Search This Blog

15.11.09

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பெரியார் தேவை

பெரியார் தொடுத்த போரின் ஒரு கட்டத்தில்
இருந்து பணியாற்றிய காலமே என் வசந்த காலம்
அண்ணாவின் எழுத்தோவியத்தை பிரதிபலித்தார் தமிழர் தலைவர்

‘‘பெரியார் தொடுத்த போர் நடந்தபடியிருக்கிறது. அந்தப் போரில் ஒரு கட்டத்தில் அவருடன் இருந்திட்ட நாள்களைத்தான் வசந்தம் என்று குறிப்பிட்டேன்’’ என்று அண்ணா அவர்கள் எழுதிய எழுத்தோவியத்தை எடுத்துக்காட்டினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை பெரியார் திடலில் அறிஞர் அண்ணா நூற்றாண்டை ஒட்டி ‘‘அறிஞர் அண்ணாவின் நிலைத்த எழுத்தோவியங்கள்’’ என்ற தலைப்பில் 1.9.2009 அன்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்

காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக ஆனார். டெல்லிக்குச் சென்றார். பிறகு அவர் முதல் முறையாக சென்னைக்கு வருகிறார். முதல் முறையாக திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள அவரது இல்லத்திலே செய்தியாளர்கள் சந்தித்துக் கேள்வி கேட்கின்றனர்.

‘‘நீங்கள் டெல்லி சென்றீர்களே, உங்களுடைய அனுபவம் எப்படி இருந்தது? அங்கேயிருந்த சூழ்நிலைகள் என்ன? உங்களுக்கு இந்த புதிய பொறுப்பு எப்படி இருக்கிறது’’ என்று கேள்வி கேட்டனர்.

காமராஜர் அதற்கு பதில் சொன்னார், ‘‘எனக்கு சங்கடமாக இருக்கிறது. இந்தப் பொறுப்பை சுமக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்’’ என்று அவருக்கே உரிய முறையில் உண்மையான செய்தியை சொன்னார்.

காமராஜர் மனம் திறந்து சொன்னார்

காமராஜர் அவர்கள் எல்லாவற்றையும் சொல்லுவார்கள். மனம் திறந்து பேசுவார்கள். கடைசியாக செய்தியாளர்களிடம் சொல்லுவார்கள். ‘‘இதை மட்டும் செய்தியாகப் போடுங்கள். மற்றவற்றை போடாதீர்கள்’’ ஆஃப் தி ரெக்கார்ட் என்று ஆங்கிலத்திலே சொல்லுகிற மாதிரி சொல்லுவார். எந்த செய்தியாளர்களும் அவர் சொன்னதை மீறி செய்தி போடமாட்டார்கள். மீறிப்போட்டுவிட்டால் அதற்குப் பிறகு காமராஜரிடம் வர முடியாதவர்களாக ஆக்கப்படுவார்கள். அவ்வளவு தெளிவான ஒரு நிலை உண்டு.

அப்பொழுது காமராஜர் சொன்னார். ‘‘நான் வட புலத்திற்குச் சென்று பார்த்த பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பெரியார் தேவை

ஒரு பெரியார்இங்கே இருக்கிறார்.ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பெரியார் தேவை. எனக்கு பெரிய வேதனை என்னவென்றால், யாரைப் பார்த்தாலும் ஜோதிடம் பார்ப்பவராக இருக்கின்றனர்.

சட்டை போடுவதற்குக்கூட ஜோதிடம் பார்க்கக் கூடியவராக இருக்கின்றார்கள். இன்றைக்கு எந்த கலரில் சட்டை போடுவது என்பது முதற்கொண்டு, ஜோசியக்காரன் சொல்கிறபடிதான் வடபுலத்திலே இருக்கிறவன் நடக்கிறான்.

இது என்ன அரசியல்?

இது என்ன அரசியல் என்றே தெரியவில்லை. பெரிய பெரிய தலைவர்களே இப்படித்தான் இருக்கிறார்கள் என்று பத்திரிகையாளர்களிடம் சொல்லிவிட்டு, இந்த செய்தியைப் பத்திரிகைகளில் போட்டு விடாதீர்கள். இது என்னுடைய சொந்தக் கருத்து’’ என்று சொன்னார்.

பிறகு செய்தியாளர்கள் தந்தை பெரியார் அவர்களிடத்திலே வந்து இந்தச் செய்தியைச் சொன்னார்கள். ஆகவே இது காமராஜர் அவர்களுடைய நிலையாக அன்றைக்கு இருந்தது. அண்ணா சொல்லுகிறார். தமிழகத்தின் நிலை இன்று அவரால் ஏற்பட்டுள்ள நிலை. இந்தியாவில் இங்குள்ளது போன்ற நிலையை வேறு எங்கும் காண முடியாது.

பிற பகுதியினர் இது பற்றி கேள்விப்படும்பொழுது வியந்து போகின்றனர். அப்படியா? முடிகிறதா? நடக்கிறதா? விட்டு வைத்திருக்கிறார்களா? என்று கேட்கிறார்கள். சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு அண்ணா அவர்களுக்கு இயல்பாக இருக்கின்ற கிண்டல் கேலி.

பகுத்தறிவுவாதிகள் கேட்ட கேள்வி

இதைக் கேட்பதற்குக் கூட அவனுக்கு தைரியம் இல்லை. அரித்துவார், கொல்கத்தா, பாட்னா, கான்பூர், காசி, லாகூர், அலகாபாத், அமிர்தசரஸ் மேலும் இவை போன்ற வட இந்திய நகரங்களில் என்னையும் உடன் அழைத்துக் கொண்டு பெரியார் சுற்றுப் பயணம் செய்த பொழுது, ஒவ்வொரு ஊரிலும் இது போலத்தான் கேட்டனர். யார்? அந்த ஊரிலே உள்ள பகுத்தறிவுவாதிகள். அதுதான் வேடிக்கை. இந்தக் கருத்துகளை இவ்வளவு வேகமாகச் சொல்லக்கூடிய தலைவருக்கு, அவ்வளவு பின்பற்றக் கூடிய தொண்டர்கள் மக்கள் இருக்கிறார்களா? என்று ஆச்சரியத்தோடு கேட்கின்றனர்.

மற்ற பாமர மக்கள் கேட்கவில்லை. வடபுலத்தில் இருக்கின்ற பகுத்தறிவாளர்கள் இந்தக் கேள்வியை கேட்கின்றனர். வடபுலத்திலே இருக்கின்ற பகுத்தறிவுவாதிகள் படிப்பார்கள் பெரிய, பெரிய ஏடுகளை (அண்ணா அவர்களுடைய எழுத்து முறை இது).

எழுதுவார்கள் அழகழகான கட்டுரைகளை கூடிப் பேசுவார்கள் சிறிய மண்டபத்தில் (சிரிப்பு). போலீஸ் பாதுகாப்பு பெற்றுக்கொண்டு பேசுவார்கள்.

இவர் பேசாத நாள் உண்டா?

இங்கா! இவர் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எதற்கு அவர் பணிந்தார்.? எந்தப் புராணம் அவருடைய தாக்குதலைப் பெறாதது.?

அடித்தளம் நொறுங்கிப் போனது

அடே அப்பா! ஒரே ஒருவர் அவர் நம்மை அக்கு வேறு, ஆணிவேராக எடுத்தெடுத்து வீசுகிறாரே என்று இந்த நாட்டை என்றென்றும் விடப் போவதில்லை என்று எக்காளமிட்டுக்கொண்டிருந்த பழமை அலறலாயிற்று. புதுப்புது பொருள் கொடுத்தும், பூச்சுக்கு மெருகு கொடுத்தும் இன்று பழமையின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றாலும் விழுந்த அடியால் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டது.

எனவே பெரியாருடைய பெரும்பணி என்பது ஒரு தனிமனிதருடைய வரலாறு என்றல்ல. ஒரு சகாப்தம், ஒரு காலகட்டம், ஒரு திருப்பம் என்று கூறுவது வாடிக்கை.

அக்கிரமம் தென்படும்பொழுது

அக்கிரமம் தென்படும் பொழுது, மிகப் பலருக்கு அது தன்னைத் தாக்காதபடி தடுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணம் ஒதுங்கிக்கொள்வோம் என்ற பாதுகாப்பு உணர்ச்சியில்தான் என்றும் எதிர்த்து நிற்க வேண்டும் என்கிற எண்ணம் எளிதில் எழுவதில்லை.

பெரியார், அக்கிரமம் எங்கு இருந்திடக் கண்டாலும், எந்த வடிவிலே காணப்பட்டாலும் எத்தனை பக்க பலத்துடன் வந்திடினும் அதனை எதிர்த்து போராட தயங்குவதில்லை. அவர்கண்ட களம் பல. பெற்ற வெற்றிகள் பலப்பல . அவர் தொடுத்த போர் நடந்தபடியிருக்கிறது. அவர் வயதோ 89. ஆனால் போர்க்களத்திலேதான் நிற்கின்றார். அந்தப் போரில் ஒரு கட்டத்தில் அவருடன் இருந்திட்ட நாள்களைத்தான் வசந்தம் என்று குறிப்பிட்டேன். அந்தப் போரில் அவருடன் இருந்திடும் வாய்ப்பினை பெற்ற நாள்களைத்தான் வசந்தம் என்று குறிப்பிட்டேன்.

நமக்காக மேலும் வாழ்ந்திருக்க வேண்டும்

மேலும் பல ஆண்டுகள் அவர் நம்முடன் நமக்காக, வாழ்ந்திருக்க வேண்டும். தமிழர் வாழ்வு நல்வாழ்வாக அமைவதற்கு பன்னெடுங்காலமாக இருந்து வரும் கேடுகள் களையப்படுவதற்கு அவர் தொண்டு தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் என்பதில் அய்யமில்லை. வாழ்க பெரியார் என்று ‘‘அந்த வசந்தம்’’ என்ற கட்டுரையில் அண்ணா அவர்கள் எழுதியிருக்கின்றார்.

அண்ணா அவர்கள் விடுதலை மலருக்காக கட்டுரை அனுப்பிய அடுத்த நாள் அய்யா அவர்கள் சென்னைக்கு வந்தார். அண்ணா அவர்களுடைய ‘‘அந்த வசந்தம்’’ என்ற கட்டுரை வருகிறது என்று விடுதலையில் செய்தி வெளியிட்டோம். அய்யா அவர்கள் அழைத்தார். அண்ணா அவர்களின் கட்டுரையைப் படித்துக் காட்டினோம்.

அய்யா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை

அய்யா அவர்கள் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு அவர் அதைக் கேட்டு கேட்டு மகிழ்ந்த காட்சியிருக்கிறதே அது எங்களுக்கு வாழ்நாள் முழுக்க கிடைக்க முடியாத ஒரு பேறாக அந்தப் பேறு அமைந்தது. (பலத்த கைத்தட்டல்)

அது மட்டுமல்ல திருச்சியிலே அய்யா அவர்களை வைத்துக் கொண்டு, அய்யா அவர்களுடைய பிறந்தநாள் விழாவிலே கலந்து கொண்ட பொழுது சொன்னார்கள். ஆங்கிலத்தினுடைய சொற்றொடரைப் பயன்படுத்தினார்கள்.

அய்யா அவர்களுடைய சாதனை எவ்வளவு என்று சொல்லும் பொழுது Putting centuries in to a capsule என்று சொன்னார்கள். பல நூற்றாண்டுகளை ஒரு சிறு குளிகைக்குள்ளே அடைத்து விடுவதைப் போன்றது என்று சொன்னார்கள்.

அண்ணாவின் பகுத்தறிவுக் களஞ்சியம்

எனவே உரைகள் என்று சொல்லிப் பார்த்தால் இப்படி ஏராளமாக இருக்கின்றன. மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களிலே நிறைந்திருக்கக் கூடியவரான டாக்டர் சி.என்.ஏ பரிமளம் அவர்கள். அய்யா அவர்களுக்கு கடவுள், மதம் என்ற தலைப்பில் களஞ்சியம் நூல்களைப் போடுகிறோமோ அது போல அண்ணா அவர்களுடைய பகுத்தறிவுக் களஞ்சியத்தை இளைஞர்கள் மாணவர்கள் மற்றும் புதிய தலைமுறையினர் இனிவரும் தலைமுறையினருக்கெல்லாம் அண்ணா அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். டாக்டர் பரிமளம் அவர்கள் தொகுத்து கொடுத்ததுதான் பகுத்தறிவுக் களஞ்சியம் என்ற பெயரில் நாம் நூலாக வெளியிட்டிருக்கின்றோம். அண்ணா அவர்கள் எழுதிய சிறந்த கட்டுரைகளிலிருந்து முக்கியப் பகுதிகளிலேயிருந்து சில பகுதிகளைச் சொல்லுகின்றேன்.

இளைஞர்கள் இப்பொழுது பெரிய புத்தகங்களை வாங்குவார்கள் படிக்க மாட்டார்கள். அதே போல படிக்கலாம் என்று வைத்திருப்பார்கள் பல நண்பர்கள் படிக்க மாட்டார்கள். கோனார் நோட்சை வைத்தே படித்து பாஸ் பண்ணியவர்கள் நாம். எல்லாவற்றிற்குமே கோனார் நோட்சை வைத்துப் படிக்க வேண்டுமென்ற ஆசை. கோனார் நோட்சுக்கே இப்பொழுது நோட்ஸ் வந்து விட்டது.

அண்ணா அவர்கள் அரிச்சுவடி என்று போடாமல் அரிசிச் சுவடி என்று ஒரு தலைப்பு போட்டு எழுதியிருக்கின்றார். அண்ணா அவர்களது விஞ்ஞானக் கண் என்று ஒரு கட்டுரை. 21.11.1948இல் அண்ணா அவர்கள் எழுதியிருக்கின்றார்கள்.

அதனுடைய சில பகுதிகளை மட்டும் சுருக்கமாகச் சொல்லுகின்றேன். நேரத்தைக் கருதி. ஞானக் கண்ணினர் கண்ட சூரியன் தேர் ஏறி சுற்றும் ஏடு தேவன். ஞானக்கண் வேறு. விஞ்ஞானக் கண்வேறு. அண்ணா அவர்களைப் போல எழுத்தோவியத்தில் வேறு யாரும் பிரித்துணர்ந்திருக்க முடியாது. இதில் சொல்லும் பொழுது எவ்வளவு பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு சொல்கிறார் பாருங்கள்.

விஞ்ஞானக் கண்கொண்டு பார்க்கலாம்

விஞ்ஞானக் கண்களுக்கு தேவனும், தேரும், சக்கரமும் தெரியவில்லை. அவர்கள் காண்பது சூரியன் எனும் ஒரு கோளத்தை அதிலும் மேறுவை சுற்றிவரும் காட்சியை அல்ல. பல கோளங்கள் தன்னைச் சுற்றி வரும் நிலையில் உள்ள சூரியனைக் காணுகிறார்கள். ஞானக் கண்ணினர் கண்டதாக மட்டுமே கூறினர். கருத்து இயம்பி இருந்த காலத்தில் இந்த விஞ்ஞானக் கண்ணினர் நாம் கூறுவதை கண்டவர்கள் மட்டுமல்ல, காட்டுபவர்கள். புண்ணியவான்களுக்கு மட்டும்தெரியக் கூடிய மந்திர உச்சாடனத்தால் அல்ல, அதே விஞ்ஞானக் கருவியின் துணை கொண்டு பார்க்கலாம்.

ஏழு குதிரைகளில் மூன்று தெரிந்தால் கூட போதும்

நீ கூறும் விதமாகவா சூரியன் இருக்கிறது என்று இங்குள்ள சாதாரண மடிசஞ்சி கூட அறைகூவிக் கேட்டால், வாப்பா என்று அழைத்துச் சென்று நுண்ணறிவினர் தயாரித்த தொலை நோக்கிக் கருவியின் மூலம் கோளங்களை காண வைக்க முடியும். எட்டுக் கரத்திலே நாலு மட்டும் தெரிந்தால் கூட போதும், ஏழு குதிரைகளிலே மூன்று தெரிந்தால் போதுமென்று எவ்வளவு கெஞ்சினாலும், கூத்தாடினாலும், கேலிக்குரலிலே கூறினாலும் (அண்ணா அவர்கள் எவ்வளவு நயத்தோடு சொல்கிறார் பாருங்கள்)

இதில் என்ன எவ்வளவு நையாண்டி இருக்கிறது, ஏழு குதிரைகளில் சூரியன் வருகிறான் என்று இங்கு சொல்லி வைத்திருக்கிறார்கள். இதுதான்
ஞானக்கண் உள்ளவன் சொல்லுவது. கதை புராணம் இதை எல்லாம்)

அறை கூவி அழைத்தாலும் இங்கே உள்ள சங்கராச்சாரியோ, தம்பிரானோ, வேதாந்தியோ, மதவாதியோ சூரிய தேவனைக் காட்ட முடியாது. ஏனென்றால் ‘ஆகா ஊகூ’ பாடிட ரம்பை ஊர்வசி ஆடிட அரசு செலுத்தும் சூரிய தேவன் என்பது முலாம் பூசப்பட்ட மூடநம்பிக்கை.உலகம் ஏற்குமா? இந்தக் கூற்றை பாமரர் மனதிலே இந்த மூடநம்பிக்கையைப் புகுத்திய சூது மதியினர் சொரணை உள்ளவர்களானால் விஞ்ஞான சூரியனை விரட்ட வேண்டாமா? ஏட்டிலிருந்து, எண்ணத்திலிருந்து, தத்தமது வீட்டுச் சிறுவர் மனதிலிருந்து கூட ஓட்ட முடியாதே விஞ்ஞானச் சூரியனை. இது அண்ணா அவர்கள்எழுதிய அந்த விஞ்ஞானக் கண்.

-------------------தொடரும் ....."விடுதலை" 15-11-2009

0 comments: