Search This Blog

10.11.09

விதண்டாவாதிகளை நடுங்க வைத்த வெடிகுண்டு - கைவல்யனார் !




"புராணம் - ஒரு பித்தலாட்டம்’’ - என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதாகக் கூறிவிடலாம். இப்போதிருக்கும் வாலிப உலகுக்கு இது போதும்.

ஆனால், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு! தமிழகத்தின் நிலை, அதுவல்ல. காலக்கழனி, காய்ந்து உலர்ந்து கிடந்த நேரம் அது! சுயமரியாதைக் கொள்கை யென்றாலே தூற்றப்பட்ட காலம் அது!! - அந்த நேரத்தில், வெட்டு ஒன்று துண்டு இரண்டாக,எதனையும் எடுத்துச் சொல்லிவிட முடியாது. அவ்விதம் சொல்வதன் மூலம், அவைகளிலுள்ள குற்றங் குறைகளை மக்களும் உணர்ந்துவிட மாட்டார்கள். ‘`புராணத்தை ஏன் குற்றம் சொல்கிறோம்?’’ என்பதில் ஆரம்பித்து ``இவ்வளவு கடவுள்கள் யாருடைய சிருஷ்டி?" என்ற கேள்வியை எழுப்பி, `` மனிதன் தவிப்பதேன்?" என்கிற சிந்தனையைத் தூண்டுவ தென்றால், ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் தரப்பட வேண்டும்.

அத்தகைய விளக்கங்களைத்தான் அந்தக் காலத்திய `குடியரசு’ ஏடு ஏந்தி வந்தது.

அதனைப் பார்த்ததால்தான் மதவாதி கள் மருண்டனர் - பண்டிதர்கள் பயந்தனர்.

"தேள், கொட்டும். தீண்டாதே!’’ என்று சொல்லுவதைவிட, தேள் கொட்டியதால் ஏற்பட்ட வலியைத் தெரிந்தவன், அதனைப் பற்றி விளக்கினால், யார் மறுக்க முடியும்?


எனவேதான், கைவல்ய சாமியார் அவர்களின் கட்டுரைகள், வெளி வருவதைக் கண்ட, பண்டிதரும் பக்தர் குழாமும் , திகைத்தனர் - விழித்தனர்.


கைவல்ய சாமியார்! - இந்தப் பெயர். அவர்களை நடுங்க வைத்தது. `இந்த வாரம் என்ன எழுதுவாரோ?’ என்று ஏங்குமளவுக்கு, அவர்தம் சிந்தையைக் குழப்பிற்று.


புராணங்களைக் கரைத்துக் குடித்து, தமிழ் மறைகளின் பெருமைகளைத் தினமும் ஓதி, தமக்கு நிகர் தரணியில் எவருமில்லையென்கிற தருக்கோடு உலவிய பண்டித மணிகளிடையே ஒரு வெடிகுண்டாக விளங்கினார் நமது கைவல்யம்.

கைவல்யத்திடம் சிக்கினோர், மீள முடியாது. அகில உலக வளர்ச்சி, அங்கிருக்கும் ஆண்டவன், நமது மதம். இங்கிருக்கும் தேவாதி தேவர்கள், அவர்களது திருவிளையாடல்கள் அத்தனையையும், ஆதாரங் களோடு எடுத்துக் காட்டுவார். பதிலா கூற முடியும்? - திகைத்தவனாயிருந்தால், `சு.ம. வைப்பார்த் தீங்களோ?’’ என்று கேலி செய்து விடலாம். அவர், கைவல்யமாச்சே! பண்டிதரும் பக்தரும் கூறும் அத்தனை நூல்களையும் கரைத்துக் குடித்தவராச்சே!


"வேதம் உயர்ந்ததா? ஆகமம் உயர்ந்ததா? இரண்டும் ஒன்றா? எதிலிருந்து எது வந்தது? எதை எது போர்த்துக் கொண்டிருக்கிறது? - என்று சண்டை போட்டு, வேதத்தும்ஸ கோளரி, சைவ மத சண்டமாருதம், மாயாவாத கண்டன கேசரி என்கிற பட்டங்களைச் சூட்டிக் கொள்வோரின் தர்க்கங்களும், கடவுள் பக்திகளும், எழுதின புஸ்தகங்களும் மோட்சம் கொடுக்காதென்று நாங்கள் சொல்ல வரவில்லை. ஆனால், இதில் செலவழிப்பதில் சிறிது நேரத்தை எடுத்து `பெப்பர் மிண்டு’ செய்யப் புஸ்தகம் எழுதியிருந்தால் இவர்கள் பிள்ளைகள் ஆசார தோஷமில்லாமல் பெப்பர்மிண்டு தின்னலாமே? தங்கள் பிள்ளைகள் `பெப்பர்மிண்ட்" கேட்கையில் ஆசாரதோஷம் வந்துவிடுமென்று அதை அடிக்க வேண்டாமே?"

எவ்வளவு குறும்பு- வேதநூல்களைப் புரட்டி விதண்டாவாதம் செய்வதைவிட, `பெப்பர்மிண்ட்’ செய்யக் கற்றிருக்கலாமே! என்று கேலி செய்வதைப் படிக்கும் எவர்தான் மறுப்புக் கூறமுடியும்?


-----------------------நூல்:-"பேரறிஞர் அண்ணாவின் உள்ளம் வருந்திய நிகழ்ச்சிகள்" மூன்றாம் தொகுப்பிலிருந்து!

0 comments: