தமிழ்நாடு என்று பெயர்சூட்டல், இருமொழித்திட்டம்,
சு.ம திருமண சட்டம்-இம்மூன்றும் அண்ணாவின் சாதனைகள்
தமிழர் தலைவர் எடுத்துக்காட்டி விளக்கினார்
குறுகிய கால அளவில் அண்ணா முதலமைச்சராக இருந்திருந்தாலும் அக்கால கட்டத்தில் ஆற்றிய மூன்று முத்தான சாதனைகளை எடுத்து கூறி விளக்கினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
சென்னை பெரியார் திடலில் 31.8.2009 அன்று மாலை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவை யொட்டி ‘‘அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற விவாதங்கள்’’ என்ற தலைப்பில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றிய ஆய்வுரையின் (1.11.2009) அன்றைய தொடர்ச்சி வருமாறு:
நீதிதேவன் மயக்கம்
இன்னொரு மிக முக்கியமான செய்தி இராவணன் இரக்கமென்ற ஒரு பொருளிலா அரக்கன் என்பது. அதையே மய்யப்படுத்தித்தான் நீதி தேவன் மயக்கம் என்ற நாடகத்தையே அண்ணா அவர்கள் எழுதி சிறப்பாகக் காட்டினார்கள்.
அந்த ‘நீதிதேவன் மயக்கம்’ நாடகத்திலே கம்பரை கூண்டிலே நிற்கவைத்து விட்டு இராவணனே குறுக்கு விசாரணை செய்வது போல ஏராளமான செய்திகளை எடுத்து வைத்திருக்கிறார்கள்.
நேருக்கு நேர் வாதம் செய்கின்ற பொழுது அது எப்படியிருக்கும்? வாதிடும் பொழுது ஒவ்வொன்றையும் எடுத்துக் காட்டி இதற்கெல்லாம் இரக்கம் காட்டினார்களா? என்று கேள்வி கேட்கப்படும் சம்பூகனை வதம் செய்த நேரத்திலே இராமன் இரக்கம் காட்டினானா? சீதையை அவன் படுத்திய பாடு என்ன?
என்றெல்லாம் வரிசையாக இதில் ஏராளமான கருத்துகளை சுட்டிக்காட்டி அண்ணா அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.
அண்ணா அவர்களுடைய கட்டுரைகள், விவாதங்கள் என்று வரும்பொழுது இந்த செய்தியை சொல்லலாம். சட்டமன்றங்கள், நாடாளுமன்ற விவாதங்கள் என்று பார்க்கும் பொழுது ரொம்ப அற்புதமாக இருக்கும்.
அண்ணா அவர்களின் மேலவை உரை
அண்ணா அவர்களுடைய ராஜ்ய சபை உரைகள் ஆங்கிலத்திலே உள்ளது. Anna Speech என்று வெளிவந்திருக்கிறது.
இதில் குறிப்பிடத் தகுந்த உரைகள் உண்டு. நாடாளுமன்றத்திலே வாஜ்பேயி போன்றவர்கள், பூபேஷ்குப்தா பேன்றவர்கள் இருக்கும் பொழுது அவர்கள் சிறப்பாகச் சொன்னார்கள்.
நாடாளுமன்றத்திலே அண்ணா அவர்கள் ஒரு முறை தெளிவாகச் சொன்னார்கள். ஏன் நீங்கள் இந்தியை ஏற்க மறுக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டபொழுது, இந்த நேரத்தில் அண்ணா அவர்களின் வாதத்தை எடுத்துச் சொல்ல வேண்டும்.
மிகப்பெரும்பாலோர் இந்தி பேசுகிறார்கள். ஆகவே இந்திதான் இருக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திலே சொன்னவுடனே அண்ணா அவர்கள் அதற்கு பதில் சொன்னார்கள்.
தேசிய சின்னமாக எதை வைத்திருக்கிறீர்கள்?
நீங்கள் தேசிய சின்னமாக எதைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். குறைவான எண்ணிக்கையில் உள்ள மயிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.
நிறைய இருக்கின்ற காகத்தை ஏன் தேசியச் சின்னமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று சொன்ன செய்தி உங்களிலே பலருக்குத் தெரியும்.
அடிக்கடி கூட்டங்களிலே பயன்படுத்தி பேசியிருக்கின்றார்கள். அதைவிட ராஜ்ய சபை பேச்சிலே அண்ணா அவர்கள் இன்னொரு கருத்தை நேருக்கு நேர் கேட்ட கேள்வியை மற்றவர்களாலே பதில் சொல்ல முடியவில்லை.
நீங்கள் சொல்லுகின்றீர்கள். இந்தி பெரும்பாலனவர்கள் பேசுகிறார்கள் என்று சொல்லுகின்றார்கள்.
இந்திய நாடு பல மாநிலங்களைக் கொண்ட நாடு. பல மொழிகளை, பல இனங்களைக் கொண்ட ஒரு நாடு. அப்படிப்பட்ட இந்த நாட்டிலே நீங்கள் ஆட்சி மொழிக்காக தேர்வு செய்திருக்கிற இந்தி மொழி இருக்கிறதே அந்த இந்தி மொழி என்பதிருக்கின்றதே அது 20 சதவிகிதம் பேர் பேசினால் கூட போதும்.
குறிப்பிட்ட பகுதியில்தான் பேசுகிறீர்கள்
கிழக்கே, மேற்கே, வடக்கே, தெற்கே இப்படி பரவலாகப் பேசினால் அது ஆட்சி மொழியாவதற்குத் தகுதி உண்டு. ஆனால் இந்தி மொழி அப்படி இல்லையே அது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில்தான் பேசப்படுகின்றது என்று அருமையாகச் சொல்லியிருக்கின்றார்கள்.
எனவே மத்திய பகுதியிலே இந்தி மாநிலங்களில்தான் இந்தி மொழி பேசப்படுகிறது. ஒரு இனத்தினுடைய ஆதிக்கம், இன்னொரு இனத்தின் மீது வரக்கூடாது. அது நியாயமாகாது. தவறான முறையில் நாங்கள் அச்சம் கொள்ளவில்லை. சரியான முறையில்தான் நாங்கள் அச்சம் கொண்டிருக்கிறோம் என்று அண்ணா அவர்கள் சொன்னபொழுது மற்றவர்களால் இந்தக் கருத்தை மறுக்க முடியவில்லை.
அண்ணாவின் ஆங்கில நடை
இன்னொரு சிறப்பு இருக்கிறது. நேரத்தைக் கருதி விரிவாகச் சொல்ல இயலவில்லை. ஆங்கிலம் தெரிந்த நண்பர்கள் இருக்கிறார்கள். அண்ணா அவர்களுடைய ஆங்கில நடைக்காகவே திரும்பத் திரும்ப அண்ணா அவர்களுடைய உரையைப் படிக்க வேண்டும். அவ்வளவு அற்புதமான சொல்லாட்சிகள் அண்ணா அவர்கள் சரளமாக அதைப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.
கேள்வி கேட்டவருக்கு உடனே அண்ணா பதில் சொல்லுகின்றார். நீங்கள் இருக்கின்ற பகுதியும் இந்தியை ஏற்காத பகுதிதான் என்று அண்ணா சொன்னார். அவர் வங்காளத்திலே இருந்து வந்தவர்.
அது மட்டுமல்ல இந்திக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை அரசே ஒப்புக்கொள்ளவில்லையே.
இரண்டு பாட்டிலும் இந்தி இல்லை
இரண்டே இரண்டு பாட்டைத்தானே இந்த அரசு தேர்ந்தெடுத்திருக்கிறது. அண்ணா பேசியிருக்கிறார்.
அண்ணா அவர்களின் வாதத்திறமையைப் பாராளுமன்றத்திலே காணலாம்.
அண்ணா சொல்கிறார். அந்த இரண்டு பாடல்களில் ஒன்று ‘ஜனகணமன’ மற்றொன்று ‘வந்தே மாதரம்’ இந்த இரண்டுமே இந்தி அல்ல.
இந்திக்கு செல்வாக்கு இல்லை
இதிலிருந்தே இந்திக்கு எந்தவித செல்வாக்கும் இல்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்று மிக அழகாக மொழி பிரச்சினையிலே ஆழமாகச் சொல்லியிருக்கின்றார்கள்.
எனவே எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அண்ணா அவர்களுடைய உரையைக் கேட்பவர்களே ஏற்கக் கூடிய அளவிற்கு வரக்கூடிய நிலைகள் இருந்தன.
உங்களுக்குத் தெரியும். அண்ணா அவர்கள் சட்டமன்றத்திலே பேசும்பொழுது எதிர்கட்சித் துணைத் தலைவராக இருந்த விநாயகம் அவர்கள் ரொம்ப வேகமாக அண்ணா அவர்களைப் பார்த்து பேசினார்.
‘Your days are Numbered’ என்று சொன்னார். அது ஒரு ஆங்கில சொற்றொடராக இருந்தாலும் கூட, அப்படிச் சொன்னார். அண்ணா அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்த காலத்திலே உங்களுடைய நாள்கள் எண்ணப்படுகின்றன என்று சொன்னார்.
இன்றும் விநாயகம் குரல்கள் ஒலிப்பதா?
இன்னமும் கூட இந்த ஆட்சியைப் பற்றி (கலைஞர் ஆட்சியைப் பற்றி) விநாயகம் அவர்களுடைய கருத்துகள் வேறு குரலில் ஒலிக்கின்றன.
அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று சொல்லக் கூடியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
ஆனால் அண்ணா அவர்கள், மற்றவர்கள் பதற்றப்பட்ட நேரத்திலே அவர்கள் பொறுமையாகப் பதில் சொன்னார்.
‘My steps are measured ’ என்று அண்ணா அவர்கள் மிக அழகாக பதில் சொன்னார்.
என்னுடைய அடிகளை அளந்து வைக்கிறேன்
நான் என்னுடைய அடிகளை அளந்து வைக்கிறேன் என்று சொன்னார். அதனால் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.
முப்பெரும் சாதனைகள்
அண்ணா அவர்களுடைய ஆட்சி வந்து விட்டதே என்று சங்கடப்பட்டார்கள். அண்ணா அவர்கள் சட்டமன்றத்திலே பேசும்பொழுது சொன்னார். ஆட்சி மொழி இரு மொழித்திட்டம், சென்னை ராஜதானி என்றிருந்த, தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம், சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட வடிவம் ஆகிய மூன்று காரியங்களை செய்திருக்கின்றோம்.
எங்களுடைய ஆட்சி செய்திருக்கிறது. இது சாதாரணமல்ல. முப்பெரும் சாதனைகள் ஒரு வேளை எங்களது ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள். டெல்லியை மனதிலே வைத்துக்கொண்டு அண்ணா சொன்னார்.
மாற்றிவிட நினைப்பீர்கள்
உங்களால் முடியுமா என்றால் உங்களால் முடியும். இன்றைய அரசியல் சட்டம், அதிகாரம் இவைகளை வைத்து முடியாது என்று நான் சவால்விடமாட்டேன். உங்களால் முடியும். ஆனால் எங்களை அனுப்பிவிட்டு வேறு ஒருவர் உட்காருகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அண்ணா ஆட்சிக்கு வந்தல்லவா இவைகளை எல்லாம் செய்துவிட்டார். எனவே இதை மாற்றிவிட வேண்டும் என்று நினைப்பு வந்தால் உடனே இதை மாற்றினால் மக்கள் நம்மை சும்மா விடுவார்களா? என்ற அச்சம் உங்களைப் பிடித்து உலுக்கும், ஆட்டும்.
அச்சம் எவ்வளவு காலத்திற்கு உலுக்குகிறதோ
அந்த அச்சம் எவ்வளவு காலத்திற்கு உங்களுக்கு இருக்கிறதோ, வருகிறவர்களுக்கு இருக்கிறதோ அவ்வளவு காலத்திற்கும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள் என்ற அற்புதமான ஒரு தத்துவத்தை அண்ணா அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அப்படிப்பட்ட அண்ணா அவர்களுடைய கருத்தோவியங்கள், எழுத்தோவியங்கள் என்றும் நிலைத்து நிற்பவை மக்கள் மனதிலே என்றும் அழியாது. என்று கூறி எனது உரையை நிறைவுசெய்கிறேன்.
இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
1 comments:
தேசியச் சின்னமா? அல்லது தேசியப் பறவையா?
Post a Comment