நல்ல கற்பனை என்பதற்காக முட்டாள்தனமான இராமாயணத்தை நம் மக்கள் படிக்க வேண்டுமா? பெரியார் கருத்தை சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் பேச்சு
நல்ல கற்பனை என்பதற்காக கம்பர் எழுதிய இராமாயணத்தை நம் பாமரமக்கள் படிக்க வேண்டுமா? காப்பாற்றப்பட வேண்டுமா? என்று தந்தை பெரியார் எழுப்பிய கேள்வியை எடுத்துக்கூறி விளக்கமளித்தார். தந்தை பெரியாரின் கலை இலக்கியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் இரண்டாம் தொடர் சொற்பொழிவு 11.8.2011 அன்று இரவு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
இயேசுநாதர் இடத்திலோ, முகம்மது நபி பெருமானிடத்திலோ அல்லது புத்தர் பிரானிடத் திலோ இருந்ததாகவும் பைபிள், குரான், திரிபீடகம் ஆகிய நூல்களில் காணப்படுவதாகவும் இருந்தால் நீங்கள் அப்பெரியார்களையும் அந்த நூல்களையும் எப்படி மதிப்பீர்கள்? அப்படிப்பட்ட கண்களை யும் உள்ளத்தையும் கொண்டு இராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் தேவாரபிரபந்தத்தையும் கந்தபுராணத்தையும் பாருங்கள் என்று தான் உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன்.
இவைகளில் மூட நம்பிக்கை இருக்கிறது என்பதற்கு ஆக மாத்திரம் நான் குறை கூற வரவில்லை. மடமை, மானக்கேடு, இழிதகமை முதலிய கேடுகள் இருக்கின்றன என்பதற்கு ஆகவே உங்களை வெறுக்கச் சொல்லுகிறேன்.
ஆதலால் அப்படிப்பட்ட சேதிகள் கொண்ட கதைகளை நாடகமாக நடிப்பதும் அதை நாம் ஆதரிப்பதும் பார்ப்பதும் இன்னும் எவ்வளவு மோசமான காரியம் என்று பாருங்கள்.
நாடகம் என்பது ஒரு கலையாகவோ அல்லது ஒரு காட்சி இன்பமாகவோ பொழுது போக்கு சாதனமா கவோ இருக்கிறதுஎன்று சொல்லப்படுமானால் அப்படிப்பட்ட கலையையும் காட்சி இன்பத்தையும் இரசபாவ அருமையையும் நமக்கு ஏற்ற முறையில் கதைகளை சித்தரித்து நாடகமாக ஆக்கி நடிக்க செய்து பார்க்கலாம் என்பதே நமது வேண்டு கோளாகும்.
அந்த வேண்டுகோளின் பரிணாமமே இந்த இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்னும் நாடகம் என்று சொல்லுவேன்.
இப்படிப்பட்ட கதைகள் இன்னமும் ஏராளமாக சித்தரிக்கப்பட வேண்டும். அறிஞர் குப்புசாமி நாயுடு போன்றவர்கள் பலர் முன் வந்து நடிக்க வேண்டும். அவர் இராமாயணத்தைப் பற்றி ஒரு கதை சித்தரித்து இருப்பதாகச் சொன்னார் அதற்கு ஆக நன்றி செலுத்துவோம், அவற்றை நாம் ஆதரிக்க வேண்டும். நல்ல கற்பனை என்பதற்கு ஆக கம்பர் எழுதிய இராமாயணத்தை நம் பாமர மக்கள் படிக்க வேண்டும் காப்பாற்ற வேண்டும் என்கின்ற முட்டாள் தனத்தைப் போலவே நல்ல நடிப்பு, நல்ல சீன், நல்ல பாட்டு, நல்ல இரசபாவம் என்பதற்கு ஆக நமக்கு கேடு தரும் ஆரியப் புராணக்கதை நடிப்புகளையும் பெண் அடிமை கதைகளையும் ஆதரிப் பது மிகவும் முட்டாள்தனமான காரியமாகும்.
நாடகம் சங்கீதம் இலக்கியம் கலை என்பவை எல்லாம் மனிதனுடைய படிப்பினைக்கு சாதகமாக ஏற்பட்டவைகளே தவிர வேறல்ல. அதுவும் மக்களின் தகுதிக்கும் இச்சைக்கும் ஏற்றவைகளாக இருக்க வேண்டியவைகளே தவிர வேறல்ல. ஆகையால் அவை மனிதனின் படிப்பினைக்குத் தகுந்த படியும் அவனது மான வாழ்க்கைக்குத் தகுந்த படியும் செய்து கொள்ள வேண்டும்.
இதற்கு உதாரணம் வேண்டுமானால் தென்னாட் டுக் கொடைவள்ளல் இராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களைப் பாருங்கள். தமிழ்நாட் டில் சங்கீதம் என்பது தமிழ் பாஷையில் பெரிதும் இருக்க வேண்டுமே ஒழிய ஆரியம் தெலுங்கு பாஷை யில் இருக்க வேண்டும் என்கின்ற அவசியமில்லை என்று கூறி அதற்கு ஆக தொண்டாற்றியும் வருகிறார்.
இதற்கு நம் பண்டிதர்கள் எப்படி கம்பராமா யணம், பெரிய புராணம் போனால் கலை போயிற்று என்று கூப்பாடு போடுகிறார்களோ அதுபோல்தான் சில பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளும் சங்கீத வித்வான்கள் என்னும் பேரால் தெலுங்கும் சமஸ்கிருதமும் போய் விட்டால் சங்கீதக் கலையே ஒழிந்தது என்றும் இது வகுப்பு வாதம் என்றும் வகுப்பு துவேஷம் என்றும் கத்துகிறார்கள்.
ஆனால் ராஜா சர் அண்ணாமலை அவர்கள் இதற்கு சிறிது விட்டுக்கொடுக்க இசையவில்லை. அறிஞர் சிகாமணி சர்.ஆர்.கே.சண்முகத்தையும் சேர்த்துக் கொண்டு பெரியதொரு கிளர்ச்சியை நடத்தப் போகிறார்.
கிளர்ச்சி என்றால் வெறும் வாய்க்கிளர்ச்சி மாத்திரமல்ல. பெரும் பணத்தைக் கொண்டு 2 லட்ச ரூபாய் மூலதனத்தைக் கொண்டு நடத்தப் போகிறார். இதன் பயனாய் தமிழ்நாட்டில் கூடிய சீக்கிரத்தில் தமிழர்களான சங்கீத வித்வான்கள் தெலுங்குப் பாட்டுகளையும், சமஸ்கிருத பாட்டுகளையும் வெறுத்து தமிழிலேயே பாடத்தான் போகிறார்கள்.
மீறி எப்படிப்பட்ட வித்வான் எவ்வளவு பக்தி ஒழுகும் பாட்டை (வேறு பாஷையில்) பாடினாலும் நிறுத்து, தமிழில் பாடு, இல்லாவிட்டால் எழுந்து போ நீ போகாவிட்டால் நாங்கள் போகிறோம் என்று சொல்லத்தான் போகிறார்கள்.
அது போலவே ஆரியப் புராண இதிகாசங்கள் தமிழில் எந்த உருவத்திலும் இல்லாமல் போகத்தான் போகிறது. யார் கூப்பாடு போட்டும் பலிக்கப் போவதில்லை.
இப்பொழுதே சைவ பண்டிதர்களும், பார்ப்பனர் களும் தவிர மற்ற எவரும் இதற்கு ஆக எவ்வித பேச்சு மூச்சும் காட்டவில்லை. ஆதலால் முழு நம்பிக்கை யோடு இவைகளை ஒழிக்க முயலுவோமாக என்று தந்தை பெரியார் கூறினார்.
அய்யா அவர்கள் இந்த நாடகத்தின் மூலம் பிரச் சாரத்தை ஒரு இயக்கமாகவே செய்திருக்கின்றார்.
இதை ஒரு சாசனம் மாதிரி கருத வேண்டும்
இதை ஒரு சாசனம் மாதிரி நாம் கருத வேண்டும். இதில் நிறைய செய்திகள் இருக்கிறது. இது அவ்வளவும் நிறைய செய்திகள் இருக்கிறது.
இது இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்கு மக்கள் இந்த கருத்துக்களைப் புரிந்து கொள் வார்கள்.
தந்தை பெரியாருடைய கொள்கை வழிப்படி தான் உலகம் வரப்போகிறது. 21ஆம் நூற்றாண்டு தந்தை பெரியார் நூற்றாண்டாகத்தான் அமையப் போகிறது என்று சொன்னால் அதற்கு இது போன்ற ஆதாரமான பல செய்திகள் இருக்கிறது. (கைதட்டல்).
தந்தை பெரியார் அவர்கள் இப்படி பேசிவிட்டு மட்டும் போகவில்லை. கலைவாணர்கள் மத்தியில் தமிழின உணர்வோடு இருக்கிறவர்களிடத்தில் எவ் வளவு மனித நேயத்தோடு நடந்து கொண்டார்கள்.
மனித நேயமும், அன்பும் பெரியாரிடத்திலே எப்படி மலிந்திருந்தது என்பதைக் காணலாம். அவர் எப்பொழுதும் பணத்தை மதிக்கிறவர். பணம் தான் அவருக்கு முக்கியம் என்று ஒரு படத்தைக் காட்டு கிறான் பாருங்கள். அதிலும் முற்றிலும் எவ்வளவு உண்மைக்கு மாறான ஒரு செயல் என்பதையும் பல்வேறு ஆதாரங்களோடு நாளைய பொழிவில் இருக்கும். என்று கூறி மூன்று பொழிவோடு இது முடியப் போவதில்லை. அநேகமாக இன்னும் மூன்று, நான்கு பொழிவுகள் வரக்கூடிய அளவுக்கு இருக்கும்.(கைதட்டல்)
இவைகளைப் படித்து விட்டுச் சொல்லும் பொழுது எனக்கே உற்சாகமாக இருக்கிறது.
நீங்கள் இதைக் கேட்கும் பொழுது எவ்வளவு உற்சாகமடைகிறீர்களோ அதுபோல எனக்கும் உற்சாகம் அது மட்டுமல்ல பெரியார் நமக்குப் பாடம் நடத்துகிறார். நாம் பெரியாரின் மாணவர்களாக இருந்து கொண்டு இந்த கருத்துக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற மனநிறைவு இருக்கிறது. இதைப் படிக்கும் பொழுதும் இந்த கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுதும் சிறப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்ற அனைவருக்கும் நன்றி செலுத்தி இந்த கருத்துக்களை நல்ல அளவுக்கு உள்வாங்கி மற்றவர்களுக்கும் பரப்புவதற்கு இந்த சொற்பொழிவுகள் நல்லதொரு ஆவணமாக பின்னால் வரக்கூடிய வாய்ப்பு உண்டு என்று கூறி எனதுரையை நிறைவு செய்கிறேன்.
------------ இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். -------------"விடுதலை” 10-9-2011
0 comments:
Post a Comment