Search This Blog

8.11.09

கணினி கல்லாதார் கல்வி கல்லாதாரே!

சென்னை பகுத்தறிவாளர் கழக நிகழ்ச்சி
கணினி கல்லாதார் கல்வி கல்லாதாரே! - தமிழர் தலைவர்


கணினி கற்றுக்கொள்ள வயதில்லை. உடனே கணினி கற்றுக்கொள்ளுங்கள் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார். தமிழினத்தின் இதயமாகத் திகழ்பவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் என்று மருத்துவர் சோம.இளங்கோவன் கூறினார். இந்தியாவில் சமூகநீதி ஏற்பட பல வகையான போராட்டங்களை நடத்தியவர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் என்று மருத்துவர் இலக்குவன் தமிழ் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னை பெரியார் திடலில் 5.11.2009 அன்று மாலை 6.30 மணிக்கு நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “மாறிவரும் காலச்சூழலில் பகுத்தறிவுக் கருத்துகள் பரப்பிட கைக்கொள்ளப்படவேண்டிய அணுகுமுறைகள்’’ என்ற தலைப்பில் மிகச் சிறப்பான கலந்துறவாடல் நிகழ்ச்சி எழுச்சியுடன் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ. குமரேசன் வரவேற்றுப் பேசினார்.அடுத்து பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா.நேரு அறிமுக உரை நிகழ்த்தினார்.சிறப்பு அழைப்பாளராக இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு மாநில ப.க. தலைவர் வா. நேரு, டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களுக்கு தென்சென்னை ப.க. தலைவர் மு.நீ. சிவராசன், டாக்டர் இலக்குவன் தமிழ் அவர்களுக்கு வடசென்னை மாவட்ட ப.க. செயலாளர் தமிழ்ச்செல்வன், கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை அவர்களுக்கு தென்சென்னை ப.க. மாவட்டச் செயலாளர் சி.செங்குட்டுவன், கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் அவர்களுக்கு தென்சென்னை மாவட்ட ப.க. துணைச் செயலாளர் கரிகாலன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மாநில ப.க. பொருளாளர் மயிலை நா. கிருட்டிணன் அவர்களுக்கு மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ. குமரேசன் ஆகியோர் அனைவருடைய கரவொலிக்கிடையே பொன்னாடைகளை அணிவித்தனர். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி தமது உரையில் குறிப்பிட்டதாவது:

திட்டமிட்டு செய்யவேண்டும்

பொதுவாக நாம் எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும். நமது இலக்கு எது என்பதைப் பார்த்து அதை நோக்கிச் செல்லவேண்டும். ஒரு பயணத்தைத் தொடருகின்ற பொழுது முதலில் நாம் முடிவு செய்கிறோம், போகிற இடம் எது என்று. அதன் பிறகு எப்படிப் போய்ச் சேருகிறோம் என்பதைக் கணக்கிடுகிறோம்.

பேருந்துமூலம் போவதா? அல்லது கார்மூலம் போவதா? அல்லது ரயில்மூலம் போவதா? அல்லது விமானம்மூலம் போவதா? கப்பல் மூலம் போவதா? என்பதை முடிவு செய்கிறோம். நம்முடைய பொருளாதாரம், நேரம் இவைகளைக் கணக்கிட்டு நாம் பயணம் செய்கிறோம். இது நவீன யுக்தி காலம்.

கட்டை வண்டியைக் கண்டுபிடித்தவன் அந்தக் காலத்து எடிசன். மனித இனத்தின் வளர்ச்சியாகத் திகழ்வது சக்கரம் என்பதை அந்தக் காலத்தில் கண்டுபிடித்தார்கள். நீங்கள் எம்.ஏ. படித்தவர்களாக இருக்கலாம். பிஎச்.டி., படித்தவர்களாக இருக்கலாம். இதெல்லாம் நேற்றைய வரைக்கும் உள்ள நிலைமை.

ஆனால், இன்றைக்கு உலகியல் நிலை என்ன?

படிப்பறிவு என்பது வெறும் எழுத்தறிவு. படிப்பு, அறிவைப் பொறுத்தது அல்ல. விஞ்ஞானத்தைப் படித்துவிட்டோம். கணிதத்தைப் படித்துவிட்டோம் எனவே, நாம் படித்தவர்களாகி விட்டோம் என்று நாம் கருத முடியாது.

கணினி அறிவு

அதற்கும் மேலே நாம் படித்தவர்கள் என்பதை எதை வைத்து நிர்ணயிக்கக் கூடியது என்றால், கணினி அறிவை வைத்துத்தான் முடிவு செய்யப்படக் கூடிய காலம் இன்று ஏற்பட்டிருக்கிறது. அதேபோல, இணைய தளம் என்பது முக்கியம்.

இங்கே இலக்குவன்தமிழ் அவர்கள் பேசும்பொழுதுகூட ‘‘நெட் ஒர்க்கிங்’’ என்பதைப்பற்றி மிக அருமையாகச் சொன்னார். இப்பொழுது 2009 ஆம் ஆண்டு, இந்த ஆண்டு முடிய இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கிறது. அடுத்து 2010 ஆம் ஆண்டு தொடங்கப் போகிறது.

நானும் கணினி கற்பேன்

நான் கணினி தெரிந்தவனாக என்னை மாற்றிக் கொள்வேன். நமக்கு வயது முக்கியமல்ல.

இந்த வயதில் கணினியைக் கற்றுக்கொள்ள முடியுமா? என்பது வைதிகர்கள் கருத்து. நாம் பகுத்தறிவாளர்கள்; நம்மால் முடியாதது எதுவும் இல்லை. வயது ஆன நிலையில், யோகா பயிற்சி செய்யவேண்டும் என்று மட்டும் சொல்கிறார்கள். இதற்கு வயதை ஒரு காரணமாக யாரும் சொல்வதில்லை. எந்த வயதிலும் யோகா பயிற்சியை செய்கிறார்கள்.

அதேபோலத்தான் கணினிப் பயிற்சிக்கும் வயது இல்லை. 5 இல் வளையும் என்று சொல்வார்கள்; அய்ம்பதிலும் வளையும்.

வரும் காலங்களில் பத்திரிகைகள் எல்லாம் குறைந்துபோகும். கணினி இல்லாத வீடே இருக்காது.

முதலில் திராவிடர் கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் கணினியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். நமது அமைப்பினர் கணினி கற்றுக்கொள்ள வருபவர்களுக்கு 30 நாள்களில் கணினி கற்றுக் கொடுக்கப்படும்.

நான் பகுத்தறிவாளர் கழகத்தில் உறுப்பினன். கணினி கற்றுக்கொள்ள வேண்டும் என்று யார் முன்வருகிறார்களோ அவர்களுக்கு 30 நாள்களில் கணினி கற்றுக்கொள்ள இலவசமாகவே வாய்ப்புத் தரப்படும். கணினி கற்றுத் தந்ததற்கு சான்றிதழ்கூட தரப்படும். சான்றிதழ் என்பதைவிட கணினி கற்றுக் கொண்டதனால் ஏற்பட்ட பயன்பாடுதான் மிக முக்கியமானது.

எனவே, இப்பொழுது கணினி கற்றுக்கொள்ள முதல் ஆளாக நான் இருப்பேன். கணினி கற்றுக்கொள்ளப் போகிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமக்கு நேரமில்லை, வாய்ப்பில்லை, சூழ்நிலை இல்லை என்றெல்லாம் சொல்லாதீர்கள். அது மூட நம்பிக்கையாளர்கள் சொல்கின்ற வார்த்தையே தவிர வேறு அல்ல. திட்டமிட்ட வாழ்க்கையே நமக்குத் தெவிட்டாத வாழ்க்கை.

உலகத்தை விரல் நுனியில்...

உலகத்தை நாம் விரல் நுனியிலே கொண்டு வரவேண்டும். புதிய உலகத்தைப் படைக்கப் போகும் தூதுவர்களாக நாம் மாறவேண்டும். நாம் அறிவியல் உலகத்திற்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும்.

பக்திகாரர்கள் எப்படி குடும்பத்தோடு பக்தி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்களோ அதுபோல நாமும் குடும்பத்தோடு நம்முடைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவேண்டும். இத்தனை மணிக்கு நிகழ்ச்சி சரியாகத் தொடங்கும் என்று அழைப்பிதழில் போடுகின்ற நாம், இத்தனை மணிக்கு நிகழ்ச்சி முடியும் என்றும் போடவேண்டும்.

குடும்பம், குடும்பமாக நம்முடைய நிகழ்ச்சிகளுக்கு வந்து நாம் கலந்துகொள்ளும் பொழுதுதான் இயக்கம் வேர் பிடிக்கிறது. விழுதுகளை விடுகிறது என்று பொருள்.

அன்பு காட்டுங்கள்

நாம் கடவுள் இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை என்று பேசுவது மட்டும் முக்கியமல்ல; மற்றவர்களிடம் அன்பு காட்டவேண்டும், பாசம் காட்டவேண்டும். அதுதான் நமக்கும், நமது இயக்கத்திற்கும் நெருக்கத்தை ஏற்படுத்தும். நாம் மாறுபாடுகளைப்பற்றி, வேறுபாடுகளைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. நாம் ஒன்றுபடுகிறோமா என்பதைத்தான் முதலில் பார்க்கவேண்டும்.

ரயில்வே ‘கைடு’ வாங்கிவிட்டால் போதுமா?

நாம் ரயில்வே ‘கைடு’ வாங்கிவிட்டால் மட்டும் போதுமா? எல்லாம் தெரிந்துவிட்டது என்று அதற்கு அர்த்தமா? எந்த ரயில் எங்கேயிருந்து புறப்படுகிறது. எங்கே போய் சேருகிறது. எத்தனை மணிக்கு ரயில் புறப்படுகிறது என்பதை எல்லாம் தெரிந்துகொண்டால்தான் ரயில்வே ‘கைடு’ வாங்கியதற்கு அர்த்தம்.

சிறைக்குப் போனவரெல்லாம் தியாகியா?

சிறைக்குப் போனால்தான் தியாகமா? சிறைக்குப் போனால்தான் தியாகம் என்றால், சிறைக்குச் சென்ற அத்துணை கிரிமினல்களும் தியாகிகளா? அப்படிப்பட்டவர்கள்தான் பதவியைப் பெறத் தகுதி உள்ளவர்கள் என்று சொல்ல முடியுமா?

மக்களை வாட்டிடும் பிரச்சினைகள் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க நாம் முயலவேண்டும். எதிலும் நேரம், பயன்பாடு, கட்டுப்பாடு, பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை நாம் பெற்றிட வேண்டும்.

ஒரு நிகழ்ச்சி என்றால் ஒன்றரை மணிநேரத்திற்குள் முடியவேண்டும். மூன்று மணிநேரம், நான்கு மணிநேரம் ஒரு நிகழ்ச்சியில் உட்காருவதற்கு இப்பொழுது யாரும் விரும்பமாட்டார்கள்.

இவ்வாறு தமிழர்தலைவர் உரையாற்றினார்.


---------------------"விடுதலை" 7-11-2009

0 comments: