Search This Blog

3.11.09

புராணங்களை கொளுத்த வேண்டும் ஏன்?

பிள்ளைக்கறி கேட்பது, பெண்டை அனுப்பச் சொல்வது,
கண்ணைப் பறிப்பது இதுதான் புராணங்களின் யோக்கியதை
அண்ணா புராணங்களை கண்டித்ததை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆதாரத்துடன் விளக்கம்

பிள்ளைக்கறி கேட்பதும், பெண்டை அனுப்பி வைக்கச் சொல்வதும், செய்வதுமான கடவுட் சோதனைகள் இங்கு மட்டுமே உள்ளன. அதனால்தான் இப்புராணங்களைக் கண்டிக்கிறோம் என்று அண்ணா அவர்கள் கூறிய கருத்தை எடுத்துக் காட்டி தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்க மளித்தார்.

சென்னை பெரியார் திடலில் 31.8.2009 அன்று மாலை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவை ஒட்டி அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற விவாதங்கள் என்ற தலைப்பில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய ஆய்வுரையின் 1.11.2009 அன்றைய தொடர்ச்சி வருமாறு:

சுயமரியாதைக்காரர்களாகிய எங்களின் வர்ணனையை நம்ப வேண்டாம். கோயில்களின் நிலைமை பற்றிக் காந்தியார் கூறியுள்ள கடுமையான மொழியையும் கவனிக்க வேண்டாம். (ஆலயத்தின் நிலை என்ன என்பதைப் பற்றி மயிலத்தில் ஒரு கூட்டத்தில் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தவர் பேசியிருக்கிறார். அதை எடுத்து அண்ணா அவர்கள் கையாளுகின்றார்). சைவப் பெரியார் ஒருவர் ஆலய நிலைமை பற்றிக் கூறியுள்ளதைப் படிக்கின்றேன் கேளுங்கள்.

ஆலய நிலைமை

செடி கொடிகள் முளைத்த கோபுரங்கள், இடிந்த மதில்கள், முள்முளைத்த பிரகாரங்கள், குப்பைகள் நிறைந்த மண்டபங்கள், ஆடு, மாடு மேய்ந்த தளவாடங்கள், பாசி படர்ந்த தடாகம், பொரி கடலை சிந்திய படிகள், இருண்டு வவ்வால் புழுக்கை நிறைந்த மண்டபங்கள், தடுக்கி விழக்கூடிய நடைபாதை, எண்ணெய் சிந்தியபடி, அது தடவிய சுவர், மினுக்கு மினுக்கெனும் தீபம், புகை நிறைந்த உள்பக்கம், புகை தூசி விழும் தளம், நாற்றம் வீசும் தீர்த்தத் தொட்டி, புழுக்கள் உறையும் ஆவுடையார், கரப்பான் உலவும் திருமேனி, பெருச்சாளி, (சிரிப்பு) பூனை வசிக்கும் கர்ப்பக்கிருகம், அழுக்கு அகலா மேனியும், பொடி முதலிய லாகிரி நுகரும், திருமூக் கும் வாயும் கொண்ட திருமேனி தீண்டுவார் முதலிய அநேக புனிதங்களையும் காணாமல், ஆலயம் செல்லும் ஓர் அன்பன் தன் வீட்டிற்குத் திரும்பினால் அவன் பாக்கியமே பாக்கியம்.

(கோவில் காட்சியை இவ்வளவு அழகாக கோவைக் கிழாரைத் தவிர வேறு யாரும் வர்ணிக்க முடியாது. அவர்தான் இந்தக் கூட்டத்திற்குத் தலைவர். அவர் பேசியதையே அண்ணா அவர்கள் கையாள்கிறார்.)

மயிலம் சொற்பொழிவின் ஒரு பகுதி

இது, இன்று நமது கூட்டத்திற்குத் தலைமை வகித்துள்ளவர், மயிலத்திலே ஆற்றிய சொற் பொழிவின் ஒரு பகுதி. சைவப் பெரியாரின் இவ்வர்ணனையைப் படித்துக் காட்டியதன் காரணம், கலையிலே நாங்கள் கைவைப்பதால் மக்களின் ஒழுக்கமும், பண்பும் போய்விடும் என்று கூறிகின்றார் களே, நாங்கள் ஏதும் செய்யாதிருக்கையிலே மெய்யன்பர்கள் ஏன் இத்தகைய சீர்கேட்டை ஆலயங்களிலே புகுத்தினர் என்பதை யோசியுங்கள் என்று கேட்டுக் கொள்வதற்கேயாகும்.

இனத்தைத் தாழ்த்தும் கருத்துரைகளை நாங்கள் கண்டிக்கவே, பெரிய புராணத்தையும் கண்டிக்கிறோம். அந்தப் புராணத்திலே வரும் அடியவர்களின் கதையினால் ஏற்படும் கடவுட் கருத்துரைகள் எவ்வளவு அறிவீனமாக இருக்கிறது என்பதைப் பாருங்கள். பக்திக்காக அடியவன் ஏதும் செய்வான் என்று அவன் பெருமையைக் கூறிப் பெரிய புராணம் எழுதப்பட்ட தென்றால், ஆண்டவன் இத்தனை கடுமையும், கொடுமையும் நிரம்பிய சோதனைகளைச் செய்தார் என்று கூறுவது கடவுள் இலக்கணத்துக்கே இழிவைத் தராதா என்று கேட்கிறேன்.

உலகிலே எந்நாட்டிலும் எந்தப் பக்திமானுக்கும் நேரிடாத சோதனை, இங்கு மட்டும் நேரிடக் காரணம் என்ன? ஆண்டவனுக்குமா இந்நாட்டி னிடம் ஓரவஞ்சனை? மற்ற எங்கும் நேரிடாத நிகழ்ச்சி, துர்பாக்கியம் மிகுந்த இந்நாட்டில் மட்டுந்தானே நடந்திருக்கிறது?

பிள்ளைக்கறி கேட்பதும்!

பிள்ளைக்கறி கேட்பதும், பெண்டை அனுப்பி வைக்கச் சொல்வதும், கண்ணைப் பறித்துக் கொடுக்கச் செய்வதுமான கடவுட் சோதனைகள் இங்கு மட்டுமே உள்ளன. காரணம் என்ன? இவைகளைப் படித்து நம்பும் மக்களின் மனப்பான்மை எவ்வளவு கெடும் என்பதைக் கண்டே, நாங்கள் பெரிய புராணத்தைக் கண்டித்திருக்கிறோம். இத்தகைய புராணங்களால் மக்களின் அறிவு பாழ்படுவதைக் கண்டே, நாங்கள்அப்புராணங்களைக் கண்டிக்கின்றோம்.

(இவைகளை நம்பலாமா? என்று அண்ணா அவர்கள் கேட்டுவிட்டு தன்னுடைய வாதத்தை முடிக்கும் பொழுது சொல்லுகிறார்.)

கொளுத்துக என்று கூறுகிறோம். இவைகட்குச் சேதுப்பிள்ளை சமாதானம் கூறியபின், எனது மறுப்புரை கூறும் சந்தர்ப்பம் கிடைக்குமென்று நம்புகிறேன்.

இராமன் அம்பு எய்ததுபோல

பண்டிதர்கள் எங்களைப் பற்றித் தவறாக எண்ணி வருவது சரியல்ல. அவர்களுக்கு நாங்களே துணை. எமக்கு அவர்கள் அரண். நம்மிருவருக்குள் பகை மூட்டி, இராமன் மரத்தின் மறைவிலிருந்து அம்பு எய்தது போலச் செய்ய ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது என்பதைக் கவனமூட்ட விரும்புகின்றேன். மக்களிடம் இத்தகைய புராணங்கள் கற்பனை என்பது எடுத் துரைக்காது, அவர்கள் மனப்பாங்கைக் கெடுப்பதன் பலனாக, மக்களின் நிலை கெட்டுவிட்டது. திருமூலர் வேறொரு விஷயத்துக்காகக் கூறினார். குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளாது; குருட்டுக் குருவைக் கொண்டு, குருடுங் குருடுங் குருட் டாட்டமாடிக் குருட்டில் வீழ்ந்தனர் என்றுரைத்தார். நமது மக்களின் நிலைமை அதுவாக இருப்பதை உணருங்கள் என்று பேசி முடித்தார்.

அண்ணா அவர்கள் பேசி முடித்தவுடனே தோழர் சேதுப்பிள்ளை எழுந்தார். அண்ணா அவர்களுக்கு மக்கள் மத்தியிலே நல்ல வரவேற்பு. ஏனென்றால் இந்தப் பழைய கதை தெரிய வேண்டும். நேற்று நடந்ததையே இன்றைக்கு மறந்து விடுகின்றார்கள். நேற்று இருந்த கஞ்சா சாமியாரை இன்றைக்கு மறந்து விடுகின்றான். முந்தாநாள் நடந்த குழந்தைகள் கொலைபற்றியே கவலைப்படவில்லை. திரும்பத் திரும்பச் சொன்னால்தான் நம் மக்களுக்கு நினைவில் நிற்கும். (தந்தை பெரியார் சொல்லுவார்:.

கடவுளுக்கே ஏன் இத்தனை தரம் தொழவேண்டும் என்று வைத்திருக்கிறான் என்றால், விட்டால் அவனையே (கடவுளை) மறந்து விடுவான் என்பதற்காகத் தான் நாள் தவறாமல், வாரம் தவறாமல் வணங்கிக் கொண்டே இருக்கின்றார்கள் என்று சொல்லுவார்.) சேதுப்பிள்ளை அவர்கள் அண்ணா அவர்களுடைய, வாதத்திற்கு மறுப்பு சொல்லுகின்றார்.

இரா. பி. சேதுப்பிள்ளை மறுப்பு

தோழர் அண்ணாதுரை அவர்களின் பொருளழகும், சொற்சுவையும் பொருந்திய நீண்ட பிரசங்கத்தைக் கேட்டு இன்புற்றீர்கள். அவர் போன்ற பெரியார்களிடம் விவாதிப்பது மிக இன்பமானதாகும். ஆனால், அவர் மிக நீண்ட நேரம் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகப் பேசினார். தமது வாதம் வலுவற்றதானதால், பொய்யை மெய் போலாக்க இவ்வளவு நேரம் பேச வேண்டி நேரிட்டதோ என்று அய்யுறுகிறேன். (இவர் இப்படி சொன்னதைக் கேட்டு எல்லோரும் சிரிக்கிறார்கள்.)

நான் நீண்ட நேரம் பேசப்போவதில்லை. பத்து நிமிடங்கள் பேசுவேன். உங்கள் பொறுமையைச் சோதிக்கும் எண்ணமுடையேனல்லன். நண்பரவர்கள், பழந்தமிழ் நூற்களை எடுத்துக் கூறினார். கண்ணகியை என் மரபினர் என்று பெருமிதத்தோடு கூறினார். கோப்பெருஞ்சோழனுக்கும், பிசிராந்தையாருக்கும் இருந்த நட்புப் பற்றி நன்றாக உரைத்தார். அவருடைய நீண்ட வாதத்தை நான் மறுக்க முன் வந்துள்ளேன்.

இராமயணம் ஆரிய - திராவிடப் போராட்டங்களா?

இராமாயணம் ஆரிய - திராவிட போராட்டக் கதை என்று வடநாட்டிலுள்ள ஒரு பண்டித ஜவஹரும், தென்னாட்டுச் சுந்தரம் பிள்ளையும்; இடையே உள்ள வி.பி.சுப்பிரமணிய முதலியாரும் கூறினர் என்று கூறினார். நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்று கூறிய நக்கீரர் பரம்பரையல்லவா இவர்! இவர், நான் கூறுகிறேன், இது என் கருத்து என்று கூறினால் பொருந்தும்.

வடநாட்டு ஜவஹரின் ஆதாரத்தைக் காட்டு வானேன்? இராவணன் திராவிடன் என்று அவர்கள் கூறினார்கள். திராவிடன் என்ற சொல், ஆன்றோர் கூறினதல்ல. திருஞானசம்பந்தரும், ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்றே கூறினார். திராவிடம் என்பதும் தமிழன் என்பதன் சிதைவு மொழியே என்பாருமுளர். இராவணன் திராவிடன் _- தமிழன் என்பதை நான் மறுக்கிறேன்.

இராவணனுடைய குணங்களை அவர்கள் நன்றாக எடுத்துரைத்தார்கள். இராவணன் திறமைசாலி, கல்விமான், சிவபக்தன், ஆற்றல் மிக்கவன் என்று அவர்கள் கூறிய அளவு குணங்களும் இருந்தன. ஆனால், ஒன்று இல்லை. அவன் அழிவுக்கு அதுவே காரணம். அது அவனிடம் இல்லை; அவனாண்ட நாட்டிலும் இல்லை.

இரக்கமென்ற ஒரு பொருளிலா அரக்கன்!

இதனைக் கம்பர் அழகுறக் கூறுகிறார். இரக்க மென்ற ஒரு பொருளிலா அரக்கன் என்றுரைத்தார். இராவணனிடம் எல்லாமிருந்தது; இரக்கம் ஒன்றுதான் இல்லை. (இதுதான் சேதுப்பிள்ளை வாதத்தில் மிக முக்கியமானது.)

அது ஒன்று மட்டும் இருந்திருப்பின், அவனை அழித்திருக்கவே முடியாது. இரக்கமற்ற நெஞ்சினை, இராவணனைத் தன் மரபு என்று கூறுகிறாரே இவர்! தமிழர் இரக்கமற்ற நெஞ்சினரா என்று கேட்கிறேன். இராவணன் சிவபக்தனாக இருந்தும், கைலை மலையை, தான் வழிபடும் சிவபெருமான் இருப்பிடமெனத் தெரிந்தும், மலையையே பெயர்த்தெடுத்தான். இவனா சிவபக்தன்? பின்னர் வேதம் பாடினான். என்ன வேதம்? சாம வேதம் பாடி, சிவபிரானிடம் யாவரையும் கொல்ல நீண்ட வாளும் பெற்றான்.

இராவணன் மாறுவேடம் எடுப்பவனாயிற்றே...

இராவணன் பேசியது, தமிழன்று; அவன் பேசியது ஆரியம். சீதையைத் தேடிச் சென்ற சொற் செல்வன் அனுமன், அசோகவனத்திலே சீதையைக் கண்டு, மரக்கிளையிலமர்ந்து யோசித்தான், எம்மொழியிற் பேசுவது என்று. ஆரிய மொழியிலே பேசினால், இராவணன் தெரிந்து கொள்வானே என்று கம்பர் கூறுகிறார். இராவணன் மாறுவேடம் எடுப்பவனாயிற்றே, அவனே குரங்கு போல் வந்தானோ? என்று சீதை சந்தேகித்தால் என்ன செய்வது என்று எண்ணியே, அனுமன் வடமொழி பேசவில்லை என்றார் கம்பர். இராவணன் பேசியது ஆரியமொழி. நண்பர் அண்ணாதுரை அவர்கள் கூறினாரே தேவபாடை என்று அதுதான். மேலும் இராவணன், என்ன மரபு என்பது குறித்துப் பார்க்குங்கால், அவன் புலஸ்திய மரபு என்கிறார் கவி. புலஸ்தியன் ஆரியன். ஆகவே, இராவணன் ஆரியனே! இராவணனைக் கொன்றதால் இராமனுக்குப் பிரம்மஹத்தி வந்த தென்றும், அதைப் போக்கவே இராமன் சிவலிங்க பூஜை செய்தானென்றும் தேவாரம் செப்புகின்றது. இராவணன் பிராமணனில்லை என்றால் பிரம்மஹத்தி எங்ஙனம் வரும்? ஆகவே, நான் நண்பரின் வாதத்தை மறுக்கிறேன்.

கம்பன் எழுதிய கதை

கம்பனின் காலம், தமிழ்நாடு சீர்குலைந்திருந்த காலம். எனவே, அவர் மக்களுக்குப் பெருமையை உணர்த்த ஒரு நூல் இயற்றக் கருதினார். எல்லா மக்கட்கும் தெரிந்த ஒரு கதையை எடுத்து, அதிலே தமிழ்நாட்டுக் கலைச்செல்வத்தை அமைத்தார். கம்பரின் கவியால், சீதை நமக்கு ஒரு தமிழ் மங்கை யாகவே தென்படுவது காண்போம். இராமன் வில் முறித்துச் சீதையை மணந்தான் என்கிறார் வால்மீகி.

கம்பனோ தமிழருக்கு காதல் மணத்தைக் கூறலே சிறப்புடைத்து என்று எண்ணினார். அவர்கள் கூறியதுபோல, அகப்பொருள் தோன்றிய நாடு தமிழ்நாடு. காதல் இன்றேல் சாதல் என்பதை நாட்டிய நாடு இது. எனவே, இராமனும், சீதையும் ஒருவரை ஒருவர் கண்டு காதலித்தனர் என்று கூறுகிறார்.

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக் கினாள் என்றார் கம்பர். கண்ணைக் கண் கவ்விற்று என்று கூறுகிறார். இங்கு நாம் தமிழ்நாட்டு மாண்பு காண்கிறோம். கண்ணகி குறித்து அவர்கள் சொன்னார்கள். சிலப்பதிகாரத்தின் தன்மையைச் சொன்னார்கள். பத்தினியின் பெருமையை உணர்ந்த கம்பர், கண்ணகி பற்றி இளங்கோ கூறிய கற்பின் மாட்சிமைகள் ததும்பச் சீதையைச் சித்தரிக்கிறார். கம்பரின் சித்திரத்தலே, கண்ணகி எனும் தமிழ்நாட்டுப் பத்தினியின் உருவைக் காண்கிறோம். எனவே, தமிழருக்குக் கம்ப இராமாயணம் செல்வம் போன்றதாகும். குற்றங்குறையுடைய ஆரியப் பாத்திரங்களைக் கம்பர் தீட்டுகையில், பூசி மெழுகினார் என்று என் நண்பர் உரைத்தார். சிறியோர் செய்த சிறுபிழை பொறுத்தல் பெரியோர் கடன். கம்பரின் பெருந்தன்மையை அது காட்டுகிறது. இராவணனிடம் வீரமும், மானமும் இருந்தது; இரக்கமில்லை. ஆணவத்தால் அழிந்தான். மற்றொரு முறை இவ்விஷயமாக நண்பர் அழைப்பின் காஞ்சிபுரம் சென்றே இது குறித்துப் பேசுவேன். இராவணனைத் திராவிடன் என்பதை நான் மறுக்கிறேன் என்று இப்படிச் சுருக்கமாகப் பேசிவிட்டு, நான் நீண்டநேரம் பேச முடியாமைக்கு வருந்துகிறேன். காரணம் என்னவென்றால் மருத்துவர் கூற்றால் நான் மருந்து சாப்பிடப் போக வேண்டியிருக்கிறது, நேரமாகிவிட் டது என்று கூறிப் புறப்பட்டார்.

உடல்நிலை சரியில்லை என்று கூறி

அண்ணா அவர்களுடைய வாதங்கள் எவ்வளவு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன? அந்த வாதங் களுக்குப் பதில் சொன்னாரா? என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்கவேண்டும். அண்ணா அவர்கள் மீண்டும் பேசி பதில் சொல்லுகின்றார்.

தோழர்களே, தோழர் சேதுப்பிள்ளை அவர்கள் உடல் நலம் சரியில்லை என்று என்னிடம் கூறிவிட்டு விடைபெற்றுக்கொண்டு போய்விட்டார்கள். எனவே, விரிவான பதில் கூறவில்லை. மேலும் அவர், நான் எடுத்துக்காட்டிய கலை இயல்பு, இன இயல்பு, ஆரியக் கலையால் தமிழர் கெட்டது முதலியவற்றுக்கு ஏதும் பதில் கூறாது, சிக்கலை அவிழ்க்க முடியாதபோது கயிற்றை அறுத்துவிடு என்பதுபோல, இராவணனை ஆரியன் என்றே கூறினார்கள். (அண்ணா சொல்லு கிறார் பாருங்கள். சிக்கலை அவிழ்க்க முடியாத பொழுது கயிற்றை அறுத்துவிடு என்று சொல்வதைப்போல என்று உதாரணத்தோடு சொல்கின்றார்.)

அது வாதமுமல்ல, ஆதாரமும் கிடையாது. அது அவர் மனத் துணிவுரை. வாதத்திலிருந்து நழுவவே இங்ஙனம் செய்தார். பண்டித ஜவஹரின் ஆதாரத்தை நான் காட்டுவதா என்று கேட்டார். அதிலுள்ள அரசியல் நையாண்டியை நீங்களறிவீர்கள். பண்டித ஜவஹரின் அரசியல் கருத்துக்கு மாறுபாடுடையேன் நான்; எனவே, அதைக் கூறுவதா என்று கேட்கிறார்.

---------------------------தொடரும்...."விடுதலை" 4-11-2009

2 comments:

குழலி / Kuzhali said...

வணக்கம் தமிழ் ஓவியா அய்யா,

திராவிடர் கழகத்தின் வர்ணாசிரம தலைமையும் மானங்கெட்ட மானமிகுகளும் என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியுள்ளேன், உங்கள் மேலான கருத்துகளை எதிர்பார்க்கிறேன்...

http://kuzhali.blogspot.com/2009/11/blog-post_03.html

கே.பாலமுருகன் said...

அருமையான பதிவு தமிழ் ஓவியா, மூட நம்பிகைகள் மறைந்துவிட்டதாக ஒரு தவறான கற்பிதம் நிலவுகிறது. ஆனால் இன்றளவும் வேதங்களிலும் புராண ஒழுக்கங்களிலும் பெரும் அரசியல் கட்டமைப்புகளுடன் பலர் ஒளிந்திருக்கிறார்கள் என்பதே உண்மை.