Search This Blog

10.11.09

ஹரிஜன் விஷ்ணுவின் புத்திரர்கள்என்றால் மற்றவர்கள் எல்லாம் சிவனின் புத்திரர்களா?


குமரி

குமரி மாவட்டத்திலிருந்து சில தகவல்கள்:

1. “மார்த்தாண்டம் பேச்சிப்பாறை சாலையிலிருந்து இட்டவேலி சாஸ்தான் கோயில் சாலை (வழி) தெங்கன் விளை, ஹரிஜன் காலணி சாலை கி.மீ. 0/0.1/0.

குமரி மாவட்டம் செருப்பாலூரில் இருந்து அதன் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்களாம். அதைக் குறிப்பிடுவதற்காக இப்படி ஒரு விளம்பரப் பலகையினை நெடுஞ்சாலைத் துறை பொறித்திருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் ‘ஹரிஜன்’ அதாவது இந்து மதக் கடவுளான விஷ்ணுவின் புத்திரர்கள் என்றால், மற்றவர்கள் எல்லாம் ‘ஹரன்- சிவனின்’ புத்திரர்களா?

இது காந்தியார் கிளப்பிவிட்ட கூத்து! கடவுளின் பிள்ளைகள் என்றால் அதன் பொருள் தீண்டத்தகாதவர்கள் என்று அர்த்தமா? ஊருக்கு வெளிப்புறத்தில் குப்பைமேடுகளில் வாழவேண்டும் என்று பொருளா?

இந்த ஹரியின் புத்திரர்கள் சிறீரங்கம் ரெங்கநாதர் கோயில் கருவறைக்குள் நேராக நுழைய முடியுமா?

தாழ்த்தப்பட்ட தோழர்களைத் தனியே பிரித்துக் காட்டும் அவசியம் நெடுஞ்சாலைத் துறைக்கு என்ன வந்தது? அதுகூட காலனி அல்லவாம் காலணியாம்! உண்மைதானே, செருப்பாகத்தானே அந்த உழைப்பாளித் தோழர்களை பாழ்படுத்தும் இந்த இந்து மதம் இறுக்கி வைத்திருக்கிறது.

ஹரிஜன நலத்துறை என்ற பெயர் ஆதிதிராவிடர் நலத்துறை என்று மாற்றப்பட்டதுகூட நெடுஞ்சாலைத் துறைக்குத் தெரியவில்லையே!

2. குமரி மாவட்டம் மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு ஆராட்டு விழாவாம். நடந்து தொலையட்டும்! அதற்குப் பேரூராட்சி மன்றத்தின் நிதியிலிருந்து நாளேட்டுக்கு பல்லாயிரம் ரூபாய் செலவில் விளம்பரமாம்.

இங்குதான் இடிக்கிறது. பேரூராட்சி என்பது மதச் சார்பற்றது. அப்படியிருக்-கும்போது குறிப்பிட்ட ஒரு மதத்தின் விழாவுக்கு ஊராட்சி நிதியிலிருந்து எப்படி பணம் செலவு செய்யலாம் என்பது நியாயமான வினாதானே?

3. நாகர்கோவிலில் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து குறிப்பிட்ட கோயிலுக்கு ரூபாய் 5 லட்சம் தரப்பட்டதற்காக இந்து முன்னணி நன்றி தெரிவித்து சுவரொட்டி வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினர் நிதி மக்கள் நல்வாழ்வுக்குப் பயன்படவேண்டுமே தவிர, குட்டிச் சுவர்களுக்கு வண்ணம் தீட்டுவதற்காக அல்லவே! இதுகுறித்தெல்லாம் தெளிவுபடுத்தி அரசு சுற்றறிக்கைவிட்டால் நல்லது.

---------- மயிலாடன் அவர்கள் 10-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: