Search This Blog

16.7.11

தேவை மதமற்ற உலகு!

மும்பை மாநகரில் கடந்த புதன் அன்று சாவேரி பஜார், ஒபேரா அவுஸ், தாதர் ஆகிய மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. 22 பேர் பரிதாபகரமான வகையில் பலியானார்கள். 150 பேர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களில் பலரின் நிலை, கவலைக்கு இடமான வகையில் உள்ளது என்னும் தகவல்கள் மனிதநேயம் உள்ளவர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் துன்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

எந்தக் காரணமாக இருந்தாலும் அப்பாவி மக்களைக் கொல்லுவது என்பது ஒருவகையான மிருகத்தனமே - பாசிசச் செயலே! அதேபோல பொதுச் சொத்துகளை அழிப்பதும் கண்டிக்கத்தக்கதாகும்.

போராட்டக் களங்களில் தந்தை பெரியார் அவர்கள் இவற்றை மிக முக்கியமாக வலியுறுத்துவார்கள். உலக வரலாற்றில் மதக் காரணங்களுக்காக மனித ரத்தம் சிந்தப்பட்டது போல வேறு எந்த காரணங்களுக்காகவும் சிந்தப்பட்டதில்லை.

குறிப்பாக பாபர் மசூதி ஒரு பட்டப் பகலில் இடிக்கப்பட்ட பிறகு நாட்டில் மதம் சார்ந்த பின்னணியோடு கலவரங்கள் வெடிப்பது சர்வ சாதாரணமாகி விட்டன; குண்டுவெடிப்பு என்பது ஒரு கலாச்சாரமாகவே ஆகிவிட்டது.

பாபர் மசூதியின் எதிரொலியாக மும்பையில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட வன்முறைக்குக் காரணமானவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனைகள் வழங்கப்பட்டு விட்டன.

அதே நேரத்தில் அதற்கு மூல காரணமான பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள், மேனியில் அழுக்குப் படாமல் பட்டு வேட்டிக் கட்டிய மாப்பிள்ளைகள் போல் ராஜ நடை போட்டுத் திரிந்து கொண்டு இருக்கின்றனர்.

மாலேகான், சம்ஜாதா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி, ஆஜ்மீர் தர்கா என்று பல இடங்களிலும் குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன.

இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சுவாமி அசீமானந்தா நீதிமன்றத்தில் முன்வந்து தானாக தந்த வாக்குமூலம் நாட்டில் பெரும் அதிர்ச்சி அலைகளைத் தட்டி எழுப்பியுள்ளது.

சுவாமி அசீமானந்தா நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸ் சுடன் தொடர்பு கொண்டவர்; அந்த அமைப்பின் பிரச்சாரகரும்கூட!

இவர் கொடுத்த வாக்குமூலம் சற்றும் எதிர்பாராததே! பா.ஜ.க., சங்பரிவார் வட்டாரத்தையே ஒரு கலக்குக் கலக்கி விட்டது!

மும்பை, தாஜ் ஓட்டல் வன்முறையில் காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே (மாலேகான் குண்டு வெடிப்புக் குற்றவாளிகளை துல்லியமாக வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர்) கொலையில் இந்துத்துவா அமைப்புகளின் பங்கு எத்தகையது என்பது இவர்மூலம் அம்பலப்பட்டு விட்டது.

இதற்கிடையே இந்தியாவில் பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கு மூளையாக இருந்த சுனில்ஜோஷி என்ற பயங்கர இந்துத்துவாவாதி, இந்துத்துவாவாதிகளாலே சுட்டுக் கொல்லப்பட்டார் (27.12.2007) என்ற சதியும் வெளியில் வந்துவிட்டது.

சொந்த அமைப்பினராலேயே ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக மாலேகான் குண்டு வெடிப்பில் முக்கிய புள்ளியாக பிரக்யாசிங் என்னும் சாமியாரிணி கைது செய்யப்பட்டுள்ளார்.

சில முஸ்லிம் இளைஞர்களுடன் சுனில் ஜோஷி நெருக்கமாக இருக்கிற காரணத்தால் ஜோஷி மூலம் ரகசியங்கள் கசியக் கூடும் என்பதாலேயே சங்பரிவார் கும்பலாலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

இப்படி நாடெங்கும் வன்முறைகளை ஒரு வலைப் பின்னலாக அரங்கேற்றிக் கொண்டிருக்கும் குற்றவாளி களுக்குத் தண்டனை வழங்குவதில் ஜீரணிக்க முடியாத அளவுக்குத் தாமதம் ஏற்படுவதும் மும்பை போன்ற இடங்களில் அடிக்கடி குண்டுவெடிப்புகள் நடப்பதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று கருதுவதற்கு இடம் இருக்கிறது.

அதுவும் மும்பை என்பது இந்துத்துவாவாதிகளின் கை ஓங்கியுள்ள இடம், சிவசேனையின் பாசறை!

இந்தியாவில் மதத்தின் பெயரால் இருக்கும் அமைப்புகள், சங்கங்கள் அனுமதிக்கப்படும் வரை வன்முறைகள் என்பவை தொடர் கதைகளாகத்தான் இருக்க முடியும்.

எந்த மதத்தின் பெயராலும் வன்முறைப் பிரச்சாரங்கள், கூட்டங்கள், பேரணிகள், ஷாகாக்கள் நடைபெற அனு மதிக்கவே கூடாது!

மதமும் அதன் எண்ணங்களும் வீட்டுக்குள் மட்டும் நடமாடட்டும்! பொது இடங்களில் அவற்றிற்கு இடமும் இருக்கக் கூடாது, வேலையும் இல்லை!

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்றார் வள்ளலார். மதமற்ற உலகுதான், மாச்சரியங்களுக்கு இடம் இல்லாத மனிதநேயத்தை மட்டுமே மணக்கச் செய்யும் உலகமாகும்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கூறும் அந்த உலகை உருவாக்கும்போதுதான் இந்த வன்முறை களுக்கான முடிவுரை எழுதப்பட முடியும்.
வாழ்க பெரியார்!

------------------- “விடுதலை” தலையங்கம் 16-7-2011

0 comments: