Search This Blog

3.11.09

பாரத பண்பாடும், ராமாயணமும்!

பாரத பண்பாடும், ராமாயணமும்!



அந்த மாபெரும் கருத்தரங்கில் ராமாயணம் பற்றி பல அறிஞர்கள் தங்கள் ஆய்வறிவை வெளிப்படுத்த வந்திருந்தனர். இராமாயண காவியத்தை அதிலுள்ள அற்புதமான கருத்துகளுக்காக அறிவுடையோர் யாரும் ஏற்க தயங்க மாட்டார்கள். கடவுள் மறுப்பு என்கிற அடிப்படையில் அதிலுள்ள சிறந்த அம்சங்களையும் சிலர் அலட்சியம் செய்வது வேதனை தருவதாகும். பாரத பண்பாடு உலகிலேயே மிக மேன்மையானது என்பதை எடுத்துக் காட்டித்தானே, சீதையின் கற்பை பற்றி மட்டுமல்லாது ராமனின் உயர்ந்த ஒழுக்கப் பண்பையும் வலியுறுத்திக் காட்டுகிறது. ராமனின் பெருமைகளில் ஒன்றாக அவன் ஏக பத்தினி விரதன் எனவும் புலப்படுத்துகிறது, என ஒர் அறிஞர் பேசிய போது முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் எழுந்து ஒரு அய்யம் என்றார். அவ்வாறு கூறியவர் அறவாழி என்கிற பன்மொழிகளில் புலமைவாய்ந்த பெரும்புலவர் என்பதினால் மேடையில் பேசிய புலவர் தாங்கள் மேடைக்கு வந்து தங்கள் அய்யத்தைக் கூறலாமே என்றார். மேடை ஏறிய அறவாழி தனது அய்யத்தை கேட்கலானார்.

அய்யா பாரத பண்பாடு பெண்டிரோடு ஆடவர் கற்பையும் வலியுறுத்துவது எனக்காட்டினீர்கள் ராமன் அத்தகைய உயர்ந்த ஒழுக்கத்தை பின்பற்றியவன் என்கிறபோது வனவாசம் செய்ய வேண்டிய தன்னோடு தனது தம்பி லட்சுமணனும் வந்தே தீருவேன்என்பதை ராமன் ஏற்க நேர்கிறது அடுத்து சீதையும் தன்னுடன் வருவேன் என்று கூறியதை ராமன் ஏற்றிருக்கலாமா? ராமன் சீதையோடு தனித்திருக்கும் காலங்களில் லட்சுமணன் மனம் அலைபாயுமோ என்பதை எண்ணிப்பார்க்கத் தவறிய ஒருவர் உயர்ந்த ஒழுக்கத்தின்மீது நம்பிக்கை உடையவனாக அவரை ஏற்றிட முடியுமா? என்றார் அறவாழி.

ராமனின் ஏகபத்தினி விரதத்தை எடுத்துப்பேசிய அறிஞர் சற்று திகைத்தாலும் சமாளித்தபடி தம்பியின் உயர்ந்த, சிந்தனை, சீலம், பண்பாடு இவற்றிலே ராமனுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை. எனவே லட்சுமணன் பற்றி அப்படியெல்லாம் ராமன் எண்ணிப்பார்க்கவில்லை என்றார்.

அறவாழி அடுத்து அய்யா ராமன் மாயமானை துரத்திப் போனவன் திரும்பாத நிலையில் லட்சுமணா அபயம் என்று குரல் கேட்கிறது. சீதையோ பதறியவளாய் தங்கள் அண்ணாவுக்கு ஏதோ ஆபத்து! என்கிறாள். லட்சுமணனோ அண்ணனுக்கு எதுவும் நேராது என்கிறான். உடனே சீதை லட்சுமணன் பண்பிலே சந்தேகிக்கிறாள். உடனே அவ்வளவு சுலபமாக சீக்கிரமாக சந்தேகிக்கிற சீதை வனத்திலே பல வருடங்களாக தானும் கணவனும் தனித்திருக்கக்கூடிய நாளில் காவல் காக்கிற லட்சுமணன் மனம் சலனம்படாதா என ராமனிடம் பேசியிருக்க மாட்டாளா? ராமனும் அதுபற்றி சிந்தித்திருக்க மாட்டானா?

ராமனுக்காக பேசிய அறிஞருக்கு குப்பென்று வியர்த்தது. அவர் கொஞ்சம் கொஞ்சம் வேகமாக நமது பண்பாடுகளை சீர்மைபடுத்தும் உயர்ந்த நோக்கத்தில் சித்திரித்த கதாபாத்திரங்களை எல்லாம் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பதினாலேயே நல்லவை மக்கள் கண்ணிலே படாமல் போகிற வேலையை செய்கின்றீர்கள் என்றார்.

அறவாழி நிதானமாக ராமாயணம் உண்மையிலேயே நம்மக்களுக்கு எதை எடுத்துச்சொல்லவந்ததோ அதை உங்களைப் போன்றவர் மறந்ததினால்தான் அல்லது மறைத்தத்தினால்தான் இவை இந்த நாட்டிலே பண்பாட்டு சிதைவு நேர காரணமாய் இருந்திருக்கிறது. சீதை என்கிற கற்புக்கரசி கணவனைத் தொடர்ந்து நானும் வெளியே வருவேன் என்று வீட்டை விட்டு வந்ததினால்தான் அவள் கற்பின் மேல் சந்தேகம் ஏற்பட்டு அவளை தீக்குளிக்க வைக்க நேர்ந்தது. அதன் பின்னும் சீதையின் கற்பு பற்றி ஒரு குடிமகன் சந்தேகமாய் பேசினான் என்று மறுமடியும் அவளை தனியே வனம் போகச்செய்கிற நிலை ஏற்பட்டது, அதேசமயம் லட்சுமணன் மனைவி ஊர்மிளா கணவன் திரும்பும்வரை அவள் வீட்டிலேயே அவனுக்காக காத்திருப்பேன் என வைராக்கியம் கொண்டதினாலேயே அவள்பற்றி எந்த அவதூறு பேச்சும் எழவில்லை.

ஒருத்தி உயர்ந்த உத்தமி என்பதற்காகக்கூட ஊரில் இரண்டுபேர் பேச்சில் அவள் பெயர் இடம்பெறக்கூடாது என்ற சீலத்தை ஊர்மிளாவே கடைப் பிடித்தாள் பாரத பெண்கள் தங்கள் உயர்ந்த பெருமையை வீட்டிலிருந்தே காப்பாற்ற வேண்டும் என்கிற உண்மையை சீதையின் வாழ்வை கொண்டும் ஊர்மிளாவின் வாழ்வைக் கொண்டும் எடுத்துப்பேச வேண்டிய கடமையை ராமாயணத்தைப் பேசுகிற அத்தனைபேரும் மறந்த குற்றத்தை செய்திருக்கிறீர்கள்!

_ என்றார் அறவாழி.

--------------------சின்னராசு அவர்கள் 17-10-2009"விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: