Search This Blog

2.11.09

கம்ப இராமாயணம், பெரியபுராணம் ஆகியவற்றைக் கொளுத்த வேண்டும்!

அண்ணா தன் பேச்சால், பண்பால் நாகரிகத்தால் எதிரிகளையும் ஈர்த்தவர்
தமிழர் தலைவர் மனம் நெகிழ்ந்து விளக்கவுரை

அண்ணா அவர்கள் எதிரிகளை தன் பேச்சால், பண்பால், அரசியல் நாகரிகத்தால் ஈர்க்கக் கூடியவர் என்று அண்ணா அவர்களின் பெருமைகளை எடுத்துக்கூறி விளக்கவுரையாற்றினார். தமிழர் தலைவர் அவர்கள்.

சென்னை பெரியார் திடலில் 31.8.2009 அன்று மாலை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவை ஒட்டி அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற விவாதங்கள் என்ற தலைப்பில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய ஆய்வுரை வருமாறு:

வருங்கால தலைமுறையினர் தெரிந்துகொள்ள

பேறிஞர் அண்ணா அவர்களுடைய நூற்றாண்டு விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமானால் அவர்களுடைய சிந்தனைகள் புதிய தலைமுறையினரை நோக்கி பாய

வேண்டும் என்ற அந்தக் கருத்தோடு அண்ணா அவர்களைப் பற்றி பல்வேறு செய்திகள் உள்ளன. இதுவரை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வாய்ப்பில்லாத செய்திகள் வருங்காலத் தலைமுறையினரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு செய்யப்பட வேண்டிய கருத்துகள் இவைகளை மய்யப்படுத்திதான், இன்றும் நாளையும், நாளை மறுநாளும் மூன்று சொற்பொழிவுகளை நான் ஆற்ற திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது.

அதிலே முதல் தலைப்பு அறிஞர் அண்ணா அவர்களால் நிகழ்த்தப்பட்ட புகழ்பெற்ற விவாதங்கள். அறிஞர் அண்ணா அவர்களைப் பொறுத்தவரையிலே தந்தை பெரியார் அவர்களின் தலைமகனாக, பகுத்தறிவு பகலவனுடைய தலைசிறந்த கொள்கைவீச்சாக, கொள்கை விளக்க ஆசிரியராக அவர்கள் அமைந்த நிலையிலே அவர்கள் மக்களை ஈர்த்த முறை பல்கலை கொள்கலனாக இருந்து விளங்கினார்கள்.

அண்ணா அவர்களுடைய ஆற்றல் என்பது மற்ற எவரோடும், எளிதில் ஒப்பிட முடியாத அளவிலே ஓர் ஆற்றல் வாய்ந்த பேச்சாளராகத் திகழ்ந்தார்கள். தலைசிறந்த சிந்தனையாளராகத் திகழ்ந்தார்கள்.

ஒப்பற்ற எழுத்தாளர். அதே போல சிறந்த நாடக ஆசிரியர், நம்முடைய இன எதிரிகளே கூட அவரை தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவ்வளவு பெருமைக்கும், பாராட்டுக்குமுரிய ஆற்றலாளர்.

நாடகங்களை எழுதியது மட்டுமல்ல, நடித்தும் காட்டியவர். ஒரு பிறவி நடிகர் நடித்தால், ஒரு தொழில் நடிகர் நடித்தால் எவ்வளவு சிறப்பாக நடிப்பார்களோ அதைவிட மேலாக அண்ணா அவர்கள் நாடகங்களில் நடித்தார்கள். எனவே அண்ணா அவர்களுடைய நாடகங்கள் ஆனாலும், திரைப்படத் துறையிலே அவர்கள் நுழைந்து வெற்றிகரமாக ஆக்கிய கதைகள் ஆனாலும் அதே போல விடுதலை நாளேட்டின் பொறுப்பாசிரியராக பல ஆண்டுகாலம் ஈரோட்டிலே இருந்து பணியாற்றியிருக்கின்றார்கள்.

அண்ணாவின் எழுத்தோவியங்கள்

பிறகு திராவிடநாடு ஏடு, பிறகு காஞ்சி இடையிலே திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கப்பட்ட பிற்பாடு நம்நாடு போன்ற நாளேடுகள், வார ஏடுகள் இவைகள் ஆனாலும், அவைகளிலும் அவருடைய எழுத்தோவியங்கள் என்பவை மிகப்பெரிய கருத்தோவியங்களாக அமைந்திருகின்றன.

அண்ணா அவர்களுடைய வாழ்வின் இறுதிப் பகுதியிலே அவர்கள் முதலமைச்சர் அண்ணாவாக உலகத்திற்கு அறிமுகமானார்கள். அந்த காலகட்டத்திலே கூட அவர்களுடைய ஆட்சித்திறன் என்பது ஒப்புயர்வற்ற ஆட்சித் திறனாக இருந்தது.

அண்ணா அவர்கள் ஆண்டகாலம் மிக குறுகிய காலம், தமிழர்களுடைய கெட்ட வாய்ப்பு. எனவே அவர்கள் ஓராண்டு ஒன்றரை ஆண்டுகளுக்குள் அவர்கள் ஆண்ட நேரத்திலே அவர்களே வகுத்த அரசியல் வியூகம் இருக்கிறதே, அவர்கள் செய்த சாதனைகள் இருக்கிறதே, அந்த சாதனைகளை இனி வரக்கூடியவர்கள் எவ்வளவு கருத்து மாறுபட்டவர்களாக இருந்தாலும் அவர்களால் அண்ணா அவர்களின் சாதனைகளை மாற்றிவிட முடியாது.

கற்பாறைகளில் அடிப்பதைப் போல அந்த முப்பெரும் சாதனைகளை செய்து விட்டுத்தான் அண்ணா வரலாறாகி விட்டார்கள். எனவே அண்ணா அவர்களுடைய பல பரிமாணங்களைப் பற்றி பல நாள்கள் பேசலாம் என்றாலும் கூட, அண்ணா அவர்களால் நிகழ்த்தப்பெற்ற புகழ்பெற்ற விவாதங்கள் என்பதிருக்கின்றதே Debating முறை என்பது சாதாரணமான ஒன்றல்ல? ஒருவருக்கு ஒருவர் உரையாடுவது என்பது தரம் குறையாமல் இருக்கும்.

வெட்டிமன்றங்களாக

அதுவும் இப்பொழுது பட்டிமன்றங்கள் எல்லாம் நடைபெறுகின்றன. ஒருவருக்கு ஒருவர் கேலி செய்து கொண்டு நேரத்தை வீணாக்கிக் கொண்டு பல நேரங்களில் பட்டிமன்றங்கள் பாட்டிமன்றங்களாக இருக்கின்றன.

அது மட்டுமல்ல, வெட்டிமன்றங்களாகவும் இருக்கிறது. அதில் ஏதோ சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே சில நகைச்சுவைத் துணுக்குகளை எல்லாம் தயாரித்து வைத்துக்கொண்டு சொல்லக்கூடியவைகளாக இருக்கிறதே தவிர,

அது ஏதோ அந்த நேரத்திலே சிரித்து விட்டுப் போவதற்குப் பயன்படுமே தவிர சிந்தித்துப் பார்த்தால் இவ்வளவு தானா? என்று நினைக்கக் கூடிய அளவுக்குத் தான் இருக்கும். ஆனால் அண்ணா அவர்களுடைய விவாதங்கள் இருக்கிறதே, அது சிறப்பான ஒன்றாகும். காரணம் என்னவென்றால், ஈரோட்டு குருகுலம் அப்படிப்பட்ட பயிற்சியை அண்ணா அவர்களுக்குத் தந்திருக்கிறது. அண்ணா அவர்களை ஒட்டி வந்த அனைவருக்கும் கலைஞர், பேராசிரியர், நாவலர் உள்பட எங்களைப் போன்ற அத்துணைப் பேருக்கும் அவர்கள் சொன்னதைப் போல கேள்வி கேட்டு பதில் சொல்லுவது. அந்தப் பயிற்சியை அய்யா அவர்களிடமிருந்து பெற்றவர்கள் நாங்கள்.

இராமாயணத்தையா எரிப்பது?

இந்தியாவிலேயே பொதுக்கூட்டத்தை ஓர் அரசியல் மாலை நேரக் கல்லூரி வகுப்பாக ஆக்கியபெருமை தந்தை பெரியார் அவர்களையே சாரும்.

தமிழகத்தினுடைய முதல் பேராசிரியர் என்று அண்ணா அவர்களே வர்ணித்தார்கள். அந்த பேராசிரியராலே உருவாக்கப்பெற்ற பல பேராசிரியர்கள் உண்டு. அதிலே மிகத் தெளிவானவர் அண்ணா அவர்கள்.

அண்ணா அவர்களுடைய விவாதங்களிலேயே மிகவும் சிறப்பான விவாதம் கம்பராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் எரித்து, தமிழர்களை அடிமைப்படுத்தியது இப்படிப்பட்ட இலக்கியங்கள், இப்படிப்பட்ட நூல்கள், காவியங்கள் என்பதை நம்முடைய வெறுப்பை தமிழர்கள் தங்களுடைய எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று பெரியார் அவர்கள் சொன்ன நேரத்திலே அய்யா அவர்களுடைய கருத்துகளை எவ்வளவு அண்ணா அவர்கள் கையாண்டார்கள் என்றால், எதிரிகள் கூட மாற்றான் கூட, சிந்தித்து ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவுக்கு அவர்கள் செய்வார்கள்.

பல நேரங்களிலே புலவர்கள் எல்லாம் கூட கடுமையாக எதிர்த்தார்கள். மற்ற செய்திகளிலே தந்தை பெரியார் அவர்களை ஆதரிப்பவர்கள் கூட, அய்யோ கம்பராமாயணத்தையா எரிப்பது? பெரிய புராணத்தையா எரிப்பது? என்று கேட்டார்கள்.

இன்றைக்குக் கம்பனுக்குப் பல புதிய சீடர்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கிறார்கள். எனவே, அப்படிப்பட்ட சூழ்நிலையிலே கம்பன் பெருமையை எல்லாம் பாடி கன்னித் தமிழ் பெருமையை வளர்ப்போம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கின்ற இந்த நிலையிலே கம்பராமாணயத்தையா எரிப்பது? பெரிய புராணத்தையா எரிப்பது? என்றெல்லாம் சாதாரணமானவர்கள் முதல், மற்ற பெரியவர்கள் எல்லாம் எழுதி கேட்ட நேரத்திலே சரியாக இதைப் பற்றி விளக்கம் சொல்ல வேண்டுமென்று முன்வந்தார்கள்.

1943ஆம் ஆண்டு எண்ணிப்பாருங்கள். இது எத்தனை ஆண்டுகளுக்கு முன்னாலே என்று ஏறத்தாழ 65 ஆண்டுகளுக்கு முன்னாலே நடைபெற்ற சம்பவம் இது.

சென்னையில் நடந்த விவாதம் அப்பொழுது ஒரு விவாதம் சென்னையிலே நடைபெற்றது. அந்த விவாதங்களின் தொகுப்புதான் தீ பரவட்டும் என்ற நூல்; கலையிலே பாதுகாக்கப்பட வேண்டிய நூல். இன்றைய இளைஞர்கள் நூலாசிரியர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் எல்லோருமே படிக்க வேண்டிய நூலாகும்.

சென்னைப் பல்கலைக் கழகத்தினுடைய தமிழ் பேராசிரியராக இருந்த சொல்லின்செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் அண்ணா அவர்களோடு எதிர்வாதம் செய்தார்கள்.

கம்பராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் கொளுத்த வேண்டியது நியாயம். அவைகளை கொளுத்துவதிலே தவறில்லை என்று அண்ணா அவர்கள் வாதம் செய்கிறார்கள்.

அது தவறு, அது கூடாது என்பதற்கு எதிரணியிலேயிருந்து சேதுப்பிள்ளை அவர்கள் பேசுகிறார்கள். இந்த நிகழ்ச்சி 9.2.1943 அன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னை சட்டக்கல்லூரி மண்டபத்திலே நடைபெறுகிறது.

சட்டக்கல்லூரி அப்பொழுது இப்படி எல்லாம் பயன்பட்டது. இப்பொழுது எப்படி செயல்படுகிறது. என்பதைப் பற்றி சொல்லவேண்டிய அவசியமில்லை. அன்றைக்கு அறிவார்ந்த விவாதங்கள் நடைபெற்றன. அதுவும் விவாதத்திலே பங்கேற்றவர்கள் ஆழமான கருத்துகளை கொண்டவர்கள்.

அன்றைக்கு சட்டக் கல்லூரியிலே படித்த மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை சிறப்பான அளவுக்கு ஏற்பாடு செய்தார்கள்.

நடுவர் யார் என்றால்?

இந்த விவாதத்திற்கு நடுவராக இந்து மத தர்ம பரிபாலன போர்டு கமிஷனர் கோவை கிழார் என்றழைக்கப்பட்ட சி.எம்.இராமச்சந்திரஞ்செட்டியார். அவர் ஒரு வழக்கறிஞர். கோயில் பூனைகள் என்ற தலைப்பில் பின்னாளில் ஓர் அற்புதமான நூலை எழுதியவர். நடுநிலையாளர், வழக்கறிஞர், மூத்தவர், எனவே அவர் நடுவராகப் பொறுப்பேற்ற நிலையிலே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

விவாதத்தில் அண்ணா அவர்களும், ஈழத்தடிகளும் இரா.பி.சேதுப்பிள்ளை, சீனிவாசன், ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் அன்றைக்கு சட்டக்கல்லூரி மாணவராக இருந்தவர் வேணுகோபால். அன்றைக்கு மாணவருக்கு அமைச்சர் என்று பெயர். அந்த வேணுகோபால் யார் என்று சொன்னால், பிற்காலத்திலே நம்முடைய பெரியார் திடலிலே பலமுறை உரையாற்றியவர் நீதியரசர் வேணுகோபால் அவர்கள் ஆவார்கள். அவர் சென்னை சட்டக் கல்லூரி மாணவராக இருந்த பொழுதுதான் இந்த ஏற்பாட்டை செய்தவர்.

தீ பரவட்டும்!

தீ பரவட்டும் என்ற நூலில் இருந்து செய்தியைப் படிக்கின்றேன். சட்டக் கல்லூரித் தமிழ்க் கழக அமைச்சர் தோழர் வேணுகோபால் தலைவரைப் பிரேரேபிக்கையில் பெரியோர்களே! தமிழருக்குச் செல்வம் போன்ற கம்ப இராமாயணம், பெரியபுராணம் ஆகிய நூற்களைக் கொளுத்த வேண்டும், அல்லது அழிக்க வேண்டும் என்று பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் கூறியது கேட்டு தமிழ்மக்கள் கோபம் கொள்வது இயற்கை.

ஆனால், சுயமரியாதைக்காரர்களின் தீர்மானத்தைப் புறக்கணிப்பது கூடாது. ஆகவே அது பற்றி அவர்களின் கருத்தை அறிய, தோழர் சி.என்.-அண்ணாதுரை அவர்களை அழைத்துள்ளோம். அவர் இந்திரசித்துக்குச் சமம் என்று கூறுவேன். (எவ்வளவு சுருக்கமாக அழகாக நீதியரசர் வேணுகோபால் அவர்கள் குறிப்பிடுகிறார் பாருங்கள்).

அவருரையை மறுத்துப் பேச, திருவாளர் சேதுப் பிள்ளை அவர்கள் இராமபிரான் போல் வந்திருக்கிறார்கள். இதற்கு நடுநிலைமையாளராக இருக்க, ஜனக மகாராஜனைப் போல உயர்திரு இராமச்சந்திரஞ் செட்டியார் அவர்கள் வந்திருக்கிறார்கள். விவாதம் மிக மேலான முறையினதாக இருக்க வேண்டுமென விழைகின்றேன் என்று கூறினார்.

எதிரிகளை ஈர்க்கக் கூடியவர் அண்ணா!

அண்ணா அவர்கள் எதிரிகளைக் கூட தனது பேச்சாற்றலாலும், பண்பாலும் அரசியல் நாகரித்தாலும் எப்பொழுதுமே மற்றவர்களை தன்பால் ஈர்க்கக் கூடியவர்கள். மற்றவர்களை கவர்ந்துவிடக்கூடிய ஆற்றல் அண்ணா அவர்களுக்கு இயல்பாக அமைந்த ஒன்று. (தமிழர் தலைவர் உரையிலிருந்து)

அண்ணா அவர்கள் விவாதத்தில் பேச்சைத் துவக்குகிறார்கள். அண்ணா அவர்களின் புகழ்பெற்ற விவாதங்கள் என்று என்னுடைய பேச்சின் தலைப்பே ஏறத்தாழ அண்ணா அவர்களுடைய மறுவாசிப்பாகத்தான் இதிலிருக்கும். ஆகவே, என் உரையில், இடையிடையே பெரிய, பெரிய விளக்கங்களை எல்லாம் சொல்ல ஆரம்பித்தால், அது குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாகவோ, அல்லது குறிப்பிட்ட தலைப்பிலே அடங்கக்கூடியதாக இல்லாமல் எங்கெங்கோ அழைத்துப் போகக்கூடிய அளவில் இருக்கும் என்ற காரணத்தினாலே இந்தச் சுவை குன்றிவிடக்கூடாது.குறைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். பெரும்பாலும் அண்ணாவின் மறுவாசிப்பாக நிகழ்ந்த நிகழ்வினை மீண்டும் ஒரு முறை ஆங்கிலத்திலே Reply என்று சொல்லுவார்கள் அல்லவா?

இந்த நூலில் ( தீ பரவட்டும்) உள்ளதை அப்படியே படிக்கின்றேன். இது அறிவார்ந்த அரங்கம். எனவே விளக்கங்கள் எதுவும் தேவைப்படாது என்பதே என்னுடைய பணிவன்பான கருத்தாகும். அண்ணா பேசுகிறார்!

அண்ணா அவர்கள் பேசுகிறார்: அமைச்சர் (இங்கே அமைச்சர் என்றால் வேணுகோபால் அவர்களை அண்ணா அவர்கள் குறிப்பிடுகின்றார்) கூறிய வண்ணம், நான் இந்திரஜித்தன், ஏதோ மாயாஸ்திரங்களை ஏவுவேன் என்று கருதி விடத் தேவையில்லை.

இன்று நடைபெறப் போவது யுத்த காண்டமுமல்ல. எனக்குப் பிறகு பேச இருக்கும் நண்பர் தோழர் சேதுப்பிள்ளை அவர்கள், புராணப் பண்டிதர்கட்கும் பகுத்தறிவாளர்களுக்குமிடையே உள்ள பிளவை, தமது பெயருக்கேற்ப சேதுபந்தனம் செய்தல் வேண்டும், அணைகோலல் வேண்டும் என்ற அவாவுடையேன்.

(அண்ணா அவர்கள் எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார் பாருங்கள்) இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களே கொஞ்சம் கோபமாக உட்கார்ந்தால் கூட அவரையும் ஈர்க்கிற மாதிரி அண்ணா அவர்களுடைய அணுகுமுறை எவ்வளவு சிறப்பாக இந்த இடத்திலே இருக்கிறது பாருங்கள்).

விவாதங்கள் என்றால் நான் வெகுண்டு விடுபவனல்லன் வரவேற்பவனே. அதிலும் கற்றுணர்ந்த நம் சேதுப்பிள்ளை அவர்களிடம், தமிழ்ப் பெரியாரும், சைவத் திருவினருமான தோழர் இராமச்சந்திரஞ்செட்டியார் அவர்களின் தலைமையில் நீதிமன்றங்களுக்கு நீதிமான்களையும், நீதியுரைப் போரையும் தயாரித்துத்தரும். சட்டக்கல்லூரி மன்றத்தில் விவாதம் நிகழ்த்துவது மிக்க சந்தோஷம். விவாதம் மிக மேலான முறையினதாக இருக்கும்.

இராமாயணம், பெரியபுராணம் முதலியவற்றைக் கண்டித்தால், அறிவிற் சிறந்தோர் கூடியுள்ள இங்கு நாங்கள் கண்டிப்பது அவைகளிலே புகுந்துள்ள பொய்மைகள், ஆபாசங்கள் ஆகியவற்றையே என்பதை அறிவர்.

ஆத்திரக் கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது

சாதாரண மக்கள் கொண்ட கூட்டத்திலே இராமாயணத்தைக் கண்டிக்கின்றனர் என்றால், உடனே ஆத்திரப்படுவர். (அண்ணா அவர்கள் எவ்வளவு அழகாக மற்றவர்களைத் தன்வயப்படுத்துகிறார் பாருங்கள். எதிரே அமர்ந்திருக்கிற மக்கள் பாமர மக்கள் அல்லர். நீங்கள் அறிவார்ந்த ஆற்றல் உள்ளவர்கள். எனவே அறிவு கொண்டு சிந்திக்க வேண்டிய விசயங்களை ஆத்திரக்கண்ணோட்டத்தோடு எடை போட்டுப் பார்க்கக் கூடாது என்ற நல்ல பீடிகையோடு அண்ணா அவர்கள் துவக்குகிறார்கள்.)

வழக்கொன்றுண்டு; இராமகாதை படிக்குமிடந்தோறும் அனுமன் வந்திருப்பான் என்று இராமாயணக் கண்டனம் என்றதும், ஆர்ப்பரிக்கும் அனுமன் இங்கு இரான். ஆகையினால் விவாதம் மிக மேலான முறையிலேயே செல்லும் என்று கூறுகிறேன்.

மக்களுக்கு கோபம் வருவது இயற்கை

கம்ப இராமாயணம், பெரியபுராணம் ஆகியவற்றைக் கொளுத்த வேண்டும் என்று எனது தலைவர் ஈ.வெ.ராமசாமி கூறியது கண்டு மக்களுக்குக் கோபம் வருவது இயற்கை என்று அமைச்சர் உரைத்தார். (வேணுகோபால் உரைத்தார்) உண்மை. மக்கள் கோபிப்பர் என்பதை நாங்களறிவோம். நாங்கள் துவக்கிய எக்கருத்துக்கும் எதிர்ப்பு ஏற்பட்டு, மக்கள் கோபித்துப் பின்னர் எம்முடன் சேர்ந்து எமது பாசறைகளுக்கு வந்துற்றனர் என்பதை அவர் அறிய வேண்டுகிறேன். (கைதட்டல்) (இது தான் சுயமரியாதை இயக்கத்தின் வரலாறு. நீதிக்கட்சி இயக்கத்தின் வரலாறு. மக்களுடைய உள்ளத்தை தொடக்கூடிய கருத்துகள் இவை. மேலும் அண்ணா சொல்லுகிறார்)

ஆனால் யாரையும் புண்படச் செய்ய வேண்டுமென்பதற்காக இக்காரியத்தைத் துவக்கினோமில்லை. கலையை அழிக்கின்றனர். கம்பன் புகழை மறைக்கின்றனர் என்று கூறப்படும் பழிச்சொல்லை நாங்களறிவோம். கலையிலே தேர்ந்து, அதிலே ஆழ்ந்த நமபிக்கை கொண்டு, கம்பனின் இராமாயணமும், சேக்கிழாரின் பெரிய புராணமும் கலை என்று கருதும் அன்பர்கள், ஒரு பெரியாரின் பேரால், ஓர் அண்ணா துரையின் அனலால் அக்கலை அழிந்துவிடும் என்று கருதுவரேல் அவ்வளவு சாமான்யமானது கலையாகாது. அத்தகைய கலை இருத்தலுமாகாது என்றுரைக்க ஆசைப்படுகின்றேன். கலையைக் குலைக்கும் செயலல்ல எமது செயல். கலையிலே புரட்சி உண்டாக்க விழைகின்றோம், தக்க காரணங்களோடு. (இப்படித்தான் அண்ணா அவர்களுடைய உரையின் அமைப்பும், எழுத்துக்களின் அமைப்பும் இருக்கும்)

கலை ஓர் இனமக்களின் மனப்பண்பு இவ்வின மக்களிடைய தோன்றும் தெளிவு, வீரம் ஆகியவற்றின் எடுத்துக்காட்டு. எனவே, கலை இன வளர்ச்சிக்கு ஏற்றபடி மாறியும் விரிந்தும் வருமென்பதே நுண்ணறிவினரின் துணிபு, கலை உலகில் அவ்வப்போது மாறுதல் உண்டாகும் இனத்துக்கோர் கலையும், இடத்தின் இயல்பு, தட்பவெப்பம் ஆகியவற்றுக்கு ஏற்ற முறையிலும், கலை உண்டாகும் வளரும், மாறும், (கலையைப் பற்றி இவ்வளவு அழகான ஒரு வரையறையை யாராலும் சொல்ல முடியாது. அண்ணாவின் எழுத்துக்கள் என்றைக்கும் கல்லில் செதுக்கப்பட்டவைகள் போல இருக்கும்.

அண்ணா அவர்கள் ஒரு தத்துவத்தை முதலிலே சொல்லி அதை எல்லோரும் விளங்கிக்கொள்ளக் கூடிய உவமைகளை சரளமாக எடுத்து வைக்கின்றார்கள்.)

அரபு நாட்டுக் கலையிலே தென்றலைப் பற்றிய கவிதைகள் அதிகமிருக்க முடியாது. எஸ்கிமோ நாட்டுக் கலையிலே, கதிரோனின் ஒளி பற்றிய கவிகள் அதிகமிராது. ஆப்பிரிக்கா நாட்டு ஜூலு வகுப்பினரின் கலையிலே, அவர்களின் நாட்டியம் கவியிலே இருக்கும். அது போலவே ஆரியக் கலையிலே கங்கையின் கவர்ச்சியும், கரையோரக் காட்சியும் சோலை மாட்சியும் என்பன போன்றவைகள் கவிதைகளாக இலக்கியமாக இருக்கும். ----------------- (தொடரும்)


-------------------------"விடுதலை" 30-10-2009


0 comments: