Search This Blog

9.11.09

மூத்த பெரியார் தொண்டரின் மரணசாசணம்

மரணத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்!
எனது மரண அறிக்கை

என் வயது 76 தான்! இந்தியக் குடிமக்கள் சராசரியாக 60 வயது வாழ்வதாகத் தகவல்கள் இருக்கின்றன. அதையும் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதே மகிழ்ச்சி தரக்கூடியதுதானே?

நல்ல பெற்றோர் தம் அன்பான அரவணைப்பில் மகிழ்ச்சியாக வளர்ந்தேன்! பகுத்தறிவு இரத்தத்தில் ஊறிப் பிறந்து சுயமரியாதைக் கருத்துகளைப் பாலோடு அருந்தி வளர்ந்தேன்!

எந்த நாட்டவருக்கும் கிடைக்காத பன்முகப் பகுத்தறிவுக் களஞ்சியம் தந்தை பெரியாரின் அன்பான தலைமையில் வளர்ந்தேன். நல்ல தலைவர் ! நல்ல கொள்கைகள்! சமுதாயச் சீர்திருத்தப் பணிகளுக்குத் தந்தையால் இந்த இயக்கத்திற்குத் தரப்பட்டேன்.

தந்தை பெரியார் அவர்களே மணமகன் தேர்வு செய்து தம் செலவிலேயே திருமணம் செய்வித்த மிகப் பெரும் பேறு பெற்றேன்.

நல்ல இணையர். பண்பும், அன்பும் நிறைந்த மாற்றார் கருத்துகளையும் மதிக்கும் மனித நேயப் பண்பாளர் டார்ப்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் என் துணைவராகக் கிடைத்து காவிய வாழ்க்கை வாழ்ந்தோம்.

தந்தை பெரியார் மறைவுக்குப் பின், இந்த இயக்கத்தை தந்தையின் அடிச்சுவட்டிலிருந்து அணுவளவும் பிறழாத தனயனாய், திராவிடர் கழகக் குடும்பங்களுக்குத் தலைவராய், ஆசிரியராய், தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை உலகம் முழுவதும் பரப்பிடும் பணியை, கல்விக் கூடங்களைப் பெருக்கி, அரசியல் மாற்றங்களை ஏற்படுத்திடும் அரிய தலைவர் நமக்குக் கிடைத்திருப்பதை எண்ணி, எண்ணி இறும்பூதெய்துகிறேன்!

அவர் தலைமையில் இந்த மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் சமுதாயத்தைப் புரட்டிப் போட்டு, மக்களை அறிவியல் கருத்துகளை ஏற்க வைத்திடும், அறிவார்ந்த சமுதாயமாக மாற்றிடும் மாபெரும் பணியில் ஒரு சிறு அங்கமாக என்னாலான பணியைச் செய்து வருவதில் பெரும் மன மகிழ்வடைகிறேன்.

நல்ல தலைவர்! நல்ல கொள்கைகள்!

நல்ல பெற்றோர்! நல்ல கணவர்! நல்ல வாழ்க்கை!

துன்பங்கள் வரினும் அவற்றை எதிர்த்து வென்றிடும் துணிச்சல் தந்தை பெரியார் தந்தது. என்னாலியன்ற சமுதாயப் பணி செய்வதில் மன நிறைவு. அதனால் மரணத்தையும் மகிழ்வோடு வரவேற்கிறேன்.

என் இயக்கக் குடும்பத்தவருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

நாள் இறந்தபின் என் உடலுக்கு யாரும் மாலை போடவேண்டாம். 100 ரூபாய்க்குக் குறைந்து இன்று மாலை இல்லை. மலர்கள் உதிர்ந்து நாராக குப்பையில் போடுவதில் யாருக்கும் பயனில்லை. அதனால் (அந்த (மாலைக்குண்டான காசை) என் உடல் அருகில் ஓர் உண்டியல் வைத்து அதில் சேரும் தொகையை அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு தருவதற்கு ஏற்பாடு செய்வதற்கு உதவியாக இருக்க வேண்டும்.

என் உடலை மருத்துவமனைக்குத் தர நம் இயக்கத் தலைவர் ஏற்பாடு செய்து தர வேண்டும். ஒரு உடலை 100 மாணவர்கள் அறுவை செய்து பாடம் கற்றால் ஆயிரமாயிரம் நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும் வாய்ப்பு கிடைத்திடும் அல்லவா? இந்த வகைப் பணியும் சமுதாயப் பணிதானே.

சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் வைத்துத்தான் என் உடல் இறுதியாக மருத்துவ மனைக்கு அனுப்பிடல் வேண்டும்.இது என் அன்பான வேண்டுகோள்!

உடல் எடுக்கப்படும் வரை யாரும் பசியோடோ, பட்டினியோடோ இருக்கக்கூடாது என்பதால் ரூபாய் பத்தாயிரம் திராவிடன் நல நிதியில் வைத்துள்ளேன். அதை உணவுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும்.

மேலும் இந்த இயக்கம் விஞ்ஞான பூர்வ வளர்ச்சியடைய, இளைஞர்களை ஈர்த்திட, விரைந்து செயல்படும் ஆற்றலுடைய இளைய செயல்வீரராக நம் அன்பிற்கினிய திரு. வீ.அன்புராஜ் அவர்கள் பொறுப்பு ஏற்றது எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.

எனவே நிம்மதியாக, மன நிறைவோடு, மகிழ்ச்சியோடு அனைவரிடமும் விடைபெறும்....

-------------அன்புள்ள, ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் "விடுதலை" 8-11-2009

0 comments: