Search This Blog

20.9.22

நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் இழி மகன்? நான் ஏன் பார்ப்பானின் வேசி மகன்? - பெரியார்

 

பார்ப்பான் பிறவி முதலாளி, நாம் பிறவித் தொழிலாளி, இது ஏன்?


 

இவ்வுலகிலே வேறெந்த நாட்டிற்கும் குறைந்ததாய் இல்லாத வளப்பமுடைய இத்திராவிட  நாட்டை ஒரு காலத்தில் சிறப்பாக ஆண்டுக் கொண்டிருந்த திராவிட மக்களாகிய நாம், இன்று சகல துறைகளிலும் ஒரு சிறுபான்மையினராகிய பார்ப்பனக் கூட்டத்திற்கு அடிமைகளாய் இருந்து வருவது மிகவும் வெட்கப்படத்தக்கதாகும். திராவிடர் ஆகிய நாம் நமது திராவிட நாட்டை மட்டுமல்லாமல் மற்றும் சில ஆரிய நாடுகளையும் ஆண்டிருந்ததாக (புராணங்கள்) சரித்திரமே சான்று கூறுகிறதே! அப்படிப்பட்ட ஆண்ட மக்களாய் சுதந்திர மக்களாய் வாழ்ந்து வந்த நாம், இன்று மதத்தினால் அந்நியனுக்கு அடிமை, அரசியலிலும் மாற்றானுக்கு அடிமை. கடவுள் ஆத்மார்த்தம் என்னும் பேராலும் நாம் சூழ்ச்சிக்காரர்களுக்கு அடிமை. இப்படியாகப் பல துறைகளிலும் நாம் அடிமைகளாகத்தான் இருந்து வருகிறோம். நமக்கேன் இந்நிலை ஏற்பட வேண்டும்? ஒரு நாடே ஒரு சமுதாயமே ஏன் தாழ்த்தப்பட்டுக் கீழான இழி ஜாதி மக்களாக வாழவேண்டும்?

 

இது பற்றி யாரேனும் கவலை எடுத்துக் கொண்டதுண்டா? இங்குள்ள திராவிட மக்களில் யாரேனும் தனக்கும் இந்த இழிவுக்கும் சம்பந்தமில்லை என்றாவது கூற முடியுமா? எந்த மதம் கீழான மக்களாக, தாழ்த்தப்பட்ட மக்களாக, இழிவான மக்களாக நம்மை ஆக்கி வைத்திருக்கிறதோ - எந்த மதம் இன்றும் நம்மை இழி ஜாதி மக்களாக நடத்தி வருகிறதோ - அந்த மதத்தைத் தான் இன்றும் ஒப்புக் கொண்டுதான் இருக்கிறோம். நான் சொன்னால் சிலருக்கு வருத்தமாக இருக்கலாம். ஆனால் என் மீது வருத்தப்பட்டுதான் என்ன பயன்? சாஸ்திரமும், சட்டமும் கூறுவதைத்தான் நான் கூறுகிறேன்.

 

இங்குள்ள மக்களில் பார்ப்பனராயுள்ள ஒரு சிலரைத் தவிர்த்து அதுவும் 100-க்கு 3-பேரைத் தவிர்த்து மற்ற (இந்து மதத்தை ஒப்புக் கொண்டுள்ள) எவரும் மனுசாஸ்திரப்படி இந்து (லா) சட்டப்படி சூத்திரர்கள் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. 'சூத்திரர்' என்றால் ஆரிய அகராதிப்படி பார்ப்பனனின் தாசிமக்கள், வைப்பாட்டி மக்கள் என்ற பொருள் இருக்கின்றது. தம்மை மான வெட்கமின்றி தாசி மக்களென்று கூறிக் கொள்வதால் ஏதாவது பயன் கண்டார்களா இவர்கள்? தாங்கள் சம்பாதித்த பொருளைக் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் பார்ப்பனனுக்குக்  கொடுத்து அழுதுவிட்டு இவர்கள் சூத்திரர்கள், பஞ்சமர்கள், சண்டாளர்கள் என்கிற இழிபட்டத்தைத் தவிர வேறு ஏதாவது நன்மை கண்டதுண்டா? இந்துமதத்தை ஒப்புக் கொண்டதால் ஒரு சோம்பேறிக் கூட்டத்திற்கு இவர்கள் படியளந்து வருவதோடு அவர்களால் இகழப்பட்டும் வருகிறார்களே ஒழிய, வேறு சில பெருமையாவது இவர்களுக்கு உண்டா? அப்படிப்பட்ட மதத்தை ஏன்  இவர்கள் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும்.

 

இங்கே கூடியுள்ள ஆயிரக்கணக்கான திராவிட மக்களைத் தான் கேட்கிறேன். யாராவது தனக்கும் "சூத்திரப் பட்டத்துக்கும் சம்பந்தமில்லை, நான் சூத்திரன் அல்ல" என்று துணிந்து கூறமுடியுமா? கூற முடியுமானாலும் சாஸ்திரமும் சட்டமும் சம்பிரதாயமும் நாம் வணங்கும் கடவுள் என்பவைகளும் இந்தக் கூற்றை ஒப்புக் கொள்ளுமா? இப்படிப்பட்ட நீண்டநாள் இழிவைப் பற்றி இதுவரை எந்த மகான்களாவது, எந்தப் பொது நலத் தொண்டராவது "இவர்கள் ஏன் சூத்திரர்கள்" என்று துணிந்து கேட்டதுண்டா? தான் சூத்திரன் அல்ல, தான் மனிதன் தான் என்று எந்தச் சீர்திருத்தவாதியாவது இன்றுவரை இந்து மத வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்த்துக் கூறியதுண்டா? ஏன் நமக்குச் சூத்திரப்பட்டம் வந்தது என்றாவது இவர்கள் சிந்தித்திருப்பார்களா?

 

எதனால் திராவிட மக்கள் நாலு (வர்ணமான) ஜாதியாக்கப்பட்டனர்? உண்மையில் பேரளவில் நாலு ஜாதியிருக்கிறதே ஒழிய நடைமுறை வழக்க வழக்கப்படி பார்ப்பனன், சூத்திரன் என்று இரு ஜாதிகள் தானே இன்று இருந்து வருகின்றன?

 

என்னதான் ஒரு வைசியனோ, சத்திரியனோ தன்னை உயர் ஜாதி என்று அதாவது சத்திரியன் , வைசியன் என்று கூறிககொண்டாலும் அவனைப் பார்ப்பான் ஒரு நாளும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு வருவதில்லையே?

 

நம் நாட்டில் 100-க்கு 3-பேராயுள்ள பார்ப்பனர்களுக்கு மற்ற கிருஸ்தவர்கள் - முஸ்லிம்கள் இவர்களைத் தவிர்த்த நாம் அத்தனை பேரும் இன்று சட்டப்படிக்கும், சாஸ்திரப்படிக்கும், நடைமுறைப் பழக்க வழக்கப்படிக்கும், வேசி மக்களாக, தாசி மக்களாக, அடிமைகளாக,  அவனுக்குத் தொண்டு செய்யவே கடமைப்பட்டவர்களாக, மேலும் அதற்காகவே கடவுளாலேயே சிருஷ்டிக்கப்ப்பட்டவர்களாகத் தானே இருந்து வருகிறோம்? வெள்ளையர் ஆட்சியால் இந்த வர்ணாஸ்ரம தர்மம் நடைமுறையில் எங்கோ சிறிது ஆட்டம் கொடுத்து விட்டதே ஒழிய, அவனே இந்த நாட்டிற்கு வராவிட்டால் நாம் அத்தனை பேரும் இன்னும் அந்தச் சிறு நடைமுறையிலும் சூத்திரனாய் கீழ் ஜாதியாய் அடிமைகளாகத்தானே நடத்தப்பட்டு வருவோம்? இன்று வெள்ளையன் இவர்கள் (பார்ப்பனர்) கைக்கு ஆட்சியை மாற்றியதும் மறுபடி சூத்திரப் பட்டத்திற்கு ஆணியடிக்க முயற்சி செய்யப்படுகிறதே! பழையபடி மனுதர்ம கொடுங்கோல் ஆட்சி தொடக்கமாகி விட்டதே! புராணப் புரட்டைப் பற்றி அதன் அயோக்கிய நடத்தையைப்பற்றிப் பேசக்கூடாது என்று சட்டம் போடப்படுகிறதே!

 

"நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் இழி மகன்? நான் ஏன் பார்ப்பானின் வேசி மகன்? என்னை ஏன் கடவுள் சூத்திரனாகப் படைத்தது?" என்று கேட்பதற்குக் கூட உரிமையில்லையே! இன்று பள்ளிக்கூட வாத்தியார்களுக்கு உத்தரவு வந்துவிட்டது. இந்து மத வர்ணாஸ்ரமத்தை எதிர்த்துப் பேசக்கூடாதென்று. நாளை பொது மேடைக்கும் அந்தச் சட்டம் வரப்போகிறது. நான் ஏன் சூத்திரன் என்று கேட்டால் தண்டனை என்றால் இது மனு ஆட்சிதானே? தண்டனை வரட்டும்; நான் வேண்டாமென்று கூறவில்லை. இப்படிப்பட்ட உத்தரவைச் சூத்திரனாக இருக்கும் மந்திரியா பிறப்பிப்பது? அதாவது இந்த உத்தரவு போட்டது நமது கல்வி மந்திரி அவினாசிலிங்கனார் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும் நீங்கள். இதிலிருந்தே இவர் ஒன்றாம் நம்பர் சூத்திரர்  என்பதை ஒப்புக் கொண்டவராகிறார். கொஞ்சமாவது மான உணர்ச்சியிருந்தால் இப்படிப்பட்ட உத்தரவைப் பிறப்பித்திருப்பாரா இவர்? இது நியாயமா?

 

இந்தத் தெளிவான விஞ்ஞான காலத்தில் அதுவும் நமக்கு விடுதலையும், சுயராஜ்யமும் வந்துவிட்டதாகக் கூறப்படும் இக்காலத்தில், உலக மக்களெல்லாம் பகுத்தறிவை உபயோகப்படுத்தி உயர்ந்த விஞ்ஞான உண்மைகளைக் கண்டறிந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், "உன்னை இழிமகன் என்னும் மதத்தைப் பற்றிப் பேசாதே" என்று ஒரு மந்திரி அதுவும் கல்வி மந்திரியார் உத்தரவு போடுவது நியாயமா? இந்த மந்திரியார் சூத்திரராயிருப்பதற்கு இந்த மதம் காரணமா? அல்லது அவரது பிறவித்தன்மை காரணமா? பிறவி காரணமாக என்று கூறுவதற்குக் கடவுளின் காலிலிருந்தா அவதாரம் ஆனார்? "சேர, சோழ, பாண்டியரின் சந்ததியாராகிய நாம், நாய்க்கர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த" நாம், உயர்ந்த நாகரிக மக்களாக நாகரிகத்தன்மை பொருந்தி வாழ்ந்த நாம் இன்று மதத்தினால் அல்லாமல் வேறெதனால் சூத்திரராக கடைஜாதியாக ஆக்கப்பட்டிருக்கிறோம்? சுயராஜ்யம் வந்த பிறகும் சட்டப் புத்தகப்படி நாம் சூத்திரர்களாகத்தானே இருக்கிறோம்?

 

சுயராஜ்யம் வந்த பிறகும் என்னைச் சூத்திரன் என்று பழித்துக் கூறும் சாஸ்திரங்கள் இருந்து தானே வருகின்றன? என்னைச் சூத்திரன் என்று கூறும் சட்டப் புத்தகங்களையும் சாஸ்திரங்களையும் மற்ற சகல ஆதாரங்களையும் முதலில் ஒழித்துக்கட்டேன்? பிறகு "நான் ஏன் சூத்திரன்?" என்று கேட்கிறேனா, மதத்தைப் புராணத்தைக் குறை கூறுகிறேனா பாரேன்!

 

அதைவிட்டு என்னை மதத்தைப் பழிக்காதே என்று கூறுகிறாயே, அது நியாயமா? என்னை மேலும் மேலும் அடிமையாக்கப் பாடுபடும் சர்க்காரை எப்படி என்னால் சுயராஜ்யம் சர்க்கார் என்று ஒப்புக் கொள்ள முடியும்? நான் இந்து மதத்தினால் மேல் ஜாதிப் பார்ப்பானுக்கு அடிமைப்படுத்தப்பட்டிருப்பதல்லாமல் நாம் அவனது வைப்பாட்டி மக்களென்று வேறு இழிவு படுத்தப்பட்டிருக்கிறோம். அடுத்த படியாக நூம் இந்து மதம் காரணமாக கடவுள் தன்மையை ஒப்புக் கொண்டால் நாம் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு மட்டுமல்ல, சர்வமுட்டாள்களாகவும் ஆக்கப்பட்டிருக்கிறோம்.

 

சமுதாயத் துறையைக் எடுத்துக் கொள்ளவோமானால் ஒரு ஜாதிக்காரன் மற்றோர் ஜாதிக்காரனுக்கு இன்று அடிமையாக இருக்கிறான். அதாவது ஒரு மேல்ஜாதிக்காரன், தான் அதிகாரம் செய்ய தனக்கும் ஒரு கீழ்ஜாதிக்காரன் இருக்கிறான் என்பதோடு திருப்தியiடைந்து விடுகிறானே ஒழிய, தனக்குமேல் ஒரு ஜாதி இருப்பானேன் என்பது பற்றி கவலை இல்லை. உதாரணமாக, நம் முதன் மந்திரியார் ரெட்டியார் தன்னை ஏன் "ஒரு பார்ப்பான் 'சூத்திரன்' என்று அழைக்க வேண்டும்?" என்பதையும் , தாம் ஏன் "ஒரு பார்ப்பானை பிராமணன் என்று அழைக்க வேண்டும் என்பதைப் பற்றியும் கவலையே படாமல் இருக்கக் காரணம் தான் ஒரு பள்ளனைத் தனக்குத் தாழ்ந்தவளாகக் கருதிக் கொள்ளும் உரிமை பெற்றிருப்பதால்தான். இப்படி நமது சமுதாய முறை படிப்படியாக அமைக்கப்பட்டு விட்டதால் தான் ஒரு ஜாதிக்காரன் தன்னைவிட ஒரு மேல் ஜாதிக்காரன் இருப்பதை அனுமதித்து வர முடிகிறது. அதனால்தான் கடைசிப் படியிலுள்ள மக்களே நாம் அதிகாரம் செய்ய நமக்கு ஒரு கீழ் ஜாதி இல்லாத காரணத்தால் தாமே முதலில் சமூக சமத்துவத்துக்காகப் போராட வேண்டி இருக்கிறது. ஜாதி மத வேறுபாடுகளால் பல பிரிவுகளாக உள்ள இன்றைய நிலையில் நம்மை ஒரு சமுதாயம் என்று கூறிக்கொள்ளக்கூட நமக்கு அருகதை இல்லை.

 

நம்மைத் தொட்டால் தீட்டு வந்து விடுகிறது என்கிறானே இந்தப் பார்ப்பான்? அவன் தின்பதைக்கூட நாம் பார்க்கக் கூடாது என்கிறானே? பார்த்தால் தோஷம் வந்துவிடும் என்றால் நாம் அவ்வளவு இழிபிறவியா? மனிதனுக்கு மனிதன் இவ்வளவு பேதாபேதத்தை வைத்துக் கொண்டு அப்பேதத்திற்குக் காரணமாயிருந்து வரும் மதத்தையும் கடவுளையும் சாஸ்திரத்தையும் புராண இதிகாசங்களையும் பழிக்கக் கூடாதென்று கூறினால் அதை எப்படி நம்மால் பொறுத்துக் கொண்டு, அடக்கி நடந்து கொண்டிருக்க முடியும்?

 

அரசியலிலாவது நமக்கு ஏதாவது யோக்கியதை உண்டா? இங்கு கூடியுள்ள சுமார் 4000,  5000  மக்களில் ஒரு 400, 500 பேருக்காவது ஓட்டுரிமை இருக்குமா? இங்குள்ளவர்களில் 100 பேரில் ஒருவராவது பெரிய உத்தியோகஸ்தராயிருப்பாரா? இங்குக் கூடியுள்ள தாய்மார்களில் 100ல் 5 பேருக்காவது படிக்கத் தெரியுமா? இங்குள்ள ஆடவர்களில் 100-ல் 15 பேருக்காவது எழுதப் படிக்கத் தெரியுமா? இதில் நாம் பெருமைப்படக் கூடியது ஏதாவது இருக்கிறதா? சுயராஜ்யம் வந்த பிறகும் நம்மில் 100-க்கு 90 பேருக்கு ஓட்டுரிமை இல்லை யென்றால் இந்த வெட்கங்கெட்ட சுயராஜ்யத்தால் நமக்கென்ன பயன்?

 

இதே போல் பார்ப்பனர்கள் ஒரு 5000 பேர் கூடியிருப்பார்களானால் அவர்களில் 100 பேரில் ஒருவராவது படியாதவர் இருப்பாரா? ஒரு தாய்மாருக்காவது படிக்கத் தெரியாமல் இருக்குமா? அவர்களில் ஓட்டுரிமை இல்லாதவர் ஓரிருவராவது காணப்படுவார்களா? அவர்களில் எத்தனை ஜில்லா சூப்ரிடெண்டுகளைப் பார்க்கலாம்? எத்தனை டாக்டர்களைப் பார்க்கலாம்? எத்தனை என்ஜினீயர்களைப் பார்க்கலாம்? எத்தனை ஹோட்டல் முதலாளிகளைப் பார்க்கலாம்? ஆனால் அவர்களில் ஒரு உடலுழைப்பு செய்பவனையாவது உங்களால் (பார்ப்பனக் கூட்டத்தில்) பார்க்கக் கூடுமா? ஒரு பார்ப்பானாவது இன்று வண்டி இழுத்தோ அல்லது வண்டியோட்டியோ பிழைக்கிறானா? ஒரு பார்ப்பானாவது எங்காவது போர்ட்டாயிருக்கிறானா? ஒரு பார்ப்பானாவது டவாலி பியூனாக இருக்கிறானா?

 

ஏன் இப்படி நம்முடைய நாட்டிலேயே நாம் அரசியலில் பிரநிதித்துவம் அற்றும் அதிகாரத்தில் உத்தியோக மற்றும் இருந்து வருகிறோம்? காரணம் தெரியுமா உங்களுக்கு? இந்நாட்டு மக்களெல்லாம் இழி ஜாதி மக்களாய் இழி தொழிலே புரிந்து வரவும், அதற்குச் சிலர் வழியின்றி வேறு நாடுகளுக்குச் சென்று கூலிகளாய் வாழ்ந்து வரவும், இந்நாட்டில் குடியேறிய ஆரிய லம்பாடிக் கூட்டத்தவரான பார்ப்பனர்கள் மட்டம் உயர்ந்த உத்தியோகங்கள் பெற்று ஒய்யார வாழ்க்கை நடத்தி வரவும் காரணம். இந்து மத வர்ணாஸ்ரம தர்மம் தான் என்பதை நீங்கள் உணருங்கள்.

 

இந்த இந்திய நாட்டு 30 கோடி மக்களில் பார்ப்பனர்கள் 90 லட்சம் பேரே இருந்தும் இந்நாட்டில் உயர்ந்த பதவிகளையெல்லாம் அவர்களே வகித்து வரக்காரணமும் இந்த வர்ணாஸ்ரம தர்மந்தான். இந்நாட்டில் 100-க்கு 97 பேர் பார்ப்பனரல்லாதாராயிருக்கும் போது ஒரு காஷ்மீர் பார்ப்பனன் முதன் மந்திரியாயிருக்க நேரிட்டதற்கும் காரணம் இந்த வர்ணாஸ்ரம தர்மந்தான்.

 

மத இயல், கடவுள் இயல், சமூக இயல், அரசியல் ஆகிய சகலத்திலும் 100-க்கு 3 பேராயுள்ள பார்ப்பனன் சமூகமே உயர்வு பெற்றிருக்கக் காரணமே இந்த இந்துமத வர்ணாஸ்ரம அதர்மந்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. நாம் சகலத்திலும் தாழ்த்தப்பட்டிருக்கக் காரணமும் நாம் வர்ணாஸ்ரம அதர்மப்படி சூத்திரர்களாக்கப்பட்டிருப்பதுதான்.

 

100-க்கு  97 பேராயுள்ள ஒரு பெரிய சமுதாயத்தை 100-க்கு 3 பேராயுள்ள ஒரு சிறு சமூகத்திற்கு அடிமையாக்கி வைத்திருக்கும் அரசாங்கமும் ஒரு நல்ல அரசாங்கமாகுமா? ஆண்ட சமுதாயத்தைப் பார்ப்பானுக்கு அடிமையாக்கி வைத்து அவனுடைய நல்வாழ்வுக்காகப் பாடுபட்டு வரும் அரசாங்கமும் நமக்கு ஒரு நல்ல அரநாங்கமாகுமா? யோசியுங்கள். தோழர்களே! நாங்கள் எங்களுக்காக மட்டுந்தானா பாடுபடுகிறோம்?

 

அன்புள்ள தேசீயத் தோழனே! உங்களுக்கும் சேர்த்துத்தான் சூத்திரப் பட்டம் போக வேண்டும்; இழிவு நீங்க வேண்டும் என்று பாடுபடுகிறோம். நாம் யாவரும் மானத்தோடு வாழ வேண்டும் என்று கூறுகிறோமே ஒழிய அந்தப் பார்ப்பான் உங்களை அழைத்துச் செல்லும் "மோட்சத்திற்"கொன்றும் நாங்கள் குறுக்கே நிற்பதில்லையே! மோட்சத்திற்குப் போவதானாலும் மானமுள்ள மக்களாக, இழிவு நீங்கிய மக்களாகச் செல்லுங்கள் என்று தானே கூறுகிறோம்? திராவிட சமுதாயம் எப்படிப்பட்ட சமுதாயம் என்பதை தேசியத் தோழர்கள் உணர்ந்திருக்கிறார்களா?

 

திராவிடனை என்றாவது ஒரு ஆரியன் அல்லது வேறு அந்நியன் ஆண்டதாக சரித்திரம் காட்ட முடியுமா? ஏன் தாமாக தங்கள் உயர்வுக்காக, எழுதி வைத்துக் கொண்ட புராண இதிகாசங்களில் கூட திராவிடர்தானே (அசுரர்கள் தானே) ஆரியரை அடக்கி ஆண்டதாகக் கூறப்படுகிறது?

 

அப்படி இருக்க, திராவிடர்கள் இன்று ஏன் இந்தப் பார்ப்பனர்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும்? ஒரு கடவுள் இப்படியும் ஒரு பெரிய சமுதாயத்தை ஒரு சிறு சமூகத்துக்கு அடிமையாக்கி வைத்திருப்பாரா? ஒரு பாராபட்ச மற்ற கடவுளும் பல ஜாதி மக்களைப் படைத்திருக்க முடியுமா? அப்படித்தான் ஒரு கடவுள் இருந்தாலும் அந்தக் கடவுளின் பேரால் உயர் ஜாதி மக்களென்று சிலர் உழைக்காமல் உண்டு வாழவும் இழி ஜாதி மக்களென்று பலர் பாடுபட்டும் பட்டினி இருக்கவும் ஆக்கிவைத்திருக்குமா? இப்படிப்பட்ட கடவுளை உடைத்தெறி யென்றால் அதுவா குற்றம்?

 

யாருடைய நலனுக்காகவோ அரசாங்கத்தை நடத்திக் கொண்டு, எதற்கு வேண்டுமானாலும் கை தூக்கும் ஒரு சுயநலக் கூட்டத்தை சட்டசபையில் வைத்துக் கொண்டு அந்தப்படி பேசாதே, இந்தப் பக்கம் போகாதே என்றெல்லாம் சட்டம் செய்து வந்தால் இதை எந்த ஒரு அறிவிலியாவது யோக்கியமான அரசாங்கம் என்று ஒப்புக் கொள்வானா? இப்படிப்பட்ட ஆட்சியை நாம் எவ்வளவு நாள்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்? போதும் சகித்துக் கொண்டிருந்தது. விழித்தெழுங்கள், இனியேனும் மானத்தோடு வாழப் பாடுபடுங்கள்.

 

கடவுள் உங்களை அடிமைகளாக வாழ, படைத்திருக்க முடியாது என்பதை இன்றே உணருங்கள்! எங்களுக்கும் உங்களுக்கும் உள்ள இழிவு நீங்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்திக் கூறத்தான் இங்கு வந்திருக்கிறோமே ஒழிய உங்களிடம் ஓட்டுப்பெற்றுச் சட்டசபைக்குச் செல்ல, மந்திரி பதவியை பிடுங்கிக் கொள்ள அல்ல என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். நாம் வேறு எந்தக் கட்சிக்கும் விரோதமான கட்சி அல்ல. எங்களுடைய முயற்சியால் நம்முடைய சுகபோக சோம்பேறி வாழ்வுக்குக் கேடுவருகிறதென்ற காரணத்தால் எங்களைப் பார்ப்பனக் கூட்டம் "கடவுளுக்கு விரோதிகள், மதத்திற்கு விரோதிகள், புராணத்திற்கு விரோதிகள், தேசத்திற்கு விரோதிகள்" என்று கூறிவருகிறததே  ஒழிய நாங்களொன்றும் அப்படி எந்த நல்ல காரியத்திற்கும் விரோதிகளல்ல.

 

எங்களைச் சூத்திரனாக ஒதுக்கி வைக்கும் கடவுளைத் தான் எங்கள் கடவுள் அல்ல என்கிறோம். எங்களைச் சூத்திரனாக ஒப்புக் கொள்ளும்படிச் செய்யும் மதத்தைத்தான் எங்களுக்குத் தேவையில்லை என்கிறோம். எங்களை இழிவுபடுத்தும் புராணங்களைத்தான் நாங்கள் கொளுத்த வேண்டும் என்கிறோம். எங்களுக்காகப் பாடுபடாத அரசாங்கத்தைத் தான் நாங்கள் வேண்டாமென்கிறோம்.

 

எங்களுடைய இழிவு நீக்கம்தான் எங்களுக்குச் சுயராஜ்யம். ஆகவேதான் அதை முதலில் ஒழிக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வற்புறுத்துகிறோம். அதை ஒழிக்கப் பாடுபடாத எதையும் அந்த இழிவுக்கு ஆணியடிக்கப் பாடுபடும் எதையும் நாங்கள் வெறுக்கத்தான் செய்வோம். இன்றைய ஆட்சி மக்களுடைய ஆட்சி, சுயராஜய ஆட்சி என்று கூறப்படுவதால்தான் நாங்கள் மக்களை மனிதர்களாக நடத்துங்கள் என்று கூறுகிறோம். "உண்மையாகவே இது மக்களாட்சியும் அல்ல, சுயராஜ்ய ஆட்சியுமல்ல, ஒரு சில சுயநலக் கும்பலின் கொள்ளை ஆட்சிதான்" என்று கூறி விடுங்களேன். நாங்கள் இதை விட்டாவது வேறு வழி பார்க்கிறோம்.

 

உங்களுடைய மத பக்திக்கு, தெய்வ பக்திக்கு இதுவா அடையாளம்? மற்றவர் மனம் புண்படாமல் நடந்து கொள்வது மதமா அல்லது அதிகாரம் பெற்றதும் அந்நியன் கோயிலைத்தான் குடியிருக்கும் வீடாக மாற்றிக் கொள்வதுதான் மதமா? உன்னுடைய அரசாட்சியில் எங்கே மதத்திற்குப் பாதுகாப்பு? இன்று நடப்பது இந்து மதவர்ணாஸ்ரம கொடுங்கோல் ஆட்சிதான் என்று கூறினால் தேசியத் தோழர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறதே? இதோ காந்தியாரே கூறியிருக்கிறாரே, உங்கள் ஆட்சி தர்ம அட்டுழியத்தை! இதற்கென்ன பதில் கூறப் போகிறீர்கள்?

 

நான் உண்மையாகக் கூறுகிறேன்; காங்கிரஸ் ஆட்சி இந்து மத ஆட்சியாகத்தான், அதுவும் மூர்க்கத்தனமான இந்துமத ஆட்சியாகத்தான் இருக்குமே தவிர ஒரு காலத்திலும் அது சமதர்ம ஆட்சியாகவோ, அறிவு ஆட்சியாகவோ மாறவே மாறாது. 117 மசூதிகள் இந்துக்கள் குடியிருக்கும் வீடாக மாற்றப்பட்டிருக்கின்றன வென்று காந்தியார் கூறியிருப்பதை உங்களால் பொய்யென்றாவது கூற முடியுமா? அவர் "சாகப் போகின்ற மனிதர்" சாகும் போது கூறும் மரண வாக்குமூலமானது உண்மை என்பது ஞாபகம் இருக்கட்டும். மரண வாக்குமூலத்திற்கு எவ்வளவு மதிப்பு கொடுக்க வேண்டுமோ அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டும் அவருடைய அந்த வாக்குகளுக்கு.

 

இது எந்த ஊரில் நடந்திருக்கிறது என்பதையும் பாருங்கள். இந்துஸ்தான் அரசாங்கத்தின் தலைநகரான டெல்லியில் மாணிக்க மந்திரிகள் முன்னிலையில் நடந்திருக்கிறது. அதாவது பிரதம சமதர்ம மந்திரியார், காந்தியார் தத்துப்பிள்ளை நேருவும், பாதுகாப்பு மந்திரி, காந்தியார் பிரதம சீடர் சர்தார் படேலும் குடியிருக்கும் ஊரில் தான் நடந்திருக்கிறது இந்த அக்கிரமம். இந்த அக்கிரமம் நடந்தது நமக்குத் தெரியாதென்றும் இவர்கள் கூறித் தப்பித்துக் கொள்ள முடியாது. பாதுகாப்பு மந்திரி பாதுகாவலில்தான் மசூதிகள் மாற்றானின் குடியிருப்பு இடங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் உணர வேண்டும். அதற்கு அடுத்த நிபந்தனையைப் பாருங்கள். "முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கரோல் பாக், கிப்சி முந்தி, பாகர்கஞ்ச் ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் பயமின்றி நடமாட முடியவில்லையானால் அவர்கள் சிறுபான்மையாக வசித்திருந்த இடங்கள் என்ன கதிக்குள்ளாயிருக்கும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்! எவ்வளவு கொடுமைப் படுத்தியிருக்கிறார்கள் இந்த இந்துக்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்! இவ்வளவும் செய்து விட்டு மேலும் மேலும் பழிக்குப் பழி வாங்கியே தீருவோம் என்று எக்காளமிட்டு வந்தால் என்றாவது அமைதி ஏற்படுமா?

 

              ------------------------- 18.01.1948-ல் வில்லிவாக்கம் திராவிடர் கழகம் ஆண்டு விழாவில் பெரியார் .வெ.ரா சொற்பொழிவு. 'விடுதலை',  27.01.1948

0 comments: