Search This Blog

8.7.11

தாலி கட்டுவதில் உள்ள இழிவைப் பெண்கள் உணர்ந்திருக்கிறார்களா?

பெண்ணின் அணிமணி, அலங்காரத்திற்கு வரம்பு தேவை

வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த நிகழ்ச்சியானது இதுவரை நடைபெற்று வந்த நிகழ்ச்சிக்கு மாறுதலாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி சமீப காலத்தில் 40, 50 ஆண்டுகளுக்கு முன் மனித சமுதாய முறைகளில் சில மாற்றங்கள் செய்த போது இந்நிகழ்ச்சியும் மாற்றியமைக்கப்பட்டது என்பதோடு பழைய முறையில் பெண்ணடிமையை நிலைநிறுத்தும் படியாகவும் மனிதனின் மூட நம்பிக்கையை வளர்ப்பதாகவும், ஜாதி அமைப்பைக் காப்பாற்றுவதாகவும் இருந்ததால் இவற்றை ஒழித்து புது முறையைக் காண வேண்டியதாயிற்று. தமிழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி இருந்தது கிடையாது. ஆணும் பெண்ணும் கூடி வாழ்கிற இந்த முறையானது ஆரியனுக்குத்தான் உண்டு. தமிழனுக்குக் கிடையாது. பார்ப்பானுக்காக பார்ப்பானால் ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இக்கூட்டு வாழ்க்கை முறையாகும்.

பார்ப்பனர்களிடையே ஒழுக்கக்கேடுகள் ஏற்பட்டபின் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவைதான் சடங்குகள், முறைகள் யாவுமாகும். இதைத் தொல்காப்பியன் தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ளான்.

சூத்திரர்கள் என்பவர்களுக்கு நாலாம் ஜாதி மக்களுக்கு சதி, பதி முறை இல்லை. சூத்திரர்கள் என்பவர்கள் பார்ப்பானுக்கு தாசி புத்திரர்கள். தாசி புத்திரர்களுக்குத் திருமண உரிமை கிடையாது. இது மனுதர்ம சாஸ்திரம் மட்டுமல்ல, இந்துச் சட்டமுமாகும்.

இதை மாற்ற வேண்டுமென்று, மனித சமுதாயத் தொண்டு செய்த எவருமே முற்படவில்லை. நான் ஒருவன்தான் இதற்காகப் பாடுபட்டு வருகின்றேன். எனது இயக்கம் பாடுபட்டு வருகிறது.

நம் நாட்டில் தோன்றிய எந்த மனிதச் சமுதாயத் தொண்டு செய்தவர்களும், புலவர்களும், நீதி சொன்னவர்களும் பெண்கள் என்றால் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று சொன்னார்களே தவிர, பெண்கள் ஆண்களைப் போல் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்று எவருமே சொல்லவில்லை. திருத்தப்பட்ட இம்முறையிலும் பெரும்பாலோர் நம் கருத்துப்படி நடந்து கொள்வது கிடையாது. இதன் மூலம் பாப்பானையும், சடங்குகளையும் தவிர்த்திருக்கிறார்களே ஒழிய, மற்ற செலவுகளில் எதையும் குறைத்ததாகத் தெரியவில்லை. தாலி கட்டுவதில் உள்ள இழிவைப் பெண்கள் உணராதிருக்கிறார்கள். தாலி என்பது பெண்கள் அடிமைகள் என்பதை எடுத்துக்காட்டக்கூடிய விளம்பரச் சின்னமாகும். இதை உணராது பெண்களே தாலி கட்டிக் கொள்ள முன் வருவதற்குக் காரணம் அவர்களுக்குப் போதிய கல்வி அறிவு இல்லாததாலேயே ஆகும்.

எனது கருத்து கணவன் - மனைவி என்கின்ற இம்முறையையே சட்டவிரோத மாக்க வேண்டும். பகுத்தறிவுள்ள மனிதன், சுதந்திரமாக வாழ வேண்டிய மனிதன், இல்லறம் என்கின்ற பெயரால் தன் சுதந்திரத்தை இழப்பதோடு தொல்லைகளுக்கும் ஆளாகின்றான். குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் தனது சுயமரியாதையை மனிதன் இழக்கின்றான். பெண்கள் தங்களின் அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆண்கள் அவர்களுக்கு அணிமணிகள் வாங்கிக் கொடுத்து அணியச் செய்கின்றனர். நம்நாட்டுப் பெண்களைப் போன்று வேறு எந்த நாட்டுப் பெண்களும் நகை அணிவது கிடையாது. சிங்காரித்துக் கொள்வது கிடையாது. ஆண்களைப் போன்று சாதாரண வாழ்வே வாழ்கின்றனர்.

நல்ல அரசாங்கமாக இருந்தால் நான்கு முழத்திற்கு மேல் பெண்கள் சேலை கட்டக் கூடாது, தலை முடியை கிராப் செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் போடும். எதற்காக ஒரு பெண்ணுக்கு 18 முழம் புடவை? இதைப் பெண்களும் சிந்திக்க வேண்டும். நாம் இன்னும் உலகத்திலுள்ள பகுத்தறிவில் கால் பகுதி கூட பெறவில்லை. மற்ற நாட்டு மக்கள் சந்திரனுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருக்கிற காலத்தில் நம் மக்கள் கோயிலையும், குழவிக் கற்களையும் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலை மாறி பெண்கள் நல்ல வண்ணம் கல்வி கற்க வேண்டும். நம் சமுதாயத்தைத் திருத்தி அமைக்கும்படியான நல்ல அரசாங்கம் அமைய வேண்டும்.

சமுதாய அமைப்பைப் பற்றி நல்ல திட்டம் போட வேண்டும். எப்படி சொத்திற்கு உச்சவரம்பு போட்டிருக்கிறார்களோ, அதுபோன்று பெண்களின் அலங்காரத்தைக் குறைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பெண்கள் கிராப் செய்து கொள்ள வேண்டும். முடியை அலங்கரிப்பதில் அதிக நேரத்தை பெண்கள் வீணாக்குகின்றனர். நாலு பேர் போற்றும்படியான பெண்கள் நம் நாட்டில் எவருமில்லையே! பெண்களுக்கு மூட நம்பிக்கை, முட்டாள்தனத்தில் உள்ள சுதந்திரத்தைக் குறைக்க வேண்டும். தமிழர் சமுதாயம் உலகத்தின் தலைசிறந்த சமுதாயமாக வாழ வேண்டுமானால் பெண்கள் கல்வி பெற வேண்டும். பகுத்தறிவு பெற வேண்டும். பொதுவாக பெண்கள் 20 வயது வரை படிக்க வேண்டும். படித்து ஒரு தொழிலில் ஈடுபட்ட பின்பே பெண்கள் திருமணத்திற்கு முன்வர வேண்டும். மணமக்கள் குடும்பம் நடத்துவதோடு சமுதாயத்திற்குத் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்.


-------------------தந்தை பெரியார்--"விடுதலை" 30.11.1970

2 comments:

தமிழ் ஓவியா said...

பெண்களை ‘முண்டச்சி'யாக்கவே ஆண்கள் தாலி கட்டுகிறார்கள்!


பழைய முறை - முன்னோர் முறை என்று சொல்கின்ற இந்நிகழ்ச்சிக்கு, அதைக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய சொல் தமிழில் ஒன்று கூட இல்லை. இருக்கிற கல்யாணம், விவாகம், தாரா முகூர்த்தம், கன்னிகாதானம் என்கின்ற சொற்கள் வடமொழிச் சொற்கள் என்பதோடு, அவை இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய சொற்களும் அல்ல. இந்நிகழ்ச்சிக்கு நாம் தோன்றிய பின் தான் - நாம் "வாழ்க்கை ஒப்பந்தம்' என்கின்ற இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய சொல்லை ஏற்படுத்தினோம். இந்நிகழ்ச்சிக்குத் தமிழில் ஒரு பெயர் இல்லை என்பதோடு, இதற்குப் பொதுவான ஒரு முறையும், சடங்கும் கிடையாது. நம்மிடையே நடைபெறும் இச்சடங்குகள் என்பவையும், இந்நிகழ்ச்சிக்குப் பார்ப்பனரால் ஏற்பாடு செய்யப்பட்டு நம்மிடையே புகுத்தப்பட்டவையேயாகும்.

பெண்ணடிமைக்கு இருக்கிற சக்தி, உலகமெல்லாம் பெண்களை அடிமைப்படுத்தி இருக்கிறது. வெள்ளைக்காரன் பெண்களை இழிவாக நடத்துகின்றான். துலுக்கன் பெண்களுக்கு உறையே போட்டு விடுகின்றான். அவனெல்லாம் நடப்பில் இழிவுபடுத்துகிறான் என்றால், நமக்கிருக்கிற ஆதாரம் இலக்கியம், தர்மம் எல்லாம் பெண்களை இழிவுபடுத்துவனவாக இருக்கின்றன என்பதோடு, மொழியும் பெண்களை இழிவுபடுத்துவதாகவே இருக்கிறது. பெண்ணைக் குறிக்க "அடி', "அவள்' என்ற சொற்கள் இருக்கின்றனவே தவிர, மரியாதைக்குரிய சொற்கள் எதுவும் இல்லை. ஆண்களுக்கு மட்டும் அய்யா, அவர்கள் என்று சொற்கள் இருக்கின்றன. இலக்கியம், தர்மம் செய்தவன் இன்றைக்கு எதிரே இருந்தால், உதைக்க வேண்டுமென்றுதான் தோன்றுகின்றது. பெரிய சமுதாயக் கோளாறை மாற்ற வேண்டுமானால், பெரும் புரட்சி செய்துதானாக வேண்டும்.

அய்ம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் வரும் ஒரு பாடலில் பெண்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “எவ்வளவு பணக்காரனின் மனைவியாக இருந்தாலும், இந்திரன் மகளாக இருந்தாலும் அவள் கையில் பத்து ரூபாய் கொடுத்தால் போதும் சம்மதித்து விடுவாள்'' என்கின்றான். கணவன் எவ்வளவு அழகானவனாக இருந்தாலும், கலையில் வல்லவனாக இருந்தாலும், பிறன் மேலேயே அவள் எண்ணம் செல்லும் என்று எழுதி இருக்கின்றான்.

வள்ளுவன் பெண் தன் கணவனைத் தொழ வேண்டுமென்று சொன்னானே தவிர, ஆண் தன் மனைவியைத் தொழ வேண்டுமென்று சொல்லவில்லை. அவ்வை, பெண் புலவராக இருந்தும் அவள் "தையல் சொல் கேளேல்' பெண் சொல்லைக் கேட்கக் கூடாது என்கிறாள். இப்படி எந்தப் புலவரை, இலக்கியத்தை, நீதி நூலை, புராண - இதிகாசங்களை எதை எடுத்தாலும் அவை பெண்களை இழிவுபடுத்துவதாகவும், அடிமைப்படுத்துவதாகவுமே இருக்கின்றன.

காதலர் வாழ்வு மறைந்து, கணவன் - மனைவி வாழ்வு வந்ததும் பெண்களின் சுதந்திரம் மறைந்து விட்டது. பெண் என்றால் அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு உள்ளவளாக இருக்க வேண்டும். அதுதான் சிறப்பு என்று வாழ்வு முறையாக்கப்பட்டு விட்டதால், பெண்கள் மனித சமுதாயத்திற்குப் பயன்பட முடியாமல் போய்விட்டனர். இனியாவது தாய்மார்கள், பெண்களை அறிவு பெற முடியாமல் மூடி வைப்பதைத் தடுக்க வேண்டும். ஆண்கள் பெண்களுக்கு உரிமை கொடுக்க முன்வந்தால் கூட, பெண்கள் அதனை ஏற்பதாக இல்லை. காரணம், நாம் அவர்களை அடக்கி ஒடுக்கி அறிவு பெற முடியாமல் செய்வதாலேயே ஆகும். ஆண்களைப் போலப் பெண்களும் தங்கள் வாழ்க்கைக்கேற்ற ஊதியம் பெறும்படியான தொழிலைச் செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும். 20 வயது வரைப் படிக்க வைக்க வேண்டும். தங்கள் துணைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர்களிடமே விட்டு விட வேண்டும்.

இந்த ஜோசியம், சகுனம், பொருத்தம் என்பவை எல்லாம் மனிதனின் முட்டாள்தனமான மூடநம்பிக்கையேயாகும். தாலி கட்டுவது என்பதும் அதுபோன்ற மூட நம்பிக்கைகளில் ஒன்றுதானாகும். தாலி கட்டுவதே "அறுப்பதற்காக!' பெண்களை முண்டச்சி (விதவை)களாக்க, சகுனத் தடையாக்கவேயாகும். வயதுப்படிப் பார்த்தால் ஆண்தான் முன் சாக வேண்டும்; அதன்பின் தான் பெண் சாக வேண்டும். திருமண அமைப்பு முறையானது அப்படி அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆணை விடப் பெண் வயதில் குறைவாக இருக்க வேண்டும் என்கின்ற முறை இருப்பதால், ஆண் முதலில் சாகவும் பெண் தாலியறுக்கவுமான நிலை ஏற்படுகின்றது. மற்றப்படி தாலியால் எந்தப் பயனுமில்லை. ஆணின் அடிமை என்பதைக் காட்டக் கூடிய அடிமைச் சின்னமே தாலியாகும்.

இந்த நிகழ்ச்சி சடங்கு நிகழ்ச்சியல்ல; பிரச்சார நிகழ்ச்சி. சடங்கு நிகழ்ச்சியென்றால் இங்கு பானை, சட்டி, அம்மி எல்லாமிருக்கும். மக்களுக்கு விஷயங்களை எடுத்துச் சொல்லிபிரச்சாரம் செய்வதற்கு ஒரு வாய்ப்பாக இந்நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. மணமக்களாக இருக்கிற இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து "நாங்கள் துணைவர்களாகிவிட்டோம்' என்று சொன்னால் போதும்.

--பெரியார் -விடுதலை - 17.6.1969

ReeR said...

ஒவியா!
ஏன்.. ஏன் இப்படி?

முன்னோர்கள் எவரும் பெண்ணிற்கு மரியாதை கொடுக்கவில்லை சுதந்திரமும் கொடுக்கவில்லை என கவலைப்படும் நீங்கள், ஒர் சுதந்திரப் பெண்ணாகவே இருப்பீர்கள், அதில் உங்களுக்கு மாற்று கருத்துக்கள் இல்லையே!

ஒளவையும் ஒர் பெண், அவள் கூட ஏன், ஒர் பெண்ணை பெருமையாக பேசவில்லை என்கிறீர்கள், சரி.

ஆனால், அந்த பெண் மட்டும் எப்படி பேரறிவு பெற்றவளாக இருந்தால்? அவரை மட்டும் எவரும் தடுக்கலையோ!!! தடுத்திருந்தால், அவரும் புரட்சிகரமாகத்தான் உருவாகியிருப்பார், இப்படி பொதுவான புலவராய் இருந்திருக்கமாட்டார்.

...............

----------

ஏன் உங்களிடம் வீண் வாதம்... உங்கள் விருப்பப்படியே.. தாலியை நீங்கள் கட்டிக் கொள்ளாதீர்கள்...

நீங்கள் மட்டும் அல்ல பெண், என்னை பெற்றெடுத்தவளும் பெண்.

ஆகையால், முண்டச்சி என்ற சொல், எனக்கும் அவமானமாகவே இருக்கிறது.

உங்கள் முயற்சி சரியானதாக இருக்கட்டும், மனிதனை மீண்டும் மிருகமாய் ஆக்க முயற்சிப்பவயாக இருக்க வேண்டாம்.