில் ஒட்டிக் கொண்டுள்ள வரை நியாயம் நேர்மை என்பதெல்லாம் திரிபு அடைகின்றன என்பதுதான் உண்மை!
---------------”விடுதலை” 23-9-2011
0 comments:
Post a Comment