Search This Blog

26.7.11

ஈழப்பிரச்சினையில் பங்களாதேசத்தை உருவாக்க இந்திராகாந்தி மேற்கொண்ட அணுகுமுறை தேவை!!


ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது குறித்து முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவே குமுறுகிறார்!

இங்கிலாந்து சேனல் 4 தொலைக்காட்சியைப் பார்த்து உலகமே கண்ணீர் விட்டுக் கோவென்று கதறுகிறது!

இதற்குமேலும் இலங்கையிடம் கெஞ்சுதலோ கொஞ்சுதலோ கூடாது!

பங்களாதேசத்தை உருவாக்க இந்திராகாந்தி மேற்கொண்ட அணுகுமுறை தேவை!!

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

ஈழத் தமிழர்களுக்கு இலங்கை சிங்கள அரசால் விடிவு ஏற்படப் போவதில்லை; உலக நாடுகளே இப்பொழுது உணர்ந்துவிட்டன. இந்நிலையில் பங்களாதேசத்தை உருவாக்க முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மேற்கொண்ட அணுகுமுறையை இந்தியா கடைபிடிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள உருக்கமான அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுள்ள, 30 கல் தொலைவில் உள்ள அண்டைய நாடான இலங்கையில் தற்போது உள்ள சிங்கள ராஜபக்சே அரசு, பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போரை நடத்துகிறோம் என்றுகூறி, அந்த மண்ணின் பூர்வீக மைந்தர்களான தமிழர்களின் வாழ்வுரிமையையே பறித்து, அவர்களில் பல லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர் - சிவிலியன்களைக் கொன்றும், அவர்களை முள் வேலிக்குள் அடைத்தும், அவர்களது நிரந்தரக் குடியிருப்புகளைப் பறித்து, சிங்களக் குடியேற்றத்தை தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு நடத்தியும் வரும் கொடுமைக்கு இன்னமும் ஒரு முற்றுப்புள்ளி அங்கே இல்லை!

உலகத்தார் கண்கள் திறந்தன!


இந்திய அரசின் பொருளாதார உதவிகள், வீடு கட்டும் திட்டம், அரசியல் தீர்வு விரைவில் காண்போம் என்று கொடுத்த வாக்குறுதிக்கு எதிராக, அங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு அடிப்படை வாழ்வாதாரத்திற்குக்கூட வழிவகை செய்யாதது - இவையெல்லாம் இன்று உலகத்தார் கண்களை அகலத் திறந்து பார்த்து, இந்த அவலத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நிலையில், அய்.நா. மாமன்றம் ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக்கிட நடவடிக்கை வேண்டும் என்று அறிக்கை கொடுத்து, அதன்மீது அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கைக்கு செய்யவிருந்த உதவிகளைக்கூட நிறுத்தி வைத்துள்ளனர்!

கோவென்று கதறச் செய்துவிட்டது!


இங்கிலாந்து நாட்டின் சேனல் 4- என்ற ஒளி வழித் தொலைக்காட்சியில் இலங்கையில் நடந்த பல லட்சக்கணக்கான அப்பாவி தாய்மார்கள், குழந்தைகள் முதலியவர்கள் உள்பட பலரைக் கொன்று குவித்த காட்சிகள் பல நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களை - பார்வையாளர்களான பன்னாட்டு மக்களை குமுறிக் குமுறிக் கோவென்று கண்ணீர் விட்டு அழச் செய்துள்ளது என்ற செய்தி மனிதாபிமானம் இன்னும் உலகத்தில் செத்துப் போய் விடவில்லை என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளது.

சந்திரிகா குமாரதுங்காவே குமுறுகிறார்!


இலங்கையின் முன்னாள் அதிபரான திருமதி சந்திரிகா குமாரதுங்கே, ஒரு நிகழ்ச்சியில் நேற்று முன்னாள் பேசுகையில், அந்த தொலைக்காட்சி காட்டிய கொலைக் களக்காட்சி - ஈழத் தமிழர்கள் ஈவு இரக்கமின்றிக் கொல்லப்பட்ட கொடூரக்காட்சி குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் தழுதழுத்த குரலில், சிறிது நேரம் பேசாமலே அமைதியாக இருந்த பின்னர் தொடர்ந்த உரையில் அவர், இந்த வீடியோ காட்சியை தனது 28 வயது மகன் பார்த்ததாகவும், தான் சிங்களவன் என்றுகூற வெட்கப்படுவதாகவும் விம்மி விம்மி அழுதபடி கூறியதாகத் தெரிவித்துள்ளார்!

இதே கருத்தை தனது மகளும் வெளியிட்டதாகக் கூறி, இலங்கையில் தமிழர்களின் உரிமையை அவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் அங்கீகரித்து, அவர்களையும் கூட்டாட்சியாக நடத்திட ஒரு புதிய தீர்வு காணப்பட வேண்டும்; விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம் என்று கூறி அத்தோடு பிரச்சினை தீர்ந்தது. சிறுபான்மைத் தமிழர்களை மதிக்காமல், மிதித்தால் ஏற்படும் விளைவுகள்பற்றி சிந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சிங்கள ஹிட்லர் ராஜபக்சே காதுகளில் இது செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடியும்.

இலங்கை அரசின்மீது பொருளாதாரத் தடையை விதிக்க இதுவரை அமெரிக்கா போன்ற நாடுகள் முன்வராவிட்டாலும், அது தரவிருந்த பொருளாதார உதவிகளை நிறுத்தி வைக்க, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தியதை ஏற்றுச் செயல்பட்டிருக்கிறது!

7 கோடி தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்ல; உலக முழுவதும் உள்ள தமிழர்கள் - புலம் பெயர்ந்த தமிழர்கள் உட்பட இந்திய அரசின் தெளிவான, திட்டவட்டமான செயல்பாடுகளில் இனியாவது மனிதாபிமானம் மேலோங்கும் உறுதிப்பாடு வருமா என்று எதிர்பார்க்கின்றனர்!

இந்தியாவே காரணம்!


சிங்கள ராஜபக்சே ஆட்சிக்கு இந்தியா இதுவரை கொடுத்த உதவிகள் - இராணுவ உதவிகளில் தொடங்கி பல்வேறு உதவிகள்தான் இவ்வளவு பெரிய கொலைக்களக்காட்சி சிங்கள அரசால் தங்கு தடையின்றி நடப்பதற்கு மறைமுகமாக உதவியதாகவே அமைந்துவிட்டது என்பது மறுக்கப்பட முடியாத உண்மைகளாகும்.

நடந்தவை எப்படியோ போனாலும் இனி நடப்பவைகளாவது நல்லவைகளாக - இந்திய அரசின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை - அமைய வேண்டாமா? அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஓடும் மனிதநேயப் பிரவாக வெள்ளம் சிங்கள சந்திரிகாக்களிடம் ஏற்பட்டுள்ள நெஞ்சின் ஈரம், மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களுக்கு அதுவும் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளால் பெற்ற ஆதரவு காரணமாக அரியணையில் அமர்ந்து ஆட்சி நடத்தும் ஓர் (U.P.A) ஆட்சிக்கு வர வேண்டாமா? இன்னும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் ஆட்சியாக இருக்கலாமா? நியாயந்தானா?

ஒவ்வொரு தமிழனின் உணர்வு மட்டும் அல்ல இது. மனிதாபிமானம் பொங்கும் உலக மக்களின் - அவர்கள் எந்த இனத்தவராக இருந்தபோதிலும், எந்நாட்டவராக இருந்தபோதிலும் எழுப்பும் கேள்விகள் இவைகள்! இதனை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A) அரசின் தலைவர் திருமதி சோனியாகாந்தியும், பிரதமரும், அவரது காங்கிரஸ் கட்சியும் யோசிக்க தயங்கக்கூடாது!

இந்திரா காந்திக்கு வங்கதேசம் அளிக்கும் விருதின் பின்னணி!


நேற்று திருமதி சோனியாகாந்தி அவர்கள் பக்கத்து பங்களாதேஷ் நாட்டிற்குச் சென்று, முன்னாள் பிரதமர் திருமதி இந்திராகாந்திக்கென அந்நாடு தந்த முதல் விருதினை - வங்கதேசம் உருவாவதற்கு அவர்கள் உதவியதற்கான விருது - பெற்று நன்றிகூறி திரும்பியிருக்கிறார்! வங்கதேசம் - பாகிஸ்தானிலிருந்து பிரிவதற்கு இந்தியாவும், அந்நாள் பிரதமரும், மக்களும் உதவியதற்கான காரணங்களைவிட, பல மடங்கு நியாயமான, அவசியமான, அவசரமான காரணங்கள், அரசியல் ரீதியாகவும், இன ரீதியாகவும், மனிதநேய அடிப்படையிலும் தமிழர்களுக்குத் தனி ஈழம் - நிரந்தர வாழ்வுரிமையை அவர்கள் நிம்மதியாக அனுபவிக்க ஒரே தீர்வாக அமைவதற்கு ஆயிரமாயிரம் உண்டு.

இலங்கையிடம் கொஞ்சுதலோ, கெஞ்சுதலோ வேண்டாம்!


எனவே இந்திய அரசு, இனியும் இலங்கை அரசுடன் கொஞ்சுதலோ, கெஞ்சுதலோ செய்யாமல், உத்தரவு போட வேண்டும். அவர்கள் சீனாவுடன், பாகிஸ்தானுடன் போய்ச் சேர்ந்து கொள்வார்கள் என்ற பூச்சாண்டிக்கு இணங்கி பாம்புக்குத் தலை; மீனுக்கு வால் என்பதுபோல நடந்து கொள்ளக்கூடாது.

அந்நாள் பிரதமர் திருமதி இந்திராகாந்தி விடுதலைப்புலி போன்ற அமைப்புகளுக்கு இடம் தந்து ஆயுதப் பயிற்சி தந்தார் என்ற தொலைநோக்கிற்கான அரசியல் காரணங்களை ஆராய்ந்தால், இந்திய பாதுகாப்பும் அதன் முக்கிய அம்சம் என்பது புரியும்.

அரசியல் தீர்வு என்ற பெயரில் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களை மீண்டும் முள்வேலிக்குள் வசித்திடும்படிச் செய்யக் கூடாது.

நம்மிடம் வேண்டாம் - பேதங்கள்!


தமிழ்நாட்டில், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சிகள் என்ற பேதங்கள் இப்பிரச்சினையில் இல்லை என்ற நிலைப்பாடு உருவாக, இங்குள்ள நமது அரசியல் கட்சிகள் பொது எதிரி யார் என்று மட்டுமே சிந்தித்து, தமிழர்கள் வாழ்வுரிமையை மய்யப்படுத்திப் பாடுபட முன்வர வேண்டுமே தவிர குற்றப் பத்திரிகைகளைத் தயாரிக்கும் வீண் வேலையில் ஈடுபட்டு, காரியத்திலிருந்து நழுவி விடக் கூடாது என்பதே நமது அன்பான வேண்டுகோள் அனைவருக்கும்!

ஈழ உள்ளாட்சித் தேர்தல் உணர்த்துவது என்ன?


தனி ஈழத்தின் அடிநாதம் அங்கே போகாது என்பதைத்தான் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழர்கள் வெளிப்படுத்திய விவேக முடிவுகளும், வெற்றிகளும் என்ற சுவர் எழுத்துகளையும் பார்த்துப் பாடம் அனைவரும் படிக்க வேண்டும். இந்திய அரசு ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.

---------------கி. வீரமணி தலைவர் திராவிடர் கழகம் "விடுதலை” 26-7-2011

4 comments:

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழரின் உணர்வு!


உற்றார், உறவினர்களைப் பறிகொடுத்து இன்றளவும் சொல்லொணாத் துன்பத்தின் நெருப்பு அலைகளிடையே சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழன் - இலங்கை சிங்கள அரசின் முரட்டுத் தனமான நெருக்கடிக்கு இடையிலும் தன் உணர்வு என்ன என்பதை வெளிப்படுத்திவிட்டனர்.

இலங்கைத் தீவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஈழத் தமிழர்கள் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டணி மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளது.

தமிழர் பகுதிகளில் 26 மாகாண சபைகளுக்கு நடை பெற்ற தேர்தலில் 18 மாகாணங்களில் இந்தக் கூட்டணி வெற்றிக் கனியைப் பறித்துள்ளது. மற்றொரு தமிழர் அமைப்பான அய்க்கிய விடுதலை முன்னணி (டி.யூ.எல்.எஃப்) இரு மாகாண சபைகளில் மட்டும் வென்றுள்ளது.

ராஜபக்சேயின் அய்க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இரண்டே இரண்டு மாகாண ஆட்சிகளைக் கைப்பற்றியுள்ளது. இந்த இரு இடங்களில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றதற்குக் காரணம் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டு சேர்ந்ததால்தான்!

ராஜபக்சேவின் கூட்டணி மொத்த இலங்கையில் கைப்பற்றியுள்ள இடங்கள் 45. இந்தத் தேர்தலில் ராஜபக்சேயை விட கொடிய வெறி பிடித்த சிங்கள அமைப்பான மார்க்சிஸ்டு ஜே.வி.பி. ஓரிடத்தைக் கூடப் பெற முடியாமல் மண்ணைக் கவ்வி மூக்குடை பட்டு அவலமாக நிற்கிறது. இது ஒரு நற்செய்தி என்பதில் அய்யமில்லை.

இந்தத் தேர்தல் முடிவு உலக மக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது என்பதில் அய்யமில்லை. குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை கொடுங்கோலன் ராஜபக்சேவிற்கு அளிக்கப்பட வேண்டும் என்ற நியாயக் குரல் வலிமையாக ஓங்கி ஒலிக்கும் ஒரு கால கட்டத்தில், இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கி இருப்பது - ராஜபக்சேவுக்கு எதிரான உணர்வுக்கு மேலும் ஓர் உந்துதலைக் கொடுத்ததாகவே அமையும்.

மனிதகுல வைரி ராஜபக்சேவுக்குக் கைலாகு கொடுக்கும் நாடுகள், குறிப்பாக கம்யூனிஸ்டு நாடுகள், ஈழத் தமிழர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற இந்த உணர்வைத் தெரிந்து கொண்ட பிறகாவது தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே அந்நாடுகள் சம்பாதித்துக் கொண்ட கெட்ட பெயர் இதன் மூலம் கழுவப்பட கடைசியாக ஒரு வாய்ப்புக் கிடைத் திருக்கிறது.

இன்றைய நிலையில் இந்தியா உள்பட உலக நாடுகள் வலியுறுத்தவேண்டியது - ஈழத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே!

அண்மையில் தெற்குச் சூடானில் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லையா? 98.83 விழுக்காடு மக்கள் தெற்கு சூடான் தனிநாடாக மலருவதற்கு வாக்களித்தனர். அதன் விளைவு அய்.நா. மன்றத்தில் தெற்குச் சூடான் நாட்டின் கொடி செம்மாந்து பறந்து கொண்டுள்ளது.

இதற்கு முன்பும் கிழக்குத் தைமூர் வாக்கெடுப்பின் மூலம் சுதந்திர நாடாக அங்கீகாரம் பெற்றதே! செக் குடியரசி லிருந்து சுவேலாகியாவும் இந்த முறையில் தனி நாடானதே!

அதே வாய்ப்பு ஈழத் தமிழர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கையாகும்.

ஈழத் தந்தை செல்வநாயம் அவர்கள் இருந்தபோதே தனியீழத்தை முன்னிறுத்தித் தேர்தலில் நின்று 74.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 18 உறுப்பினர்கள் இலங்கை நாடாளு மன்றத்தில் நெஞ்சு நிமிர்த்திச் சென்றனர்.

இனவாரியாகப் பிளவுபட்டு நின்று, தொடர்ந்து இணைந்து வாழ முடியாத நிலை அங்கு நிலவுகிறது என்பது நன்கு தெரிந்த நிலையில், இலங்கைக்குள் ஈழத் தமிழர்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்பது - சிறைக் கூடத்தில் ஆயுள் கைதியாக வாழும் நிலைதான்!

அய்.நா. நியமித்த நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் கூட ஈழத்தில் வாக்கெடுப்பு நடத்திட உத்திரவிடலாமே!

உலகமே எதிர்பார்க்கிறது. என்ன செய்யப் போகின்றன - உலக நாடுகளும், அய்.நா. மன்றமும்?
---"விடுதலை” 26-7-2011

தமிழ் ஓவியா said...

தமிழர்கள் படுகொலை காட்சிகளைச் சொல்லி கண் கலங்கினார் சந்திரிகா அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளுமாறு ராஜபக்சேவுக்கு யோசனை


கொழும்பு, ஜூலை 26 - இலங்கை போரின் போது தமிழர்கள் கொல்லப்படும் காட்சி களை சொல்லி கண்க லங்கிய சந்திரிகா, இலங்கை தமிழர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளுமா றும் அதிபர் ராஜபக் சேக்கு யோசனை தெரி வித்தார்.

இலங்கையில் விடு தலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது ஏராளமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் தொலைக் காட்சிகள் மூலம் வெளியாகி வருவதால் சர்வதேச அளவில் இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது. இலங்கை அதிபர் ராஜ பக்சேவை போர்க்குற்ற வாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக் கையும் வலுத்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கை முன்னாள் அதிபரும், ஆளும் சுதந் திரா கட்சியின் மூத்த தலைவருமான சந்திரிகா குமாரதுங்கா இந்த வீடியோ காட்சிகள் பற்றி கருத்து தெரிவித்து உள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் லண்டன் தொலைக்காட்சியில் இக்காட்சிகளை பார்த்த தனது 28 வயது மகன், தான் சிங்களவன் என்று சொல்ல வெட்கப்படுவதாக அழுதபடி கூறியதாக தெரிவித்தார்.

இதே கருத்தை தனது மகளும் தெரிவித்ததாக அவர் பேசினார்.இதை சொன்ன போது சந்திரி காவும் கண்கலங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசும் போது அவர் கூறியதாவது: இலங்கை வரலாற் றில் முதல் தடவையாக எனது அரசாங்கம் சிறு பான்மை மக்களின் பிரச் சினைகளை தீர்க்கும் வகையில் புரிந்துணர் வுடன் கூடிய தீர்வு திட்டமொன்றை வைத்தது.

யுத்தம் நடந்து கொண்டு இருந்த போது வடகிழக்கு பகுதியில் அபிவிருத்தி பணிகள் நடைபெற்றது. என் றாலும் பொருளாதார அபிவிருத்தி மட்டுமே மக்களின் பிரச்சினை களை தீர்க்காது என் பதை புரிந்து கொண் டோம்.

பல சவால்களுக்கு மத்தியில் அதிகார பகிர் வுடன் கூடிய அரசியல் அமைப்பு சட்டத்தை முன்வைத்தோம். இந்த சட்டம் நிறைவேறி இருந்தால் தமிழ்மக் களின் பிரச்சினை தீர்க் கப்பட்டு இருக்கும் என்று உறுதியாக நம்பு கிறேன். ஆனால் புலி களும், எதிர்க்கட்சி களும் இதை நிராகரித்து விட்டனர்.

இப்போது யுத்தம் முடிந்து விட்டது. தமிழ் மக்கள் புலிகளில் இருந்து வேறுபட் டவர்கள் என்பதை பெரும்பான்மை சமூகம் உணர வேண்டும். இலங் கையில் சமஉரிமை யுடன் தமிழர்கள் வாழ விரும்புகின்றனர். யுத்தத்தில் வெற்றி பெற்று இருந்தாலும் சமாதான போராட்டத்தில் நாம் இன்னும் வெற்றி பெற வில்லை.

இதை அடைய அபிவிருத்தியுடன் அதிகார பகிர்வுக்கு அரசாங்கம் முயல வேண்டும். இதுதான் அரசையும், நாட்டை யும் பலப்படுத்துவ துடன் நிரந்தர சமா தானத்தையும் உரு வாக்கும். இது நமது நாட்டுக்கு சிறந்ததாக அமையும்.

-இவ்வாறு சந்திரிகா பேசினார்.
----”விடுதலை” 26-7-2011

தங்க முகுந்தன் said...

//தமிழர் பகுதிகளில் 26 மாகாண சபைகளுக்கு நடை பெற்ற தேர்தலில் 18 மாகாணங்களில் இந்தக் கூட்டணி வெற்றிக் கனியைப் பறித்துள்ளது. மற்றொரு தமிழர் அமைப்பான அய்க்கிய விடுதலை முன்னணி (டி.யூ.எல்.எஃப்) இரு மாகாண சபைகளில் மட்டும் வென்றுள்ளது.//

செய்தியில் சிறு திருத்தம்!

வடக்கு கிழக்கில் மொத்தம் 3 நகர சபைகள் - மற்றும் 23 பிரதேச சபைகளுக்கான தேர்தலே நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு(பல கட்சிகள் இணைந்து) போட்டியிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி(டி.யூ.எல்.எஃப்)- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்த நியமனப்பத்திரம் செல்லுபடியற்றதான நிலையில் தேர்தல் நியமனப் பத்திரத்தை அதன் பெயரில் தாக்கல் செய்து போட்டியிட்டது. இம்முறை தேர்தலில் ஆளும் கட்சி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - ஐக்கிய தேசியக் கட்சி இந்த 3 கட்சிகளுக்கிடையிலேயே போட்டி மும்மரமாக இடம் பெற்றது.இதில் 3 நகர சபைகளுட்பட 20 பிரதேச சபைகள் தமிழர் கூட்டமைப்புக்கும் ஏனைய 6 பிரதேச சபைகள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் கிடைத்துள்ளன.

தமிழ் ஓவியா said...

உச்சிக் குடுமியிலிருந்து ஒரே ஒரு உரோமம் உதிர்ந்திருந்தால்...


லண்டன் - தொலைக் காட்சி 4 - ஒளிபரப்பு உலக மக்களின் மனசாட் சியை உலுக்கியது! பார்த்தவர்கள் குமுறினர் - வாய்விட்டுக் கதறினர்.

இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமார துங்காவே இதுபற்றிக் கூற முன்வந்தபோது துக்கம் தொண்டையை அடைக்க கண்ணீர் மல்கி யுள்ளனர்.

தனது மகன் அந்தத் தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு, சிங்கள வன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுவ தாகக் கூறியுள்ளான். மகளும் தன் வேதனையைப் புலப்படுத்தியுள்ளார். இந்தத் தகவல்களை சந் திரிகா அம்மையாரே ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

இலங்கைத் தீவின் முன்னாள் அதிபரின் இந் தப் பேச்சு தமிழ் ஆங்கில ஏடுகளில் வெளிவந் துள்ளது.

அதே நேரத்தில் தினமலர் குடும்பத்தைச் சேர்ந்த காலைக்கதிர் (சேலம் பதிப்பு 26.7.2011) ஏட்டில் எப்படி செய்தியும் தலைப்பும் வெளிவந்துள் ளது தெரியுமா?

தலைப்பு: தமிழர் களுக்கு ஆட்சியில் பங்கு இலங்கை மாஜி அதிபர் கோரிக்கை - இதுதான் தலைப்பு உள்ளுக்குள் வெளி வந்துள்ள செய்தியில் எந்த ஒரு இடத்திலும் லண்டன் தொலைக்காட்சியில் இடம் பெற்ற தமிழர்கள் படு கொலைக் காட்சியை சந்திரிகா அம்மையார் பார்த்துக் கண் கலங்கிய தாகக் கூறியது பற்றியோ, அவரது மகனும், மகளும் துயரப்பட்டது குறித்தோ ஒருவரிகூட இடம் பெறாமல் முற்றிலுமாக இருட்டடிப்புச் செய்து செய்தியை வெளி யிட்டுள்ளது தினமலர் குடும்பத்தின் காலைக் கதிர்

தமிழன் மாமிசம் இங்குக் கிடக்கும் என்று போர்டு போட்ட சிங்களக் காடையர்களுக்கும் இந்தத் தினமலர், காலைக்கதிர் பார்ப்பனப் பாசிசக் கும்ப லுக்கும் இதே பாணியில் செயல்படும் துக்ளக், கல்கி வகையறாக்களுக் கும் என்ன வேறுபாடு?

தமிழ் ஈழத்தில் கொல் லப்பட்டவர்கள் எல்லாம் தமிழர்களாயிற்றே - தமி ழினப் பச்சிளம் பாலகர்களாயிற்றே!

ஒரே ஒரு பார்ப்பானின் உச்சிக் குடுமியிலிருந்து ஒரே ஒரு உரோமம் உதிர்ந் திருந்தால் அடேயப்பா, எத்தனைப் பத்திகளில், எத்தனைக் கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு, நிர்வாண நர்த்தனம் ஆடித் தீர்த்திருப்பார்கள்?

சேலம் காலைக்கதிர் இப்படி தலைப்பிட்டு செய் தியை இருட்டடித்து வெளியிட்டு இருக்க, சேலம் பதிப்பு தினத்தந்தி எப்படி செய்தியை வெளியிட்டுள்ளது?

இலங்கைப் போரில் நடைபெற்ற தமிழர்கள் படுகொலை காட்சி களைச் சொல்லி கண் கலங்கிய சந்திரிகா என்று தலைப்பிட்டும், லண்டன் வீடியோ காட்சியைப் பார்த்து தாமும் தம் பிள்ளைகளும் கலங்கியது குறித்தும் சந்திரிகா கூறியதை தினத்தந்தி விரிவாகவே செய்தியை வெளி யிட்டுள்ளது.

காரணம் - தினத் தந்தி தமிழன் நடத்தும் பத்திரிகை - காலைக் கதிர்களோ பார்ப்பனர் களால் நடத்தப்படும் பத்திரிகை.

பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்று அப்பாவித்தனமாக நம்பும் ஏமாறும் ஏமாளித் தமிழர் கள் இதற்குப் பிறகாவது சுத்த ரத்தத்துடன் சிந்திப் பார்களாக!

(குறிப்பு: காலைக்கதிர் செய்திக் கத்தரிப்பை அனுப்பி உதவியவர் - சேலம் மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் மானமிகு சி. பூபதி).
---"விடுதலை” 28-7-2011