Search This Blog

16.11.09

பேய் உண்டா? உண்மையா? நிரூபிக்க முடியுமா?


‘பேய்க்கு’ச் சவால்!

‘ரோஸ் நேரம்’ என்ற ஒரு பகுதி கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் இரவு 10 மணி முதல் 11 மணிவரை அரங்கேறுகிறது. அதனை நடத்தும் தோழியர் மிகச் சிறப்பாகவே அதனைக் கையாளுகிறார்.

“பேய்’’ உண்டா? உண்மையா? நிரூபிக்க முடியுமா?’’ என்ற காரசார விவாத மேடை சுவைக்கத்தக்கது மட்டுமல்ல; சிந்திக்கத்தக்கதும் ஆகும்.

பேராசையும், அச்சமும் போட்டி போட்டுக்கொண்டு மக்களைத் துன்புறுத்தும் நிலையில், மக்கள் மூட நம்பிக்கைக் குழிக்குள் வீழ்ந்து மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களைக் கரையேற்றுவதுதான் கண்ணியமான மனிதத் தொண்டாக இருக்க முடியும். பாமர மக்களோடு மக்களாகக் கரைந்து அவர்களின் மூடத்தனத்தினை மேலும் உற்சாகப்படுத்தும் போக்கில் அவர்களின் முதுகைத் தட்டிக் கொடுத்துக் காசு பறிக்கும் முதலாளிகள் பெரும்பாலும் ஊடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இராசி பலன் என்ற ‘பிள்ளையார் சுழிபோட்டு’ விடியற்காலைப் பொழுதையே களங்கப்படுத்தப்பட்ட குடிநீரில் மக்களைக் குளிப்பாட்டி, மக்களை வஞ்சிப்பதையே வாடிக்கையாகக் கொண்டு, வங்கிக் கணக்கை வளப்படுத்திக் கொள்ளும் நயவஞ்சகப் பிழைப்பு ஒரு பக்கத்தில் நடந்துகொண்டுதானிருக்கிறது.

அதே நேரத்தில், கலைஞர் தொலைக்காட்சியின் ‘‘ரோஸ் நேரத்தில்’’ ஓர் அறிவிப்பு; பேய் இருப்பதாக நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்பதுதான் அந்த அறிவிப்பு பாராட்டத்தக்க ஒன்றே! அதனை ஏற்றுக்கொண்டு, இதோ நாங்கள் நிரூபிக்கிறோம் என்று கூறி ஒரு அணியினர்; பேயாவது, வெங்காயமாவது! எங்கே இருக்கிறது பேய்? நிரூபிக்க முடியுமா? ‘என்மீது பேயை ஏவி நிரூபிக்கட்டும்; அவர்களுக்குப் பத்து லட்சம் ரூபாய் தருகிறேன்’ என்று கூறி அதே இடத்தில் காசோலையைப் பூர்த்தி செய்து சவால் விட்டார் கருஞ்சட்டைத் தோழர் ம. திருநாவுக்கரசு. (தற்போது தண்டையார்பேட்டைவாசி _ சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம்).

எதிர்பாராத இந்தத் திருப்பத்தினை ஏற்படுத்தி ஒருங்கிணைப்பாளர் உள்பட எதிர்த்தரப்பினர் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கினார் நமது தோழர். அவர் சார்ந்த அணியினரோ உற்சாகப் பெருக்கில் திளைத்தனர்.

அதுதான் சந்தர்ப்பம் என்று கடவுள், மதம், ஜாதி, சம்பிரதாயம், பேய், பிசாசு, பூதம் என்ற பித்தலாட்டங்களை எல்லாம் ஒரு பிடிபிடித்தார் பாருங்கள் _ ‘பலே பலே’ என்று பாராட்டும்படியாக இருந்தது.

கழகத் தோழர், ஒருவர் இருந்தாலும் போதும், பிற்போக்குத்தனங்களுக்கு எதிராகக் ‘‘கலகக் கொடி-யைத்’’ தூக்கிப் பிடிப்பார் என்பதற்கு தோழர் ம. திருநாவுக்கரசே ஓர் எடுத்துக்காட்டு!

அவரைப் பாராட்டுவோம்.

இதுபோன்ற களங்களைத் தவறவிடவேண்டாம் என்று கழகத் தோழர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

“கலகம்’’ பிறந்தால்தானே ‘‘வழியும்’’ பிறக்கிறது.

---------------- மயிலாடன் அவர்கள் 16-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

6 comments:

யாழினி அத்தன் said...

Please see this you tube video and decide by yourself

http://www.youtube.com/watch?v=deoJUBW9CI8

கோவி.கண்ணன் said...

//"பேய் உண்டா? உண்மையா? நிரூபிக்க முடியுமா?"//

தமிழ் ஓவியா ஐயா,
காங்கிரஸ்காரர்களிடம் கேட்டால் 'இராஜிவ் காந்தி ஆவி' இருப்பது உண்மை என்று சொல்லுவார்கள்.

:)

PRINCENRSAMA said...

http://www.youtube.com/watch?v=9L2lDHNmRFw&NR=1&feature=fvwp

நம்பி said...

//யாழினி அத்தன் said...

Please see this you tube video and decide by yourself

http://www.youtube.com/watch?v=deoJUBW9CI8
November 17, 2009 2:39 AM //
//Blogger PRINCENRSAMA said...

http://www.youtube.com/watch?v=9L2lDHNmRFw&NR=1&feature=fvwp

November 17, 2009 7:09 PM//

இதெல்லாம் ரொம்பவே பார்த்தாச்சு...ஊடகங்களில் அதிகம் வந்துவிட்டது...எங்களுக்கு டவுட்டே இதுதான் ஏன்? சிங்கம், புலி, மான், கோழி, லகான் கோழி, குரங்கு நாய்...தாவரங்கள்...இதை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக்கூடாது...இதையெல்லாம் பார்த்து மக்கள் பயப்படமாட்டார்கள் என்ற ''தைரியம்'' தானே...?

சரி அப்படியே நம்ம கூட இருந்தவங்கதானே வரப்போறாங்க...வரட்டுமே கூப்பிட்டு வைச்சு நல்லா குடும்ப நடத்துங்க...? ஜாலியா ஊரை சுத்துங்க...? பார்ட்டிக்கு கூட்டிட்டு போய் தண்ணி அடிங்க...முக்கியம் அதுக்கும் பூணுல் போட்டுறாதீங்க...பார்ப்பன ஜாதி வர்ணாசிரமத்தை உருவாக்கிடாதீங்க...அப்புறம் அதுங்க எல்லாம் ஒன்று சேர்ந்து போராட ஆரம்பிச்சுடும்..இணையத்தில எழுதினாலும் எழுதிடும்...அதையாவது உருப்படியா விட்டுவையுங்க...

ஆட்டை கடிச்சி மாட்டைக் கடிச்சி பிறகு ஆவியையும் கடிச்ச மாதிரி ஆயிடும்...

Anonymous said...

பெரியார் பேய் பற்றி என்ன சொல்லி இருக்கிறார் தோழர் ?

நம்பி said...

Blogger SUBASH VN said...

//பெரியார் பேய் பற்றி என்ன சொல்லி இருக்கிறார்.........//
****************************
.....................................
.......................................
.....................................
வினா: பேய் எப்பொழுது முதல் இருந்து கொண்டு வருகிறது?
விடை:- கடவுள் தோன்றிய போதே பேயும் தோன்றியிருப்பதாக சாமான்ய ஜனங்கள் நம்புகிறார்கள்.

வினா: மக்கள் பேயை நம்பக் காரணம் என்ன?
விடை:- மனித சமூகம் பாலிய தசையிலிருந்த போது வெளிச்சத்துக்கும், இருளுக்கும், ஜீவனுக்கும், மரணத்துக்கும், விருப்புக்கும், வெறுப்புக்கும் காரணம் கூறும் பொருட்டு நன்மை செய்ய ஒன்றும், தீமை செய்ய ஒன்றும் இருப்பதாகவும், அவை இரண்டுமே உலகத்தை அடக்கி யாண்டு வருவதாகவும் நம்பிக் கொண்டது.

வினா: பேய் கடவுளைப் போல் அவ்வளவு புத்திசாலியா?
விடை:- இல்லை. பெரிய தந்திரசாலியாம்.

வினா: பேயின் ஜீவித நோக்கமென்ன?
விடை: மக்களைக் கெட்ட வழியில் செலுத்திக் கெடுத்து, கடவுள் வேலையை அழிப்பதே.

வினா: பேய் இருந்து கொண்டு இருப்பதற்குப் பொறுப்பாளி யார்?

விடை:- பொதுவான நம்பிக்கை என்ன-வெனில், ஆதி மனிதனைப் போல் பேயும் உத்தமனாகவே இருந்ததாம். அது தானும் கடவுளாக வேண்டுமென்று எண்ணியதனால் அது சுவர்க்கத்திலிருந்து ஓட்டப்பட்டதாம்.

வினா: கடவுள் அந்தப் பேயை ஏன் அழிக்கவில்லை?
விடை:- மனிதன் வீழ்ச்சியடைய எக்காரணத்-தினால் கடவுள் அனுமதியளித்தானோ அக்காரணத்தினாலேயே கடவுள் பேயை ஒழிக்காமல் வைத்துக் கொண்டு இருக்கிறான்.

வினா: அதன் பொருள் விளங்கச் சொல்லு?
விடை:- தன் பெருமையை நிலைநாட்டும் பொருட்டே கடவுள் பேயை உயிரோடு வைத்துக் கொண்டு இருக்கிறான்.

வினா: எப்பொழுதும் ஒரு நரகமும் பேயும் இருந்து கொண்டுதானிருக்குமா?
விடை:- இருந்து கொண்டு இருக்குமென்றே அனேகர் சொல்லுகிறார்கள்.

வினா: பேய்களைப் பற்றிய இம்மாதிரிக் கதைகளை மக்கள் ஏன் நம்புகிறார்கள்?
விடை:- அவர்கள் பெற்றோர் நம்பியதனால் அவர்களும் நம்புகிறார்கள்.

வினா: அந்த நம்பிக்கையைப் பற்றி நீ என்ன எண்ணுகிறாய்?
விடை:- விஷயங்களை ஆராய்ந்து பாராதவர்கள் கூறும் அபிப்பிராயங்களுக்கும், கொண்டிருக்கும் நம்பிக்கைகளுக்கும் மதிப்பே இல்லை.

வினா: பேய் நம்பிக்கையினால் ஏற்பட்ட பலன் என்ன?
விடை:- பேய் நம்பிக்கையினால் மக்கள் மூட பக்தியுடையவர்களாயும், சஞ்சல-முடையவர்களாயும், பயங்காளிகளாயும், குரூரர்களாயும் ஆகிவிடுகிறார்கள்.

வினா: பேய் நம்பிக்கை எப்படி ஒழியும்,
விடை: அறிவியக்கத்தினால் ஒழியும்.

வினா: உலகத்திலே மிகவும் பயங்கரமானது எது?
விடை:- பயம் தான்.

வினா: ஏன்?
விடை:- பயம், இருதயத்தையும், உடலையும் திமிராக்கி, தற்காப்புக்குள்ள சக்தியை அழித்து விடுகிறது. தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள ஒருவனுக்குச் சக்தியில்லாது ஆகும் போது அரசியல், சமயப் பூச்சாண்டிகளுக்கு அடிமைப்பட்டுவிடுகிறான்.
(குடிஅரசு 26.4.1936)


இதிலிருந்து ஒட்டப்பட்டது <http://www.unmaionline.com/new/11-unmaionline/unmai2011/feb-01-15/53-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html