Search This Blog

19.11.09

மருத்துவக் கல்லூரியில் சேருவதற்குச் சமஸ்கிருதம் படித்திருக்கவேண்டுமாம்!

இந்நாள்!

இந்நாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கிய பொன்னாள். நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவை பனகல் அரசர் (ராமராய நிங்கர்) தலைமையில் பதவியேற்ற மதிப்புறு நாள் (19.11.1923 முதல் 3.12.1926 வரை) ஏ.பி. பாத்ரோ இரண்டாம் அமைச்சராக இருந்தார். கல்வி மற்றும் பொதுப் பணித் துறைகள் இவரின் பொறுப்பில் இருந்தன. மூன்றாம் அமைச்சராகவிருந்த டி.என். சிவஞானம் (பிள்ளை) வளர்ச்சித் துறையைக் கவனித்துக் கொண்-டார்.

1923 முதல் 1926 வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்த இந்தப் பருவம் பார்ப்பனர் அல்லாதார் வரலாற்றில் பொன் பூத்துக் குலுங்கி மணம் பரப்பிய இளவேனிற்காலம் ஆகும்.

பார்ப்பனர்களின் சந்தைக் காடாகக் கிடந்த இந்துக் கோயில்களின் நிருவாகத்தை அரசின் கட்டுக்குள் கொண்டு வந்து கூத்தாடிய குடுமிகளை குண்டு சட்டிக்குள் அடக்கிய மகத்தான காரியம் நடைபெற்றது இந்தக் காலகட்டத்தில்தான்.

மருத்துவக் கல்லூரியில் சேருவதற்குச் சமஸ்கிருதம் படித்திருக்கவேண்டும் என்றிருந்த சூழ்ச்சிக்கு முற்றுப் புள்ளியும் இப்பொழுதுதான் வைக்கப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் கல்லூரிகளில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் நுழைவது என்பது குதிரைக் கொம்பே! கல்லூரி முதல்வர்களாகப் பெரும்பாலும் பார்ப்பனர்களே இருந்தமையால் நமது மாணவர்கள் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு முன்னாலேயும் உதைத்தார்கள்; பின்னாலேயும் உதைத்தார்கள்.

இந்த இரும்புக் கதவை உடைக்க ஒருமுறை கொண்டு வரப்பட்டது. கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு என்று ஒரு குழு அமைக்கப்பட்டது. அவர்கள்தான் மாணவர்களைக் கல்லூரிகளில் சேர்த்தனர். முள்ளை முள்ளால் எடுத்த முழுமதி செயல் அல்லவா இது.

சென்னைப் பல்கலைக்கழகச் சட்டம் கொண்டுவரப்பட்டதும் இந்தக் காலகட்டத்தில். பிற்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மலர்வதற்கும் விதையூன்றப்பட்டதும் இப்பொழுதுதான்.

ஆங்கிலேயரின் ஏகபோகமாகவிருந்த மருத்துவத்துறையை இந்திய மயமாக்கியவரும் பனகல் அரசரே!

பஞ்சமர், பறையர் என்ற பெயர்களை மாற்றியமைத்தது இந்த அமைச்சரவையே!

அரசு துறைகளில் பார்ப்பனர் அல்லாதாருக்கு உரிய இடங்கள் சட்டப்படி கிடைக்கின்றனவா என்பதை மேற்பார்வையிட குழு நியமிக்கப்பட்டதும் இந்தக் காலகட்டத்தில்தான்.

“அபார சாணக்கியன்’’ என்று சர்.சி.பி. ராமசாமி அய்யரே புகழ்ந்தார் என்றால், பனகல் அரசரின் மாட்சிமையை என்ன சொல்ல!

-------------- மயிலாடன் அவர்கள் 19-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: