Search This Blog

23.11.09

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தீர்வு என்ன?


பொறுமைக்கும் எல்லை உண்டு

எத்தனை முறைகள் எச்சரிக்கை விடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு வலியுறுத்தியும், மத்திய அரசோ சம்பிரதாயமாக இலங்கை அரசிடம் வருத்தத்தைத் தெரிவிப்பதுமான செயல்கள் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தாக்கப்படும்பொழுதெல்லாம் நடந்து வந்திருக்கின்றன.

இந்தத் தொடர் நிகழ்வுகளால் கொதித்துப்போன தமிழக மீனவர்கள் பெரும் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளனர். இராமேசுவரத்திலிருந்து பேரணியாகப் புறப்பட்டு சென்னை வந்து, தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை அமைச்சரைச் சந்தித்துக் கேரிக்கை மனுவினைக் கொடுத்துள்ளனர்.

இப்படி தமிழக மீனவர்கள் தங்கள் போராட்ட நடவடிக்கைகளை உச்சக்கட்டமாக நடத்திக் கொண்டிருக்கும் இதே காலகட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

வலைகளை அறுத்தும், மீன்களைக் கடலில் கொட்டியும், மீனவர்களை நிர்வாணப்படுத்தியும், அய்ஸ்கட்டிகளில் பல மணிநேரம் படுக்க வைத்தும், கொடூரமான வகைகளில் எல்லாம் சித்திரவதை செய்துள்ளனர்.

இதற்கு என்னதான் முடிவு என்கிற கேள்வி விரக்தியின் உச்சக்கட்டத்தில் வெடித்துக் கிளம்பியுள்ளது.

ஒரு பக்கம் முள்வேலி முகாமுக்குள் முடங்கிக் கிடக்கும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், இன்னொரு பக்கம் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.

இது தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் என்பது ஒருபுறம் இருந்தாலும், வல்லரசாக ஆகப் போகிறது என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே, அந்த இந்தியாவை, இலங்கை என்னும் சுண்டைக்காய்த் தீவு கிள்ளுக்கீரையாக நினைக்கிறதே, அதைப்பற்றியாவது சுயமரியாதை உணர்வோடு இந்திய அரசு பிரச்சினையை அணுகவேண்டாமா?

எத்தனை முறைதான் வேண்டுகோள்களை வைப்பது, போராடுவது? தமிழ்நாட்டை இந்திய அரசு தனியாகவே மனதளவில் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறதா? என்கிற வினாக் குறிகள் தமிழர்கள் மத்தியில் எழுந்தால், அதற்குப் பொறுப்பு இந்திய அரசைச் சார்ந்ததே!

கடற்கரையிலிருந்து ஒவ்வாரு நாட்டுக்கும் 22 கடல் மைல் அந்த நாட்டுக்குச் சொந்தம் என்கிறது சர்வதேச சட்டம். அந்த வகையில் பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட இலங்கைத் தீவை தொடும் அளவுக்குக் கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கு இடம் உண்டே!

பட்டுப்புடவையை இரவல் கொடுத்துவிட்டு, கோரைப் பாயை அந்த அம்மையார் செல்லும் இடமெல்லாம் தூக்கிக் கொண்டு அலையும் ஏமாளிபோல, கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு, இலங்கையிடம் கெஞ்சிப் பல்லிளிக்கும் அளவு நிலைமை பரிதாபமாகப் போய்விட்டதே!

இதே பிரச்சினை மற்ற மற்ற நாடுகளில் எல்லாம் கிடையாதா? அங்கெல்லாம் இதற்கு எப்படி தீர்வு கண்டனர் என்பதைத் தெரிந்துகொள்ள மத்திய அரசு குறைந்தபட்சம் அக்கறை காட்டி வந்திருக்கிறதா?

ருசியா, நார்வே, பின்லாந்து ஆகிய மூன்று நாடுகள் குறைந்த கடல் எல்லைப் பகுதிகளை கொண்டுள்ள சூழ்நிலையில், கூட்டு மீன் பிடிப்பு என்ற ஒப்பந்தத்தின்கீழ் எவ்வித சச்சரவுகளுக்கும் இடமின்றிப் பிரச்சினையைத் தீர்த்துக்கொண்டுள்ளனரே!

29.7.2008 அன்று கூடிய திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

கச்சத்தீவுப் பகுதியில் நமக்குள்ள மீன்பிடிப்பு ரத்து போன்றவைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும்; கச்சத்தீவை மீட்க முன்வரவேண்டும்; அதைவிட முக்கியம் மீன் பிடித்தல் தொடர்பான ஒரு பொதுக் கொள்கை ஒப்பந்தத்தினை இரு நாடுகளும் புதிதாகப் போடவேண்டும்.

ஒவ்வொரு படகுக்கும் லைசென்ஸ் கொடுத்து அதில் ஜி.பி.எஸ். கருவியைப் பொருத்தி அவர்களுக்கு லைசென்ஸ் வழங்கிடும் ஒரு ஏற்பாட்டை உடனடியாகச் செய்ய முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியதோடு அல்லாமல் அதனை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியதே (4.8.2008).

மத்திய அரசு நிஜமாகவே தூங்கினால்கூட எழுப்பிவிடலாம்; தூங்குவதுபோல பாசாங்கு செய்கிறது என்கிற முடிவுக்குத் தமிழர்கள் வந்துவிட்டால், அதனை விழிக்கச் செய்ய வீதிக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை.

பொறுமைக்கும், சகிப்புத்தன்மைக்கும் ஒரு எல்லை இல்லையா?


-------------"விடுதலை" தலையங்கம் 23-11-2009

0 comments: