‘பெரியார் கண்ட வாழ்வியலுக்கு’
சிங்கப்பூரில் மகத்தான வரவேற்பு
தமிழர் தலைவர் உரை கேட்க சிங்கை தமிழர்கள் திரண்டனர்
‘பெரியார் கண்ட வாழ்வியல்’ விழா 8.11.2009 ஞாயிறு அன்று சிங்கப்பூரில் எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் நடைபெற்றது.
‘பெரியார் கண்ட வாழ்வியல்’ விழாவில் தமிழர் தலைவர் கலந்து கொள்வார் என்ற விளம்பர பதாகை ஒரு மாதத்திற்கு முன்பே விழா நடைபெறும் திருமண மண்டபத்திற்கு முன்பு வைக்கப்பட்டிருந்தது. சிங்கப்பூர் ‘தமிழ் முரசு’ நாளிதழில் இரு நாள்கள் கொடுக்கப்பட்ட நல்ல விளம்பரமும் சிங்கப்பூர் தமிழர் நெஞ்சங்களில் விழாக்கோலம் பூண்டது என்பதை தமிழர் தலைவர் சிங்கப்பூர் வந்த போதே தெரியத் தொடங்கியது.
சனிக்கிழமை காலை விமான நிலையத்தில் ‘பெரியார் சமூக சேவை மன்ற’ உறுப்பினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனக் குடும்பம் குடும்பமாக தமிழர் தலைவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். அன்று மதியமே சிங்கப்பூர் தமிழ் தொலைக் காட்சிக்கு தமிழர் தலைவரின் சிறப்பு பேட்டி எனத் தொடர் நிகழ்வுகள்.
இரவு தொலைக் காட்சி செய்தியில் தமிழர் தலைவரின் சிறப்பு பேட்டியைக் கண்ட தமிழர்களின் உள்ளத்தில் அது உற்சாகத்தை ஏற்படுத்தியதை மறுநாள் விழா அரங்கில் கூடுதல் இருக்கைகளும் நிறைந்து மக்கள் நெருக்கத்தில் நின்ற அந்த சிறப்புக் காட்சியினைக் கண்டபோது உணரமுடிந்தது.
தமிழர் தலைவருக்கு
மேள தாளத்துடன் வரவேற்பு
ஞாயிறு மாலை விழாவிற்கு வந்த தமிழர் தலைவரையும் அவர்தம் வாழ்விணையர் மோகனா அம்மையாரையும் தோழர்கள், தாய்மார்கள் புடை சூழ தமிழர்களுக்கு உரிய மேளதாளத்துடன் வரவேற்றனர் அவர்களை பெரியார் பெருந்தொண்டர் இராமசாமி பொன்னாடை அணிவித்து விழா அரங்கிற்கு அழைத்துச் சென்ற காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
விழா அரங்கின் வெளியே வண்ணப் பதாகையில் பெரியாரின் புரட்சி மொழிகளை பல இடங்களில் கண்காட்சியாக தமிழர் தலைவர் சுற்றிப் பார்த்துவிட்டு விழா அரங்கிற்குள் நுழைந்தபோது, அனைவரும் எழுந்து நின்று தமிழர் தலைவருக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்ற காட்சி தமிழர்களின் அன்பினை வெளிப்படுத்தியது. தமிழர் தலைவரும் அனைவரிடமும் சென்று புன்னகையுடன் வணக்கம் தெரிவித்தார்.
நிகழ்ச்சி நெறியாளரின் புதிய பாணி
நிகழ்ச்சி நெறியாளர் பகுத்தறிவு கவிஞர் புதுமை தேனீ மா.அன்பழகன் நிகழ்ச்சியினைத் தொடங்கிய விதமோ தனிச்சிறப்பு!
‘பெரியார் கண்ட வாழ்வியல்’ யாரோ கண்டு பிடித்து இறக்குமதி செய்யப்பட்டதல்ல, எந்த சித்தாந்தத்தையும் வேதாந்தத்தையும் சுமந்து எடுத்துக் கொண்டு வரவில்லை; அது ஒரு மதமோ, வேதமோ அல்ல. மக்களோடு மக்களாய் வாழ்ந்தவர் பெரியார்; மக்கள் பிரச்சினைகளையும் நாட்டுப் பிரச்சினைகளையும் கண்கூடாகக் கண்டவர். அப்போதைக்கு அப்போது அவர் மண்டையில் சுரந்ததை வெளிப்படுத்தினார். மற்றவர்கள் சிந்திக்க மறுத்தவை, சிந்திக்க மறந்தவை, மற்றவர்களுக்குத் தோன்றாதவை பெரியாருக்குத் தோன்றிற்று. தந்தை பெரியாரின் தத்துவங்களுக்கு அவரே கர்த்தா; அவருடைய தத்துவங்களுக்கு அவரே விளக்கம் அளித்தார்; அவரது கொள்கைகளுக்கு அவரே பேச்சாளர்; அவரது கோட்பாடுகளுக்கு அவரே எழுத்தாளர். அவற்றை செயல்படுத்தப்படும் போராட்டங்களுக்கு அவரே முன் நிற்பார். வேறு எவரும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன் வராததால் என்ற பெரியார் கூறியதைக் கூறி யார் அந்தப் பெரியார்? என்று அறிஞர் அண்ணா கூறிய விளக்கத்தைக் கூறி வாழ்வின் செம்மை என்று தொடங்கும் புரட்சிக் கவிஞரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
தந்தை பெரியார் 1929 லிருந்து இருமுறை மலாய் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு வந்து சென்றதையும், தமிழர் தலைவர் 1968 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூருக்கு வருகை தருவதையும், அதன் விளைவாக பெரியார் சமூக சேவை மன்றம் தோற்றுவிக்கப்பட்ட வரலாற்று செய்தியினையும் உள்ளடக்கி,
சிங்கப்பூரில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் தொடக்க காலம் முதல் பாடு பட்டோர் பெரியார் தொண்டர்களே என்ற செய்தியினைக் கூறினார். சிங்கப்பூரின் தொடக்க காலத்தில் 1946 ஆம் ஆண்டிலே திராவிடர் கழகக் கல்விக் குழுக்களாக செயல்பட்டுள்ளார்கள் என்றும், பெரியார் ஈ.வெ.ரா. சமதர்ம பாடசாலை, ஈ.வெ.ரா. தமிழ் பாடசாலை, பாரதிதாசன் தமிழ் பாடசாலை என கிட்டத் தட்ட 25 தமிழ் பள்ளிகளை அவர்கள் நடத்தியிருக்கிறார்கள் என பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறியது பெரியார் தொண்டர்களின் சேவையை உணர்த்தியது.
பெரியார் சேவை- இதழாசிரியரின் இனிய வரவேற்புரை
உயர்தமிழ்ச் செம்மொழியான தமிழ் மொழியினை தமிழகத்திற்கு அப்பால் உள்ள அயல் நாடுகளில் தழைக்கச் செய்தவர்களின் உருவச் சிலைகளை அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் கால கட்டத்தில் நிறுவி சிறப்பு செய்ய வேண்டும். குறிப்பாக தமிழ்வேள் கோ. சாரங்கபாணி அவர்களின் உருவச் சிலையை நிறுவி சிறப்பு செய்ய வேண்டும் என்று தமிழர் தலைவரின் வழியாக தமிழக அரசுக்கு வேண்டு கோள் வைத்து, அனைவரையும் வரவேற்று பெரியார் சேவை இதழ் ஆசிரியர் எம். இலியாஸ் ஒரு வரலாற்றுரையாற்றினார்
தமிழ்நாட்டியம்
புதியதோர் உலகு செய்வோம் என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடலுக்கு மாணவி சிறீவைஷ்ணவியின் சிறப்பான தமிழ் நாட்டியம் வந்த அனைவரையும் கவர்ந்து, அவர்களின் வந்த களைப்பாற்றியது என்று சொன்னால் அது மிகையாகாது. பாடசாலை, பாரதிதாசன் தமிழ் பாடசாலை என கிட்டத் தட்ட 25 தமிழ் பள்ளிகளை அவர்கள் நடத்தியிருக்கிறார்கள் என பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறியது பெரியார் தொண்டர்களின் சேவையை உணர்த்தியது.
தலைமையுரை
பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வி.கலைச்செல்வம் தலைமையுரையில், மன்றம் நடத்திய தமிழ்ப் பேச்சுப் போட்டி போன்ற நிகழ்ச்சிகளை எடுத்துரைத்து நகைச்சுவையாக அடுக்குமொழி எனக்கு வராது; நான் பேச்சு மொழியிலே பேசுகிறேன் என்று கூறி, 10 ஆண்டுகள் அமெரிக்காவில் தமிழர்களே இல்லாத இடத்தில் வாழ்ந்தபோது தமிழ் மொழியை மறக்காமல் இருக்க தனக்குத்தானே தமிழ்மொழியில் பேசிய அனுபவங்களைப் பற்றி கூறி, நம் இனம் தமிழினம், நம் மொழி தமிழ்மொழி, நம் நாடு சிங்கை நாடு என இனப்பற்று, மொழிப்பற்று, நாட்டுப் பற்றை வலியுறுத்தினார்.
மனிதநேயம் வளரவேண்டும், மனிதனை மனிதனாகப் பார்க்க வேண்டும், மதிக்க வேண்டும். அதற்கு பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும் என்று பெரியார் கண்ட வாழ்வியலோடு அனைவரும் வாழ வேண்டும் என்று வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு, வளர்க சிங்கை நாடு, வளர்க மனிதநேயம் என்று கூறி பேசி முடித்தார். பெரியாரைப் பார்த்துப் பழகாத அவரிடம் பெரியாரின் தத்துவங்கள் எந்த அளவுக்கு கலந்துள்ளது என்பதை அனைவருக்கும் உணர்த்தியது.
பெரியார் பொன்மொழிகள்
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டிஸ் என்று புகழப்படும் தந்தை பெரியார் அவர்கள் நமக்காக வழங்கிய பல சிறந்த பொன்மொழிகளில் சிலவற்றை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஆரம்பித்து,
* சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு
* பகுத்தறிவிற்கும், தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்
* மானம் உடையவனுக்குத்தான் மனிதன் என்று பெயர்.
* மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
என்று 15க்கும் மேற்பட்ட பெரியாரின் புரட்சி மொழிகளை பெரியார் பிஞ்சு செல்வி குந்தவி தெளிவாக எடுத்து வழங்கிய விதமோ வந்தோரைப் பெரிதும் கவர்ந்தது!
நிகழ்ச்சிகளின் சிறப்பு அம்சங்கள்
* பெரியார் விருது திருமதி புஷ்பலதா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
* முதன் முறையாக பெரியார் சேவை என்ற விழா இதழ் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பாக சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது. 500 பிரதிகள் வந்தவர்களுக்குக் கொடுத்ததில் பற்றாக் குறையே ஏற்பட்டது (கூட்டம் அதற்கு மேல்.)
* சேவை மன்றத்தின் சார்பாக கல்வி வளர்ச்சி நிதி காசோலையினை சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டுக் கழகத்திற்கு, அதன் முதன்மை செயல் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் திரு. ராஜசேகர் அவர்களிடம் வழங்கப்பட்டது.
* நலிவடைந்தோருக்கு உதவித் தொகை நன்கொடையினை இந்து அறக்கட்டளைக்கு அதன்தலைமைச் செயல் அதிகாரி திரு. நல்லதம்பி அவர்களிடம் பெரியார் சமூக சேவை மன்றம் சார்பாக வழங்கப்பட்டது.
* கந்தசாமி கல்வி அறக்கட்டளைக்கு நன்கொடையாக பெரியார் பிஞ்சு குந்தவி தன் ஆண்டு சுயசேமிப்பு நிதியான 25 வெள்ளியை தமிழர் பேரவையில் பொதுச் செயலாளர் திரு. பாண்டியன் அவர்களிடம் அளித்தார்.
பரிசளிப்பு
பெரியார் சமூக சேவைமன்றத்தின் ஏற்பாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்நிலைப் பள்ளிகளுக்கிடையேயான தமிழ்ப் பேச்சுப் போட்டியில் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு தமிழர் தலைவர் அவர்கள் வெற்றிக் கோப்பை, பணப்பரிசு மற்றும் வாழ்வியல் சிந்தனைகள், திருக்குறள் ஆங்கில நூல்களைப் பரிசாக வழங்கினார்.அதில் பெறுப்பேற்று ஒத்துழைத்த நடுவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பெரியார் சேவை இதழ் வெளியீடு - டாக்டர் இலக்குவன்தமிழ்
பெரியார் சமூக சேவை மன்றம் வெளியிடும் முதல் விழா இதழ் பெரியார் சேவையை அமெரிக்காவில் இயங்கும் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர்களில் ஒருவரான முனைவர் இலக்குவன்தமிழ் வெளியிட்டு வாழ்த்தினார். அப்போது சமூக சேவை மன்றத்திற்குப் பெயரிட வேண்டும் என்று நினைப்பார்களேயானால் அதற்கு தந்தை பெரியார் அவர்களின் பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரும் பொருத்தமாக இருக்காது. அதே போல் பெரியாரைப் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்று நினைத்தால் சமூக சேவை தான்முதலிடம் பெறமுடியும், மற்றவை பிறகுதான் என்று அவர் கூறினார்.
20 ஆம் நூற்றாண்டில் இந்தியா இரு பெரும் தலைவர்களை உலகுக்கு அளித்தது. ஒன்று அண்ணல் காந்தி அடிகள். மற்றொருவர் தந்தை பெரியார் அவர்கள். தந்தை பெரியார் பன்முகம் கொண்ட தலைவர். அந்தப் பிறப்பு வேறு எந்தத் தலைவருக்கும் இருந்ததாக நான் அறிந்தது இல்லை. பெண்ணுரிமை, மனிதநேயம், சமூக நீதி என்று பன்முகப்பட்ட தந்தை பெரியார் அவர்களை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.
பல இனத்தவர்கள் ஒன்று கூடி ஒற்றுமையாக வாழ்கின்ற நாடான சிங்கப்பூர் உலகக்கே முன் மாதிரியாக விளங்குகிறது!
நவீன சிங்கப்பூரை நிறுவின மாண்புமிகு மூத்த மதியுரையமைச்சர் லீ குவான் யூ, யார் இந்த சமூகத்திற்கு தொண்டாற்ற வேண்டும் என்று பெரியாரைப் போலவே கூறுகிறார்....
....அவரின் வழித் தோன்றலான சிங்கப்பூரின் பிரதமர் மாண்புமிகு லீ சியன் லூங் அவர்களும் பெரியாரைப் போலவே கூறுகிறார்!
என்று அழகாக எடுத்துச் சொல்லி தொலை நோக்கு கொண்ட பெரியாரை உலகெங்கும் எடுத்துச் செல்லவேண்டும். அதற்கு பெரியார் சமூக சேவை மன்றமும், அமெரிக்காவில் இயங்கும் பெரியார் பன்னாட்டு மய்யமும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆவலை வெளிப்படுத்தி விடைபெற்றார்
மூத்த முதிய சிங்கப்பூர் கவிஞர் இக்குவனம்
தந்தை பெரியாரைப் பாராட்டி வெண்பா
வெண்பாச் சிற்பி கவிதா மணி, 87 வயது நிறைந்த, சிங்கப்பூர். வி. இக்குவனம் அவர்கள் விழா சிறக்க பெரியாரைப் பற்றிய வெண்பா மடலை அச்சிட்டு வெளியிட்டும் மேடையில் வாசித்தும் விழாவிற்கு பெருமைசேர்த்தார். மற்றும் தமிழர் தலைவரின் நலன் பெற நலம் விசாரித்தும் வெண்பாவினை மேடையில் வாசித்தது சிறப்பாக அமைந்தது.
விழாவிற்கு இனிமைசேர்த்தார் இனியநிலா
‘‘தமிழுக்கு அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்’’ என்ற புரட்சிக் கவிஞரின் பாடலை பெரியார் பிஞ்சு இனிய நிலா பெயருக்கேற்றபடி மிகவும் இனிமையாகப் பாடினார். பக்க வாத்தியங்கள் இல்லாமல் இனிமையாகப் பாடிய அவரின் குரல் விழாவிற்கு வந்த அனைவருக்கும் நீண்ட நேர களைப்பைத் தணித்து புத்துணர்ச்சியைக் கொடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. பலரும் அதன் உச்சரிப்பைப் பாராட்டி மகிழ்ந்து, கைதட்டினர்!
டாக்டர் சோம. இளங்கோவன் வாழ்த்துரை
பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் அவர்கள் தமது வாழ்த்துரையில் நாம் உண்மையான பெரியார் தொண்டர் என்பதற்கு அடையாளம் நம்மால் முடிந்த அளவு நம் சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றார். செல்வ குடும்பத்தில் பிறந்த பெரியார் தன் சொத்துகளையெல்லாம் மக்களுக்காகக் கொடுத்ததை எண்ணிப் பார்க்க வேண்டும். பெரியார் மனிதன் சுயமரியாதையுடன், பகுத்தறிவுடன் வாழ வேண்டுமென்றார். இதில் யாருக்காவது கேள்விக் குறி இருக்க முடியுமா? நம்மை ஒருவர் மதிக்காவிட்டால் நமக்கு எவ்வளவு கோபம் வருகிறது. அதே கோபம்தானே அவர்களுக்கும் வரும் என்ற உணர்வு இருக்க வேண்டும் என்றார் பெரியார்.
பெரியாருடைய தொலை நோக்கு இன்றைய ஆராய்ச்சியாளர்களையே அதிசயப்பட வைக்கிறது என்று அருமையாக எடுத்துச் சொன்னார். பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட உள்ள பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலை பிரெஞ்சுப் பேராசிரியர் ஒருவர் படித்துவிட்டு ஆச்சரியப்பட்டார். 1925 இல் பெரியார் அவர்கள் இவ்வளவு கருத்துகளை சொல்லியிருக்கிறார். அவர் எப்படிப்பட்டவராக இருந்திருக்க வேண்டும் என்று சொல்லி மகிழ்ந்தார். அதுவும் நீங்கள் 4 ஆம் வகுப்பு வரைதான் படித்தார்கள் என்று சொல்கிறீர்கள், என்னால் நம்பமுடியவில்லை என்று வியந்தார்.
அமெரிக்காவில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடும் போது அனைவரிடமும் பெரியார் பற்றி பேசச் சொல்வோம். அப்போது தமிழர்தலைவரின் பேரன் கவுதமன் 13 வயது சிறுவன் பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி என்று ஒரே வார்த்தையில் பெரியாரை உள்ளடக்கி அதற்கு விளக்கம் அளித்து எங்களை ஆச்சரியப்படுத்தினார்!
பெரியவர் காங்கிரஸ்காரர் ஒருவர் சொன்னார் பெரியார் ஒருவர்தான் தம்மை மனிதராக நடத்தினார் என்று. என்னுடைய துணைவியார், பெரியாரும் காமராஜரும் இல்லாவிட்டால் இன்று நான் கிராமத்தில் சாணி தட்டிக் கொண்டுதான் இருந்திருப்பேன். டாக்டராக வந்திருக்கமாட்டேன் என்று நினைவு கூர்வார் என்று பல விதங்களில் பெரியாரைப் பற்றி எடுத்துக் கூறி, இறுதியாக பெரியாரைப் போன்று பெரியார் குரலிலேயே அனைவரும் ஒற்றுமையாக நன்மை செய்து, சுய மரியாதையுடனும், பகுத்தறிவுடனும், மூடநம்பிக்கை யில்லாமல் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்று கூறி முடிக்கும்போது பெரியாரே நம் விழாவிற்கு வந்து விட்டார் என்ற உணர்வு எல்லோருக்கும் ஏற்பட்டது.
பெரியார் விருது
நமது பெண்கள்தங்களை பிறவி அடிமை என்று நினைத்துக் கொண்டிருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும். பெண்களுக்குப் பகுத்தறிவுக் கல்வியும், உலக நடப்புக் கல்வியும் தாராளமாகக் கொடுத்து மூடநம்பிக்கை, பயம் ஆகியவற்றை ஊட்டக்கூடிய கதைகளையோ, சாத்திரங்களையோ, இலக்கிய நூல்களையோ காணவும், கேட்கவும் சிறிதும் இடமில்லாமல் செய்யவேண்டும் என்று கூறுவார் பெரியார். பெண்களுக்கு கல்வி, சொத்துரிமை, மறுமணம், விடுதலை, முன்னேற்றம் வேண்டும், பல துறைகளிலும் சிறந்து விளங்கவேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்தி வெற்றியும் கண்டவர் பெரியார். அவரை சிறப்பிக்கும் வகையில் கல்விப் பணி, சமூகப் பணி, தமிழ் மொழி வளர்ச்சி, தமிழர் பண்பாட்டு வளர்ச்சிப்பணி என பல துறைகளில் தனி முத்திரை பதித்து தொண்டாற்றியவர், சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் மூத்த அதிகாரி திருமதி புஷ்பலதா அவர்களைப் பாராட்டி பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பாக வழங்கப்படும் முதல் பெரியார் விருதினை அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறினார். திருமதி புஷ்பலதா அவர்களின் சேவைப் பணிகளை திருமதி மலையரசி அவர்கள் அழகாகப்பட்டியலிட்டுப் பாராட்டினார்.
தமிழர் தலைவரின் வாழ்விணையர் திருமதி மோகனாவீரமணி அவர்கள் திருமதி புஷ்பலதா அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்த காட்சி மிகவும் புதுமையாக இருந்தது.
அதன் பிறகு தமிழர் தலைவர் அவர்கள் பலத்த கரவொலிக்கிடையே பெரியார் விருதினை திருமதி புஷ்பலதா அவர்களிடம் வழங்கினார்.
பெரியார் விருது பெற்ற திருமதி புஷ்பலதா தனது ஏற்புரையில் மகிழ்ச்சியுடன் இது வரை நான் செய்த பணிகளுக்கு கொடுத்த விருது என்று நான் நினைக்கவில்லை. இனிமேல் செய்ய வேண்டிய பணிகள்தான் நிறைய இருக்கின்றன என்பதை உணர்த்தும் வகையில் கொடுக்கப்பட்ட விருதாகவே இதை நான் கருதுகிறேன் என்று மிகுந்த தன்னடக்கத்துடன் கூறினார். சில விருதுகளால் வாங்கியவர்களுக்குப் பெருமை; சிலரால் வழங்கப்படும் விருதுக்குப் பெருமை. என்னைப் பொறுத்த வரையில் பெண்களை அதிகம் நேசித்த பெரியார் பெயரால் வழங்கப்பட்ட இந்த விருது எனக்கு வழங்கப்பட்டதை மிகவும் பெருமையாக உணர்கிறேன் என்று புஷ்பலதா கூறினார். பெரியார் விரும்பிய விழைவுகள் பல செயலுக்கு வந்து கொண்டு இருக்கின்றன. பெண் விடுதலை பற்றியும், பெண்களுக்கு சமஉரிமை கிடைப்பது பற்றியும் பெரியார் கண்ட கனவுகள் நனவான ஒரு நாடாக சிங்கப்பூர் இருக்கிறது! சிங்கப்பூரில் ஆண், பெண், பேதமில்லை; இனம், மதம், மொழி பேதமின்றி திறமையின் அடிப்படையால் எல்லோருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் பெரியார் கண்ட கனவு சிங்கப்பூரில் பலிப்பதைப் பார்த்து பெரியாரின் பல கருத்துகளுடன் நான் உடன்பாடு கொண்டவள் என்ற வகையில் நான் பெருமைப் படுகிறேன் என்று நன்றி கூறி விடை பெறும்போது பெரியார் விருதுக்குப் பொருத்தமானவர் இவரே என்ற எண்ணம் அவையோர் எல்லோரிடத்திலும் நிறைந்து இருந்தது.
தமிழர் தலைவரின் சிறப்புரை
அமெரிக்காவில் இருந்து வந்தவர்களை, தமிழ் நாட்டிலிருந்து வந்த எங்களைப் போன்றவர்களை சிங்கப்பூரில் நீங்கள் பாராட்டுகிறீர்கள் என்றால் இந்த பெருமை தந்தை பெரியாரையே சாரும். ஏனென்றால் நான் இன்றைக்கு உங்கள் மத்தியில் வாழ்கிறேன் என்று சொன்னால் எனக்கு மட்டுமல்ல இந்த இனத்திற்கே மானத்தையும், அறிவையும் தந்த மாபெரும் அறிவு வள்ளல் தந்தை பெரியார் என்று தன் உரையைத் தொடங்கிய விதமோ சிறப்போ சிறப்பு.
ஆலமரத்திற்கு விழுதுகள் முக்கியம்; விழுதுகள் அடிப்படையானவை. வேர்கள் சரியாக இருந்தால்தான் விழுதுகள் சரியாக இருக்கும். அப்படி விழுதுகளாக வரக்கூடியவர்களுக்கு விருதுகள் வழங்குவது மிகச் சரியான முறையாகும் என்று கூறி, பெரியார் விருது பெற்ற திருமதி புஷ்பலதா அவர்களைப் பாராட்டி, பெண் இனத்தின் உரிமையை தந்தை பெரியார் வலியுறுத்தினார்கள். அது எப்படி வளர்ந்துள்ளதென்றால் சிங்கப்பூரில் முதல் பெரியார் விருது ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்படி பெண் உரிமையை நடைமுறைப் படுத்துகிற நாடு, எடுத்துக்காட்டான நாடு இந்த சிங்கப்பூர் நாடுதான் என்று சொல்லும் போது அரங்கம் கரவொலியால் அதிர்வடைந்தது!
தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் தேவேந்திரன் அவர்களைப் பாராட்டி அவர்களை இயக்கும் MDIS க்கும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு ஒன்றாக செயல்படுவதை எடுத்துக் கூறும்போது பெரியார் சிங்கப்பூர் அரசுத்துறையிலும் கலந்திருக்கிறார், கல்வித் துறையிலும் கலந்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியது.
பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பாக சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கியதைப் பாராட்டிக் கூறுகையில், நாங்கள் இங்கு பெற்றுச் செல்ல வரவில்லை; மாறாக தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றும் உங்களைப் போன்ற தமிழ் அமைப்புகளுக்கு நன்கொடை கொடுக்கவே வந்துள்ளோம். முடிந்தால் கட்டணம் வசூலித்து, பேசிக்கூட நிதியளிப்போம் என்று கூறும்போது தமிழ் வளர்ச்சி மீதும் சிங்கப்பூர் தமிழர்களின் வளர்ச்சியின் மீதும் தமிழர் தலைவர் காட்டும் அக்கறையைப் பறைசாற்றியது.
தந்தை பெரியார் வாழ்வியலோடு தன்னை இணைத்துக் கொண்டவர் என்று கூறி புரட்சிக் கவிஞர் பெரியாரைப் பற்றி ஒரு பாடலில் சொன்னார். உயர் எண்ணங்கள் மலரும் சோலை மற்றும் ஆயிரம் காலத்தில் தோன்றமுடியாத, வர முடியாத, கிடைக்க முடியாத தலைவர் என்று சொல்லும்போது,
ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி
அவர் அறிந்திராத அறிவாவார்
அணிந்திராத அணியாவார்
என்றார். அப்படிப்பட்ட பெரியார் அவர்கள் கண்ட வாழ்வியலைப் பற்றி எவ்வளவோ சொன்னார் - பெரியார் தொலை நோக்கு சிந்தனை உடையவர். தொலை நோக்கு என்றால் தன் பெண்டு, தன் உள்ளம், தன் குடும்பம் என்று அவர்கள் பார்ப்பதில்லை.மாறாக சமூகம் அவருக்கு முக்கியமானது; மனிதம் அதைவிட முக்கியமானது என்று இறுதி மூச்சு வரை வாழ்ந்தார்கள்!
கிரேகத்து அறிஞன் ஏந்திய விளக்கு
கிரேக்கத்து அறிஞன் ஒரு நாள் பட்டப் பகலிலே சூரியன் காய்ந்து கொண்டிருக்கையில் பெரிய வெளிச்சமான விளக்கு ஒன்றினை எடுத்துக் கொண்டு கிரேக்கத்தின் முக்கிய வீதிகளில் நடந்து கொண்டு போகிறான். எல்லோரும் அவரைப் பார்த்து பரிகசிக்கின்றனர். என்னய்யா, பகல் வெளிச்சத்தில் யாராவது விளக்கை தூக்கிக்கொண்டு போவார்களா? என்பது போல் பார்த்து பரிகசிக்கிறார்கள். எல்லோரும் அவரிடம் கேட்டதற்கு பயப்பட்டார்கள். ஒருவர் மட்டும் துணிந்து கேட்டார். அந்த கிரேக்கத்து அறிஞர் சாக்ரடீஸ் சொன்னான். ஆம், நீங்கள் எல்லாம் வெளிச்சத்தில் இருப்பதாக நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் இருப்பது அறியாமை என்னும் இருட்டில் என்று சொல்லி அவர்கள் மத்தியில் வெளிச்சத்தை உண்டாக்க வேண்டுமென்றால் உங்கள்அறிவு என்ன சொல்கிறது, ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகள் கேட்டால்தான் அறியாமை அகன்று அறிவு வெளிச்சம் வரும் என்றார். நோய்களில் மிகக் கொடுமையான நோய் என்பது அறியாமைதான் என்றார் இங்கர்சாலும் கூட. அந்த அறியாமையை அந்த இருட்டைப் போக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்ன அவர்கள் அறிவு வெளிச்சத்தைத் தந்தார்கள். அத்தகைய அறிவு வெளிச்சத்துடன் யாரை தேடுகீறீர்கள் என்றால் மனிதனைத் தேடுகிறேன் என்றார். அதாவது மனிதன் என்று சொன்னால், இந்நாட்டில் பதவியாளர்கள் உண்டு, படிப்பாளிகள் உண்டு, அல்லது பெரிய பணக்காரர்கள் உண்டு. ஆனால் நல்ல மானமும் அறிவும் உள்ள மனிதர்கள் தேடப்பட வேண்டியவர்கள் என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறதென்றால், அந்த உண்மை மனிதர்களை மய்யப்படுத்தி மிகச் சிறந்த வாழ்க்கை முறையை உருவாக்க வேண்டும்.
யானையைக் கண்ட விழியற்றவர்கள்
இன்றும் பல தமிழர்கள் தந்தை பெரியார் அவர்களுடைய பரிமாணங்கள், கொள்கைகளைப் பற்றி இன்னும் மக்கள் மத்தியில் சரியான புரிந்துணர்வோடு இருக்கவில்லை. அவரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே பார்க்கிறார்கள். பார்ப்பன எதிர்ப்பாளராகவே அடக்கப் பார்க்கிறார்கள் அல்லது வேறு சிலர் சமூக விரோதி போல் நினைக்கிறார்கள்! ஆனால் அப்படி நினைப்பவர்கள் எல்லாம் யானையைக் கண்ட விழியற்ற அய்வர் போன்ற பரிதாபத்திற்குரியவர்கள்! என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
உண்மையாக தந்தை பெரியார் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அவர்களே சொல்லியிருக்கிறார்கள்: மானமும், அறிவும் பெற்ற மக்களாக நம்முடைய மக்கள் வாழவேண்டும். மானுடப் பற்றோடு வாழவேண்டும். எனக்கு மற்ற பற்றுகள் கிடையாது. எனக்கு இரண்டே பற்றுதான் உண்டு என்று சொன்னார் பெரியார். ஒன்று அறிவுப் பற்று. மற்றொன்று மனிதப் பற்று என்று தெளிவாகச் சொன்னார். உலகத்திலேயே மனிதப் பற்றை பெரியார் முன்னிறுத்தியிருக்கிறார்கள்.
எனவே, அவை அனைத்தும் - சுயமரியாதை இயக்கக் கொள்கைள் - தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரியதோ அல்லது இந்தியாவிற்கு உரியதோ அன்று இன்னொரு நாட்டுக் உரியதோ அல்ல. பெரியாருடைய தத்துவங்கள் உலகுக்கு உரியது. அவர் மறைந்துவிட்டார் என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை. பெரியார் என்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். காரணம், அறிஞர் அண்ணா அவர்கள் கூறியது போல் பெரியார் ஒரு தனி மனிதரல்ல, அவர் ஒரு சகாப்தம், அவர் ஒரு தத்துவம், அவர் ஒரு வரலாறு, அவர் ஒரு காலக்கட்டம். பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என்று ஒரு சமூகத்தைப் பற்றி ஆராய்ந்து பார்த்தால் பெரியார் கண்ட வாழ்வியல் நாளும் வெற்றி பெற்று வருகிறது என்பது அகிலத்திற்கே தெரியும்.
1954 இல் பெரியார் சிங்கப்பூரில் தமிழர்களுக்கு அறிவுரை சொன்னபோது அய்யா சொன்னார். நீங்கள் இந்த நாட்டிலே இருக்கிறீர்கள். தயவு செய்து இந்த நாட்டுடைய நீரோட்டத்திலேயே நீங்கள் இணைந்து கொள்ளுங்கள். நீங்கள் சிங்கப்பூரியர்களாகவே இருக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் 1954 இல் கூறியதை நினைவுகூறும்போது அதைப் பின்பற்றியவர்களால் சிங்கப்பூரின் சிறப்பு வெளிப்பட்டது.
சுயமரியாதை இயக்கம் ஏன்?
சுயமரியதை இயக்கம் தோற்றுவித்தது பற்றி அதை ஏன் தோற்றுவித்தேன் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறும்போது, தனிமனிதருக்காக அல்ல, வெறுப்புக்காக அல்ல, மனித நேயத்திற்காக, உலகம் முழுவதும் வாழக்கூடிய மனிதர்கள் தங்களை மனிதர்களாக நடத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தோற்றுவித்தேன் என்று 1928 இல் தந்தை பெரியார் கூறியதைச் சொன்ன போது பெரியார் உலகுக்கே உரியார் என்ற உண்மை அனைத்து உள்ளங்களிலும் பதிந்தது.
வாழ்வு என்றால் ஓர் இலக்கு வேண்டும். இலக்கு என்பது மிகமுக்கியமானது. மனிதன் என்பவன் ஒரு கூட்டுப்பொருள் என்று தந்தை பெரியார் கூறியதை எடுத்துக்கூறி, எதிர்நீச்சல் தொண்டறத்தில் முக்கியமாக அடக்கத்தின் அவசியம், புகழும்போதும் இகழும்போதும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி பெரியாரின் அனுபவங்களைச் சுவைபடக் கூறும்போது அரங்கத்திலிருந்த அனைவரும் தமிழர் தலைவரின் கருத்தினை செவி மடுத்து ரசித்த காட்சி அருமையான காட்சியாக அமைந்தது. சில பல நேரங்களில் அரங்கம் நிசப்தமாக இருந்தது!
மூடப் பழக்கங்கள் தோன்றிய வரலாற்றை எடுத்துக் கூறி சடங்கு, சம்பிரதாயங்கள், மூட பழக்கங்கள் இல்லா புது உலகாக, அறிவு பூர்வமான சிந்தனையை பெரியார் உருவாக்கினார் என்று கூறும் போது, பெரியார் கண்ட வாழ்வியல் எவ்வளவு எளிமையானது, இனிமையானது என்பதை உணர்த்தியது.
பெரியாரைப் படித்தாரா லீ குவான் யூ?
சிங்கப்பூரின் மூத்த மதியுரையமைச்சர் திரு. லீகுவான் யூ அவர்கள் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், நான் ஆழ்ந்த மதப்பற்று கொண்டவன் அல்லன், ஆத்மா பற்றி நீங்கள் பேசினால் நான் ஆத்மா என்பது என்ன என்று கேட்க விரும்புகிறேன். மனிதனின் உணர்வே ஆத்மா என்றால் உணர்வு நரம்பு மண்டலத்தைச் சார்ந்தது ஆயிற்றே. வளர்ச்சி கூடலாம், குறையலாம். ஒருவன் நல்லுணர்வு, தீய உணர்வுக்கு உட்படுகின்றானே. ஆத்மா நிலையான ஒன்றானால் ஏன் இந்த மாறுபாடுகள். ஆத்மா என்ன என்று விளக்கிக் கூற இயலாது. ஒரு மனிதனுக்கு உள்ளே இருக்கின்ற காற்று போன்றது என்று கூற விரும்புகிறீர்களா? அவனது உடல் அழிந்த பிறகு தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று கூறுகிறீர்களா. எனக்கு அதிலே நம்பிக்கையே இல்லை என்று கூறியதை தமிழர் தலைவர் எடுத்துக்காட்டி,
பெரியாரை அவர் படித்திருக்கிறாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் பெரியார் கருத்துகள் உலகளாவிய கருத்துகள் என்பதற்கு அவரின் கூற்று உதாரணமாகும் என்பதை விளக்கி தமிழர் தலைவர் கூறும்போது அனைவரின் சிந்தனையும் செழிப்பாக சிந்தித்தது என்று கூறலாம். மேலும் திறந்த மனதோடு சிந்தியுங்கள், அறிவு நாணயத்தோடு வாழுங்கள். அப்படி வாழ்ந்தால் அனைவரும் பெரியாரே என்ற கருத்தினையும் பொருத்தினார்கள்.
சிக்கனம் வேறு - கருமித்தனம் வேறு
மருத்துவர்கள் மருந்து கொடுப்பது மருத்துவர்களுக்காகவா? அது நமக்காக! என்பதை அழகு மிளிற சொன்னார் தமிழர் தலைவர். சிக்கனம் கடைப்பிடிக்கப்படவேண்டும்; சிக்கனம் வேறு, கருமித் தனம் வேறு; கருமியாக வாழக்கூடாது. ஆடம்பரம் கூடாது, எளிமையாக வாழவேண்டும். தேவைக்கு மேல் வாழ்வது ஆடம்பரம்; தேவைக்கேற்ப செலவழிப்பது சிக்கனம், தேவைக்கே செலவழிக்காமல் இருப்பது கருமித்தனம்.
என்று சொல்லி சிக்கனக்காரர்களாக இருங்கள்; கருமியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று நகைச்சுவையுடன் விளக்கினார்.
உண்மையான சுயமரியாதைக்காரனாக வாழ வேண்டுமென்றால் நாணயத்துடன் வாழவேண்டும் என்ற பெரியாரின் மாபெரும் தத்துவத்தைக் கூறி பெரியார் கண்ட வாழ்வியல் ஒரு நாட்டுக்கோ ஓர் இனத்துக்கோ சொந்தமானது கிடையாது. மனித குலம் முழுவதற்கும் சொந்தமானவது.
எனவே, முதலில் பெரியாரைப் படியுங்கள். ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லமாட்டேன். பெரியாரைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் புரிந்து கொள்ளவில்லையென்றால், அது உங்களுடைய தவறே தவிர பெரியாருடைய தவறு அல்ல. பெரியார் ஒரு பேரங்காடி . அதில் உங்களுக்குத் தேவையானவைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
பெரியாரைப் பல கோணங்களில் படம் பிடித்துச் சொல்லிக் கொண்டே இருக்கலாம். நான் ஒரு கோணத்தில் மட்டுமே சொல்லியுள்ளேன். அதில் உள்ள கருத்தினைத் தள்ளுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. அதே போன்று உங்களுக்கு சொல்லுவதற்கும் உரிமையுண்டு. சரியென்று பட்டால் சரியென்று எடுத்துக் கொள்ளுங்கள். சரிதான். ஆனால் என்று போட்டுவிடாதீர்கள்! என்று அழகாக, மிகச்சிறப்பாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பல கருத்துகளை எடுத்து வழங்கி நிறைவு செய்தார்கள்.
தமிழர் தலைவரின் சிறப்பான உரையைக் கேட்க அரங்கம் முழுவதும் நிறைந்து கடைசி வரை நின்று கொண்டே கேட்டு ரசித்த காட்சியினைப் பார்க்கும் போது பெரியார் கண்ட வாழ்வியல் சிங்கப்பூரில் மிக சிறப்பான வரவேற்பைப் பெற்றிருப்பது உணர முடிந்தது.
காலதாமதமாக வந்த சிறப்பு விருந்தினர் அழகாக ஓரிரு மணித்துளிகள் பேசி, அய்யா வீரமணி அவர்களை நன்றாகத் தெரியும். அவர் பேசினால் அனைவரும் கேட்பார்கள் என்று கூறி, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து விடை பெற்றார்கள்.
பூபாலன் நன்றி
இறுதியாக மன்றத்தின் செயலாளர் க.பூபாலன் அவர்கள் நன்றி கூறி இனிதே விழா நிறைவுற்றது.
முன்னுரையில் பெரியார்
ஆடலில் பெரியார்
பாடலில் பெரியார்
பொன்மொழியில் பெரியார்
விழா இதழில் பெரியார்
விருதினில் பெரியார்
ஏற்புரையில் பெரியார்
வாழ்த்துரையில் பெரியார்
சிறப்புரையில் பெரியார்
இணைப்புரையில் பெரியார் - என
எங்கும் பெரியார், பெரியார், பெரியார் என்ற ஒரு திருவிழா!
இதுவரை சிங்கை காணாத பெருவிழா, பெரியார் விழா!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!-------------------நன்றி:-"விடுதலை" 12-11-2009
1 comments:
உங்கள் பெரியார் பெரும்பணி சிறப்பானது. தமிழ் ஓவியாவிற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் தொண்டு.
Post a Comment