Search This Blog

8.11.09

திராவிடர் கழகம்தான் எங்களுக்கு உயிர் நாடி

தமிழினத்திற்காகவே உழைத்து வருபவர் தமிழர் தலைவர்

டாக்டர் சோம.இளங்கோவன்

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன் (தந்தை பெரியார் குரலை பேச்சில் பிரதிபலித்தார்) தனது உரையில் குறிப்பிட்டதாவது:

பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கூட்டம் போட்டிருக்கிறீர்கள். இத்தனை வருடமாகத் தொடர்ந்து நடத்தி வருவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

பகுத்தறிவாளர்கள் என்றால்...

பகுத்தறிவாளர்கள் என்பவர்கள் அரசியலில் இருக்கலாம், அரசாங்கத்திலும் இருக்கலாம். கருப்புச் சட்டை போட்டால் வேலை போய்விடும் என்று சிலர் பயப்படுகிறார்கள்; அல்லது வேலையை விட்டுப் போ என்று சொல்வார்கள் என்று பயப்படுகிறார்கள். அப்படி யாரும் பயப்படத் தேவையில்லை. பகுத்தறிவாளர்கள் என்றால் மரியாதையாக நடப்பவர்கள் என்று பொருள்.

நமது மக்கள் சாமி, கோயில் என்று சொல்லி பார்ப்பனரிடம் பொருளைக் கொட்டி அழுது நமது மூளையை அடகு வைத்து விடுகிறார்கள்.

நமது மக்கள் படித்தால் மட்டும் போதுமா? புத்தியிருக்கவேண்டாமா? புத்தியைப் பயன்படுத்தி எது சரி? எது தப்பு? என்று பார்க்கவேண்டாமா?

நான் வேண்டிக் கொள்வது, நமது பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடத்திலே இளைஞர்கள் கொண்டு செல்லவேண்டும்.

ஒலிம்பிக் போட்டி விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள போகிறவன் சாமி கும்பிட்டுவிட்டுப் போகிறான். சாமியா அவனுக்கு பரிசை வாங்கித் தருகிறது? சாமி, கடவுளை கும்பிட்டதால் என்ன பலன் ஏற்பட்டது?

தமிழினத்தின் இதயமாக...

தமிழினத்தின் இதயமாக நமது தமிழர் தலைவர் அவர்கள் அவருடைய இதயத்தைப்பற்றிக் கவலைப்படாமல் ஓயாமல் ஓடி... ஓடி.... உழைத்துக் கொண்டிருக்கின்றார்.

அவர் நாள்தோறும் மக்களுக்காக உழைக்கிறாரே, அந்த மாதிரி நாம் உழைக்கவேண்டாமா? அதற்கு நாம் திட்டம் போட்டு அவரைப் போல் சமுதாயத்திற்கு ஏதாவது நம்மால் ஆனதை செய்யவேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் வரவேண்டும்.

நீங்கள் எண்ணிய அதன்படி நடக்கவேண்டும். நான் இன்னது செய்யப் போகிறேன் என்று சொல்லுங்கள். அதற்கு நம்முடைய தமிழர் தலைவர் வழிகாட்டுவார். அப்படி செய்தால்தான் நாம் வளருவோம்.

விடுதலையில் வருகின்ற செய்தி

விடுதலையில் வருகின்ற செய்திகளை மட்டும் படித்தால் போதும். அதை வைத்தே பிஎச்.டி. ஆராய்ச்சிப் பட்டத்தைப் பெற்றுவிடலாம். விடுதலையில் எவ்வளவோ நல்ல செய்திகள், சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய செய்திகள் வருகின்றன. அவை அனைத்தும் மக்களிடம் போய்ச் சேர வேண்டாமா? அப்படி போனால்தானே மாற்றம் ஏற்படும்.

பெரியார் பயிற்சிப் பட்டறை


Periyar Work Shop- பெரியார் பயிற்சிப் பட்டறையை நாம் ஏற்படுத்தி மாதம்தோறும் விவாதிக்கவேண்டும். பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்களை அழைத்து அவர்களுக்கு இந்தக் கருத்துகளை கற்றுக் கொடுக்கவேண்டும். அதற்கு இளைய தலைமுறையினர் பாடுபடவேண்டும்.

நூல்கள் அன்பளிப்பு

நாம் திருமணம் போன்ற பல நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்பொழுது (Gift Pockets) அன்பளிப்பாக தந்தை பெரியார் கருத்துகள், தமிழர் தலைவரின் கருத்துகள் கொண்ட நூல்களை அவர்களுக்குக் கொடுக்கலாம். இணைய தளத்தின்மூலம் படிக்க நீங்கள் கற்றுக் கொள்ளவேண்டும். காலம் வளர்ந்துகொண்டிருக்கிறது. அந்த வளர்ச்சிக்கு ஏற்ப நம்மை நாம் மாற்றிக் கொள்ளவேண்டும். தெரிந்துகொள்ளவேண்டும்.

நாம் என்ன நினைக்கிறோம் என்பதை நம்முடைய தமிழர் தலைவர் அவர்களுக்கு எழுதி அனுப்புங்கள். அவர் எப்படி அதை செயலாக்க முடியுமோ? யாரிடம் சொல்லி அதை செயல்படுத்த முடியுமோ? அதை செய்வார். இவ்வாறு சோம. இளங்கோவன் உரையாற்றினார்.

--------------------------------*******---------------------------------

இந்தியாவில் சமூகநீதி ஏற்பட பல போராட்டங்களை நடத்தியவர்
டாக்டர் இலக்குவன் தமிழ்

பெரியார் பன்னாட்டமைப்பு வீரமணி சமூகநீதிக் குழுத் தலைவர் டாக்டர் இலக்குவன்தமிழ் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

திராவிடர் கழகம் உயிர்நாடி

உங்களை எல்லாம் காணும்பொழுது நான் மட்டமற்ற மகிழ்ச்சி அடைகிறேன். காரணம் நாமெல்லாம் ஒரு குடும்பம் என்பதைக் காணும்பொழுது அந்த மகிழ்ச்சி ஏற்படுகின்றது. திராவிடர் கழகம்தான் எங்களுக்கு உயிர் நாடி. அதனால் தான் இங்கே வருகிறோம். இல்லாவிட்டால் இந்தியாவுக்கு வரவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

இந்தியாவின்மீது பற்று ஏற்பட காரணம் எது என்றால், சமூகநீதியின் சின்னமாக திகழக்கூடிய, வேறு எவரையும் இந்த அளவுக்கு மதிப்பிட முடியாத தலைவராக விளங்கக்கூடியவர்தான் நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்கள். அவர்கள்மீது எங்களுக்கு அத்தகைய பாச உணர்வு உண்டு.

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற விழாவில் நம்முடைய தமிழர் தலைவர் அவர்களுடைய பெயராலே அமைந்த சமூகநீதி விருதினை வழங்க அமெரிக்காவிலிருந்து நானும், டாக்டர் சோம. இளங்கோவனும் வந்திருக்கின்றோம்.

ஆயிரம் ஜாதிகள், வேற்றுமைகள் உள்ள இந்த இந்திய நாட்டில் ஒற்றுமையோடு மக்கள் வாழ்வதற்கு அடிப்படை காரணமாக உழைத்தவர்கள் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் ஆவார்கள்.

பெரியாரும், அம்பேத்கரும்

தந்தை பெரியாரும், அம்பேத்கரும் இந்த நாட்டு மக்களைப் பக்குவப்படுத்தவில்லை என்றால், இந்த நாடு ஒரு பாகிஸ்தான்போல கொடுமையான நாடாக மாறியிருக்கும்.

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர் காந்தியார் என்றாலும், அவரை விட பலமடங்கு மரியாதையை தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கும் நாம் கொடுத்தாகவேண்டும்.

வங்காளம் போன்ற மாநிலத்தில் சமூகநீதியைப் புறக்கணித்ததால்தான் அங்கு மாவோயிஸ்ட்கள் தோன்றினார்கள்.

இந்தியா வளர முடியாது

சமூகநீதியை இந்தியா பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், இந்தியா வளர முடியாது. வல்லரசாகவும் முடியாது.

எல்லோருக்கும் சமூகநீதி கிடைத்தாகவேண்டும்.

சமூகநீதி எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் பெரியார் பன்னாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டது.

யார் சமூகநீதிக்காகப் பாடுபடுகின்றார்களோ அவர்களுக்கு ‘கி. வீரமணி சமூகநீதி விருது’ வழங்கப்படுகிறது. இந்தியாவில் சமூகநீதி ஏற்பட பல வகையான போராட்டங்களை நடத்தி அதற்காகப் பாடுபட்டவர் நம்முடைய தமிழர் தலைவர் ஆவார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக பத்து பேருக்கு கி. வீரமணி சமூகநீதி விருதை வழங்கியிருக்கின்றோம்.

அடுத்த விருது வெளிநாட்டுக்காரருக்கு..

சிங்கப்பூரில் பெரியார் பெருந்தொண்டர் மூர்த்தி, அதேபோல மியான்மா (பர்மா) நாட்டைச் சார்ந்த வீரா. முனுசாமி ஆகியோர்களுக்கு கடந்த ஆண்டுகளில் விருதுகளை வழங்கியிருக்கின்றோம்.

அடுத்த விருது ஒரு வெளிநாட்டுக்காரருக்குச் செல்லவிருக்கிறது.

நேற்று பெங்களூருவில் ரவிவர்ம குமார் என்பவருக்கு கி. வீரமணி சமூகநீதி விருதினை வழங்கினோம். அவர் அந்த விருதை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்துப் பேசினார். எனக்கு அதிகச் சுமையைக் கொடுத்துவிட்டீர்கள். அடுத்து நாம் மத்திய சட்ட அமைச்சரை சந்திக்கவேண்டும். அவரிடம் நாம் வலியுறுத்தவேண்டும். சுயமரியாதை திருமணத்தை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்துங்கள் என்ற கோரிக்கையை வைத்தாகவேண்டும் என்று சொன்னார்.

பிறருக்கும் உதவி செய்வோம்

மாறிவரும் சூழலில் மனிதநேயம், சமூகநீதி என்பது முக்கியம். நாம் பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

நம்மிடையே மிக முக்கியமான தேவை ‘‘நெட் ஒர்க்’’ இருக்கவேண்டும். இந்த நெட் ஒர்க் இருந்தால்தான் மாற்றங்களை நாம் சுலபமாக ஏற்படுத்த முடியும். இவ்வாறு இலக்குவன்தமிழ் பேசினார்.

--------------------நன்றி:-"விடுதலை"7-11-2009

0 comments: