Search This Blog

8.11.09

நீதியரசர் தினகரன் அவர்களும்-ஊடகங்களும்


தமிழர்கள் அடிமைப்படுத்தப்படுவார்கள்

நான்கு வருண மனு நீதி வருணாசிரம இதிகாசக் கோட்பாடுகளிலிருந்து இந்தியச் சமூகம் இன்று வரை விடுபடவில்லை என்பதற்குச் சான்றுகளாகப் பல கொடூர ஜாதிக் கொடுமைகள் நாடு முழுக்க அன்றாடம் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு நிகழ்வுதான் கடந்த கிழமை, ஜனநாயகத்தைக் கட்டிக்காத்து வருகிற நான்கு தூண்களில் ஒன்றான நீதித்துறையைச் சேர்ந்த உச்ச நயன்மன்ற நயனகர் தேர்வில் நடைபெற்றுள்ளது.

தாழ்த்தப்பட்ட இனத்தவரான தற்போதைய கருநாடக மாநில உயர்நயன்மன்றத்தின் தலைமை நீதி அரசர் பா.த.தினகரன் பிரேம்குமார் அவர்களை இந்திய நாட்டின் உச்சநயன்மன்ற நயனகராக நீதியரசர்களின் தேர்வுக்குழு பரிந்துரை செய்தது. நிரப்பப்பட வேண்டிய இடங்களில் அய்ந்து நீதி அரசர்கள் எ.கே.பட்நாயக் (மத்திய பிரதேச உயர்நயன்மன்றத் தலைமை நீதி அரசர்), டி.எஸ்.தாக்கூர் (பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நயனகர்), எசு.எசு.நிசார் (கொல்கத்தா உயர்நயன்மன்ற தலைமை நீதி அரசர்) மற்றும் கருநாடக உயர்நயன்மன்றத் தலைமை நயனகர் பி.டி.தினகரன் ஆவர். இவர்களின் நீதி அரசர் தினகர், சென்னை உயர்நயன்மன்ற உயர் நயனகராகப் பத்து ஆண்டுகளாக இருந்து ஒரு ஆண்டுக்கு முன் கருநாடக உயர்நயன்மன்றத் தலைமை நீதி அரசராகப் பொறுப்பேற்றார். இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, ஒரு தமிழர், இவர் கோடிக் கணக்கில் தமிழகத்தில் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக, சென்னையைச் சேர்ந்த சில வர்ணாசிரம ஜாதி, வெறி இந்து வழக்குரைஞர்கள் நீதித்துறை பொறுப்புக்குழு என்ற பெயரில் உச்ச நயன்மன்ற மூத்த வழக்குரைஞர்களான சாந்தி பூஷன், ராம்ஜெத்மலானி, பாலி, எசு.நரிமான் மற்றும் அனில் திவான் ஆகியோர் வழி உச்சநயன்மன்ற தலைமை நீதி அரசர் பாலகிருட்டினன், குடியரசுத் தலைவி பிரதீபா பாட்டீல், தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் ஆகியோருக்கு முறை-யீடு ஒன்றை அனுப்பினர். அதில் நில மோசடி, உள்பட பல்வேறு முறைகேடுகளில் நீதி அரசர் பி.டி.தினகரன் ஈடுபட்டுள்ளார். எனவே அவரை உச்ச நயன்மன்ற நீதி அரசராக நியமிப்பதைப் பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும். அவருக்கு எதிரான குற்றச்சாற்றுகள் குறித்து உசாவால் நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேனாள் சட்ட அமைச்சரும், உச்ச நயன்மன்ற மூத்த வழக்குரைஞருமான சாந்தி பூஷனும், இந்திய வக்கீல்கள் சங்கத் தலைவர் சுராஜ் நாராயண் பிரசாத் சின்கா ஆகியோர் உச்ச மட்ட தருக்கம் (விவாதம்) செய்ய வேண்டும் என்கிறார்கள். குறிப்பாக, சாந்தி பூஷன், சென்னையில் நீதி அரசர் தினகரன் அவர்களுடன் பணிபுரிந்து, தற்போது உச்ச நயன்மன்ற நீதி அரசர்களான மார்கண்டேய கட்ஜூ மற்றும் நீதி அரசர் கங்குலி ஆகியோருடன் தலைமை நீதியரசர் சுற்றாய்வு, சூழ்ந்தாராய்கை (ஆலோசனை) செய்யவில்லை என்று குற்றம் சாற்றுகிறார். 19.9.2009ஆம் திகதியிட்ட ‘டைம்சாப் இந்தியா’ ஆங்கில நாளிதழில் அவர் வெளியிட்ட அறிக்கையில் நீதித்துறையின் மிக உயரிய மதிப்புமிக்க இந்தியத் தலைமை நீதி அரசருக்கு உள்நோக்கம் கற்பித்தும், ஜாதி அடிப்படையில் பரிந்துரை செய்ததாகச் ஜாதி சிக்கலை ஏற்படுத்துகிறார். மற்றும் இந்திய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், தென்னிந்தியாவிலிருந்து வரும் நீதி அரசர்கள் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் குற்றச்சாற்றுகளுக்கு அந்த இனவெறி, ஜாதி வெறி, மொழி வெறி மாநில வெறி கொண்ட சாந்தி பூஷன் பதில் சொல்ல வேண்டிய காலம் மிக விரைவில் வரும்.

பத்து ஆண்டுகள் சென்னை உயர் நயன்மன்றத் தலைமை நயனகராக இருந்தபோதும், கருநாடக உயர்நயன்மன்றத் தலைமை நீதி அரசராகப் பொறுப்பேற்றுக் கொண்டபோதும் வெளிப்படுத்தப்படாத குற்றச்சாற்றுகளை, தற்போது இந்திய நீதித் துறையில் உள்ள மதவெறி, ஜாதிவெறிப் பிற்போக்குக் கூட்டுக் கும்பல், ஆட்சி அதிகாரத்திலும், அரசியலிலும், ஊடகத் துறைகளிலும் உள்ள கூட்டாளிகளுடன் இணைந்து நீதி துறையைக் களங்கப்படுத்திடத் தீயத்திட்டத்தை உருவாக்குகின்றனர். நீதி அரசர்கள் பி.என்.அகர்வால், எசு.எச்.கபாடியா, தருண் சட்டர்ஜி, அல்ட்டாமஸ் கபீர் ஆகிய தேர்வுக் குழுவிலுள்ளவர்களைப் பற்றி ஏதும் தனிப்பட்ட வகையில் குற்றம் சாற்றாமல், தலைமை நீதி அரசர் கே.ஜி.பாலகிருட்டினன் மீது மட்டும் குற்றம் சாற்றுவதிலிருந்து நாம் இந்தக் கூட்டுச் சதியைப் புரிந்துக்கொள்ளலாம். ஏன் எனில் அவரும் ஓர் ஒதுக்கப்பட்டவர்.

உச்ச நயன்மன்றத் தலைமை நீதி அரசராக இருந்து ஓய்வு பெற்ற ஒய்.கே.சபர்வால் மீது ஊழல் குற்றச் சாற்றுச் சுமத்தப்பட்டடது. தமது பதவிக் காலத்தில் தனக்கு வேண்டிய வர்கள் சிலருக்குக் குற்றங்களை மறைத்து துணைநின்று, உதவி, தீர்ப்பளித்தார்.

தில்லி குடியிருப்பு பகுதிகளிலுள்ள வணிக நிறுவனங்களை இலச்சினை (முத்திரை) இடுவதற்கான உத்தரவு அல்லது தீர்ப்பு தமது மகன்கள் இருவர் பயன் அடைவதற்காக வழங்கப்பட்டது என்ற புகார் பரப்பரப்பான கூச்சலும் குழப்பமும் முறையீடும் எழுந்ததே. அந்தக் குற்றச்சாற்று என்னவானது? நீதித்துறை வல்லுநர்கள் குழு மட்டுமல்ல, நடுவண் அரசின் கண்காணிப்பு ஆணையமும் கூட இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடுவண் அரசிற்கு ஆணையிட்டதே, அந்தக் குற்றச்சாற்று என்னவானது?

நீதியரசர் தினகரன் மீது பொய்க் குற்றச்சாற்றைச் சுமத்தும் சமூகநீதி எதிர்ப்பாளர்களின் வேண்டுகோளை மட்டும், நீதித்துறையும், அதன் அமைச்சகமும், ஆட்சியாளரும், ஊடகவியலாரும் வெளிச்சம் போட்டுக் காட்டி உசாவல்களில் ஈடுபடுவது ஏன்? நீதி அரசர் தினகரன் மீது நடவடிக்கை எடுத்து உச்ச நீதிமன்ற நீதி அரசர் நியமனத்தை நிறுத்த வேண்டும் எனப் போராடும் இவர்கள் மேனாள் நீதி அரசர் சபர்வால் மீது நடவடிக்கை எடுக்கப் போராடுவார்களா?

இந்தியாவில் உள்ள பார்ப்பனச் சார்புச் செய்தி ஊடகங்கள், உச்சநயன்மன்ற நீதி அரசர் கே.ஜி.பாலகிருட்டினனும், கருநாடக உயர்நயன்மன்ற நீதி அரசர் பி.டி.தினகரனும் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் உயர்ஜாதி இந்துக்களுக்கு ஆதரவாகப் பரபரப்பான அதிர்ச்சிச் செய்திகளை வெளியிட்டன. ஆனால் கருநாடக மாநிலம் பெங்களூரு-விலிருந்து வெளிவரும் ஆங்கில தின ஏடு ‘பெங்களூரு மிரர்’, நீதி அரசர் தினகரனின் பிறந்த சொந்த ஊருக்குச் சென்று உண்மைகளைக் கண்டறிந்து ஆய்வு செய்து கலப்பற்ற செய்திகளை வெளியிட்டது பாராட்டத்தக்கது. ஆனால், பெங்களூரு வழக்குரைஞர்கள் சங்கம் நீதி அரசர் தினகரன் மேல் சாற்றப்பட்ட குற்றச்சாற்றுகளிலிருந்து மீண்டு வரும்வரை வழக்குகளை நடத்தக் கூடாது என்று கடந்த 29.9.2009 திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.சில ஜாதி, இன, மொழி வெறியர்கள் தனிப்பட்ட முறையில் மிகவும் கேவலமாக, வெளியிட முடியாத கீழ்த்தரமான வார்த்தைகளால் தாறுமாறாகப் பேசி விமரிசித்தார்கள் என்று நண்பர்களாயுள்ள வழக்குரைஞர்கள் சொல்லக் கேள்விப்பட்டு வெட்கமடைந்தோம்.

பெங்களூரு வழக்குரைஞர் சங்க மேனாள் தலைவர் திரு.சுப்பாரெட்டி வழக்குரைஞர்கள் சங்கத் தீர் மானத்தினை ஒட்டி, நீதி அரசரின் நயன் மன்றப் பணிகளில் தலையிட்டு அவரைத் தடுத்து நிறுத்த முடியாது என அறிக்கை விடுத்திருக்கிறார். இவர் கர்நாடக மாநில வழக்குரைஞாகள் சங்கத் தலைவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேளை அக்தோபர் திங்கள் முதல் கிழமையில் கருநாடக மாநில உயர்நயன்மன்ற தலைமை வழக் குரைஞர் அசோக் அரசன அல்லி, கூடுதல் தலைமை வழக்குரைஞர் கே.எம்.நடராஜ், மாநில அரசு வழக் குரைஞர் திரு.பாவின் ஆகியோர் நீதி அரசரை அவரின் இல்லத்தில் சந்தித்து நயன்மன்றப் பணிகளைத் தொடர வேண்டும்எனக் கேட்டுக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அந்தக் கூட்டத்தில் நீதி அரசர் பி.டி.தினகரனுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மேனாள் (அட்வகேட் ஜெனரல்) ஏ.என். செயராம் வழக்குரைஞர்கள் ஏ.ஜி.ஒல்லா, கஸ்தூரி, சுப்ரமணியா, ஜாய்ஸ், சதாசிவா (ரெட்டி) சந்திரசேகர், புட்டிகே ரமேசு மற்றும் பா.ஜ.க வழக்குரைஞர் பிரமிளா நேசர்சி ஆவர். உயர் நயன்மன்ற நீதி அரசர்கள் மீது இப்படிக் கருநாடக வழக்குரைஞர்கள் சங்கத்தில் தீர்மானித்தது இரண்டாவது முறையாகும்.

இரண்டாண்டுகளுக்கு முன் கரு நாடக உயர்நயன்மன்ற நீதி அரசர் சிரியாக் சோசப் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழர் மீதாகும். பின் இவரும் உச்சநயமன்ற அரசராகப் பதவி உயர்வு பெற்றார் என்பது செய்தி. பெங்களூரு வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர் மேற்படி பி.டி.தினகரனுக்கு எதிரான தீர்மானம் எடுப்பதற்கு முன்பே நீதியரசர் தினகரன் அவர்கள் தன்மான உணர் வுடன் வழக்கு உசாவலுக்குச் செல்வதில்லை என்றும், நீதித்துறை நிமித்தமாகச் செல்லவிருந்த ஆஸ்திரேலியப் பயணத்தையும் மேற்கொள்ள மறுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

கருநாடக மாநில வழக்குரைஞர்கள் சங்க தலைவர் சுப்பா (ரெட்டி) யின் அறிவுறுத்தலின்படி, பெங்களூரு வழக்குரைஞர் சங்கம் ஏற்கெனவே கருநடாக உயர்நயன்மன்ற நீதி அரசர் தினகரனுக்கு எதிராகப் போடப்பட்ட தீர்மான சங்கத் தலைவர் புட்டே கவுடா திரும்பப் பெற நடவடிக்கை எடுத்தார். எனவே நீதி அரசர் தினகர் 5.10.2009 திங்கள்கிழமை வழக்கம்போல் வழக்கு மன்றப் பணிகளைத் தொடர்ந்தார். வழக்கு மன்ற வாளகத்தில் வழக்குரைஞர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நீதி அரசர் மீண்டும் பணியமர்ந்தமைக்காக இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

தமிழ்நாடு நீதி அரசர்களின் சங்கத்தின் செயற்குழு கூட்டம் 18.9.2009 அன்று நடைபெற்றது. நீதி அரசர் பி.டி.தினகரன் உச்சநயன்மன்ற நயனகர் பதவிக்குத் தகுதியானவர். அவர் மீது சிலர் உள்நோக்கம் கொண்டு செயல்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

உச்ச நயன்மன்ற நீதி அரசர் பாலகிருட்டினனும், கருநாடக உச்ச நயன்மன்ற நீதி அரசன் பி.டி.தினகரன் அவர்களும் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால், மேனாள் சட்ட அமைச்சரும் இந்நாள் மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷனின் தவறான கண்ணோட்ட அறிக்கைக்கு, கருநாடக மாநிலப் பிற்படுத்தப் பட்டோர் மேனாள் ஆணையரும் மூத்த வழக்கறிஞருமான இரவிகுமார் வர்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாழ்த்தப்பட்டவர்களை உயர் பதவிகளில் அமரவிடக்கூடாது என்று உள்நோக்கத்துடன் நீதி அரசர்கள் பாலகிருட்டினன் மீதும் பி.டி.தினகரன் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாற்றுகளைக் கிளப்பி நீதி அரசர் தினகரனை உச்ச நயன் மன்ற நயனராக விடாமல் தடுக்கும் முயற்சியில் சில தீய சக்திகள் ஈடுபட்டுள்ளதாகத் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் வழக்குரைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

தாழ்த்தப்பட்ட நீதி அரசர்களுக்கு எதிராக நடந்து வரும் தவறான செய்திப் பரப்பலை நடுவண் அரசு, கண்டும் காணாதது போல் நாடகமாடி வருகிறது. இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை எனில் தீவிர நடவடிக்கைகளை எடுக்க நேரிடுமென எச்சரித்துள்ளது.

இதே எச்சரிக்கையைத் தமிழ்நாடு அரசும் ஜாதியக் கண்ணோட்டத்திலிருந்து நாட்டின் உயர் பதவிகளில் இருக்கும் தமிழர்கள் மேல் சுமத்தப்படும் ஆதாரமற்ற குற்றச்சாற்றுகளைச் சுமத்தி நாட்டின் நீதித்துறையைக் கேவலப்படுத்திய தமிழ்நாட்டு பிற்போக்கு வழக்குரைஞர்கள் குழுவைக் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் கருத்துக் கூறும் உரிமையைச் சுட்டிக்காட்டி, வீண் பழியைச் சுமத்தித் தவறான செய்திகளுக்கு முதலிடம் கொடுத்துப் பரபரப்பை உருவாக்கும் பார்ப்பன ஊடகங்களைக் கண்டிக்க வேண்டும். அவர்களுக்குத் தரப்படும் அரசுச் சலுகைகளை நிறுத்த வேண்டும்.

ஜாதிகளை, சமயங்களைப் புறம்தள்ளி, எதற்கெல்லாம் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படுகிறதோ, எங்கெல்லாம் தமிழ்ச் சமூகத்திற்குக் கொடுமை நிகழ்த்தப்படுகிறதோ அதையெல்லாம் கண்டிக்கத் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், தமிழ் தமிழர் அமைப்புகளும் விழிப்போடு இருக்க வேண்டும் இல்லையேல் தமிழர்கள் அடிமைப்படுத்தப்படுவார்கள்.

-------------நன்றி:தமிழர் முழக்கம்,‘அக்டோபர்- நவம்பர்' 2009 இதழில் மறைமுதல்வன் அவர்கள் எழுதிய கட்டுரை

2 comments:

மதார் said...

enru marum intha avala nilai?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி