Search This Blog

17.9.11

பெரியார் வெறும் கடவுள் மறுப்பாளரா?


தந்தை பெரியார் தேவை

இன்று தந்தைபெரியார் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தமிழர்களின் தேசியத் திருநாள்.

ஆயிரம் - ஆயிரம் ஆண்டு காலமாக அடிமைப்படுத்தி வந்த ஆரியத்தின் வேரை வீழ்த்த வந்த வரலாற்று நாயகர்.

1995ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் லக்னோவில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை வெகு சிறப்பாக நடத்தியபோது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்ஷிராம் செய்தியாளர்களிடம் மிக அருமையான - உண்மையான கருத்தினை எடுத்து வைத்தார்.

பெரியார் விழாவை ஏன் லக்னோவில் கொண்டாடுகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்: இந்தியாவில் பார்ப்பனீயத்தை, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து பல தலைவர்கள் போராடியிருக்கிறார்கள் என்பது உண்மைதான் என்றாலும் பெரியாரால் தான் அதிக அளவுக்கு பார்ப்பன ஆதிக்கம் பாதிக்கப்பட்டது என்ற ஒரு கருத்தை எடுத்து வைத்தார்.

அதன் விளைவாகத்தான் உத்தரப்பிரதேசத்தில் சூத்திரா (Sudra - social unity of dalit and Regessed Association) என்ற அமைப்பு தோன்றியது. ஒரு பாபர் மசூதியை இடித்து அய்ந்தாண்டுகள் பார்ப்பனர்களால் ஆட்சி செய்ய முடியும் என்றால் நூறு ராமன் கோயில்களை இடித்து ஏன் எங்களால் அய்ந்நூறு ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியாது? என்ற கேள்வியை எழுப்பினர். தந்தை பெரியார் அவர்களுக்கு விழா கொண்டாடி ராமன் உருவத்திற்குச் செருப்பு மாலை அணிவித்தனர். ஆம், ராம ஜென்மபூமி என்று கூறப்படும் உத்தரப் பிரதேசத்தில் இது நடந்தது என்பதுதான் குறிப்பிடத் தக்கதாகும்.

நாட்டில் நடப்பது வெறும் அரசியல் போராட்டம் அல்ல - ஆரியர் - திராவிடர் போராட்டம் என்பார் தந்தை பெரியார். பி.ஜே.பி. என்பது ஆரியர்களின் அமைப்புதான் - ஆரிய ஆட்சியை ஏற்படுத்தத்தான் அவர்கள் கட்சியை வைத்துக் கொண்டுள்ளனர். ராமராஜ்ஜியம் அமைக்கப் போகிறோம் என்று அவர்கள் சொல்லுவதன் பொருள் - மீண்டும் பார்ப்பனர்களின் மனுதர்ம ஆட்சியை உண்டாக்குவதாகும். தமிழ்நாட்டில் நாம் குறிப்பிட்டு வந்த இந்தப் போராட்டம் அகில இந்திய அளவில் அது விரிவாகி இருக்கிறது. இந்தக் கால கட்டத்தில் தமிழ்நாட்டிற்கும் சரி, இந்தியாவுக்கும்சரி தந்தை பெரியார் அவர்களின் தத்துவம் தேவைப்படுகிறது. மக்கள் மத்தியில் தந்தை பெரியார் கருத்துக்கள் வேர்ப்பிடிக்கும்போதுதான் ஆரிய ஆதிக்கமும் அரசியலும் தூக்கி எறியப்படும். வெறும் அரசியல் பிரச்சாரத்தால் இது ஆகக் கூடியதல்ல. பகுத்தறிவுப் பிரச்சாரம் என்பது - ஆரியத்தைத் தாங்கிப் பிடிக்கும் கடவுள், மதம், வேதம் இதிகாசம், புராணங்களை வீழ்த்துவதற்காகும். சமூக நீதி என்பது பார்ப்பனர்களின் கைகளில் குடி கொண்டிருக்கும் கல்வி, உத்தியோகங்களை சட்ட ரீதியாகப் பெரும்பான்மை மக்கள் கைப்பற்றுவதாகும்.

இந்த இரண்டும் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது.

இந்த இரண்டு நிலைகளும் பெரியாரியலில் தான் இருக்கின்றன என்கிறபோது, தந்தை பெரியார் தமிழ்நாட்டையும் தாண்டி இந்தியா முழுமைக்கும் தேவைப்படுகிறார்.

சமூக அமைப்பில் கோயில்கள், பார்ப்பனர்களின் ஏகபோகத்தில் நிலை கொண்டுள்ளன. குறிப்பாக மூலவிக்ரகம் இருக்கக்கூடிய கர்ப்பக் கிரகத்திற்குள் நுழையவதும் அர்ச்சனை செய்வதும் பார்ப்பனர்களின் தனி உடைமையாக இருந்து வருகிறது. கர்ப்பக்கிரகத்திற்குள் செல்லும் உரிமை பார்ப்பனர் அல்லாத அனைத்து ஜாதியினருக்கும் வரவேண்டும் என்று தந்தை பெரியார் கூறியது - அதற்காகப் போராடி யது என்பதும் - பார்ப்பனர்களுக்குள்ள பிராமணத் தன்மையையும், தனி மரியாதையையும் பறிமுதல் செய்வதாகும். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர் அமாவாசை மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயில் அர்ச்சகராகவும், கர்ப்பக்கிரகத்திற்கு வெளியில் நின்று கொண்டு ஆராவமுத அய்யர்வாள் சாமி என் பெயரில் அர்ச்சனை செய்யுங்கோ! என்று சொல்லும் நிலை என்பதும் இன்றைய வருணாசிரம சமூக அமைப்பைச் சுக்கல் நூறாக நொறுக்குவதல்லவா! சுயமரியாதையும், பகுத்தறிவும் வெடித்துக் கிளம்பும் சமுதாயம்தான் பொருளாதாரம் உட்பட அனைத்து நிலையிலும் சமத்துவம் பெற முடியும். பெரியார் என்றால் வெறும் கடவுள் மறுப்பாளர் என்று மேலோட்டமாகப் பார்ப்பது தவறு; அதற்குள் அடங்கி யிருக்கும் கரு சமூக மாற்றத்திற்கானது - புரட்சிக்கானது. பெரியாரே ஒளி! அதனை நாடெங்கும் கொண்டு செல்ல இந்நாளில் சூளூரைப்போம்!

அதனை எடுத்துச் செல்லுவதில் நமது வெளியீடுகளுக்கு முதன்மையான இடம் உண்டு; விடுதலைக்கு மிக முக்கியத்துவம் உண்டு. திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு நிறைவேற்றிய 50 ஆயிரம் சந்தாக்கள் - அதன் நிறைவேற்றம் மிகப் பெரிய மாறுதலை சமூகத்திற்குக் கொண்டு வரும் என்பதில் அய்யமில்லை.

தோழர்களே, செயல்படுவீர்!

-------------------- “விடுதலை” தலையங்கம் 17-9-2011

0 comments: