Search This Blog

12.11.09

பெரியாரும் கம்யூனிஸ்ட் கட்சியும்


கம்யூனிஸ்ட் கட்சியின் வருந்தத்தக்க தோல்வி

மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையான தோல்வியை சந்தித்து இருக்கின்றன. அரசியல்ரீதியாக காங்கிரசும், திரிணாமுல் காங்கிரசும் இந்தத் தோல்வியை அரசியல் கண்ணோட்டத்துடன் கொண்டாடுவார்கள் என்பதில் அய்யமில்லை.

அடுத்து அவ்விரு மாநிலங்களிலும் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்வியைச் சந்திக்கும் என்பது அரசியல் தெரிந்தவர்களின் கணிப்பாகும்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை ரீதியாக வலுப்பெற்று நாட்டில் நிலைத்து நிற்கவேண்டிய கட்சி என்பதே கணிப்பாகும்.

காரணம், கம்யூனிஸ்ட் தத்துவம் இந்தியாவுக்கு மிகவும் தேவையானதாகும். ஜாதி பேதமும், வறுமையும் இரட்டைக் குழந்தைகளாக கைகோத்து இருக்கும் இந்தியத் துணைக் கண்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அதன் திரிபுக்கு இடமில்லாத கொள்கையோடு பாடுபட்டு, வெகுமக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1952 பொதுத் தேர்தலில் தந்தை பெரியார் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரிய ஆதரவினைக் கொடுத்தார்கள்.

தலைமறைவாக இருந்த தோழர்கள், சிறைக் கொட்டடியில் இருந்த கம்யூனிஸ்ட் தோழர்கள் எல்லாம் வெற்றி பெற்றனர். அந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் அக்கட்சி நல்ல முறையில் வேரூன்றியிருக்கவேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் தலைமறைவாக இருந்த காலகட்டத்திலும், சிறையில் சுட்டுக் கொல்லப்-பட்ட தருணத்திலும் அவர்களுக்காகக் குரல் கொடுத்தது பெரியாரும், ‘விடுதலை’யும்தான் என்று தோழர் எஸ்.ஏ. டாங்கே அவர்கள் பம்பாய் மாதுங்காவில் நெப்போ கார்டனில் உரையாற்றும்போது குறிப்பிட்டுள்ளார் (16.11.1951).

அந்த முறையில்தான் இப்பொழுதுகூட கம்யூனிஸ்ட் கட்சியைத் திராவிடர் கழகம் நோக்குகிறது.

32 ஆண்டுகள் மேற்கு வங்கத்திலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது. இப்பொழுது தோல்வியைச் சந்தித்து வருகிறது. அதற்கான காரணத்தைத் திறந்த மனத்தோடு அக்கட்சி சுயபரிசோதனை செய்து பார்க்கவேண்டும். குறிப்பாக நந்திகிராம் என்ற பகுதியில் டாட்டாவின் கார் நிறுவனத்துக்காக விவசாய நிலங்களைத் தாரை வார்த்ததும், அதற்கு எதிர்ப்பு வெடித்த நேரத்தில் மூர்க்கத்தனமாக வேட்டையாடியதும், காவல் துறையினரோடு கட்சியின் தொண்டர்களும் சேர்ந்துகொண்டு தாக்குதல் தொடுத்ததும் சாதாரணமானதல்ல.

இதே நிலை தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால் விவசாய நிலங்களை டாட்டாவுக்குத் தாரை வார்ப்பதா என்று கொடி பிடித்திருக்கமாட்டார்களா என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

கொள்கை நிலையில்கூட, எப்படிப்பட்ட நிலை? போக்குவரத்துத் துறை அமைச்சரான சுபாஷ் சக்ரவர்த்தி காளி கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார், உண்டியலில் பணம் போடுகிறார். இதுபற்றி பிரச்சினை வெடித்தபோது முதலில் நான் ஒரு ஹிந்து, இரண்டாவது பிராமணன், மூன்றாவது கம்யூனிஸ்ட் என்றாரே அமைச்சர் நிலையில் இருப்பவரே இந்தத் தரத்தில் இருந்தால், மார்க்சியம் என்பது இளைஞர்கள் மத்தியில் எப்படி அதன் போர்க்குணத்தோடு பரவ முடியும்?

சமூகநீதிப் பிரச்சினையில் ஒடுக்கப்பட்ட மக்கள் போற்றும் அளவுக்குக் கட்சியின் செயல்பாடு அமையவில்லை. சென்னை பெரியார் திடலில் உரையாற்றிய தோழர் ஜோதிபாசு, எங்கள் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று கூறி ‘தகுதி’ திறமையைத் தூக்கிப் பேசினார் (26.8.1978).

14 ஜாதிகளை மட்டும் பிற்படுத்தப்பட்டோர் என்று பட்டியலிட்டு வெறும் 5 விழுக்காடு இடங்கள் பிறகு ஒதுக்கப்பட்டன (தி பயோனீர், 1.7.1994).

கேரளாவை எடுத்துக்கொண்டால் அங்கு முதலமைச்சராக இருந்த ஈ.கே. நாயனார் போப்புக்கு கீதையைப் பரிசாகக் கொடுத்ததோடு அல்லாமல், அப்படி கொடுத்ததில் என்ன தவறு; நான் மதத்தை மதிக்கிறேன் என்றார்.

கீதை என்பது கர்மா தத்துவத்தைக் கருவாகக் கொண்டது. ஒருவன் ஏழையாக இருப்பதும், பணக்காரனாக இருப்பதும்; கீழ்ஜாதிக்காரனாகவும், மேல்ஜாதிக்காரனாகவும் பிறப்பதும் “கர்ம பலன்’’ போன ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்தைப் பொறுத்தது என்று கூறும் கீதையை ஒருவர் மதிக்கிறார் என்றால், அவர் எப்படி உண்மையான கம்யூனிஸ்டாக இருக்க முடியும்? இளைஞர்கள் மத்தியில் கம்யூனிசத் தத்துவம் எந்த வகையில் பரவும்?

முல்லை பெரியாறு பிரச்சினையில்கூட நியாயங்களுக்கும், சட்டத்துக்கும் விரோதமாக அம்மாநில முதல-மைச்சர் நடந்துகொள்வது கம்யூனிஸ்டுக்குப் பெருமை சேர்ப்பது ஆகாதே! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பினராய் விஜயன் ரூ.376 கோடி ஊழலில் சிக்கியதும், அக்கட்சிக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிட்டது.

தோல்வி அடைந்த கம்யூனிஸ்ட்கள்மீது கல்லைத் தூக்கிப் போட விரும்பவில்லை; கொள்கைப் பலத்துடன் சமரசத்துக்கு இடமின்றி மக்கள் மத்தியில் கம்யூனிஸ்ட்கள் வேரூன்றவேண்டும் என்ற அவாவில்தான் இது எழுதப்படுகிறது. தேர்தலில் ஒரு சில இடங்களுக்காக அரசியல் தடுமாற்றம் அடைவது அதற்குப் பெருமை சேர்ப்பது ஆகாது!

--------------------"விடுதலை" தலையங்கம் 12-11-2009

0 comments: