Search This Blog

3.7.11

கொள்கைகளும், திட்டங்களும் பாமர மக்களுக்காக.... பெரியார்

தலைவரவர்களே! தோழர்களே !

திருச்சி மாநாட்டிற்குப்பின் இங்கு முதல்முதல் கூடி இருக்கிறோம். திருச்சி மாநாடானது உண்மையில் யாருக்காக நமது இயக்கமும், கழகமும் இருக்கிறதோ அவர்கள் கைக்கு இயக்கமும், கழகமும், மாநாடும் முழு சுதந்திரத்துடன் வந்துவிட்டது என்பதைக் காட்டிவிட்டது என்றே சொல்லலாம்.

நம் பெயர்களைச் சொல்லிக்கொண்டு வேறு பலரும் S.I.L.F.. கட்சி என்றும், பார்ப்பனரல்லாதார் கட்சி என்றும், திரவிடியன் லீக் என்றும், திரவிடியன் பார்லிமெண்டரி போர்ட் என்றும், தென்இந்தியர் என்றும் பல பெயர்களைச் சொல்லிக்கொண்டு இரகசியமாகவும், போலிஸ் காவலுடனும், பட்டாங்க மாகவும் மாநாடுகளைக் கூட்டினார்கள். ஆனால் அங்கு சென்றவர்கள் யார்? சர்கள், திவான்கள், ராவ்பகதூர்கள், சாஹேப்கள் இவர்களைக் கொண்டு கடைத்தேறக் கருதும் சுயநலப்பக்தர்கள் குழாம்கள் ஆகியவர்களேயாகும். அப்படிப்பட்ட அவர்களது கூட்டமும் சிரிப்புக்கு இடமான தன்மையில் முடிவு பெற்றும் பெறாமலும் நடந்திருக்கும். மற்றும் சில மாநாடுகளோ கமிட்டிகளோ காரியக் கூட்டங்களோ நடைபெறாமலேயே அசரீரியால் கேள்விப்பட்டு பத்திரிகையாளர்களின் தயவால் வெளியாக்கப் பட்டதாக நடைபெற்றிருக்கும்.

திருச்சிக் கூட்டம் அப்படி இல்லை என்பதோடு சர்களோ, ராவ்களோ, பகதூர்களோ, பண மூட்டை களோ, சுயநலப்பட்டம், பதவி பித்தர்களோ ஆன வர்கள் இல்லாமல் உண்மையான திராவிட மக்களாகவே ஆண் பெண்கள் உள்பட நாற்பது அய்ம்பது ஆயிரம் மக்களாக வந்து கூடிஇருந்தார்கள்.

மதப் பிரசாரமோ, சாமி பிரசாரமோ, புராண ஆபாசக்கதை பண்டிகை உற்சவமோ, காரியமோ சிறிதும் இல்லாமல் பட்டம் பதவி கூடாது தேர்தலில் நிற்கக்கூடாது என்பதோடு, மதம், சாமிகள், பூதம், உற்சவம், புராணம், புண்ணியச் சரித்திரம் முதலிய வைகளைக் கண்டித்தும் வெறுத்தும், சிலவற்றை இழித்துக்கூறியும், அதற்காகவே மாநாடு கூட்டுவ தாகப் பிரசாரம் செய்து விளம்பரம் செய்திருந்தும் நாற்பது ஆயிரம் அய்ம்பதாயிரம் மக்கள் வந்து கூடினார்கள் என்றால் இடமில்லாமல், சோறில்லாமல், மழையில் நனைந்து மண்ணில் புரண்டு கொண்டு பெண்டு பிள்ளைகளுடன் வெகு கஷ்டத்தோடு 3-நாள் 4-நாள் திருச்சியில் வதிந்தார்கள் என்றால் இந்தக் கூட்டத்தை மாமாங்கக் கூட்டம் என்றோ பெரிய பாளையத்தம்மன் பண்டிகைக் கூட்டம் என்றோ பீபிள்ஸ் பார்க்குக்கூட்டம் என்றோ எந்த அறிவிலிதான் சொல்ல முடியும்?

ஆகவேதான், ஜஸ்டிஸ் கட்சி எந்த மக்களுக்கு ஆக என்று துவக்கப்பட்டதோ அந்தக்கட்சி அந்த மக்களின் உண்மையான பெயரின் மீது அந்த மக்களுடைய கைக்கே வந்ததோடு அந்த மக்களைப் பயன்படுத்திச் சுரண்டிக்கொண்டும் பயன்பெற்றுக் கொண்டும் வந்த சுயநலக்கூட்டம் துரத்தப்பட்டும் விட்டது. இந்தத் தன்மையில் இன்று நமது நிலை, நமது பொறுப்பு ஆகியவை மிகக் கஷ்டமானவை நமக்குப்பல எதிரிகள் இருக்கிறார்கள். அதிலும் இன்று அரசியல் சமுதாய மத இயல் கட்சிகள், ஸ்தாபனங்கள் என்பவைகள் ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டும் தமக்குள்ளாகவே பிளவுகள் செய்து போராடிக்கொண்டும் இருக்கின்றன. வசவுகளும் அடிதடி பலாத்காரங்களும் இல்லாமல் எந்தக்கட்சி வேலையும் நடக்க முடியாத நிலையை அடைந்து விட்டதான இந்த நிலையில் புரட்சிகரமான கொள்கை கொண்ட நாம் வேலை செய்வது என்பது மிகவும் கஷ்டமானதும், அபாயகரமானதுமான காரியம் ஆகும் அல்லவா ?

நம் கொள்கை

ஏனெனில், நமது கட்சி இன்று ஒரு அலாதியான தன்மை கொண்டதாகும். நம் கட்சியைப்போன்ற மற்றொரு கட்சி இந்தியாவிலேயே இல்லை என்று சொல்லலாம். நம்மைத்தவிர மற்ற எவரும், எந்தக்கட்சி யாரும் நம்மை எதிரிகளாகக் கொள்ளத் தக்க நிலையில் இருக்கிறோம்.

உதாரணமாக நாம் ஒரு கட்சியார்தான் இன்று தேர்தலைப் பகிஷ்கரிக்கிறோம். தேர்தலில் கலந்து கொள்ளாதே என்கிறோம். நாம் ஒரு கட்சியார்தான், சாமிகள், பூதங்கள், கோட்பாடுகள், மதப்பயித்தியங்கள், ஜாதித்தன்மைகள், சாஸ்திரங்கள், புராணங்கள், கடவுள்களின் திருவிளையாடல்கள், இராமாயணம், கீதைகள் ஆகியவைகளை கண்டித்துப் பேசுகிறோம்.

அநேகத்தை கூடவே கூடாது என்று மறுத்தும், இழித்தும் பேசிப் பிரசாரம் செய்து மாநாடுகள் கூட்டித் தீர்மானிக்கிறோம். இதை இந்த இந்தியாவில் வேறு யார் செய்கிறார்கள்? நல்ல ஒரு அரசியலுக்கும், நல்ல ஒரு அறிவுத் தன்மைக்கும், மக்கள் ஒற்றுமைக்கும், நல்வாழ்வுக்கும் இந்தக்கொள்கைகள் சிறிதாவது அவசியம் என்று எந்த அரசியல் பொருளாதார இயல், சமய சமுதாய இயல் கட்சியார் கருதுகிறார்கள் ?

நாம் ஏன் இப்படிக் கருதுகிறோம் என்றால் நாம் பொறுப்பை உணருகிறோம். நம் மக்களை விழுந்து கிடக்கும் குழியில் இருந்து மேலேற்ற இந்தக் கொள்கை கள்தான் படிக்கட்டு - ஏணி என்று கருதுகிறோம். நாம் இந்த இழிநிலையில் அதாவது ஜாதியில் கீழாய் படிப்பில் தற்குறியாய், செல்வத்தில் தரித்திரர்களாய், தொழிலில் கூலியாய், ஆட்சியில் அடிமையாய் இருப்பதற்கு நம் மிடம் இன்றுள்ள மடமையும், மடமைக்கு ஆதாரமான மதத்தத்துவக் கொள்கை, மததர்மம், ஜாதி, ஜாதி வகுப்புப்பேதம், கடவுள்கள், கடவுள் கதைகள், கல்வித் தன்மைகள், இவைகள் கொண்ட மக்களின் தேசியம் முதலியவைகளேயாகும். ஆதலால், அடிப்படையாக பயனுள்ளதான ஆக்க வேலைசெய்ய முயற்சிக்கிறோம். இந்த முயற்சிக்கு இதனால் பாதிக்கப்படும் எவரும் நமக்கு எதிரிகளாய்த்தான் இருப்பார்கள். இவர்கள் யாவரும் நமக்கு எதிரிகள் என்றால் இவர்களது கூட்டுறவால் ஆதரவால் ஒப்பந்தத்தால் அரசு செலுத்தி இவர்களுக்குப் பங்களிக்கும் அரசாங்கமும் நமக்கு எதிரியாய் இருப்பதில் அதிசயமென்ன இருக்க முடியும் ?

இப்படியெல்லாம் இருந்தும் நாம் நம் முயற்சியில் மேலும்மேலும் ஊக்கமேற்படத்தக்க நிலையில் இருக்கிறோம். நம் கொள்கைகள் திட்டங்கள் எல்லாம் இன்று பாமர மக்கள் சிந்தனைக்கு ஆட்பட்டவைகளாக ஆகி வருகின்றன.

எதிரிக்கு இடம் கொடுங்கள்

ஆகையால், நாம் நம் பிரசாரத்திற்கு இன்னும் நல்ல வசதி செய்து கொள்ள வேண்டும். நம் பிரசாரத்திற்கு வசதி என்பது எதிரிகள் பிரசாரத்திற்குத் தாராளமாக நாம் இடம் கொடுப்பதே முதலாவதாகும். இன்று நம்மை எதிர்த்துப்பேச எந்தக் கட்சியாருக்கும் இடமும் வசதியும், மேடையும் இல்லாத நிலையில் இருக்கிறோம். உதாரணமாக, என்னை ஒருவன் எதிர்க்க வேண்டுமானால் என் மீசை, தாடி, கைத்தடி, பெயர், என்னுடைய கணக்கு வழக்குகளைப் பிறருக்குக் காட்டவில்லை என்பது நான் சர்வாதிகாரம் செய்கிறேன் என்பது, ஆகியவைகள் பற்றியும் மற்றும் இன்னும் என் சொந்த நிலை பற்றியும் தான் எப்படிப்பட்டவனும் பேச முடியுமே தவிர இந்த 20 வருஷகாலமாக நான் சொல்லி வந்ததைப் பற்றியோ, சுயமரியாதை இயக்கம் ஜஸ்டிஸ் கட்சி ஆகியவற்றின் கொள்கைத்திட்டம் ஆகியவைகளைப் பற்றியோ எதிர்த்துப் பேசி மெய்ப்பிக்க இன்று எவருக்கும் சரக்கோ மேடையோ இல்லாமல் போய்விட்டது.

இந்தத் தன்மை இன்று இந்த நாட்டில் யாருக்கு எந்தக்கட்சிக்கு இருக்கிறது; சொல்லுங்கள் பார்ப்போம். ஆகையால் நாம் எந்தக் கட்சியாருடனும் வாதத்துக்கோ, வழக்குக்கோ போக வேண்டியதில்லை. நாம் மற்ற கட்சியார் கூட்டத்திற்கு வம்புக்கும் தொல்லைக்கும் போனதாகப் பத்திரிகைகளில் சேதி வருகின்றன. அந்தப்படி சேதிவர நாம் இடம் கொடுக்கக் கூடாது. மற்றவர்களுடைய கூட்டங்களுக்குப் போக வேண்டு மென்றோ போக வேண்டாமென்றோ நான் சொல்ல வரவில்லை. போனால் இஷ்டமுள்ளவரை இருந்துவிட்டு வந்துவிட வேண்டியது தான்.

கேள்வி கேட்காதீர்கள்

கேள்வி கேட்பதுகூட சரி இல்லை என்பதுதான் என் அபிப்பிராயம். நம் கேள்விகள் அவர்களுக்குப் புரியாது; புரிந்தாலும் பதில் சொல்ல முடியாது. முடிந்தாலும் பதில் சொல்ல மாட்டார்கள். ஆதலால், நாம் கேள்வி கேட்பதை அவர்கள் கலகம், குழப்பம் என்றுபேர் வைத்து கலைத்துவிட்டுப் போகவே தந்திரம் செய்வார்கள். பத்திரிகைக்காரர்களும் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆனதால் நம்மால் கலகம் நடந்ததாக எழுதிவிடுவார்கள். இதனால் அவர்கள் தங்கள் பலக்குறைவில் இருந்தும் அவர்களது கொள்கையும் நாணயமும் அற்ற திட்டங்களை மக்கள் தெரிந்து கொள்ளுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை யாராவது கேள்வி கேட்டால் அதற்குப்பதில் சொல்லுவது வழக்கம். எனக்குத் தெரிந்ததை என் கருத்தைச் சொல்லி விடுவேன். கேள்வி கேட்டவர் ஒப்புக்கொள்ளுகிறாரா இல்லையா என்பதைப்பற்றிக் கவலை இல்லை. கேள்வி கேட்பது குற்றமாகாது. சொன்ன பதிலைப் பதிலாகக் கருதாமல் அதன்மேலும் கேள்வி கேட்பதோ விவகாரம் செய்வதோ நியாயமாகாது என்பதோடு அது ஒழுக்கமுமாகாது யோக்கியமுமாகாது என்பேன். இதுதான் நாகரிகமும் நாணயமும் கொண்ட மக்கள் கூட்டத்தின் நடப்பு முறையாகும்.

கலகம் ஏற்பட்டால் ஒரு கை பார்க்க வேண்டும். தலை கொடுக்கவேண்டும் அதுதான் சுயமரியாதைக் காரன் கடமை. ஆனால் கலகம் செய்வதும் கலகம் ஏற்படும்படி நடப்பதும் இழிவான காரியமாகும். கூட்டத்தில் ஆர்க்குமெண்டுக்கு ஆகப்பேச வேண் டுமே ஒழிய ஒரு மனிதனை ஒரு கட்சியை இழித்துக்கூறும் எண்ணத்தோடு பேசக்கூடாது. சிலருக்குச் சில தனிப்பட்ட ஆட்களைப் பற்றிப் பேசு வதைத் தவிர கூலிக்காக ஒருவரை ஒருவருக்காக வைவதைத்தவிர வேலையும் இருக்காது விஷயமும் இருக்காது. இப்படிப் பட்டவர்கள் பேசும் கூட்டங்களில் கலவரம் வந்தேதீரும். ஆனாலும் நம்மவர்கள் அதில் சம்பந்தப்படக்கூடாது என்று வேண்டிக்கொள் ளுகிறேன்.

கெட்ட பெயருக்குப் பயப்படக்கூடாது.

நாம் நம் கொள்கைப்படி காரியம் செய்வதில் நமக்குக் கெட்ட பேர் வருமே என்று பயப்படக் கூடாது நாம் கெட்ட காரியம் செய்யத் தலைப்படக்கூடாதே தவிர மற்றவன் என்ன சொல்வான் என்று சிந்திக்கக்கூடாது. நம்மைப் பற்றி மற்றவன் போற்ற வேண்டுமென்றும் கருதக்கூடாது. கசப்பான மருந்து கொடுப்பதும் நோவான ஆயுத சிகிச்சை செய்வதும் ஒரு வைத்தியனுடைய வியாதியஸ்தனுக்குக் கஷ்டமானாலும் வைத்தியத் தன்மைக்குப்புகழ் ஆகும். ஆதலால் நம் தொண்டின் பயனாய் ஏற்படும் நலனைத்தான் நாம் சிந்திக்க வேண்டும். அதுதான் நமது இகழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் உண்மைக் காரணமானதாகும்.

நம்மவர்கள் திருச்சி தாயுமான சுவாமிகோவிலில் ஏதோ சில விக்கிரகங்களைப் பின்னப்படுத்தி விட்டதாகப் பத்திரிகையில் பார்த்தேன். ஜஸ்டிஸ் கட்சிக்காரர் என்று சொல்லிக்கொண்டு யாரோ இதைக் கண்டித்துத் தீர்மானம் செய்ததாகவும் சேதி பார்த்தேன் இது (நடக்கவே இல்லை) உண்மையாய் நடந்திருக்குமானால் எனக்குக் கஷ்டமொன்று மில்லை. ஆனால் இதைச் செய்யும்படி நான் அல்லது நம் கட்சி (அதாவது யோக்கியமான ஜஸ்டிஸ் கட்சி) யாருக்கும் கட்டளை இடவில்லை. அது இப்போதைய நம் கொள்கையுமல்ல, ஆகையால் அப்படிப்பட்ட காரியத்தில் நம்மவர்கள் சம்பந்தப்படக்கூடாது; பெயர் கூட வெளிவரக்கூடாது.

-------------------தந்தைபெரியார் - “குடிஅரசு” 27.10.1945

0 comments: