Search This Blog

17.7.11

மதம் மக்களுக்குச் சோறு போடுமா?- காமராசர்

காமராசர் எனும் பெருமகன்-2நீங்க பூசையெல்லாம் செய்யறதில்லையா? இது கேள்வி.

அதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவன் பண்ற துன்னேன். அடுத்த வேளைக்குச் சோறு இல்லாதவன் கடன் வாங்கி, ஷேத்ராடனம் போறான். எந்தக் கடவுள் இவன் கிட்டேவந்து, நீ ஏண்டா, என்னைப் பார்க்க வரலேன்னு கோவிச்சுக்கிட்டான். அபிஷேகம் பண்றதுக் குக் குடம் குடமா பாலை வாங்கி வீணாக்குகிறானே மடையன். அந்தப் பாலை நாலுப் பிள்ளைக் கிட்டே கொடுத்தா அதுங்க வலிமையா வளருமில்லியா?

பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக்கு பி.எச்டி யா கொடுக்குறாங்க.பதினெட்டு வருஷமா கடன்காரனா இருக்கான்னு அர்த்தம்! பக்தி வேஷம் போடுறது நாலு பேர் பாராட்டணுமிங்கறத்துக்காகத்தான்.ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ கொடுக்கலா மில்லையா?

ஊருக்கு நூறு சாமி; வேளைக்கு நூறு பூசைன்னா, மனுஷன் என்னைக்கு உருப்படறது? நாட்டிலே வேலை யில்லாத் திண்டாட்டம், வறுமை, சுகாதாரக்கேடு, ஏற்றத் தாழ்வு இத்தனையும் வச்சுக்கிட்டு, பூசை என்ன வேண்டிக் கிடக்கு பூசைன்னேன்? ஆயிரக்கணக்கான இந்த சாமி கள் இதப் பாத்துக்கிட்டு ஏன் பேசாமே இருக்குன்னேன்?

பட்டறிவாளரான காமராசரின் பதில்கள் பேர் பெற்ற பகுத்தறிவாளனின் பதிலைப் போலல்லவா அமைந் துள்ளது. தலைவர் காமராசர் வீசிய வீரியமுள்ள அறிவுக் குண்டுகள் இவை. தொடர்ந்து பகுத்தறிவுக் கணை பாய்வதைப் பாருங்கள். . .

லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்தியெல்லாம் ஓவியர்கள் வரைஞ்சு வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்ம ஆளு கும்பிட ஆரம்பிச்சுட்டான்.

சுடலைமாடன், காத்தவராயன் பேர்ல அந்தந்த வட்டாரத்துல பிரபலமானஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட்டான் நம்ம ஆளு. கடவுள் கண்ணை உருட்டிக்கிட்டு, நாக்கை நீட்டிக்கிட்டுதான் இருப்பாரா? அரேபியாவிலே இருக்கிறவன் அல்லான் னான். செருசலத்திலே இருக்கிறவன் கர்த்தர்ன்னான், இதிலேயும் சில பேர் மேரியை கும்பிடாதேன்னான். கிறித்துவ மதத்திலேயே ஏழெட்டு டெனாமினேஷன் உண்டாக்கிட்டான்.

மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன் அக்னி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமிகளைச் சொன்னான். நம்மநாட்டு பூர்வீகக் குடிமக்களான திராவிடர்கள் காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் இவன் கிட்டே வந்து என் பேரு இதுதான்னு சொன்னது?

மதம் மக்களுக்குச் சோறு போடுமா? அவன் கஷ்டங்களைப் போக்குமா? இந்தக் குறைஞ்சபட்ச அறிவு கூட வேணாமா மனுஷனுக்கு?

உலகத்திலே இருக்கிற ஒவ்வொரு மதமும் நான் பெரிசா நீ பெரிசான்னு மோதிக்கிட்டு ரத்தம் சிந்துதே! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே! இப்படியெல்லாம் அடிச்சிக்கிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்? பச்சைத் தமிழரின் நியாயமான கேள்விக்கு எந்த பக்த பிரசங்கி பதில் சொல்லுவார்?

தீபாவளி கொண்டாடுவதில்லை . . .

நரகாசூரன் கதையை வச்சுத் தீபாவளி கொண்டாடுறான். நவராத்திரிக் கதையைச் செல்லி சரசுவதி பூசை பண்றான். விக்னேசுவரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை படைக்கிறான். இது மாதிரி செய்து பாமர மக்களைத் தம் மதத்தின் பிடிக்குள்ளே வச்சுப் பொழப்பு நடத்துறான்.

நான் தீபாவளி கொண்டாடுனதுமில்லே. எண்ணைத் தேய்ச்சுக் குளிச்சதுமில்லே. புதுசு கட்டனதுமில்லே. பொங்கல் மட்டும்தான் நம்மக் கலாச்சாரத்தோடு ஒட்டுன விழான்னேன்.


நான் தீ மிதி, பால் காவடி அப்படீன்னு போனதில்லே. மனிதனைச் சிந்திக்காத எந்த விஷயமும் தேவையில்லே. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக் குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக்கூட வழியில்லே. இவன் லட்சக்கணக்கான ரூவாயிலே வைர ஒட்டியாணம் செய்து காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடுறான்.

தீர்க்கமான மானுட நேயச் சிந்தனையை மக்கள் தலைவரான காமராசர் எவ்வளவு நியாயமாக முன் வைக்கிறார். வரால் மறுத்துரைக்க முடியும் காமராசரின் கருத்தை?

திருப்பதி உண்டியலில் கருப்புப் பணம்!

கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டிய லில்லே கொண்டு போய்க் கொட்டுறான். அந்தக் காசிலே ரோடு போட்டுக் கொடுக்கலாம். ரெண்டு பள்ளிக் கூடம் கட்டிக் கொடுக்கலாம். அதையெல்லாம் செய்ய மாட்டான். சாமிக்குத்தம் வந்திடுமுன்னு பயந்துகிட்டுச் செய்வான்.

மதம் மனிதனைப் பயமுறுத்தி வைக்கிறதேத் தவிர தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித் தான் இருக்கான்னேன்!

கோயில், பிரார்த்தனை, நேர்த்திக் கடன் கழிக்கிறது. இதிலே உங்களுக்கு அனுபவமுண்டா? என்று தலை வரிடம் கேட்டதற்கு, பெருந் தலைவர் சொன்ன பதில் வியக்க வைக்கிறது - விலா நோக சிரிக்க வைக்கிறது.

சின்னப்பையனா இருந்தப்போ பத்ரகாளியம்மன் திருவிழா நடக்கும். அந்தச் சிலைக்கு நாடாரே பூசை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930க்கு முன்னாலே சஞ்சீவிரெட்டியோடு திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுக்கிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுக்கிட்டேன். அப்புறம்தான் நினைச்சுப் பார்த்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணுச்சு. போயும் போயும் தலை முடியைத்தானா கடவுள் கேட்கிறாரு. எல்லாம் செட்டப் அப்படின்னு சிந்திச்சேன். விட்டுட்டேன் . . . தலையிலே இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆனா, ஆண்டவனுக்காக தலையையே கேட்டாக் கொடுப்பானா? எவ்வளவு ஆழமான கேள்வி. அறிவில் ஆர்வமுள்ளோர் சிந்திக்க வேண்டும்.

காமராசரை நமது நாட்டு முதல் மந்திரியாக அடை வற்கு ஓர் அளவுக்குக் காரணமானவன் என்று சொல் வேன். இத்தனை நாள்களுக்குள் குலக்கல்வித் திட்டம் பற்றிய முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால், பலாத்காரத்தில் ஈடுபடுவோம் என்று முதல் அமைச்சர் சி.இராசகோபாலாச்சாரிக்கு எச்சரிக்கை செய்தோம். அதன் காரண மாக உடம்புக்குச் சவுகரியம் இல்லை என்று சாக்குக் கூறிப் பதவியை விட்டு விலகினார். அவர் விலகாமல் இருந்தால் காமராசர் பதவிக்கு வரமுடியாது!


இந்தியாவிலேயே எந்தப் பகுதியும் அடையாத நன்மைகளை தமிழர்களாகிய நாம் அடைந்திருக்கிறோம். ஏனெனில், தமிழர்களாகிய நமக்குக் கல்விக் கண் கொடுத்தவர் காமராசர் ஆவார்! காமராசர் பதவிக்கு வராத வரைக்கும் நாம் 100 க்கு பத்துபேர்தான் படித்திருந் தோம். இந்த நிலையை மாற்றி 100க்கு 40 பேருக்கு மேல் படிக்கும் நிலையைக் காமராசர்தான் ஏற்படுத்தினார்.


இன்றைக்குப் பிள்ளைகள் பாஸ் செய்து, என்ஜினீரிங், மெடிகல் கல்லூரிகளில் சேரப் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றதை நாம் காண்கிறோம்.
- (பெரியார் : 18.7.1965)

இது மட்டுமா? இதோ இன்னும் பெரியார் பேசுவதைக் கேளுங்கள். பெருந்தலைவரின் ஆட்சிக் காலம் தமிழர் வாழ்வில் பொற்காலம். அப்படிப்பட்ட காமராசரை பயன் படுத்திக் கொள்வது தமிழர் கடன் என்பதை 18.7.1961 விடுதலை வெளிப்படுத்துகிறது.

தோழர்களே! எனக்கு 82 வயது ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறக்க நேரலாம். உங்களையும் விட பெரியவனான நான் என் மரணவாக்கு மூலம் போல இதைக் கூறுகிறேன். நாம் யாருக்கும் பயப்படவேண்டியதில்லை.

இன்றைய நமது காமராசர் ஆட்சியில் நாடு அடைந்த முன்னேற்றம் இரண்டாயிரம் மூன்றாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்தில் ஆகட்டும், அடுத்த நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முகலாய மன்னர்கள், அதன் பின்னர் வந்த வெள்ளைக்காரர்கள் ஆகிய இவர்களின் ஆட்சிகளிலாகட்டும் நமது கல்விக்கோ, முன்னேற்றத் துக்கோ வழி செய்யவில்லை!

தோழர்களே! நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உண்மையில் உருப்பட வேண்டுமானால் இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் நம்மை அடையுங்கள்!

தமிழர்கள் - குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற காமராசர் பல்வேறு வகையிலே பாடுபட்டு ஆட்சியின் மூலம் செயல்படுத்தி உள்ளார். அவற்றிற்கு அடிப்படையாக, மூலகாரணமாக இருந்தவர் அய்யா பெரியாரே! ஓங்கட்டும் காமராசர் புகழ்!

-------------------முனைவர் துரை.சந்திரசேகரன் துணைப் பொதுச் செயலாளர் ,திராவிடர் கழகம் -”விடுதலை” 17-7-2011

1 comments:

Anonymous said...

சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


Utube videos:
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
www.youtube.com/watch?v=FOF51gv5uCo


Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454