Search This Blog

31.7.11

கருமாதி பத்திரிகை ஜாக்கிரதை!


பாம்புக்கு விறுவிறுத்தால் பொந்துக்குள் தங்காது என்பது நாட்டில் ஒரு பழமொழி உண்டு. தினமலரும் அந்தப் பாம்புப் பட்டியலில் இடம் பெறக்கூடியது தான்.

வாரம் ஒரு முறையோ, இரு முறையோ திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களைச் சீண்டாவிட்டால் எஜமான் படி அளக்க மாட்டார் போல் தெரிகிறது.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அரசு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்பது எங்களைப் போன்றவர்களுடைய வேண்டுகோள்.

டவுட் தனபாலு: அப்படின்னா என்ன அர்த்தம் . . . ? இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு அவரைக் கைது பண்ணா சரியா இருக்கும் கிறீங்களா? உங்களுக்கு ஸ்டாலின் மேலே அப்படி என்ன கோபம் . . .?

----------------(தினமலர் 31-7-2011 பக்கம் 8)

இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அரசு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் அரசுக்குச் சொன்ன அறிவுரையின் பொருள் என்ன?

ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவர்களுக்கு உடனடியாகக் கவனிக்க வேண்டிய பிரச்சினைகள் ஏராளம் உண்டு. ஆக்க ரீதியான சிந்தனையும், செயல்பாடுகளும் தேவைப்படும்.

அதையெல்லாம் விட்டு விட்டு, அவசர அவசரமாக எதிர்க்கட்சிக்காரர்களைப் பழி வாங்குவது, கடந்த ஆட்சியில் செயல் படுத்தப்பட்ட நல்ல திட்டங்களுக்குக் குழி வெட் டுவது என்பது போன்ற அடாவடித்தனங்களில் ஓர் ஆட்சி ஈடுபடுவது எளிதில் கெட்ட பெயரைத்தான் சம்பாதிக்க இடம் கொடுக்கும் என்ற பொருளில் சொல்லப்படும் கருத்தைக்கூட, ஆட்சிக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு துக்ளக் தினமலர் போன்ற ஏடுகள், ஏற்கெனவே போதை ஏறியவனுக்கு மேலும் மேலும் ஊத்திக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன.

இவர்களிடத்தில் இந்த ஆட்சி எச்சரிக்கையாக இல்லை என்றால் நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு நட்டாற்றில் விட்டு விடுவார்கள் என்பதில் அய்யமில்லை. ஏற்கெனவே தினமலருக்கு கருமாதி பத்திரிகை என்ற ஒரு பெயர் உண்டு. அந்த வேலையைச் செய்ய ஆட்சி இடம் கொடுத்தால், நாம் என்னதான் செய்யமுடியும்?

------------------"விடுதலை” 31-7-2011

1 comments:

தமிழ் ஓவியா said...

தி.மு.க. பொருளாளர், தி.மு.க. சட்டமன்றத் தலைவர், முன்னாள் துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட வில்லையாம். தானாகவே காவல்துறையினரின் வேனில் ஏறிக்கொண்டாராம்.

தினமலர் வண்ணமிட்டு தலைப்பு கொடுத்து செய்தியை வெளியிட்டுள்ளது. காவல்துறை அதிகாரி அப்படி சொன்னாராம். சரி, அப்படியே இருக்கட்டும். அவரை வேனில் அழைத்துச் சென்று திருவாரூர் திருமண மண்டபத்தில் மூன்று மணி நேரம் எதற்கு அடைத்து வைத்திருக்க வேண்டும்?

பாதுகாப்பு நோக்கத்துக்காகவே அழைத்துச் சென்றதாகக்கூட இருக்கட்டும். திருவாரூர் சென்ற உடனேயே அவரை வெளியில் விட்டுவிட வேண்டி யதுதானே? கேட்பவர் கேனையனாக இருந்தால் எருமை மாடு கூட ஏரோப்பிளேன் ஓட்டும் என்று சொல்வானாம். அப்படி இருக்கிறது கதை.

---”விடுதலை” 31-7-2011