Search This Blog

25.11.09

பெரியார் கண்ட வாழ்வியல்

மனிதனுக்கு மட்டும்தான் மான உணர்ச்சி
அதைத் தெளிவுபடுத்தும் சொல்தான் சுயமரியாதை
தந்தை பெரியார் கருத்தை எடுத்துக்காட்டி சிங்கப்பூரில் தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவருடன், தமிழர் பேரவை தலைவர் டாக்டர் ஆர்.தேவேந்திரன்...

மனிதன் என்றால் யார்? அவனுக்குள்ள தனித்தன்மை என்ன? என்பது குறித்து தந்தை பெரியார் கூறிய கருத்துகளை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சிங்கப்பூரில் நடைபெற்ற விழா ஒன்றில் விளக்கவுரையளித்தார்.

சிங்கப்பூரில் பெரியார் கண்ட வாழ்வியல் மகத்தான வரவேற்பு பெற்றதையொட்டி பேரா. ரெத்தினக்குமார் தமிழர் தலைவருக்கு மகிழ்ச்சியுடன் 15.11.2009 அன்று விருந்தோம்பல் அளித்தார். பல்துறை அறிஞர்கள் மற்றும் பெரியார் சமூக சேவை மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இவ்விழா ஒரு மகிழ்ச்சியான கலந்துரையாடலாக அமைந்தது.

விழாவினை பேரா. ரெத்தினக்குமார் மிக அழகாக Periyar Self-Respect Movement

Common Sense

Rationalist

Humanism

Humanist

Periyar (1879-1973)

Dr. K. Veeramani என 15 க்கும் மேற்பட்ட Power Point Slide களில் ரத்தினச் சுருக்கமாக பெரியாரைப்பற்றி ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதுபோல் எடுத்துக்கூறி, தமிழர் தலைவரை கருத்து விருந்து வழங்க அழைத்து அழகாக விழாவினைத் தொடங்கி வைத்தார்.

தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்த பல்துறை அறிஞர் பெருமக்கள் (சிங்கப்பூர், 15.11.209)

தமிழர் தலைவரின் சிறப்புரை

பின்னர் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவரின் உரை வருமாறு:

நம் அனைவருக்கும் தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் என்ன என்பதனை ஒரு கணக்கு வகுப்பு (அ) ரசாயன வகுப்பு (கெமிஸ்ட்ரி) என அத்தனையும் கலந்து புதிய அணுகுமுறையில் நம்முடைய மனங்களில் பதியக்கூடிய வகையில் தந்தை பெரியாரை நேரில் பார்த்திராத ஒரு பெருமகனார் அவர்களுடைய நூல்களையும், கருத்துகளையும் மட்டுமே படித்துத் தெரிந்து தொடர்ந்து வரக்கூடிய இயல்பான பகுத்தறிவாதியாக வாழக்கூடிய பேரா. ரத்தினக்குமார் இந்நிகழ்ச்சியை அழகாக தொடங்கி வைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு நிகழ்ச்சி. காரணம், இங்கு வந்துள்ள பெரும்பாலானோர் பெரியாரைப்பற்றி அறிந்தவர்கள், முதன்முறையாக தெரிந்துகொள்ளக்கூடியவர்கள், இன்னும் விரிவாக புரிந்துகொள்ளக் கூடியவர்களாக உள்ளீர்கள்.

ஈசா விசுவநாதன் ஆய்வு

தந்தை பெரியாரைப்பற்றி பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்திலும் ஆய்வு செய்கிறார்கள். நேஷனல் யூனிவர்சிடி ஆஃப் ஆஸ்திரேலியா என்பதிலேகூட தந்தை பெரியார் அவர்களைப்பற்றி நீண்ட காலத்துக்கு முன்பு 25 (அ) 35 ஆண்டுகளுக்கு முன்பு ஈசா விசுவநாதன் என்பவர் பெரியார் என்ற தலைப்பில் ஆய்வு செய்திருக்கிறார். அதைப்போலவே ஒரு டச்சு அம்மையார், ஒரு கிறிஸ்துவ பாதிரியாரின் உதவியுடன் தந்தை பெரியாரை நேரடியாகப் பார்த்து ஆய்வு செய்துள்ளார்கள். இப்படி வெளிநாட்டவர் ஆய்வு செய்த பின்புதான் தமிழ்நாட்டவர்கள் ஆய்வு செய்தார்கள். தமிழ் உலகுக்கு இது புதுமையல்ல; வெளிநாட்டவர்கள் திருக்குறளைப்பற்றி பெருமைகளைப் பேசிய பின்புதான் தமிழ்நாட்டவர்கள் திருக்குறளை பார்க்கவே ஆரம்பித்தார்கள்.

ஜான்ரெய்லி என்ற அமெரிக்கப் பேராசிரியர் பெரியார் என்ற புரட்சியாளர், சமூக சிந்தனையாளர், அநீதிகளை, அக்கிரமங்களை எதிர்த்துப் போராடக்கூடியவர் 2000 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தோன்றுவார் என்று சொல்லியுள்ளார்.

பேரா. ரத்தினக்குமார், பெரியாரை அறிமுகப்படுத்தும்போது Top Rank Rationalist என்று சொன்னார். அதுபோலவே, தந்தை பெரியார் அவர்கள் தன்னைத்தானே அறிமுகப்படுத்திச் சொல்லும்போது, நான் ஒரு பூரண பகுத்தறிவாதி (Perfect Rationalist) என்று சொல்கிறார்கள். பூரண பகுத்தறிவு என்பது பகுத்தறிவுக்கு எல்லை இல்லை என்பதாகும்.

கலிலியோ, சாக்ரட்டீஸ், பெரியார்

கலிலியோ, கோப்பர் நிக்கோலஸ் ஆகியோர் உலகம் உருண்டை என்று சொன்னபோது, அவர்கள் பட்ட பாடு நாம் அறிந்ததே. அவர்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ளாமல், சிறையில் அடைத்தார்கள். சிறையில் அடைத்த பின்பு கேட்டார்கள், உயிர்மீது ஆசை இருந்தால் உலகம் தட்டையென்று சொல்லுங்கள், விட்டுவிடுகிறோம் என்று கேட்டார்கள். ஆனால் கலிலியோ அவர்கள் இன்னமும் சொல்கிறேன், உலகம் உருண்டையென்று; அதுபோல், கோப்பர் நிக்கோலஸ் அவர்களிடம் கேட்டபோது, இந்த முட்டாள் மக்களிடம் உண்மையைச் சொல்லி உயிர் விடுவதற்குப் பதிலாக கொஞ்சம் பின்வாங்கி ராஜதந்திரத்தைப் பயன்படுத்தினார்கள். அதுபோலவே, நஞ்சைப் பெற்ற சாக்ரட்டீஸ், தன்னுடைய நிலையை மாற்றியிருந்தால், உயிரோடு வாழ்ந்திருக்க முடியும். ஆனால், வரலாற்றில் வாழ்ந்திருக்க முடியாது. அதுபோலவே, தந்தை பெரியார் அவர்களும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.

பெரியார் படித்தது

தந்தை பெரியார் ஒரு சுய சிந்தனையாளர். அவர்களுடைய சுய சிந்தனை எந்த ஒரு நூலகத்தாலும் உருவாக்கப்பட்டதல்ல; நாம் பல நூல்களைப் பார்க்கிறோம்; அதற்குப் பிறகு செய்திகளை உருவாக்கிக் கொள்கிறோம். ஆனால், தந்தை பெரியார் அவர்கள் நான்காம் வகுப்புவரைதான் பள்ளிக்கூடம் போனவர்; அந்த குறுகிய காலத்தில் சென்றபோதுகூட அவர் கண்ட காட்சிகளைப் பரிசோதனைக் கூடமாக மாற்றினார். அவர் சிறு வயதிலிருந்து புத்தகங்களாக மனிதர்களைப் படித்தார். அதனால் மனிதர்களைப்பற்றி தெரிந்துகொண்டு மனிதர்கள் இருக்கிறார்கள்; ஆனால், அவர்களிடம் மனிதம் இல்லையே என்று கவலைப்-பட்டார். அதுதான் அவர் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியதன் அடிப்படை. மனிதன் என்று சொன்னால், மானமும், அறிவும்தான் மனிதர்க்கு அழகு என்று சொல்வார்.

ஆறாவது அறிவு என்பது பகுத்தறிவு. அது விலங்குகளுக்குக் கிடையாது. அதனால்தான் யானை, சிங்கம் போன்ற நம்மைவிட வலிமையான மிருகங்களை நாம் அடக்கி ஆள்கிறோம் என்றால், அவைதான் பகுத்தறிவின் சிறப்பு. அப்படிப்பட்ட சுதந்திரமான அறிவாக இருக்கவேண்டும்.

மானம் இல்லையா?

மனிதனுக்கு எது தேவை? மான உணர்ச்சி தேவை. நீண்ட நாள் பழகிய நண்பர்களாக இருந்தால்கூட ஒருவர் வீட்டில் திருமணம், நீங்கள் போகவில்லையா என்று கேட்டால், அந்த நெருங்கிய நண்பர் எனக்கு அழைப்பில்லை, நான் எப்படிப் போவேன், எனக்கு மானமில்லையா? என்று கேட்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

மானத்திற்கு உண்மையான பொருள் என்ன என்பதை தெரிந்துகொண்டால், வியப்பு இருக்காது. மானம் என்றால், அளவு என்று பொருள். அந்த அளவு கீழே போய்விட்டால் குறைந்துவிட்டால் மானத்தை விட்டுவிட்டு வாழ்கிறோம் என்று சொல்கிறோம்.

தந்தை பெரியார் அவர்கள் மானத்தைப்பற்றி சொல்லும்போது மனிதர்களுக்கு மட்டும்தான் மானம் இருக்கிறது. அதை தெளிவுபடுத்துகின்ற ஒரு நிலையென்றால் அது சுயமரியாதை (Self-Respect) என்று சொன்னார்.

சுயமரியாதை இயக்கம் யாருக்குச் சொந்தம்?

உலக நாடுகளில் வரலாற்றைப் படித்துப் பார்த்தால் எத்தனையோ நாடுகளில் புரட்சிகரமான இயக்கம் தோன்றிய வரலாற்றை அன்றும், இன்றும், நாளையும் படிக்கக் காத்திருக்கிறோம். ஆனால், தோழர்களே, தோழியர்களே ஒரு கனம் சிந்தித்துப் பாருங்கள். தந்தை பெரியார் தொலைநோக்கோடு எல்லோருக்கும் பொருந்தக்கூடிய வகையில் இயக்கத்தை உருவாக்கினார் என்றால், அது சுயமரியாதை இயக்கம்தான்; அதை யாராலும் மறுக்கவே முடியாது. அந்த சுயமரியாதை இயக்கம் ஒரு நாட்டுக்கு, ஒரு கட்சிக்கு, ஓர் இனத்துக்கு, ஒரு ஜாதிக்கு, ஒரு பாலுக்கு (Gender) மட்டும் சொந்தமில்லை. மனிதர்களாகப் பிறந்திருக்கிற எல்லோருக்குமே சொந்தம். எல்லோருக்குமே சுயமரியாதையென்பது உண்டு.

தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி தெளிவாக சொல்கிறார்.
பெரியார் பேசுகிறார் கேளுங்கள்:

இந்த உலகத்தில் உள்ள எல்லா அகராதிகளையும் புரட்டிப் பார்த்தால் சுயமரியாதை என்ற சொல்லைத் தவிர மிகுந்த ஈர்ப்பு உடைய சொல், அதற்குச் சமமான சொல் கிடையவே கிடையாது என்று சொல்கிறார். எனவே, அந்த சுயமரியாதைதான் மனிதர்க்கு இருக்கவேண்டும். மனிதர்க்கு சூடேற்ற சுயமரியாதை தேவை என்றார். உங்களுக்கெல்லாம் வெட்கப்படக் கூடிய சூழ்நிலையிலே நாம் சுட்டிக்காட்டினால்தான் மனிதர்கள் திருந்துவார்கள் என்பதற்காக சுயமரியாதை இயக்கம் Self- Respect Movement என்று சொல்லக்கூடிய இயக்கம் இருக்கவேண்டும் என்று கருதினார். எனவேதான் அவருடைய சிந்தனை ஒப்பற்ற சுயசிந்தனை, தானே சிந்தித்தவர். இன்னொரு நிலையை எடுத்து மேற்கோள் காட்டமாட்டார்.

நான் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்துக் கொண்டிருந்தபோது சென்னை சட்டக் கல்லூயின் தலைமை இயக்குநர் Director of Legal Studies ஆக இருந்தனர். A.S.P. அய்யர் ICS அவர் நிறையப் படித்தவர். அவர் நீதிபதியாக இருந்தபோது பெரியார் அவர்கள் நீதிமன்ற தவறுகளை சுட்டிக்காட்டியதற்காக பெரியாரை தண்டித்தவர் ஆவார். அவர் ஓய்வுபெற்ற பின்பு மதிப்பு ஊதியம் பெற்று சட்டக்கல்லூரியில் பணிபுரிந்தார். நாங்கள் சட்டம் படித்தபோது, அந்த A.S.P அய்யரிடம் கேட்டோம். பெரியாரை சட்டக் கல்லூரிக்கு அழைக்கிறோம். உங்கள் அனுமதி தேவையென்று. உடனே அவர் தந்தை பெரியார் அவர்களை நான் பெரிதும் மதிக்கிறேன். அவருக்கு அனுமதியளிப்பதோடு அந்தக் கூட்டத்துக்கு நானே தலைமை தாங்குகின்றேன் என்று சொன்னார்கள்.

பெரியார்பற்றி ஏ.எஸ்.பி. அய்யர்

அவர் அந்தக் கூட்டத்தில் தந்தை பெரியாரை அறிமுகப்படுத்திப் பேசும்போது எனக்குத் தெரிந்த வரையில் இந்திய நாட்டிலேயே அடுத்தவர்களின் நூல்களை மேற்கோள் காட்டாமல், இது என்னுடைய கருத்து; ஏற்றால் ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள் என்று எடுத்துச் சொல்கிற தலைவர் இருக்கிறார் என்றால், ஒரே ஒரு தலைவர் தந்தை பெரியார் அவர்கள்தான் என்று மிகப் பிரமாதமாக எடுத்துச் சொன்னார். தந்தை பெரியார் அவரைப் பின்பற்றி பேசும்போது, ஆம், எனக்கு மேற்கோள் காட்டி பேசிப் பழக்கமில்லை. உடனே நீங்கள் கேட்கலாம், திருக்குறளையெல்லாம் கையாண்டு இருக்கிறீர்களேயென்று கேட்கலாம். அதற்கு நான் பதில் சொல்கிறேன்; என்னுடைய கருத்தை வள்ளுவரும் சொல்லியிருக்கிறார் என்பதற்காகத்தான் வள்ளுவரிடம் சென்றிருக்கிறேனே தவிர, வள்ளுவர் சொன்னார், அதனால் நான் எடுத்துக் கொள்கிறேன் என்பதல்ல. எனக்கு மாறுபடுகிற இடங்கள் வள்ளுவரிடம் இருந்தால் ஒதுக்கிவிடுவேன். எல்லாமே வள்ளுவர் சொன்னது சரிதான் என்று நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அதுபோல, நான் சொல்வது சரிதான் என்று நீங்கள் யாரும் எடுத்துக்கொள்ளக்கூடிய அவசியமில்லை. சரியென்றுபட்டால், எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் விரும்பாத ஒரு நிகழ்ச்சியை வானொலியில் கேட்டதுபோல் விட்டுவிடுங்கள் என்று பெரியார் சொன்னார்.

மாணவி கேட்ட கேள்வி

வானொலியில் இளைஞர்கள், கேள்விகளுக்குப் பதில் சொல்லக்கூடிய நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார்கள். அப்போது ஒரு கல்லூரி மாணவி ரொம்ப கெட்டிக்காரத்தனமாக ஒரு கேள்வியைக் கேட்டார். எல்லோருக்கும் பகுத்தறிவு இருக்கிறது. ஆனால், உங்களை மட்டும் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்களே, இது எப்படி பொருத்தமாகும்? என்று கேட்டார்.

இது அற்புதமான கேள்வியென்று நான் பதில் சொன்னேன். இந்த எல்லைவரை பகுத்தறிவு செல்லலாம். இந்த எல்லைவரை பகுத்தறிவு செல்லக்கூடாது என்று நினைத்தால், அவர்கள் பகுத்தறிவாளர்கள் அல்லர். பகுத்தறிவு எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது. ஆனால், அதனை எல்லை போடாமல் கடைசிவரை எடுத்துச் செல்லக்கூடிய துணிச்சல் எங்களுக்கு இருக்கிறது என்று கூறி, சாலையில் நடந்து செல்லும்போது சாணியை மிதித்துக்கொண்டால், உடனடியாகக் காலைக் கழுவிக்கொண்டு நடக்க ஆரம்பிக்கிறீர்கள். ஆனால், அடுத்த பத்தடி தாண்டி சாணியில் இரண்டு அருகம்புல் வைத்திருந்தால், நீங்கள் தண்டால் எடுத்து சாமி, கடவுள் என்று விழுந்து கும்பிடுகிறீர்கள். இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். உடனே ஆம் தவறுதான் என்று சொன்னார்கள். இந்த மாதிரி நினைக்காமல் இரண்டு இடத்தில் இருப்பதும் சாணிதான் என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய துணிச்சல் யாருக்கு இருக்கிறதோ, அவர்கள்தான் பகுத்தறிவாளர்கள் என்று எடுத்துச் சொன்னவுடன், அந்த மாணவிகள் இப்ப எங்களுக்கு நன்றாக விளங்குகிறது என்று சொன்னார்கள்.

பகுத்தறிவு வாதம் என்பது என்னவென்று சொன்னால், மனிதர்கள் இரட்டை வாழ்க்கை வாழக்கூடாது. அதை நம்புகிறோமோ, அதை சொல்லவேண்டும்; எதை சொல்கிறோமோ அதை செய்யவேண்டும். நம்புகிறது ஒன்று, செய்வது இன்னொன்று என்று உலகத்திற்குப் பயந்துகொண்டு வாழக்கூடாது. பகுத்தறிவு என்பது இரட்டை வாழ்க்கை முறையை ஒழிப்பது. பெரியாருடைய பகுத்தறிவு என்பது அவர் எதை நம்பினாரோ அதை உறுதியாக மக்கள் மத்தியில் எடுத்துச் சொன்னார் என்று எடுத்துக்கூறி, மனிதன் சமுதாயத்திற்குப் பயன்படவேண்டும்; பிறவி பேதம் கூடாது; பெண்கள் கல்வி, தலையெழுத்து, பெரியாரின் மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாக குடிஅரசு ஏட்டில் வெளிவந்த பிராமண விதவைப் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்த நிகழ்வு என பல சுவையான நிகழ்வுகளை செவிக்கு சுவைப்பட எடுத்துக்கூறி, பெரியாரை மேலோட்டமாக உங்களுக்குக் காட்டியுள்ளேன் என்று கூறி, சுமார் 1 மணி 10 நிமிடத்திற்குமேல் அனைவருக்கும் கருத்து விருந்தளித்தார்.

இறுதியாக, பெரியார் கண்ட வாழ்வியல் வெற்றிகரமாக நடந்ததை பாராட்டி, பெரியார் சமூக சேவை மன்றத்தின் நிறுவன தலைவர் வீ. கலைச்செல்வத்திற்கு, திராவிடர் கழகத் தலைமைக் கழகத்தின் சார்பாக தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார்.

திருமதி மலையரசிக்கு தமிழர் தலைவரின் வாழ்விணையர் திருமதி மோகனா வீரமணி பொன்னாடை அணிவித்தார். மற்றும் பெரியார் சமூக சேவை மன்ற உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசினை தமிழர் தலைவர் வழங்கினார்.

அனைவரும் மகிழ்ச்சியுடன் தமிழர் தலைவருடன் உணவு உண்ட பின், ஒளிப்படம் எடுத்துக்கொண்டு அன்புடன் விடைபெற்றனர்.

இந்நிகழ்வில் தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் ஆர். தேவேந்திரன், புதுமைத் தேனீ மா. அன்பழகன், திருமதி அருள்பாலு, ரெத்தின வெங்கடேசன், தொழிலதிபர் ஆண்ட்ரூ ஃபூங்க் மற்றும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், மாணவர்கள், பெரியார் சமூக சேவை மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


---------------------"விடுதலை" 25-11-2009

0 comments: