நமது பத்திரிகை
நமது குடி அரசுப் பத்திரிக்கை ஆரம்பித்து ஆறு மாதங்களாகின்றது. அது முக்கியமாய் நமது நாட்டுக்கு சுயராஜ்யமாகிய மகாத்மாவின் நிர்மாண திட்டத்தை அமலுக்குக் கொண்டு வரவும் தமிழர்களாகிய தீண்டாதார் முதலியோருடைய முன்னேற்றத்துக்கென்று உழைக்கவுமே ஏற்படுத்தப்பட்டது. இத்தொண்டில் குடிஅரசு சிறிதுங் கள்ளங் கபடமின்றி யாருடைய விருப்பு வெறுப்பையும் பொருட்படுத்தாது தனது ஆத்மாவையே படம் பிடித்தாற்போல் தைரியமாய் வெளிப்படுத்தி கொண்டு செய்து வந்திருக்கின்றது வரவும் உத்தேசித்திருக்கிறது. குடிஅரசு குறிப்பிட்ட கருத்தைக் கொண்ட பிரசார பத்திரிகையேயல்லாமல் வெறும் வர்த்தக பத்திரிகை அல்லவாதலால்...
....உண்டாகும் படியாக வீணாய் கண்ட கண்ட விஷயங்களையெல்லாம் கூலிக்கு எழுதச் செய்வித்தும், குறிப்பிட்ட அபிப்பிராயமில்லாமல் சமயத்திற்கேற்றாற் போல் ஜனங்களின் மனதைக் கலங்கச் செய்து வருவதுமான பொறுப்பில்லாத ஓர் வேடிக்கைப் பத்திரிகையுமன்று, பிரதி வாரமும் குடிஅரசு தனது ஆத்மாவை வெளிப்படுத்தும் போது கண்ணீர் சொட்டாமலிருக்க முடிவதேயில்லை. இதன் பலனாக உயர்ந்தோரென்று சொல்லிக் கொள்ளுவோராகிய பிராமணர் முதலிய சமூகத்தாருக்ககும், ராஜியத்தலைவர்களென்று சொல்லிக் கொள்ளுவோர்களாகிய பல ராஜதந்திரிகளுக்கும், விரோதியாகவும் அவர்-களுடைய சூழ்ச்சிப் பிரசாரங்களுக்கு நமது குடிஅரசு ஆளாக வேண்டியதாகவும் ஏற்பட்டிருக்கிறது. இவ்வித நிலையில் குடிஅரசு சீக்கிரத்தில் பாமர ஜனங்களின் செல்வாக்கைப் போதிய அளவு பெற முடியாமலிருப்பது ஓர் ஆச்சரியமல்ல.
உண்மையில் குடிஅரசுக்கு எந்த பிராமணரிடத்திலும் குரோதமோ வெறுப்போ கிடையாதென்பதை உறுதியாகச் சொல்லுவோம். ஆனால் பிராமணன் உயர்ந்தவனென எண்ணிக் கொண்டிருப்பதிலும், மற்றவர்கள் தீண்டாதவர்கள், பார்க்கக் கூடாதவர்கள் இழிவான மிருக உரிமைக்கும் பாத்திரமில்லாதவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணத்தினிடத்திலும், தங்கள் வகுப்பார்தான் முன்னணியிலிருக்க வேண்டும், மேன்மையுடன் பிழைக்க வேண்டும், மற்றவர்கள் என்றென்றைக்கும் தங்களுக்கு அடிமையாகவேயிருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டும், அதற்காக மற்றவர்களை உபயோகித்துக் கொண்டும் செய்யும் கொடுமையான சூழ்ச்சிகளிடத்திலுந்தான், குடிஅரசுக்கு வெறுப்பு இருப்பதுடன், அதை அடியோடே களைந்தெறிய வேண்டுமென்று ஆவல் கொண்டு உழைத்து வருகிறது.
பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்வோரிடத்தில் குடிஅரசுவின் தற்காலப் பத்திராதிபர் எவ்வளவோ அன்புடனும், பக்தியுடனும், நட்புடனும் வெகுகாலமாக நடந்து கொண்டு வந்திருக்கிறார். அநேக பிராமணர்களுடைய அன்புக்கும் பாத்திரமாயிருந்திருக்கிறார். இன்னும்இருந்து வருகிறார். தேசிய வேலையிலும், பல தேசிய பிராமணர்களுடன் ஒன்றுபடக் கலந்தே ஒத்துழைத்தும் வந்திருக்கிறார். உதாரணமாக, ஒத்துழையாமைக்கு முன்பு சட்ட சபைப் பிரவேசங்களுக்கு தனது குடும்ப சகோதரர்கள் போன்ற ஆப்த நண்பர்களான ஸ்ரீ மான்கள் கோவை, எம். சம்மந்த முதலியார், டி.எ.ராமலிங்கம் செட்டியார், எம். வேணுகோபால் பிள்ளை முதலியோர்களுக்கு விரோத மாகவும், அதற்குமுன் அதிகப் பழக்கமில்லாத ஸ்ரீமான் பி.வி. நரசிம்மய்யருக்கு தீவிர தேசிய வாதி என்கிற ஒரு காரணத்திற்காகவே அவருக்ககு சட்ட சபை அங்கத்தினர் பதவி கிடைக்க வேண்டிய வேலை செய்திருக்கிறார் இது ஒரு விஷயத்தை மாத்திரம் இங்கு சொல்வது குற்றமாகாதென்று நினைக்கிறோம் அதாவது, ஸ்ரீமான். வேணுகோபால் பிள்ளைக்காக ஸ்ரீமான் நரசிம்மய்யரை தம் அபேட்சகர் தானத்தை வாபீஸ் வாங்கிக் கொள்ளும்படி ஒரு சட்ட சபைத் தேர்தலில் கேட்கப்பட்ட போது ஸ்ரீமான் பி.வி. நரசிம்மய்யர் ஸ்ரீ மான் வேணுகோபால் பிள்ளை தாம் காங்கிரஸ்வாதியென்றும் ஹோம்ரூல் கட்சியைச் சேர்ந்தவரென்று வெளிப்படையாகப் பத்திரிகைகளுக்குக் எழுதினால் தாம் அபேட்சகர் ஸ்தானத்தில் இருந்து விலகிக்கொள்வதாகப் பகிரங்கமாகச் சொன்னார். அந்தப் படியே ஸ்ரீமான் வேணுகோபால் பிள்ளையும், தாம் காங்கிரஸ்வாதியென்றும், ஹோம்ரூல் கட்சியைச் சேர்ந்தவரென்றும் பத்திரிகைகளுக்கு எழுதி விட்டார். பேச்சுப்படி, ஸ்ரீமான் நரசிம்மய்யர் பின்வாங்கிக் கொள்ளவேண்டுமென்று சொன்ன காலத்தில் முடியாதென்று சொல்லி விட்டார். இது விஷயங்களைப் பத்திரிகைகளுக்கு எழுதின காலத்தில் நியூ இந்தியா, ஹிந்து, சுதேசமித்திரன் இம்மூன்றும் பிரசுரிக்கவேயில்லை. இம்மாதிரி நாணயத் தவறுதல் ஏற்பட்ட சந்தர்ப்பத்திலுங் கூட ஸ்ரீமான் நாயக்கர், தம்முடைய ஆப்தநண்பராயிருந்து கொண்டு வந்த ஸ்ரீமான் வேணுகோபால் பிள்ளையவர்களுக்கு விரோதமாகவும், ஸ்ரீமான் நரசிம்மய்யருக்கு அநுகூலமாகவுமிருந்து தம்முடைய வோட்டுகளையும், தம் நண்பர்களுடைய வோட்டுகளையும், ஸ்ரீமான் நரசிம்மய்யருக்கே கொடுத்து அவரை சட்டசபை மெம்பராக இருப்பதற்கும் உதவி செய்தார்.
அல்லாமலும், ஒத்துழையாமை காலத்திலும், தேசிய பிராமணர்களுடன் ஒன்று படக் கலந்தே பரிசுத்தமாய் சில பிராமணர்களைப் பின் பற்றியும், அவர்களைத் தலைவர்களாக்கியும், அவர்களைத் தலைவர்களாகக் கொண்டும், உழைத்து வந்திருக்கிறார். இவையெல்லாம் தேசத்தையும் தேச க்ஷேமத்தையும் முன்னிட்டேயல்லாமல், வேறெவ்வித சுயநலத்திற்காகவும் அல்லவென்பதை ஸ்ரீமான் நாயக்கரின் எதிரிகளுங்கூட அறிவார்கள். இப்படியிருக்க, இப்பொழுது திடீரென்று, சில தேசிய வாதிகளென்போரிடமும் முக்கியமாய் பிராமண சமூகத்தில் பலரிடமும் அருவருப்புத் தோன்றக் காரணமென்ன வென்பதை வாசகர்கள் அறிய ஆவல் கொள்ளுவது சுபாவமேயாகும். நமக்கு இதுவரை ஏற்பட்ட அனுபவத்தில், பிராமண தேசிய வாதிகளென்போரில் பெரும்பாலோர், தங்கள் சுயநலத்திற்கும், தங்கள் வகுப்பு முன்னேற்றத்திற்கும், பிராமணரல்லாத மற்ற எல்லா சமூகத்துக்கும் துரோகம் செய்வதற்குமே உழைத்து வந்திருக்கின்றார்களென்றும் - ஸ்ரீமான் நாயக்கர் போன்றாரை உபயோகப்படுத்திக் கொண்டு வந்திருக்கின்றார்களென்றும், நினைக்கும்படியாகவே ஏற்பட்டுப் போய்விட்டது.
பிராமணர்களின் தியாகமென்று சொல்லப்படுவதும் பிராமணரல்லாதாரின் கெடுதிக்காகவே செய்யப்படுவதாய் காணப்படுகிறது. இந்நிலையில், தேசத்தின் பெரிய சமூகத்தாரான, பிராமணரல்லாதாரைப் பலி கொடுத்து பிராமணர்களுக்கு நல்ல பிள்ளைகளாய் நடக்கவேண்டும் என்கிற எண்ணம் கொஞ்சமும் தோன்ற மாட்டேனென்கிறது. அல்லாமல், இவற்றைப்பற்றிய கவலை எடுத்துக் கொள்ளாமல் எப்படியோ போகட்டும் என விட்டுவிடுவதற்கும் மனம் ஒப்பப்படுவதில்லை. என்றைக்கிருந்தாலும் இரு சமூகத்தினரும் ஒன்றுபட்டுத் தானாக வேண்டும். அங்ஙனம் ஒன்றுபடுவதற்கு அவரவர்களுடைய குற்றங் குறைகளை எடுத்துச் சொல்லப் பயந்து கொண்டு மேற்பூச்சுக்கு மாத்திரம் பிராமணர்களிடம் அன்பர்களாய் நடந்து கொள்ளுவதில் இரு சமூகத்தாருக்கும் ஒரு பிரயோஜனமுமேற்படாது எனக் கருதியே, யாருடைய நிஷ்டூரம் ஏற்பட்டாலும் அதைப்பற்றிக் கவலையில்லாமல், உண்மையை எடுத்துக்கூறி குற்றங்களைக் கீறி ஆற்றி திருத்தப்பாட்டையைச் செய்து கட்டுப்பட்டு நமது நாடு உண்மையான விடுதலை அன்பில் கட்டுப்பட்டு நமது நாடு உண்மையான விடுதலை பெறவே, உழைத்து வரப்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே குடிஅரசின் முதலாவது இதழ் தலையங்கத்தில் மக்களுக்குள் தன் மதிப்பும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும், மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும், உயர்வு தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் ஜாதிச் சண்டை என்றாலும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றென்று எண்ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும், சமயச் சண்டைகள் ஒழியவேண்டும், ஆனதுபற்றியே, நகுதற்பொருட்டன்று நட்டல் மிகுதிக் கண்மேற் சென்றிடித்தற் பொருட்டு எனும் தெய்வப் புலமைத் திருவள்ளுவரின் வாக்கைக் கடைபிடித்து, நண்பரேயாயினுமாகுக, அவர் தம் சொல்லும், செயலும் தேச விடுதலைக்குக் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்தொதுக்கப்படும் என நமது அபிப்பிராயத்தைத் தீர்க்ககமாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.
இந்நிலையில், நமது குடிஅரசு பாமர ஜனங்களின் ஆதரவைப் பூரணமாகப் பெறுவது சுலபத்தில் எதிர்பார்க்கக் கூடிய காரியமல்ல. உதாரணமாக குடிஅரசு ஏற்பட்டு ஆறுமாத காலமாகியும் இதுவரை ஆயிரத்துச் சில்லரை சந்தாதாரர்களே சேர்ந்திருக்கிறார்கள். இது நஷ்டத்தில் தான் நடைபெற்று வருகின்றதெனச் சொல்ல வருந்துகிறோம். அதனைப் படிக்கவேண்டிய அளவு ஜனங்கள் படிக்கவில்லையென்பதே நமது அபிப்பிராயம். பெரும்பாலும், பிராமணர், செல்வந்தர், முதலாளிகள், வைதிகர் முதலியோரிடைய குற்றங்களை எடுத்துச் சொல்லி வருவதால், அவர்கள் நமது பத்திரிகையை ஆதரிப்பார்களென்று எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனமாகவே முடியும். ஆதலால், நமது பத்திரிகையை ஆதரிக்கவேண்டியது பிராமணரல்லாதார், ஏழைகள், தொழிலாளிகள், தீண்டாதாரெனப்படுவோர் முதலிய ஒடுக்கப்பட்ட சமூகத்தாருக்கு ஏற்பட்ட முக்கிய கடனாகும். அந்தப்படி இக்கூட்டத்தார் நமது குடிஅரசை ஆதரிக்கவில்லையானால், குடிஅரசு தானாகவே மறைந்து போகவேண்டியதுதான். அதனுடைய கடமையேயல்லாமல், முன் சொன்னது போல் சுயநலம் முதலியவைகளுக்கென்று இப்பத்திரிகையை நடத்துவதில் பிரயோஜனமில்லை. ஏனெனில், குடி-அரசு ஆனது தன்னுழைப்பினாலும், தனது தியாகத்தினாலும் மக்கள், சிறப்பாய் பிராமணரல்லாதார் தீண்டாதார் முதலியோர் விடுதலை பெற்று சுயமதிப்புடன் வாழ்ந்து தேசம் உண்மையான சுயராஜ்யமடைய வேண்டுமென்றும், சகலரும் சமமாய் வாழவேண்டுமானால், தாழ்த்தப்பட்டவர்க ளெல்லாம் சம நிலைக்கு வரவேண்டுமானால், வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் இன்றியமையாதெனக் கருதி அதையெல்லா வகுப்பாரும் அடைய வேண்டுமென எதிர்பார்க்கிறதேயொழிய, பொது மக்கள் வாழ்வால் குடிஅரசு வாழவேண்டுமென்று அது கருதவேயில்லை. ஆதலால் குடிஅரசின் வாழ்வைக் கோருகிற ஒவ்வொருவரும், தங்களாலியன்றளவு புதிய சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொடுத்தும் மற்றும் தங்களால் கூடிய உதவி செய்தும் இதனை ஆதரிக்கவேண்டும்.
------------------------ "குடிஅரசு", தலையங்கம் 01.11.1925
0 comments:
Post a Comment