புத்தர் வினாயகனாக மாற்றப்பட்ட சதி
புத்தர் கோயில்கள் பிற்காலத்தில் அய்யப்பனாகவும், விநாயகனாகவும் மாற்றப்பட்ட சதி நடந்திருக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலே ஒரு காலத்தில் புத்தர் கோயிலாக இருந்திருக்கிறது. புத்தரின் நின்றகோலம் தான் இன்றைய ஏழு மலையான் - முகம் தெரியாத அளவுக்குப் பட்டை நாமம் என்பதெல்லாம் ஏமாற்று வேலையே! புத்தருக்கு, விநாயகன் என்னும் பெயருண்டு என்று நிகண்டு நூல்கள் கூறு கின்றன. விநாயகன் என்றால் தலைவன் என்று பொருள்.
புத்தராகிய விநாயகன் பெயரை திரிபுவேலைகள் செய்து விநாயகன் என்பது இந்து மதக் கடவுள் என்று உருட்டல் - புரட்டல் வேலையைச் செய்துள்ள னர்.
கும்பகோணம் நாகேசுவர சுவாமி திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு விநாயகர் ஆலயத்தில் ஒரு புத்தர் உருவம் இருக்கிறது. பிற்காலத்தில் இது பிள்ளையார் கோயில் ஆக்கப் பட்டுள்ளது என்று மயிலை சீனி. வேங்கடசாமி என் னும் ஆய்வாளர் பவுத்தமும், தமிழும் எனும் நூலில் (பக்கம் 45) குறிப்பிட்டுள்ளார்.
பல்லாவரம் அருகில் கனலிகிலுப்பை என்னும் ஊரில் புத்தர் சிலை ஒன்று ஏரிக்கரையில் கிடந்ததைக் கண்டேன். இவ்வுருவம் ஏரிக்கரைக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன் அவ்வூர் விநாயகன் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்தது. இந்த புத்தர் உருவம் இருந்த கருங்கல் பீடம் அழியாமல் இருக் கிறது. அவ்வூர் தெருவின் எதிர்கோடியில் பவுத்தர் களுடைய தர்ம சக்கரம் பொறிக்கப்பட்ட கருங்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
புத்தர் கோயிலை இடித்து அந்த இடத்தில் விநாயகர் கோயிலைக் கட்டியிருக் கிறார்கள். பிறகு புத்தர் விக்ரகத்தை ஏரிக்கரையில் கொண்டு போய்ப் போட்டு விட்டார்கள் என்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி. அவ்வூருக்கு நேரிடையாக 15.7.1946 அன்று சென்ற தாகவும் அந்நூலில் குறிப் பிட்டுள்ளார். இப்படியெல்லாம் பித்த லாட்டம் செய்துதான் இந்து மதத்தை வளர்த்து இருக்கிறார்கள் - புத்தர் கோயில்களை இடித்துத் தள்ளி விநாயகர் கோயிலை எழுப்பி இருக்கிறார்கள்.
சதுர்த்தியில் பிறந் தான் பிள்ளையார் என்று கதை அளக்கிறார்கள் - புரிந்து கொள்வீர்!
---------------”விடுதலை” 3-9-2011
இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ மதம், புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாக ஏற்றுக் கொண்டது போலவே, மற்றொரு பிரிவாகிய சைவ சமயமும் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டது. சாஸ்தா, அல்லது அய்யனார் என்னும் பெயருடன் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டு, பின்னர், முருகர் அல்லது சுப்பிரமணியரோடு, புத்தரை ஒற்றுமைப்படுத்திக் கொண்டது. புத்தருக்குத் தருமராசன் என்றும், விநாயகன் என்றும் பெயர் உள்ளன. இப்பெயர்களை நிகண்டுகளிலும் காணலாம். தருமராசன் என்னும் பெயருடன் இருந்த பௌத்தக் கோயில்களைப் பிற்காலத்தில், பாரதத்தில் கூறப்படும் பஞ்சபாண்டவரைச் சேர்ந்த தருமராசன் கோயிலாக மாற்றி விட்டனர்.
அதுபோலவே, விநாயகன் என்னும் பெயருடன் இருந்த புத்தர் கோயில்களை விநாயகர் (பிள்ளையார்) கோயிலாகவும் மாற்றி விட்டார்கள். துடித லோகத்தில் எழுந்தருளியிருந்த அவலோகிதர் எனப்படும் போதிசத்துவர், புத்தராக மாயாதேவியின் திருவயிற்றில் வந்து அமர்ந்தபோது, வெள்ளையானைக் கன்று உருவமாக வந்தார் என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. (பின்னர் புகுந்த புத்தர் ஜாதகக் கதைகள்) பௌத்தமதம் செல்வாக்குக் குறைந்த பிற்காலத்தில், விநாயகர் என்னும் பெயருடைய புத்தக் கோயில்கள் விநாயகர் (பிள்ளையார்) ஆலயங்களாக மாற்றப்பட்டன. பழைய சைவ சமயத்தில் விநாயகர் வணக்கம் கிடையாதென்றும், கி.பி.6ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு விநாயகர் வணக்கம் சைவ சமயத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதென்றும் சைவப் பெரியார் உயர்திரு மறைமலையடிகள் போன்ற அறிஞர்கள் கூறுவதும் ஈண்டு கருதத்தக்கது. (மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய பவுத்தமும் - தமிழும் பக்கம் 77)
எப்படியெல்லாம் சூழ்ச்சி செய்து, உருட்டல் - புரட்டல் செய்து புத்தரை, விநாயகராகவும், பாரதத்தின் தருமராச கோயிலாகவும் மாற்றினர் என்பது கவனிக்கத்தக்கது.
போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றார் என்று புத்தரைப் பற்றிக் கூறப்படுவதுண்டு. அந்தப் போதி மரம்தான், அரச மரம் என்று கூறப்பட்டது. கவுதமப் புத்தர், அரச குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் அதற்கு அரசமரம் என்று பெயர் வந்து சேர்ந்தது. அரச மரத்தின் கீழ் விநாயகராகிய புத்தரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
பிற்காலத்தில் (இப்பொழுதுகூட) அரச மரத்தின் அடியில், இந்து விநாயகர் வந்து சேர்ந்ததையும் கவனித்தால், ஒரு மாபெரும் சதித் திட்டத்தோடு இந்த எத்து வேலைகள் நடந்திருக்கின்றன என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
வைதீக இந்து மதத்தின் உயிர்க்கொலை, உள்ளிட்ட கேடுகளை நீக்கப் புறப்பட்ட புத்தரையே இந்து மதத்தின் மகாவிஷ்ணு அவதாரமாக்கி ஏப்பமிட்டது இந்தச் சதிகார - பழிகார ஆரிய இந்துமதம் என்பதைப் புரிந்து கொள்க!
எந்த வைதிக இந்து மதத்தை எதிர்த்து ஒரு தத்துவமாகப் புறப்பட்டாரோ, அந்தப் புத்தனையே இந்து மதத்தின் அவதாரம் என்று பித்தலாட்டம் செய்திருப்பதை எந்தப் பெயர் கொண்டு அழைக்கலாம்? இந்துத்தனம் என்று நாமகரணம் சூட்டலாமா?
அட பித்தலாட்டமே, - உன் பெயர்தான் இந்து மதமா?
0 comments:
Post a Comment