Search This Blog

27.7.11

கோயில் சொத்துகள் அரசிடம் போகக்கூடாது என்று பார்ப்பனர்கள் கதறுவதன் சூட்சமம்!


சிதம்பரம் கோயில் ஒன்று போதாதா?

கோயில்களில் குவிந்து கிடக்கும் நகைகள், சொத்துகள், சாயிபாபா போன்றவர்களின் பீடத்தில் பதுங்கிக் கிடக்கும் சொத்துகள், நித்யானந்தா, ராம்தேவ் போன்ற யோகா சாமியார்களிடத்தில் பதுங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான ரூபாய்கள் - இவையெல்லாம் இந்தியா ஏழை நாடு என்று கூறுமா?

இவையெல்லாம் இருந்தும் இந்தியா ஏழை நாடு. நாள் வருமானம் 20 ரூபாய் ஈட்டக் கூடியவர்கள் 77 சதவிகிதத்தினர் என்று கூறுவது, புலம்புவது கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் பேதமைதான்.

கோயில்களில் குவிந்து கிடக்கும் இந்தச் சொத்துகள், நகைகள் எல்லாம் சுயம்புவாக தானாகப் பூமியைப் பிளந்து கொண்டு வந்து குவிந்தவையல்ல; பக்தர்களாகிய மக்கள் குவித்த பணம்தான்.

இந்தப் பணம் கோயிலில் இருந்து என்ன பயன்? நாளடைவில் கோயில் பெருச்சாளிகள் புகுந்து வேட்டையாடத்தான் வழிவகுக்கும்.

திருப்பதி கோயிலுக்கு கிருஷ்ண தேவராய மன்னன் கொடுத்த நகைகள் எல்லாம் காணோம் என்ற குற்றச் சாற்று எழவில்லையா? நீதிமன்றம் வரை பிரச்சினை சென்றதே! குறிப்பிட்ட தேதிக்குள் நகைக் கணக்குகள் பார்க்கப்பட்டு, அதன் விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டாக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட வில்லையா?

சென்னை மாநிலத்தில் நீதிக்கட்சி ஆட்சியின்போது - இந்து அறநிலையத் துறை உருவாக்கப்பட்டு, இந்துக் கோயில் சொத்துகளின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்பொழுதும் பார்ப்பனர் தலைவர்கள் கூச்சல் போடத்தான் செய்தார்கள். சர்.சி.பி. இராமசாமி அய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தமிழ்நாட்டின் கோயில்களையெல்லாம் ஆய்வு செய்து கோயில் சொத்துகள் எப்படியெல்லாம் கொள்ளைப் போயின? அதில் அர்ச்சகர்களின் பங்கு என்ன என்று விலாவாரியாகக் கூறப்பட்டதே! சர்.சி.பி. என்ன திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவரா?

சாயிபாபா - கடவுள் மனிதர் (Godman) என்று அழைக்கப்பட்டார்! பிரச்சாரமும் செய்யப்பட்டது.

ரமண ரிஷியும் அவ்வாறே நம்பப்பட்டார். கோடி கோடியாக பணத்தை இவர்கள் எல்லாம் ஏன் சேர்க்க வேண்டும்? கடவுளிடமிருந்து சக்தியைப் பெற்றுக் கொண்டவர்கள் - கடவுளிடம் நேரடியாகப் பேசக்கூடிய இந்த அந்தராத்மாக்களுக்குப் பணம் ஏன் தேவைப்படும்?
தேவை என்பதே இவர்களுக்குத் தேவையில்லையே! காரணம், கடவுள் மனிதர்களாயிற்றே! அப்படிப் பணத்தைக் குவிக்கிறார்கள் - காணிக்கைகளை ஏற்றுக்கொள்கிறார் கள் என்றால், இவர்கள் எப்படி கடவுள் சித்தி பெற்றவர்கள்? கடவுளிடம் நேரடியாகப் பேசக் கூடியவர்கள்? கடவுளைப்பற்றி பக்தர்கள் எழுதி வைத்ததற்கே இது முரண்பாடாக இல்லையா?

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் தோண்டத் தோண்ட நகைகளும், அணிமணிகளும் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன - அவற்றின் மதிப்பு லட்சம் கோடிக்குமேல் என்கிறபோது, இவை வெறுமனே முடங்கிக் கிடப்பதால் என்ன பயன்? எவ்வளவுக் காலத்திற்கு இவற்றைப் பாதுகாத்துக் கொண்டுதான் இருக்க முடியும்?

பணவீக்கம், அத்தியாவசியப் பொருள்களின் விலை யேற்றத்தால் மக்கள் பெருந் துயரத்தில் ஆழ்ந்து கிடக்கும் நிலை; இன்னொரு பக்கத்தில் கல் முதலாளிகளாகிய கடவுள்களுக்கு கோடிக்கணக்கில் மதிப்புள்ள சொத்துகள் ஒன்றுக்கும் பயனில்லாமல் குவிந்து கிடப்பதை அனு மதிப்பது- மனிதாபிமானத்திற்கு எதிரான ஒன்றல்லவா! பொருளாதாரக் குற்றமும்கூட!

துக்ளக், கல்கி முதலிய பார்ப்பன ஏடுகளும், சங்கராச்சாரிகளும் விடாப்பிடியாக கோயில் சொத்துகள் மக்கள் நலனுக்குப் பயன்பட அனுமதிக்கப்படக் கூடாது என்பது - சற்றேனும் அறிவுக்கும், மனிதநேயத் தன்மைக்கும் பொருந்தக்கூடியதுதானா?

கோயில்களுக்குச் சொத்து இருந்தால், அவை ஏதோ ஒரு வகையில் பார்ப்பனர்களுக்கு வந்து சேரும் என்ற எண்ணமும், எதிர்பார்ப்பும்தான் இவர்களை இப்படியெல்லாம் எழுதச் சொல்லுகிறது.

இவர்களின் யோக்கியதைக்கு சிதம்பரம் நடராசன் கோயில் விவகாரம் ஒன்று போதாதா?

ஆண்டு ஒன்றுக்கு அக்கோயிலின் வருமானம் ரூ.33,199 என்றும், செலவு ரூ.33 ஆயிரம் என்றும், மீதி ரூ.199 என்றும் நீதிமன்றத்தில் கணக்குச் சொன்னார் களே தீட்சதப் பார்ப்பனர்கள் - அதே நேரத்தில் சிதம்பரம் கோயில் இந்து அறநிலையத் துறையின் கீழ்க் கொண்டு வரப்பட்ட 18 மாதங்களில் வருமானம் ரூ.25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளதே!

கோயில் சொத்துகள் அரசிடம் போகக்கூடாது என்று பார்ப்பனர்கள் கதறுவதன் சூட்சமம் இப்பொழுது புரிகிறதா?

--------------- “விடுதலை” தலையங்கம் 27-6-2011

0 comments: