பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக 1992 இல் பி.வி. நரசிம்மராவ் தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசால் நீதிபதி லிபரான் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 17 ஆண்டுகளுக்குப்பின் அந்த ஆணையத்தில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இன்னும் அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடப்படாவிட்டாலும், முக்கியமான ஒரு ஏட்டில் கசிந்துள்ள தகவல்களின் அடிப்படையில் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்ற தன்மையில், பாரதீய ஜனதா வகையறாக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டுள்ளன.
குளிர்காலக் கூட்டம் தொடங்கியது முதற்கொண்டே, ஒரு நாள்கூட அவையை ஒழுங்காக நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் குதியாட்டம் போடுகின்றன. மக்களவைத் தலைவர் திருமதி மீராகுமார் எவ்வளவோ முயன்றும் அவையை நடத்திட இயலாத நிலையில், நாள் முழுவதும் ஒத்தி வைக்கும் ஒரு வேலையைச் செய்துகொண்டு இருக்கின்றார்.
நேற்று அவர்கள் செய்த ரகளைக்குக் காரணம் லிபரான் ஆணையத்தின் அறிக்கை அவைக்கு வைக்கப்படுவதற்கு முன்னதாக ஏடுகளில் எப்படி வெளிவந்தது என்பதற்காகத்தான்.
பந்தை அடிக்க முடியாதவர்கள் காலை அடிப்பார்கள் (Foul Game) அதுபோல பிரச்சினையின் அடிப்படையை விட்டுவிட்டு நிழலோடு சண்டை போட ஆரம்பித்துள்ளனர்.
லிபரான் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை வைத்துக்கொண்டு, தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கோபுரத்துக்கும் பூமிக்குமாகத் தாவினார்கள். முழு அறிக்கை வெளிவரட்டும் அதன்பின் முடிவு செய்துகொள்ளலாம் என்கிற பொறுமைகூட இல்லாமல் குதித்தாடினார்கள்.
முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி, முன்னாள் துணைப் பிரதமர் லால்கிஷன் அத்வானி, முன்னாள் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி மற்றும் உமாபாரதி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்டுள்ளனர்; அவர்களின் தூண்டுதல் இருந்திருக்கிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், தங்கள் முகமூடி கிழிந்துவிட்டதே என்ற ஆத்திரம் அவர்களுக்கு அலைமோதுகிறது.
ஆணையத்தின் அறிக்கை வெளியாவதற்கு முன்னதாகவேகூட வெகுமக்கள் மத்தியில் உறுதியான வகையில் ஒரு உண்மை தெரிந்த ஒன்றுதான். சங்பரிவார், பி.ஜே.பி.யின் இந்தத் தலைவர்கள்தான் பாபர் மசூதி இடிப்புக்கான குற்றவாளிகள் என்பது பொதுமக்கள் ஏற்கெனவே முடிவுக்கு வந்த ஒன்றாகும்.
வாஜ்பேயி நல்லவர் (ஜென்டில்மேன்), நாகரிகமானவர், அவருக்கு வன்முறை எல்லாம் அறவே பிடிக்காது என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளனர். அப்படி ஒரு தோற்றமுள்ள ஒரு தலைவர் பி.ஜே.பி.,க்குத் தேவைப்பட்டது. ஊடகங்கள் பார்ப்பனர்களின் கைகளில் இருந்ததால் அதனைத் திட்டமிட்டு உருவாக்கினார்கள் என்பதுதான் உண்மை.
கட்சியின் அறிவு ஜீவியாக அவர்களால் கூறப்பட்ட கே.என். கோவிந்தாச்சார்யா, ஒரு கட்டத்தில் ஒரு உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார். வாஜ்பேயி எங்களுக்குக் கிடைத்திட்ட முகமூடி என்றாரே பார்க்கலாம். அதுதான் உண்மை, அது திட்டமிடப்பட்ட வகையில் உருவாக்கப்பட்ட பொய் முகமாகும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு முதல் நாள் (5.12.1992) இதே வாஜ்பேயி லக்னோ பொதுக்கூட்டத்தில் என்ன பேசினார்?
நாளை அயோத்தியில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கூரிய கற்களின்மீது அமர்ந்துகொண்டு பக்திப் பாடல்களைப் பாட முடியாது. மண்ணை சமப்படுத்தி அமர்வதற்கு ஏற்றபடி சமன் செய்யவேண்டும் என்று ஜென்டில்மேன் வாஜ்பேயி பேசவில்லையா? அந்தப் பேச்சு அடங்கிய குறுந்தகடு (சி.டி.) லிபரான் ஆணையத்திடமும் அளிக்கப்பட்டதே!
அதுபற்றி அவுட் லுக் இதழுக்கு அளித்த பேட்டியில் வாஜ்பேயி சொன்ன கருத்து, அவர் எவ்வளவு பெரிய ஆபத்தான மனிதர் என்பதற்கான அத்தாட்சியாகும்.
நான் லக்னோவில் அவ்வாறு பேசியது உண்மைதான். அது நகைச்சுவையாகக் கூறப்பட்டது வேடிக்கையான பேச்சு என்று கூறினாரே!
மண்ணைச் சமப்படுத்தி அதன்மீது பஜனை பாடவேண்டும் என்பதன் பொருள்அறியாப் பிள்ளைக்கும் தெரியுமே! பாபர் மசூதியை இடிக்கவேண்டும் என்பதை கவிஞர் என்ற தோரணையில் அவ்வாறு சொல்லியதைப் புரிந்துகொள்ள பெரிய முயற்சிகள் தேவைப்படாது.
சிறுபான்மை மக்களின் வழிபாட்டு இடத்தை இடிக்கச் சொன்னது வேடிக்கைக்காக, நகைச்சுவைக்காகக் கூறப்பட்டதாம்; இவர்களின் நகைச்சுவைகள் கூட எவ்வளவு ஆபத்தானவை என்பது இதன்மூலம் விளங்கவில்லையா!
--------------------"விடுதலை" தலையங்கம் 24-11-2009
2 comments:
தங்களின் இந்த கட்டுரை அரசியல் குளிர் காய்வதற்கு பாரதீய ஜனதா மதத்தை எவ்வளவு கீழ்த்தரமாக பயன்படுத்தி இருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது.பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்க படவேண்டும். இதுதான் ஒவ்வொரு இந்தியனின் வேண்டுகோள்.
அபுல்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment