Search This Blog

20.7.11

சமச்சீர் கல்வித் திட்ட எதிர்ப்பு தேவையா?


தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், சமச்சீர் கல்வி தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்புக் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், அரசியல் ஒலி கேட்காமல் நிசப்தமாய் பொறுப்பான வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்ப்பை இன்றுள்ள தமிழக அரசு தங்களுக்குக் கிடைத்த தோல்வியாகக் கருதாமல் ஏழையெளிய நடுத்தர மக்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்த வரப் பிரசாதமாகக் கருத வேண்டும். வழக்காடியதில் கிடைத்த தோல்வி என்று ஆட்சியாளர் கணக்கிடாமல், எதிர்கால புதிய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

அரசியல் நோக்கில் கருத்துக் கூற விரும்பியிருந்தால் எப்படி எப்படியோ சொல்லியிருக்கலாம் வெற்றி! வெற்றி!! தி.மு.க.வுக்கு இமாலய வெற்றி! அதிமுக அரசுக்கு நீதிமன்றம் சூடு! என்றெல்லாம் ஆர்ப்பரிக்கலாம் - அவ்வாறெல்லாம் கூறாமல் இந்தப் பிரச்சினையை அரசியலாக்காமல் தி.மு.க.வின் தலைவர் கருத்துக் கூறியுள்ள நிலையில், இந்த அசாதாரண நிலையைத் தங்கள் ஆட்சிக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்வது தானே புத்திசாலித்தனம்!

பள்ளிகள் திறந்து 50 நாள்கள் பறந்தோடி விட்டன பிள்ளைகளும், பெற்றோர்களும் பதறுகின்றனர். காலாண்டுத் தேர்வு என்ற பேச்சுக்கே இடம் இல்லாமற் போய்விட்டது.


பத்தாம் வகுப்பு மாணவ - மாணவியர்க்கோ அரசுத் தேர்வு. இவர்களுக்கு 50 நாட்கள் கல்வி கற்பிக்கப்படாத காலமாக ஆன காரணத்தால் ஏற்பட்டுள்ள இழப்புக்கு யார் பொறுப்பு?

கல்வி தானே அடிப்படையில் செல்வம்? தமிழ்நாட்டில் கல்விப் பிரச்சினையை சரியாகக் கையாளாத ஆட்சிகள் காலாவதி ஆனதுதான் பழைய வரலாறு.

கொள்கையில் பிடிவாதமாக இருப்பது என்பது வேறு; தவறைச் செய்துவிட்டு, அந்தத் தவறிலிருந்து வெளியேறாமல் பிடிவாதமாக இருப்பது என்பது வேறு. இரண்டுப் பிடிவாதங்களும் ஒன்றல்ல.

தமிழக அரசு இரண்டாவது நிலையில் பிடிவாதமாக இருப்பதாகத் தெரிகிறது - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மேலே உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதன் மூலம் இது தெளிவாகவே தெரிகிறது.

தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு யார் ஆதரவாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும், மேல் முறையீடு வேண்டவே வேண்டாம்; சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று இவ்வாண்டே சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றுகேட்டுக் கொண்டுள்ளன.

அ.தி.மு.க. அரசின் இந்தப் பிடிவாதத்துக்கு ஒரே ஒரு ஆசாமி மட்டும்தான் பச்சைக் கொடி காட்டுவார் - அவர்தான் திருவாளர் சோராமசாமி; அவருக்கும் தமிழ்நாட்டு வெகு மக்களுக்கும் என்ன சம்பந்தம்? குறிப்பிட்ட ஒரு வருணத்தாருக்கு மட்டும் வழிகாட்டும் ஆசாமியாக அவர் இருந்துவிட்டுப் போகட்டும்!

பெரும்பாலான மக்களின் முக்கியமான பிரச்சினையான கல்வியில் அ.தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை என்ற எண்ணம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டால் (அனேகமாக ஏற்பட்டு விட்டது) அது இவ்வாட்சிக்கு நல்லதாகுமா?

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில் பெற்றோர்களும், மாணவர்களும், கல்வியாளர் களும் எப்படியெல்லாம் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அ.தி.மு.க. அரசு அறியவில்லையா?

ஊடகங்கள் எல்லாம்கூட பெரும்பாலும் எந்தக் கருத்துகளைக் கொண்டுள்ளன என்பதைக்கூட இவ்வரசு அறியமாட்டாதா?

உச்சநீதிமன்றம் இந்த வழக்கை அனுமதிக்குமா ஏற்றுக்கொள்ளுமா என்பதே கேள்விக்குறிதான்.

அப்படியே ஏற்றுக் கொண்டு வழக்கை நடத்த ஆரம்பிப்பதாகவே வைத்துக் கொள்வோம்.


அதற்கும் சில நாட்கள் தேவைப்படுமே! இப்படியே இன்னும் எத்தனை நாட்களுக்குப் பள்ளிக் கூடங்களைச் செயல்படாமல் முடக்குவது?

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தால் அதற்கு அடுத்த கட்டம் என்ன? வேறு வழியின்றி சமச்சீர்க் கல்வித் திட்டத்தை அமல்படுத்தித்தானே தீர வேண்டும். அந்த நிலை மேலும் அ.தி.மு.க. அரசின் செயல்பாட்டுக்குக் கரும்புள்ளி யாகாதா?

தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றவை அத்தனையிலும் கை வைத்தே தீருவது என்பதுதான் அ.தி.மு.க. ஆட்சியின் நிலைப்பாடு என்ற கருத்தை இந்தக் குறுகிய கால கட்டத்துக்குள்ளேயே அ.தி.மு.க. அரசு நிறையவே சம்பாதித்துக் கொண்டு விட்டது.

மக்களுக்குச் சம்பந்தம் உள்ளவர்கள் கூறும் கருத்தைக் கேட்பதுதான் புத்திசாலித்தனமே தவிர, வெகு ஜன விரோதிகளின் வார்த்தைகளைக் கேட்டு வீணாக வேண்டாம் என்பதே நமது பொறுப்பான வேண்டுகோள்!

------------------"விடுதலை” தலையங்கம் 20-7-2011

0 comments: