Search This Blog

17.11.09

புகழ்ச்சியைப் பொழிவோரிடம் எச்சரிக்கை!

புகழ்ச்சியைப் பொழிவோரிடம் எச்சரிக்கை!

மனிதர்களுக்கு உள்ள பலவீனங்களில் மிகவும் மோசமானது வெறும் புகழ்ச்சிக்காகவே ஏங்குவது! இதனைப் புரிந்துகொண்டு பணம் படைத்தவர்கள், பதவியாளர்கள் முதலிய பலருக்கும் பின்னால் ஒரு ‘‘காக்காய் கூட்டமே’’ திரண்டுவிடும்! ஆனால், மிகவும் தெளிவான சிலர் புகழ்ச்சிகள்_ ரயில் பயணிகளிடம் சக பயணிகளாக நடிப்பவர் கொடுக்கும் “மயக்க பிஸ்கட்டுகள்’’ என்பதைப் புரிந்து கொண்டு அதற்கு இடந்தரவே மாட்டார்கள்; எப்போதுமே விழிப்புடன் இருப்பார்கள்.

நம் எதிரிகளை விட மிகவும் கொடுமையானவர்கள் இந்த முகஸ்துதியாளர்கள்! அவர்களது “டெக்னிக்’’ என்ன தெரியுமா? குறிப்பிட்டவர்கள் எதை சதா கேட்டு மகிழ வேண்டுமென்று விரும்புகிறார்கள் என்பதை நன்கு படித்துக்கொண்டு, அதன்படியே புகழ் வேட்டையாளர்களை வளைத்துப் போட்டுவிடுவார்கள்!

அத்தகைய பலவீனமானவர்கள் இவர்களது “கண்ணிவெடியில்’’ சிக்கிக் கொள்வார்களே தவிர, விடுபட்டு தலைநிமிர்ந்து “சுதந்தர மனிதர்களாக’’ ஒருபோதும் மீளமாட்டார்கள்!

விமர்சனங்களோ, காதுக்கு ‘இதமான’ புகழ்ச்சிகளோ இல்லையென்றால், உண்மையான நண்பர்களுக்கு அடையாளமே சரியான உண்மையான தவறுகளை, பலவீனங்களைச் சுட்டிக்காட்டிடத் தயங்காதவர்கள்தான்!

எனது வாழ்விணையர் நான் பேசிய கருத்துகளிலோ, எழுதிய அறிக்கைகளிலோ, கட்டுரைகளோ ஏதாவது ஏற்க இயலாத அல்லது தரக்குறைவானவைகளோ என்னையும் அறியாமல் மீறி இடம்பெற்று விட்டால், தயவு தாட்சண்யம் காட்டாமல் கண்டித்துச் சொல்வார்!

“நகுதல் பொருட்டன்று நட்பு’’ என்பதற்கும் அதுதானே எடுத்துக்காட்டு?

ஒரு பொருளை உருவாக்கிவிட்டிருப்பார்கள், அதன்மூலம் உங்கள் திறமைகளை ஊர் அறிய, உலகறியச் செய்திருப்பீர்கள் என்றால், உங்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதுதானே பொருளாகும்.

அதைப் பாராட்டுபவர்கள் நியாயமான பாராட்டினை உங்கள்மீது புகழ்ச்சி வார்த்தைகளாகக் கூறினால், அதை ‘முகஸ்துதி’ என்று எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை! நேர்மையான பாராட்டு என்றால், அதனை ஊக்க உரையாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்! எடுத்துக்கொள்வதில் தவறில்லை.

அந்தப் புகழ்ச்சியை விட, நீங்கள் பாராட்டும் அவர்களிடத்திலேயே கூறும்போது ‘மிக்க நன்றி’ ஆனால், இதைவிட மேலும் சிறப்பாக செய்யும் விதத்தை நீங்கள் சொல்லிக் கொடுத்தால் எனக்கு மிகவும் நலம் பயக்கும் என்று கூறுங்கள். நீங்கள் அந்தத் தன்னடக்கத்தின்மூலம் வெற்றி ஏணியின் உச்சிப் படிக்கட்டுகளில் ஏறி நிற்பீர்கள்!

அதன்மூலம் உண்மையான “நண்பர்கள்’’ தேவைப்படும்போது இடித்துரைக்கும் இதமான நண்பர்கள் உங்களுக்குக் கிடைப்பது உறுதி!

புரட்சியாளர்கள், புகழ்ச்சியாளர்களை அருகில் நெருங்கவே விடமாட்டார்கள்; சற்று தள்ளியே வைப்பார்கள்.

உண்மை விமர்சனங்கள் காரணமாக, நம்மை மேலும் பண்படுத்திக் கொண்டு உயருவதற்கு அதுவே வாய்ப்பாக அமையும் என்பது உறுதி!

அதேநேரத்தில் ஒரு விஷயத்தில் நாம் கவனமாக இருத்தல் அவசியம்.

தாறுமாறான, தகுதியற்ற, உள்நோக்கம் கொண்ட விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவைகளைப் புறந்தள்ளி அலட்சியப்படுத்தவும், வெற்றிப் பாதையில் செல்லவும் வேக நடைபோடும் உரிமையும் நமக்கு உண்டு!

எதையும் “சலித்துப் புடைத்து’’ எது உமி, எது குப்பை, எது தானியம் என்பதை பிரித்தறிந்து பயன்பெறவும் நமக்கு உதவிகரமாக இருக்கும்!

எனவே, எந்த விதியையும் கண்களை மூடிக்கொண்டு ஏற்காமல், நிலைமைக்குத் தகுந்ததுபோல், நீக்குப்போக்குடன் நடப்பது நல்லது; பாதுகாப்பனதும்கூட!


------------------நன்றி:-"விடுதலை" 17-11-2009

0 comments: