Search This Blog

6.9.11

பெரியார் எனக்கு சொன்ன அறிவுரை --- கி.வீரமணி

பழங்கால நாடகங்களில் ஜாதி வித்தியாசம், பெண்ணடிமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, பணக்காரத்தன்மை உள்ளனவாகவே இருந்தன! சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்

பழங்கால நாடகங்களில் ஜாதி வித்தியாசம், பெண்ணடிமை, பணக்காரத்தன்மை, மூடநம்பிக்கைகள் மலிந்தனவாகவே காணப்படுகின்றன என்று தந்தை பெரியார் கூறிய கருத்துகளை எடுத்துக்காட்டி விளக்கிப் பேசினார் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தந்தைபெரியாரின் கலை இலக்கியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் இரண்டாம் தொடர் சொற்பொழிவு 11.8.2011 அன்று இரவு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

கலை இலக்கியம்


அய்யா அவர்கள் இந்த கருத்துக்களைப் பரப்பிக் கொண்டிருந்தபொழுது புரட்சிக் கவிஞர் அதை எடுத்து பிரச்சாரம் செய்தார்.

நாம் பேசினால் மட்டும் போதாது. மற்றவர்களும் இதைப்பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டும். நாமே இந்த சுவையை மக்களுக்கு ஊட்ட வேண்டும் என்று கருதித்தான். இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்ற புரட்சிக் கவிஞரின் நாடகத்தை உற்சாகப்படுத்தினார் அய்யா அவர்கள்.

பெரியார் தலைமை


குறிப்பாக 1934இல் சென்னையில் சீர்திருத்த சங்கத்தாரால் நடிக்கப்பட்ட நாடகத்திற்குப் பெரியார் தலைமை தாங்கினார். பெரியார் பேசிய பேச்சு பகுத்தறிவு இதழில் 16.9.1934 அன்று வெளி வந்துள்ளது.

இந்த நாடகத்தில் பழைய விடுதலை ஆசிரியர் குருசாமி இரணியனாக நடித்திருக்கின்றார். எல்லாம் அமெச்சூர் நடிகர்கள். இரணியன் நாடகத்தில் தோழர் ஈ.வெ.ரா சொற்பொழிவு என்ற தலைப்பில் பகுத்தறிவில் வெளிவந்துள்ள செய்தியைப் படிக் கின்றேன்.

சீர்திருத்த நாடக சங்கத்தாரால் தோழர்களே! சென்னை சீர்திருத்த நாடக சங்கத்தாரால் நடிக்கப்பட்ட இந்த முதல் நாடகத்துக்கு தலைமை வகிக்கும் பெருமை எனக்களித்ததற்கு நன்றி செலுத்துகிறேன் என்று அய்யா அவர்கள் சொல்லுகிறார்.

நாடகத்திற்கு உதவி செய்த தோழர்கள் சி.டி.நாயகம், ஓய்வு பெற்ற பதிவாளராக இருந்தவர். குலசேகரபட்டினத்தைச் சார்ந்தவர். சுயமரியாதை இயக்கத்திற்கு அந்தகாலத்தில் உதவிகரமாக இருந்தவர். சென்னை தியாகராயர் நகரில் கூட அவர்களது சார்பில் மேல்நிலைப் பள்ளி நடை பெறுகிறது. அவருடைய மகன்தான் அந்தப் பள்ளியை நிருவகித்து வருகிறார்.

நாடகத்திற்கு இந்த மாதிரி யார். யார் உதவி செய்திருக்கிறார்கள் என்பதை அய்யா அவர்களே சொல்லியிருக்கின்றார்கள்.

உழைத்தவர்களுக்கு நன்றி கூறுகிறேன்


சி.டி.நாயகம், எஸ்.எஸ்.ஆனந்தம், அழகப்பா முதலியவர்களுக்கு நன்றி கூறுகிறேன் என்று அய்யா அவர்கள் சொல்லுகிறார்.

நம்மவர்களுக்குரிய வரலாறு. பதிவு செய்யப்பட வில்லை. மேலும் அய்யா அவர்கள் இரணியன் நாடக சொற்பொழிவில் சொல்லுகிறார்.

சிறப்பாக தோழர் மாசிலாமணி முதலியவர்கள் இந்த நாடகத்துக்கு விளம்பரம் அச்சுவேலை, காகிதம், முதலிய விஷயங்களில் திரேகப் பிரயாசை, பொருள் செலவு முதலியவைகளை செய்ததுடன், இவ்வளவு சிறப்புக்குக் காரணமாய் இருந்ததாகவும் கேட்டு மிகவும் மகிழ்வதோடும், அவரையும் பாராட்டி நன்றி செலுத்துகிறேன். என்று அய்யாசொல்லுகிறார்.

தஞ்சை கலைத்துறையில் இருந்த டி.எம். நடராஜனைப் பயன்படுத்தி இந்த நாடகத்தை ஏற்பாடு செய்து மிக அற்புதமாக நடத்தியிருக் கின்றார்.

மக்களுக்கு வழிகாட்டக்கூடியதாக


இரணியன் நாடகத்தைப் பற்றி அய்யா அவர் களுடைய சொற்பொழிவை மேலும் படிக்கிறேன். நாடகம் என்பது ஒரு விஷயத்தை தத்ரூபமாய் நடித்துக்காட்டுவது என்பதோடு அதைப் பெரிதும் மக்களின் நடத்தைக்கு வழி காட்டியாகவும், ஒழுக்கங்கள் கற்பிக்கப்படுவதற்கும் பயன்படுத்தப் படுகின்றது என்று சொல்லப்படுகின்றது

(அய்யா அவர்கள் எப்படி ஆரம்பிக்கிறார் பாருங்கள். நாடகம் என்பது எதற்காக,? ஒழுக்கத்தை சொல்லிக்கொடுப்பதற்கு நல்ல அளவுக்குப் படிப்பினைகளை உருவாக்குவதற்கு என்று சொல்லப்படுகிறது.)

ஆனால் அது அந்தப்படி தத்ரூபமாய் நடத்திக்காட்டப்படுவதும் இல்லை. மக்கள் ஒழுக்கத்துக்கும் நடப்புக்கும் வழிகாட்டியாய் நடப்பிப்பதும் இல்லை என்று சொல்வதற்கு நாடக அபிமானிகள் மன்னிக்க வேண்டுகிறேன். (உண்மையைப் பேசுவதுதான் அய்யா அவர்களுடைய எண்ணம் . அய்யா அவர்கள் தனது பேச்சுக்கு மற்றவர்கள் கைதட்ட வேண்டும், பாராட்ட வேண்டும் என்று பேசுவதில்லை. எவ்வளவு கசப்பு மருந்தாக இருந்தாலும், தன் னுடைய கருத்தை எந்த இடத்திலும் மறைக்காமல் துணிந்து தாராளமாக எடுத்துச் சொல்லக்கூடியவர்)

ரசபாவங்கள் உண்மையாய்!


தத்ரூபம் என்பதில் விஷயங்களின் ரசபாவங்களும் உண்மையாய் நடந்திருக்கும் என்று நினைக்கும்படியான எண்ணமும் ஜனங்களுக்கு விளங்க வேண்டும்.

அந்தப்படி இல்லாமல் நமது நாடகங்கள் பெரிதும். சங்கீதக் கச்சேரி போலவும், காலாசேப சபை போலவும், விகட சபை போலவும் நகைகள் உடுப்புகள், காஷி சாலைகள் போலவும் விஷயங்களுக்குப் பொருத்தமில்லாத பேச்சுகளை அடுக்கிப் பேசும் பேச்சு வாத சபை போலவும் விளங்குகின்றது என்றுதான் சொல்ல வேண்டி யிருக்கிறது.

(நாடகக் கலையில் பெரிய அனுபவம் உள்ளவர் கூட இவ்வளவு அழகாக சொல்ல முடியாது. இதற்கு இலக்கணம் வகுக்க முடியாது. பெரியார் நாடகத்திற்கு இலக்கணம் சொல்லுகிறார்)

பாட்டுகள் பொருத்தமற்றது


நாடகங்களுக்கு நடிப்புகளில் மிக விஷேச சமயங்களில் அல்லது அசல் விஷயத்திலேயே பாட்டு வரும் சந்தர்ப்பங்களில் தவிர மற்ற சமயங்களில் பாட்டுகள் பொருத்தமற்றது என்பது நமது அபிப்ராயம்.


(தேவையில்லாமல் அந்த காலத்தில் பாட்டு பாடுவார்கள். பழைய சினிமாக்களில் 22 பாட்டு, 23 பாட்டுகள் வரும். இரண்டு வசனம் வந்தவுடனே பாட்டு தியாகராஜ பாகவதராக இருக்கட்டும், பி.யு.சின்னப்பாவாக இருக்கட்டும் பாடுவார்கள். நாடகமாக இருந்தாலும் உள்ளே வரும்பொழுதே பாட்டுடன் தான் வருவார்கள்.)

ஒன்ஸ்மோர் செத்தவர் எழுந்து வருவார்!


(அரிச்சந்திரன் நாடகத்தில் பார்த்தீர்களேயானால் ஓராம் மாதம், இரண்டாம் மாதம், மூன்றாம் மாதம் என்றெல்லாம் உருக்கமாசச் சொல்லி எல்லோரும் அழுகிற மாதிரி வந்து கீழே விழுவார்.

உடனே ஒன்ஸ்மோர் என்று பார்வையாளர்கள் வரிசையிலிருந்து சத்தம் வரும். செத்துப்போனவர் மறுபடியும் எழுந்து வந்து (சிரிப்பு-கைதட்டல்). மறுபடியும் நடிக்க வேண்டும். நாடகத்தில் இப்படி எல்லாம் உண்டு. மறுபடியும் ஒன்ஸ்மோர் கேட்பார்கள். இப்படி கேட்பது அந்த காலத்தில் உண்டு. அய்யா அவர்கள் வேடிக்கையாக சொல்லுகின்றார்)

தத்ருபமாய் கருத முடியுமா?


உதாரணமாக நெருப்பு பிடித்துவிட்ட சமயத்தைக் காட்ட நடிக்க வேண்டியவர். தடபுடலாய் ஆத்திரப்பட்டு குளறுபடியாய் இருப்பது போல் நடிக்க வேண்டுமா?

அல்லது தாளம், சுதி, ராகம் முதலியவைகளைக் கவனித்து சங்கீத லட்சியத்தில் திரும்பி ஜனங் களுடைய கவனத்தையும் சங்கீதத்தில் திரும்ப விட்டு விட்டால் நடிப்பு சரியானதாக இருக்க முடியுமா? என்று கேட்கின்றேன். அது போலவே நடிப்புக்குப் பொருத்தமற்ற உடை,நடை, நகை முதலியவைகளுடன் விளங்கினால் விஷயம் நடந்ததாக தத்ரூபமாய் கருதப்பட முடியுமா?

மேல்நாடுகளில் ரசபாவங்களுக்காகவும், தத்ரூபமாய் நடந்ததாகக் காட்டப்படும். நடப்புக்காகவும் நடத்தப்படும். ட்றாமாக்களில் பாட்டு என்பதே மிக, மிக, அருமையாகத் தான் இருக்கும். சங்கீதத்துக்காக நடக்கும் விஷயத்தை அங்கு ஆப்ரா என்று சொல்லப்படுமே தவிர ட்றாமா என்று சொல்லமாட்டார்கள்.

ஆப்ராவும் டிராமாவும்


(எவ்வளவு அழகான விளக்கத்தை அய்யா அவர்கள் சொல்லுகிறார் பாருங்கள். இதுவரை ஆப்ராவுக்கும் டிராமாவுக்கும் உள்ள வேறுபாட்டை இப்படி யாரும் சொன்னதில்லை. இந்த வித்தியாசம் படித்த நண்பர்களுக்கே தெரியாது. பெரியார் அவர்கள் இதை எப்பொழுது பேசுகிறார். 1934இல் பேசுகிறார்)

(அவருக்கு இருந்த உலக ஞானம், உலக அனுபவம், உலக நாடுகளை சுற்றியிருக்கின்றார். அவருடைய அனுபவம் என்பதே நேற்று நான் சொன்னமாதிரி மக்கள்தான் சோதனைக் கூடம் அவருடைய ஆய்வுக்கூடம் என்பது மக்கள்தான். சம்பவங்கள், நிகழ்வுகள் அதை வைத்துக்கொண்டு சொல்கிறார் பாருங்கள்).

இசைவேறு-நாடகம் வேறு


இங்கு சங்கீத வித்வான்களே நாடக மேடையைக் கைப்பற்றிக் கொண்டதானது நாடகக் கலையைச் சங்கீதம் அழித்துவிட்டது என்றும், மக்களது நாடகாபிமானமும் சங்கீதத்தில் திருப்பப்பட்டு விட்டது என்றும் தான் கருதவேண்டும்.

(எவ்வளவு அற்புதமான கருத்து பாருங்கள்). இசை வேறு நாடகம் வேறு. அதில் விகிதாச்சாரம் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்று அய்யா அவர்கள் சொல்லுகிறார்.

ஒருவர் தொடர்ந்து பாட்டு பாடியதால் பாட்டுக்கு முக்கித்துவம் வருகிறதே தவிர நடிப்புக்கு முக்கியத்துவம் வருவதில்லை என்பதை ரொம்ப அழகாக சொல்லுகின்றார்.)

பழைமையைப் பிரச்சாரம் செய்யவே!


நாடகம் நடிக்கப்படும் கதைகள் விஷயமும் தற்கால உணர்ச்சிக்கும், தேவைக்கும் சீர்திருத்த முறைக்கும் ஏற்றதாயில்லாமல் பழமையைப் பிரச்சாரம் செய்யவும், மூடநம்பிக்கை வர்ணா சிரமம், ஜாதி வித்தியாச உயர்வு, தாழ்வு, பெண் அடிமை, பணக்காரத்தன்மை முதலிய விஷயங் களைப் பலப்படுத்தவும், அவைகளைப் பாதுகாக்கவும்தான் நடிக்கப்படுகின்றதே ஒழிய வேறில்லை.

அரிச்சந்திரன் கதை, நந்தனார் கதை முதலியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் அரிச் சந்திரன் கதையில் சத்தியம் பிரதானம் என்று சொல்லப்பட்டாலும், சத்திய அசத்திய விஷயம் நடக்காமல் கதையில் அலட்சியமாய் இருக்கிறது.

பணக்காரத்தன்மை எஜமானத்தன்மை


ஜாதி வித்தியாசம், தீண்டாமை பெண் அடிமை, பார்ப்பன ஆதிக்கம், பணக்காரத்தன்மை எஜமானத் தன்மை ஆகியவைகள் தான் தலைதூக்கி இருக்கிறது. அது போலவே நந்தன் கதையிலும், ஆள் நெருப்பில் விழுந்து, வெந்து போனதுதான் மிளிர்கின்றதே தவிர, உயிருடன் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக இல்லவே இல்லை. ராமாயணமும் சீதையை படுத்தின பாடு. பெண் ஒரு சொத்து போல் பாவிக்கப்படுகிறதும் விளங்கும். இப்படிப்பட்ட கதைகள் ஒழிக்கப்பட வேண்டும். (அய்யா அவர்கள் எவ்வளவு தெளிவாகப்பேசுகிறார் பாருங்கள்.) சுயமரியாதையும், சீர்திருத்த வேட்கையுமுள்ளவர்கள் அதை நடிக்கக் கூடாது. பகுத்தறிவுக்கு நல்ல உணவு

இரணியன் கதையில் வீர ரசம் சூட்சித்திறம் சுயமரியாதை ஆகியவைகள் விளங்கினதோடு பகுத்தறிவுக்கு நல்ல உணவாகவும், இருந்தது. (நாடகத்திற்கு தலைமை தாங்கிவிட்டு நடு நிலையில் இருந்து அய்யா அவர்கள் சொல்லுகிறார் பாருங் கள்). ஆனால் சில விஷயங்களில் தலைகீழ் மாறு தலாகவும், கடின வார்த்தையாகவும் காணலாம். சீர்திருத்த நாடகம் என்றாலே மாறுதல் இருந்து தான் தீரும்.

சீர்திருத்தம் என்றால் மாறுதல்தான்


(ஏனென்றால் ஆரியர்களைப் பற்றி சொல்லும் பொழுது அந்த வசனங்களைக் காணலாம். சீர்திருத்த நாடகம் என்றாலே மாறுதல் இருந்து தான் தீரும்.) மாறுதலுக்கு அவசியமானதும், பதிலுக்கு பதிலானதுமான வார்த்தைகள் இருந்தால் தான் பழமை மாற சந்தர்ப்பம் ஏற்படும். (புராணங்களைப் பற்றி விளக்கிச் சொல்லும் பொழுது எனக்கே கூட அய்யா அவர்கள் சொன்ன செய்தி இந்த சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.

நான் அய்யா அவர்களை வைத்துக்கொண்டு பேசும்பொழுது புராண கதைகளை கடவுள் கதைகளை அது லிங்க புராணமாக இருக்கட்டும், அல்லது சுப்பிரமணியன் பிறந்ததாக இருக்கட்டும் அல்லது கணபதி உருவானதாக இருக்கட்டும். இந்த கதைகளைப் பற்றி பொதுமக்கள் மத்தியில் எடுத்துச்சொல்வேன். அய்யா அவர்கள் அடுத்து பேசுவார்.

அய்யா அவர்களுடைய வயதிற்கு என்ன வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம். நாம் அளவாகப் பேசவேண்டுமே, எப்படி பச்சையாகப் பேசுவது என்று கருதுவதுண்டு. ரொம்ப தயங்கித் தயங்கி சில வார்தைகளை சொல்லுவேன்.)

ஒரு முறை அய்யா எனக்கு சொன்ன அறிவுரை


கூட்டம் முடிந்தவுடனே அய்யா அவர்களுடன் வண்டியில் போய்க்கொண்டிருக்கிறோம். அப் பொழுது அய்யா அவர்கள் ரொம்பத் தெளிவாகச் சொன்னார். வீரமணி நன்றாகப் பேசினீர்கள். ஆனால் ஒன்றே ஒன்று சொல்லுகிறேன். ஏன் புராணங்களைப் பற்றி பேசும்பொழுது ரொம்பத் தயங்கித் தயங்கி சொல்லுகிறீர்கள். ரொம்ப அருவருப்பாக இருக்கிறது என்று நினைக்கிறீர்கள். அப்படி நினைக்கக் கூடாது. அந்த மாதிரி தயங்கக்கூடாது.

பச்சையாக சொல்ல வேண்டிய விசயங்களைப் பச்சையாகச் சொல். அப்பொழுதுதான் மக்களுக்குப் புத்தி வரும். இல்லை என்றால் அவர்கள் ஆபாசமாக எப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதை எப்படி புரிய வைக்க முடியும்? நீ ரொம்ப மென்மையாகச் சொன்னால் கருத்து சரியாகச் போய்ச் சேராதே என்று சொன்னார்

உடனே அம்மா சிரித்துக்கொண்டே நல்ல யோசனைதான் அவருக்குச் சொன்னீர்கள். உங்களை மாதிரி அவரால் சொல்ல முடியாது. என்ன மாதிரி சொல்ல வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அதே நேரத்தில் பச்சையாக சொல்வது வேறு. கொச்சையாக சொல்வது வேறு என்று சொன்னார். (சிரிப்பு-கைதட்டல்).

கொச்சை என்பது கேவலம். ஆனால் பச்சை என்பது உண்மை. ஒருவருக்கு ஆப்ரேசன் செய்யும் பொழுது நிர்வாணமாகத்தான் இருக்க வேண்டும். அதிலே சங்கடப்பட முடியாது. என்று அய்யா அவர்கள் ரொம்ப அழகாகச் சொல்லுகிறார்.

-------------------தொடரும்......"விடுதலை” 9-6-2011

0 comments: